தத்துவங்களால் நிரப்பப் பட்டிருக்கிறது இவ்வுலகம். மனிதன் தன்னை உணர, இப் பிரபஞ்சத்தின் இயங்கியலை உணரத் தலைப்பட, மனித சமூகத்திற்கான மேன் நிலையை தேடத் தொடங்க, ஒட்டுமொத்த இருப்புக்கான காரண காரியங்களை சிந்திக்கத் தொடங்கியதும் பிறப்பெடுக்கத் தொடங்குகிறது தத்துவங்கள். தத்துவங்கள் இல்லாமல் நாம் நம் வாழ்வியலை அமைத்துக் கொள்வதில்லை. சித்தர்களும், யோகிகளும், புத்தரும், எண்ணற்றவர்களும் நம் நன்னிலத்தில் வாழ்வுக்கான அறத்தையும், இம்மைத் துன்பத்தை களையவும் பிராயத்தனம் செய்திருக்கிறார்கள். இதுவே ஆன்மீகத்தின் மொத்த புலமாக தமிழ் தேசியத்தை மாற்றியிருக்கும். தமிழ் நாட்டிற்கென தனித்துவமான கோயில் கட்டடக் கலை மரபும் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பக்தி இலக்கியங்களிலேயே புரிந்து கொள்ள இயலும். நாம் இன்றும் பொது மன நிலையாக ஒலைச் சுவடிகளுடம் சித்தர்கள் அலைவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆன்மிகமென்றும், தியானமென்றும் நம் வாழ்க்கை நெறியாக மேற்கொள்ள ஏற்பட்ட சிந்தனைகள் ஈடேற்ற மென்றும் மனதுக்குள் அமைதியை கொண்டுவரச் செய்தலும் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக இருத்தலுமே அதன் அடிப்படை. பெரும்பான்மையான இந்தியச் சிந்தனை முறைகளை கருந்து முதல்வாதத்திற்குள் அடக்கிவிடலாம். இதை நமக்குள் மெற்கொண்டிருக்கும் நாம் இச்சிந்தனை முறைகள் தனிமனிதனுக்கானதே அன்றி ஒட்டு மொத்தச் சமூகத்திற்கான மாற்றம் இதில் இல்லை என்பதே யதார்த்தம். ஆதியில் தொடங்கிய போர்கள் இன்றும் காட்டுமிராண்டி சமூகம் போல் உலகில் தொடர்வதற்கு மறைமுகமாக இருப்பவை மனிதனை நெறிப்படுத்துவாதாகச் சொன்ன மதங்களின் பின்னனியே.
சிங்களர்கள் அமைதி வேண்டி நடத்திய ஊர்வலத்திற்கு இடையில் புகுந்து நம்மூர் குண்டர்களைப் போல் தடுத்து நிறுத்திய புத்தபிக்குகளை என்சொல்வேன். ஆயிரமாயிரம் அப்பாவிகளைக் கொன்ற ராஜபக்சேவை பட்டங்கள் வழங்கி சிறப்பித்த புத்தனை என்சொல்வேன். இங்கே தான் வரலாறு தன் அழிகிய எதிர்புகளை கட்டமைத்து அதன் அபத்தங்களைக் காட்டிச் சிரிக்கிறது. புத்தமதம் ஈழத்தில் பரவ காரணமாக இருந்த நிகழ்வும் அது இன்று செயல்படுத்தும் துன்பியல் கொடுமைகளும் நகைப்புக்குரியவை. அசோக சக்கரவர்த்தி வென்ற போரில் தன்னால் கொல்லப்பட்ட மனித உயிர்களையும் அவை ஏற்படுத்திய அவலகுரல்களையும் சோகங்களையும் கண்டு மனம் வெதும்புகிறான். யுத்தங்கள் நடைபெறாமல் இருக்க அன்பு செழிக்க மனம் மாறி புத்த மதத்தை தழுவுகிறான். அன்பை போதித்த புத்த மதத்தை பரப்புவதை தன் நோக்காக கொள்கிறான். தன் மகனை ஈழத்திற்கு அனுப்பி புத்த மதத்தை பரவச் செய்கிறான். அன்பு செழித்ததால் புத்த மதம் தழைத்தது. தன் மதம் அல்லாத வேற்று மொழி பேசும் மதத்தை மக்களை அடிமையாக்க வைத்தது. வேற்றினம் எதிர்கலகம் செய்யவும் இரக்கம்மின்றி அழித்தது. புத்தம் சரணம் கச்சாமி.
நம் சமூகம் கட்டமைத்திருக்கிற அப்பழுக்கற்ற அரசியலில்(!), பொதுவெளியில் உலவித் திரியும் சாதிய அமைப்பு, சிந்திப்பதையே மழுங்கடிக்கும் வெகுசன ஊடகங்கள், சினிமா, பத்திரிகை இத்தியாதிகளை எந்த ஆன்மீகத் தத்துவங்களும், தியான முறைகளும், சிந்தனைகளும் மாற்றவில்லை. மாற்ற வருபவை என்று சொல்லுவதெல்லாம் இன்னொரு மதமாக, இன்னொரு இனமாக, இன்னொரு குழுவாகவே மாறும். அது தன்னை ஏற்காத பிற இனத்தை, பிற மதத்தை, பிற குழுவை அழிப்பதில் ஒரு நியதியை வைத்திருப்பவை. ஜெ.கிருஷ்ணமூர்த்தி உலகெங்கிலும் பரவியிருந்த இயக்கமான "த ஆர்டர் ஆஃப் த ஸ்டார் (the order of the star) கலைத்ததற்கு மேற்சொன்ன காரணமும் ஒன்று. நம் சிந்தனை முறைகளுக்கு நேர் எதிரான சிந்தனை முறைகளை மேற்குலகில் பார்க்கலாம். கருத்து முதல்வாதமும் பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று மோதி உருவான தத்துவங்களை உருவாக்கிய சிந்தனையாளர்களை பெற்றிருக்கிறார்கள். தனிமனித சிந்தனை தவிர்த்து ஒட்டு மொத்த சமூகத்திற்கான பார்வைகளை நிறுவியிருக்கிறார்கள். கம்யூனிச சித்தாந்தம் இதன் உச்ச வெளிப்பாடு.
தமிழில் மேற்கத்தியச் சிந்தனை முறைகளை அறிமுகப்படுத்தவும், அதனால் கிளர்ந்தெழும் கருத்து விவாதங்களும், இலக்கியப் படைப்பு முறைகளும் பொது வாசகனுக்கு கற்றுத் தர இங்கு வெகு சிலரே இருக்கின்றனர். பின்னவீனத்துவம், அமைப்பியல்வாதம், இருந்தலியம் போன்றவை தமிழில் பேசப்பட்டாலும் அதை முற்றாக வளர் சமூகத்துக்குச் எடுத்துச் சொல்வதற்கு இங்கு குறைவான ஆட்களே உள்ளனர். அதிலும் சிலர் தங்களை அறிவு ஜீவிகளாக உருமாற்றம் செய்து கொண்டார்கள். 'தொரை இங்கீலீசெல்லாம் பேசுது' என்பது போல் புதுவாசகன் இருக்க 'என் புத்தகங்களை படிச்சும் உனக்கு பின்னவீனத்துவம்னா என்னன்னு கூடத் தெரியாதா?' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 'அந்த எழுத்தாளரின் எழுத்து பின் நவீனத்துவத்தைச் சார்ந்தா இல்லை பீலா விடுகிறாரா' என்று குழம்பிப் போய் நிற்கிறான் வாசகன். தத்துவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பவர் எம்.ஜி.சுரேஷ். மேலும் அவர் எழுத்து இத்தத்துவங்களை குழப்பாமல் எளிய மொழியில் வாசகன் விளங்கக் கூடிய வகையில் இருக்கும்.
அம்பத்தூரில் இருந்த எம்.ஜி.சுரேஷின் வீட்டில் கதை சொல்லிக்காக சந்திக்கச் சென்றிருந்தோம். சாலையின் இருமங்கும் சிறுமுதலீட்டு தொழிற்சாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது போல் இருந்தது. கைக்குலுக்கள்களுடன் அவருடன் சிறிது உரையாடத் தொடங்கினோம். முதல் கேள்வி அவரிடம் தத்துவங்கள பற்றிய அவருடைய ஈடுபாடு பற்றிய கேள்வியாக இருந்தது. வரலாறு தனக்குப் பிடித்தமானதாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சியே தத்துவங்களைப் பற்றி அவருடையாக எழுத்துக்கு அடிப்படையாகவும் இருந்தது என்றார். அவர் தயாரிப்பில் இருந்த கதைகளைத் தவிர்த்தும் மேலும் கதைகளைக் கேட்க அவரும் ஒப்புக் கொண்டார்.
எம்.ஜி.சுரேஷுடன் தற்கால எழுத்தாளர்களின் கதைகள் பற்றி கதைக்கத் தொடங்கினோம். ஜெயமோகனின் "டார்தீனியம்" சிறுகதை எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று. அக்கதை ஏற்படுத்திய இறுக்கத்தாலும் வெறுமையாலும் நீண்ட நாட்கள் எதையும் வாசிக்காமல் மன அவதிக்கு ஆளானேன். இக்கதைக்கான பின்புல அரசியலைச் சொன்னார் எம்.ஜி.சுரேஷ். மேலும் இக்கதைக்கு பின்புலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதையையும் சொன்னார். 'ஒரு அமெரிக்கச் செடியை ஒருவன் வாங்கி வந்து தன் வீட்டில் நடுகிறான். அச்செடி கிளைத்து தழைந்து வளரத் தொடங்குகிறது. அதன் கிளைகள் வீட்டின் ஒவ்வொரு இடங்களிலும் படரத் தொடங்குகிறது. வீட்டின் வரவேற்பறை, குசினி, படுக்கை அறையென எல்லா இடங்களிலும் படரத் தொடங்குகிறது. செடியை நட்டவன் செய்வதறியாது திகைக்கிறான். வீட்டிற்குள் எங்கும் இடமில்லாமல் போகவே கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான். அப்பொழுது அச்செடி கழிவறையின் கதவை தட்டுகிறது'.
'இன்றைய காலத்தில் பாலியல் (porno) பற்றி எழுதிவிட்டு பின்னவீனத்துவம் என்கிறார்கள். ஆனால் போர்னோ எழுத்து பின்னவீனத்துவத்தில் சேராது' என்றார் எம்.ஜி.சுரேஷ்.
எம்.ஜி.சுரேஷ் சொல்லிய கதைகள் குறியீடுகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் ஆழ்ந்த அரசியல் நிறைந்து இருந்தது. கதைகள் அதன் அரசியல் தளத்தில் ஆழம் கொண்டதாலோ என்னவோ அவர் கூறிய கதைகள் குறுங்கதைகளின் வடிவமாகிப் போனது. ஒவ்வொரு கதைகளையும் முடித்த பின்னர் அதன் உள்ளுள் ஒளிந்திருக்கும் பன்முகத் தன்மையை விளக்கினார். ஒரு பிரதியின் கட்டுடைப்பு என்னவெல்லா சாத்தியங்களில் புரிந்து கொள்ளவியலும் என்பதை அவர் விளக்கிய விதம் அழகு.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |