ஆங்காங்கே நடைபாதைகளில் புதிதாக முளைக்கத் தொடங்கிவிட்டது பச்சை வண்ண வரிக்குதிரை போன்ற தர்பூசணிக் கடைகள். ஒலை வைத்து இளநீர் விற்கும் கடைகளிலும் புதிய இணைப்பாக சிறிது காலத்திற்கு சேர்ந்துள்ளது தர்பூசணி. அடுக்கடுக்காக நேர்த்தியாக அடுக்கப்பட்ட பந்துகள் கண்களை பற்றிக் கொள்ளும். முழுக்காய்கள் வாங்கிச் செல்லா விட்டாலும், கண்களைத் திருப்ப நினைத்தும் கால்கள் நின்று அரிந்து வைக்கப்பட்ட பழங்களைச் சுவைத்துச் செல்லும். சில கடைகளில் அரிந்து வைக்கப்பட்ட காய்கள் சிறிய மேசை மீது வைத்து குழந்தைகளுக்கு மூடும் கொசு வலையால் மூடப்பட்டிருக்கும் அல்லது சில கடைகளில் கண்ணாடியிட்ட,எளிதில் திறக்கக் கூடிய சிறிய அலமாரிபோல் கூண்டு செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்படும். வரவிருக்கும் தீராக் கோடையை முன்னறிவிக்கச் செய்கிறது தர்பூசணி பழம். ந.முத்துசாமி கதைசொல்லிக்காக பின் மதியப் பொழுதை ஒதுக்கித் தந்திருந்தார். இந்த முன் கோடையும் பருவ காலங்களினொரு அரூப நிகழ்வாகவே இருக்கிறது.
வரலாறும் தோறும் உலகில் மாற்றங்களைச் செய்வது தனி மனிதர்கள். அவர்கள் எண்ணங்களைச் செய்ய முனைகையில் தோன்றும் முனைப்பே சமூகத்தையும் அதன் இயங்கியலையும் மாற்றி அமைக்கிறது. அதிதீவர கலைஞர்கள் தொடங்கி சர்வாதிகள் வரை இந்த உதாரணத்தை சாதாரணமாகப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை உருவாக்க இல்லை உருவகித்த ஒன்றை வழி நடுத்த அம்மனிதலாயே முடியும். அவனே சரித்திரமாகவும் வரலாற்றின் நாயகனோ அல்லது வரலாறே தூற்றும் துர்கனாவாகவும் மாறுகிறான். தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் ந.முத்துசாமி. தமிழில் நவீன நாடகப்பள்ளியை தொடங்கியவர் அவர்.
நாடகங்கள் எல்லாம் சினிமாக மாறத் தொடங்கியும், தொலைக்காட்சி வீடுகளில் பயிரிடப் படத் தொடங்கிய பின்னர் மேடை நாடகங்கள் அதன் மூச்சை இழுத்துப் பிடிக்கத் தொடங்கியது. பாதிரியார் வந்து இறுதிப் பிரார்த்தனை செய்து உப்புத் தண்ணீர் தெளித்து செபிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.
நவீன நாடங்களை முன்னெடுத்துச் செல்ல ந.முத்துசாமி அவர்களால் உருவாக்கப்பட்டது கூத்துப்பட்டறை. நடிப்பு என்பது முற்றான தியானத்தைப் போன்றது. நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள் இதை எளிதில் உணரக்கூடும். தன்னை மறந்த நிலை நடிப்பு. தான் இல்லாமல் வேறாகிப் போய், தன் உள்ளே சென்று தன் முனைப்பால் வேறொருவனாக நிகழ்த்திக் காட்டுவது நடிப்பு. நாடகம் முடிந்த கணம் ஒரு நடிகன் ஆழ்ந்த அமைதியை உணர்வான். உலகமே புதிதாகிப் போனது போல் அவன் மனது புத்துணர்ச்சியுடன் இருக்கும். மன இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்து, அழுக்கெல்லாம் துடைக்கப்பட்ட தெளிந்த மன நிலை கண் முன் நிற்கும்.
நடிப்பென்பது என்பது குழு விளையாட்டில் ஒரு ஆட்டக்காரனை போன்றது. யார் தோற்றாலும் தோல்வி முழுவதும் குழுவையே சாரும். யார் ஒருவன் மட்டும் வென்றாலும் தோல்வி குழுவையே சாரும். நடிப்புப் பயிற்சியும் விளையாட்டைப் போன்ற நெறிமுறைகளைக் கைக்கொண்டதே. ஒரு முழு மனிதனாலே மட்டும் ஒரு சிறந்த நடிகனாக இருக்க இயலும். ஒரு சிறந்த நடிகனும் முழு மனிதனாக இருப்பான். சார்லி சாப்ளின், மர்லின் பிராண்டோ மிகச் சிறந்த உதாரணம்.தமிழில் உச்ச நட்சத்திரங்களைப் போட்டு நாம் குழப்பிக் கொள்ள இங்கு அவசியமில்லை. தமிழில் மிகச் சிறந்த கலைஞர்களையும் நவீன நாடகங்களையும் உருவாக்கும் பள்ளியாக கூத்துப் பட்டறை இருக்கிறது.
ந.முத்துசாமி மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளரும் கூட. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய நகைச்சுவையும் கதைகளின் உள் நிகழும் விவரணனையும் எளிதில் யாருக்கும் கைகூடாதவை.
அவருடைய நீர்மை சிறுகதை தமிழின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. அவர் பயன்படுத்தும் வார்த்தைகளின் சொற்கட்டு கதைகளை அழகுற நகர்த்திச் செல்லும். அவரின் கதை மாந்தர்கள் தன் வாழ்விலும், கதைக் களம் தன் பால்யத்தின் நினைவுகளாகவே பெரிதும் இருக்கின்றன. சிறுகதையின் நேர்த்தி அவர் எழுத்தில் மிகச் சிறப்பாக இருக்கும்.
ந.முத்துசாமியின் சிறுகதைகள் அறியா திருப்பங்களுடன் நடைபெறுபவைகள் அல்ல. மாந்தர்களின் மொழியும் உள் விளையும் செயல்களுமே கதைகள் ஆனவை.
ந.முத்துசாமியை சந்தித்து கதை சொல்லிக்காக வந்ததை அறிமுகப் படுத்திக் கொண்டோம். வயதின் முதிர்ச்சி அவர் முகத்தில் இருந்தது. வெளியில் காத்திருக்கச் சொன்னவர், சற்றை நேரத்துக்கெல்லாம் கையில் அவரின் சிறுகதைத் தொகுப்பான மேற்கத்தைய கொம்பு மாடுகளுடன் வந்தார். மேலே மாடிக்குச் சென்று கதை பதிவுக்குத் தயாரானோம். கதை பதிவுக்குச் சென்ற இடமொரு நாடக அரங்கு. உயரே பூட்டப் பட்ட பல்லொளி விளக்குகள், நாடகத்திற்குப் பயன்படுத்திய பரணில் இருக்கும் பொருட்கள், சில தூசு படிந்த கதிரைகள் மேசைகளென கதை பதிவுக்கான இடமொரு மாயத் தன்மையுடனிருப்பது போல் தோன்றியது.
வயதின் முதிர்ச்சி அவரின் சில ஞாபகங்களை மறைத்தும் சிலவற்றை பிரியங்களோடு அவருடன் பொதித்தும் வைத்திருக்கிறது. தமிழ்ஸ்டூடியோவில் இருந்து வந்திருப்பதை முன்னர் சொல்லியும் அதை கவனியாதவராக 'எந்த ரேடியோவில் இருந்து வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார் நா.முத்துசாமி இருமுறை.
ந.முத்துசாமியின் கதைகள் அவர் வாழ்விலிருந்தே விதையான கருவென்பதால் கதைகள் ஞாபங்களின் படிமங்களாக வந்தன. கதைகளின் விவரணைகள் கதை மொழியல்லாத தொனியுடம் அவருடைய அனுபவப் பகிர்வாக இருந்தது. கதைகளைச் சொல்கையில் நடு நடுவே மீசையை தன் கைகளால் தடவி விட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயரமான தோற்றத்திற்கும் மீசையை நீவி விடும் அழகு அவர் ஆளுமையை இன்னும் ரசிக்கச் செய்தது.
ந.முத்துசாமின் அனுபவப் பகிர்வின் வழி கதைகள் நம்மையும் நம் பால்யத்திற்கு கடத்திப் போகச் செய்பவை.அவரின் பேய்க் கதைகள் நம்மையும் அந்த கள்ளமறியாத சிறுவனின் மன நிலையோடு பயங் கொள்ளச் செய்யும். நாம் கேட்டு வளர்ந்த பேய்க் கதைகள் இன்றும் நம்மையொரு கணம் உரசிவிட்டுப் போகும். அவரின் பிற கதைகள் நாம் வளர்ந்த கிராமத்தின் ஆச்சிரியத்தோடு சந்தித்த மனிதர்களை, உலக பொருளாதாரம் பிரச்சனை போல உருப்படும் சில கிராம அசட்டு நியாயங்களை, நம் வீட்டோடு நமக்குள் நிகழும் முரண்களை நம்முள் கிளப்பிவிட்டு எட்டி நிற்பவை.
கதைகளின் தோற்றம் பெரும்பாலும் தனிமனிதன் ஒருவனின் உள்வாங்கிக் கொள்ளும் நிகழ்வுகளாகவும் செவிவழி கேட்கும் மனிதர்களை பற்றியும் இருக்கும். சில கதைகள் புனைவின் அழகியலை உள்வாங்கிக் கொள்ளும். ந.முத்துசாமியின் கதைகள் தன் முனைப்புடன் எழுதப்பட்டவை யாதலால் அவர் தம் நுண்ணிய மனதில் படிந்த ஞாபகங்களே கதைகளாகப் பதிவானது. ந.முத்துசாமியின் கதைகளைப் படிக்கும் ஒருவர் அவர் எழுத்தின் கவித்துவத்தை முற்றாக உணர இயலும். கதைகளின் பதிவை முடிக்க பின் மாலைப் பொழுதானது.
ந.முத்துசாமியுடனா கதை சொல்லி கதைகள் என்பதைத் தாண்டி அவர் வாழ்வோடு பயணித்த உணர்வை தந்து கொண்டிருந்தது.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |