வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

லிவிங் ஸ்மைல் வித்யா

நானொரு நிலமற்றுத் திரியும் கானகப்பட்சி. இன்றிலிருந்து பின்னோக்கி என் பிறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் என் தேவை நான் உட்பட எவருக்கும் தெரியாமலே போனது. அன்பு கிடைத்த போதும் அன்பு கிடைக்காதவளாக, உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள், வெறும் பத்து வயது வரை. வெயிலும், மழையும் பல்லிளித்த ஒரு தீ தினத்தில் தாயும், தாய்பாசம் என்ற சொல்லும் என் அகராதியிலிருந்து உதிரம் சிந்த வேருடன் என்னிடமிருந்து பிடுங்கியெறியப்பட்டார்கள்.

இன்னொரு தாயான ராதாக்கா சில வருடங்களிலே இன்னொருவரின் மனைவியாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டாள். ஒரு சராசரி இந்திய ஏழை தலித் பெண்ணாக தன் இருப்பிற்காக போராடியே அவள் நேரம் வாதையுடன் கழிகிறது. இதில் எனக்கான இடம் அவள் கட்டளையை மீறி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.

குடும்ப கட்டமைப்பிலிருந்து நீங்கிய பின் தனிமையே சுதந்திரமாகவும், சுதந்திரமே வெவ்வேறு அனுபவமாகவும், அனுபவம் பாடுகளாகவும், பாடுகளே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே துர்சொப்பனமாகவும் கழிந்தது. எப்போதும் அன்பை எதிர்பார்த்து ஏங்கும் எனக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளமும், உடலும் ஏற்கும் ஒரு சூரணம் நடிப்புக் கலை.

என்னளவில் நடிப்பென்பது உடலைவிட்டு பறவையாகப் பறந்து சிறகுகளால் என் வெற்றுடலை கைப்பாவையாக்கி வேறொரு உடலாக, பறவையாக, மிருகமாக, கீதமாக, போதையாக, நடனமாக உலுக்காட்டி உலுக்காட்டி கொண்டாடும் அருங்கலை. அதில் தான் தனிமை நீங்கி, பாடுகள் நீங்கி, உடல் என்னும் பொருளும் நீங்கி காற்றாய் மிதந்தலையும் அனுபவம் பெறுமுடியுமென நம்புகிறேன். இவ்வனுபவமே வலிநிரம்பிய வாழ்க்கையின் புறச்சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறது.

என் நடிப்பில் தனிச்சிறப்போ, பக்குவமோ இல்லாத போதும், நடிப்புக்கலை மட்டுமே என் ஆத்மாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழ தங்கிவிட்டது. நைந்த என் வாழ்க்கை குறிப்பில் நாடகத்துடன் உறவாடிய நாட்கள் பரிதாபமாக வெகு குறைந்த நாட்களே.

நடிப்பின் தீரா ஆசையில் எனக்கான நாடக வெளி தேடியலையும் என் கழுகுப் பார்வைக்கு முதல் தேர்வாக மயக்கும் மாந்திரீக நிலம் (ச.முருக)பூபதி அண்ணனின் பித்த நிலமே. அந்த வசீகர நிலவெளியில் என் உடல், எலும்பு, சதை, நாக்கு, விரலகளெல்லாம் அலைந்து அலைந்து வெறிகொண்டு பிரபஞ்ச நடனமாடத் துடிக்கிறது.

இது முதுகலை நாட்களில் ஆரம்பித்த வெறி. பூபதி அண்ணனின் நாடகத்தை நேரடியாக பார்த்திராத போதும், அவரது சரித்திரத்தின் அதீத மியூசியம் நாடகப் பிரதியை வாசித்த அனுபவமே என் நாடக உடலை பூபதி அண்ணனுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்துவிட போதுமானதாக இருந்தது. நண்பர்கள் விஜியும், முருகனும் அவரது கூந்தல் நகரம் நாடகத்தில் நடித்த அனுபங்களை பகிர்ந்து கொள்வது மேலும் வேட்கைக்கு எரியூட்டியது. ஆனால் சரியான சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவேயில்லை.

தஞ்சை பல்லகலையில், முதுகலை படித்த நாட்களில் சாம்பான், நடுவன், கலக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்களில் பங்கேற்க முடிந்தது. உடல் மீதான குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆறுதலாக இருந்தது இத்தகைய நாடக அனுபவங்களே. நாடக வெளிக்கான ஆரம்பமாக அமைந்திருந்த அந்நாட்களில், எனக்கான உடலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு வருடமும், உடலை திருத்தியபின் மேலும் நான்கு வருடங்களும் என் உலகம், நாடகம் மறுக்கப்பட்ட பாலையாக தகிக்க தகிக்க வெம்மிக்கொண்டிருந்தேன். மரணவாடை வீசிய அந்நாட்களில் எதற்கு, யாரை தண்டிப்பது என்ற குழப்பத்தில் புத்தக வாசிப்பு மறுத்து என்னையே தண்டித்துக் கொண்டேன் (வேறு சில காரணமும் உண்டு அல்லது வெறும் சமாதானமாகவும் இருக்கலாம்). காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறு எனது, தண்டனையும் எனக்கே, தவிப்பும் எனக்கே.

சில காலம் காதலும், சினிமாவும் ஓரளவு கைகொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றோடு முழுமனதோடு பயணிக்க முடியவில்லை. நாடக வெளியன்றி வேறு எதுவும் என்னை காப்பாற்றாது என்பதை நான்கு வருட இடைவெளி தெளிவாக உணர்த்தியது. இப்பெரும் இடைவெளியில் மூச்சுத்திணறி தவிக்கும் மரணநொடிகளில் எங்கிருந்தோ வீரம்மாளே நாடக உருகொண்டு தாய்பால் பருகத்தந்து எனை மீட்டாள். சகோதரன் ஸ்ரீஜித்தின் என்.ராமயணம் வீதிநாடகமும், கவிதை வாசிப்பும், அன்பான அ.மங்கையின் பல்சான்றிரே மற்றும் யாது நம் ஊர் நாடக நிகழ்வும் இவ்விடைவெளியில் ஆசுவாசமளித்தது.

திரைத்துறையில் உதவி இயக்குநராக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நாளில், பூபதி அண்ணனிடமிருந்து நடிக்க ஒருமுறை அழைப்பு வந்தது. அப்போதோ என் சிறகுகள் இயக்குநர் மிஷ்கினின் வசமிருந்த மாரிக்காலம். சினிமா வேலை விஸ்வரூபமெடுத்து பெருஞ்சுவராய் என்னை சிறை பிடித்திருந்தது. உடலெங்கும் பரவும் நடுக்கத்துடன் பூபதி அண்ணனின் அழைப்பை மறுதலிக்கும் நாவினை சினிமா வளர்த்திருந்தது (இதே நாவால் எத்தனையோ முறை வெவ்வேறு காலகட்டத்தில் அண்ணனிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட நச்சரித்ததுண்டு). அடுத்த நாடகத்திலாவது நடிக்க வரவேண்டும் இல்லையென்றால் எப்போதும் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி வைத்து விட்டார். பெருங்குற்ற உணர்ச்சியுடன், இந்த பாரத்தை சுமந்தபடி பழைய சோர்வான வாழ்க்கை தொடர்ந்தது.

நந்தலாலா படம் முடிவடைந்த பிறகு அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட ஓய்விலிருந்தேன். அப்போது அடுத்த நாடகத்திற்கான அழைப்பு அண்ணனிடம் இருந்து வந்தது. திட்டவட்டமாக இன்ன நாள் ஒத்திகை துவங்கும் என தீர்மானமாகாத நிலையில் இந்தமுறை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனாலேயே, உடல்நிலை தேறிய பிறகும், மீண்டும் சினிமாவின் புதிர்வட்டப்பாதைக்குள் நுழைய தயங்கி ஒதுங்கி நின்றேன்.

கிட்டத்திட்ட முழு வருடம் எந்த கணம் அண்ணன் கூப்பிட்டாலும், கிளம்பத் தயாராகவே காத்திருந்தேன். இடையில் நண்பன் ஸ்ரீஜித்தின் என்.ராமாயணம், ஒரு கவிதை வாசிப்பு மற்றும் அ.மங்கையின் பல்சான்றீரே’, ‘யாது நம் ஊர்’ ஆகிய நாடகங்களில் நடிக்க முடிந்தது மேலும் புதுரத்தம் பாய்ச்சி நம்பிக்கையுடன் காத்திருப்பை அர்த்தமாக்கியது ஒருவகையில் மிக ஆறுதலாக இருந்தது. எப்படியோ பொருளாதார சிக்கலையும் ஒருவாறாக சமாளித்து கோரப்பசியோடே காத்திருந்தேன்.

பல வருட தவப்பயனாக பூபதி அண்ணனில் நாடக நிலத்தில் கால் பதிக்கும் அரிய நாள் கடந்த மே மாத இறுதியில் அமைந்தது. சிலிர்ப்புடன் அந்த நொடிகளில் உடலின் மொத்த கணத்தை உணர்ந்தும், உடலை மறந்து இறகாகவும் பறந்தேன். கோவில்பட்டி, இந்திரா நகரிலுள்ள அந்தவீட்டை அடைந்த போது அமானுஷ்யமானதும், புராதனமுமான வனதேவதையின் கூட்டினை எட்டிப்பார்க்கும் சிலிர்ப்பு. மானசீகமாக மண்டியிட்டு ஒத்திகை நிலத்தை இதயக்கரம் கூப்பி மண்டியிட்டு வணங்கினேன். இதுவரை முட்டி முனகி ஒரு 6, 7 நாடகங்களில் நடித்திருந்த போதும், எப்போதும் என் மூளைக்குள் உதிக்காத மாண்பு கோவில்பட்டி நாடகநிலத்தில் என்னை மீறி இவ்வாறு கிளர்ந்தது.

ஒத்திகை நிலத்தில் அமர்ந்து இரண்டுமுறை ஒரேமூச்சில் ‘மிருக விதூஷகம்’ நாடகப் பிரதியை வாசித்து முடித்தேன். பிரமிப்பு மட்டும் இன்னும் நீங்கவில்லை. இது நானே தானா? எனக்கேதான் இது வாய்த்துவிட்டதா? நானே தான் பூபதி அண்ணனின் நாடகநிலத்தில் ஒரு நடிகையாகிவிட்டேனா? இவ்வொத்திகை நிலத்தில் நடிகை என்ற அங்கீகாரத்துடன் அமர்ந்திருக்கும் இவ்வுடல் எனதே தானா? இக்குறுகுறுப்புடனே முதல் ஒத்திகைக்காக காத்திருந்தேன்.

நாடகத்தில் நான் பங்கேற்கும் 2 காட்சிகள் நீங்கலாக மீதமுள்ள 11 காட்சிகளும் கடின ஒத்திகையுடன் முழுநாடக வடிவத்துடன் தயாராகவே இருந்தது. எனவே அன்று எனது முதல்நாள் ஒத்திகை எனக்கான ஒத்திகையாகவே இருந்தது.

எனது entry அரைமண்டியில் நடந்துவந்து 6 நிமிடங்கள் தொடர்ந்து அதே நிலையில் நிகழ்த்த வடிவமைக்கப்பட்டது. மனதிற்கு ஆசையாக இனிய சவாலாக இருந்த போதும், முழுவருடமும் கடின உழைப்பு மறந்த எனது ப்ரேத உடல், நிகழ்விற்கு ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. கால்வலியில் நிற்கவும் கூடாமல் உடல் தடுமாறத் துவங்கியது. சிலசமயம் நாடகத்தில் இது மாதிரியான தர்மசங்கடமான சூழலில் சமாளிக்கும் வல்லமை (will power) இயல்பாகவே வந்துவிடும். அப்படியொரு பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் சக்திகூட இன்றி பாதியில் கைவிடுமாறு என் நிலை இருந்தது.

உடல் ஒத்துழைக்க மறுத்ததைவிட பூபதி அண்ணனுக்கு என் மேல் அதிருப்தி வந்துவிடுமோ என்ற பயம் (இதையெல்லாம் கடந்த ஓர் உன்னதமான இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டேன்). இயலாமையும், அலைக்கழிப்பிற்கும் என்னை தின்னக்கொடுத்து தள்ளிநின்றேன். முதுகலை வருடங்களில் நல்ல நணபனாய் இருந்த விஜி இந்நாடகத்தில் இருந்தான். பூபதி அண்ணனுடைய பிரதியில் இது அவனுக்கு 7வது நாடக அனுபவம். நான் வந்து சேர்த்த நாளில் வேறொரு நாடகத்திற்காக தவிர்க்க முடியாத சூழலில் தஞ்சையிலிருந்தான். அவனிடம் தொலைபேசியில் இயலாமையை பகிர்ந்து கொண்டது கொஞ்சம் உதவியது.

சில நாட்கள் தொடர் ஒத்திக்கைப்பிறகு கொஞ்சம் உடல் பழகிவிட்டாலும் சரியான நடிப்பை கொடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். விஜி திரும்பி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எனக்கிருந்து வெகு குறைந்த நல்ல நட்பில் விஜி தவிர்க்க முடியாத சகோதரன். ஆனால், சென்னை வந்தபின் எல்லாம் தொலைவோடிப்போனது. இந்த ஒத்திகை சமயங்களில் இடைப்பட்ட வருடத்தில் இழந்த நட்பின் நேசத்தையும், பகிர்வையும் தக்க வைத்துக் கொண்ட கணத்தை கண்ணீருடன் தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.

நாளுக்குள் நாள் மனச்சோர்விற்கு ஆளாகி என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டேன். என் இருப்பின் மேல் வெறுப்புற்று தவித்தேன். அப்படி செய், இப்படி செய்யாதே என எதாவது சொல்லி சரிசெய்வார் என்று எதிர்பார்த்த பூபதி அண்ணனும் கருணை மறுத்து என்னிடம் தொடர்ந்து மவுனியாக இருந்தார். என் வேதனையும், ஆற்றாமையுமே என்னை சரிசெய்துவிடுமென தீவிரமாக அவர் நம்பியிருக்கக் கூடும். அலைக்கழிப்பும், நடுக்கமும் நாடகநிலத்தின் முன் என்னை ஒப்புக்கொடுத்து தொடர்ந்து மன்றாடச் செய்தது.

உள்ளதே ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் நாடகத்தில் எனக்கு அதிக வேலையில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் உறுத்திக்கொண்டேயிருந்தது. மரபான நாட்டியக் கலையில் நவீனத்தை இணைத்து உடல்களை உடலிகளாக மேடையில் புகுத்தி வலிமையான, அழகான நடனக்கலையை வளர்ததவர் மறைந்த சந்திரலேகா. நாடக நிலத்தில் ஆண்/பெண் என்ற பார்வை உடைந்து வெறும் உடலியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமென்பது என் ஆசை. பூபதி அண்ணனுக்கும் இதே நிலைப்பாடுதான் என்பதை அறிவேன். இந்த எதிர்ப்பார்ப்போடு இருந்த எனக்கு சக நடிகர்களோடு சக உடலியாக ஊடாடும் வாய்ப்பில்லாதது சற்று ஏமாற்றமாகவெ இருந்தது. எனது பகுதியே கிட்டத்தட்ட solo performance போல் தனித்து விடப்பட்டது எனது தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அ.மங்கை “நடிப்பு என்பது பார்வையாளர்களுக்காக கிடையாது, சக நடிகர்களுக்காக” என்று சொல்வதுண்டு். ஒருவேளை அப்படியொரு சக நடிப்பு உடலுடன் ஊடாடும் வாய்ப்பில்லாததே எனக்கு தொந்தரவாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.

நிம்மதியிழந்த எனதாத்மாவும் விஜியின் நட்பும், ஓவியர் பேய்காமனின் அறிமுகமும் கொஞ்சம் அருள் தந்து காப்பாற்றியது. விஜி மற்றும் பேய்க்காமனின் வழியாக நிலம் என்னிடம் கோபம் காட்டி, அன்பு கூட்டி மெல்ல மெல்ல நாடக வெளியில் என்னை சரிசெய்தது.

எனது கல்லூரி நாட்களின் போது அண்ணன் தனது உறவினர் மகள்கள் இருவரை ஒவ்வொரு வயதிலுமாக குழந்தை பருவம் முதல் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதை அறிவேன். அதில் சில புகைப்படங்களையும் நான் பார்த்தது வியந்ததுண்டு. அதனாலேயே குறிப்பிட்ட அவ்விரு சிறுமிகள் மீது ஒரு தனிப்பாசம் இருந்தது. அந்த புகைப்படத்தில் மலர்ந்த குட்டி தேவதைகளில் ஒருவர் ப்ரியா இன்று கல்லூரி மாணவி. அவரும் அவரது சகோதரி சத்யா இருவரும் (பூபதி அண்ணனின் அக்கா குழந்தைகள்) நடிகர்களுக்கு சமையல் செய்வதற்காக தினமும் வருவார்கள். பாசமும், இளகிய மனசும் அந்த வீட்டுப் பெண்களின் குடும்பச்சொத்துப் போல. அழகான பெண்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் புழங்க முடிந்தது 15 ஆண் நடிகர்கள் மத்தியில் ஒற்றை பெண்ணாக இருந்த என் தனிமைக்கு தேவையாய் இருந்தது.

நாடக அரங்கேற்றத்திற்கு இறுதி ஒரு வாரம் முன்பு, குறுமலை கிராமத்தில் ஒரு புராதன அய்யனார் கோயிலில் தேசாந்திரிகளாக தங்கியிருந்து ஒத்திகை பார்த்தோம். தமிழக பெண்களுக்கு எளிதில் கிடைத்து விட முடியாது அற்புத அனுபவம். விழுது தொங்கும் ஆலமரங்கள் (எனது முதல் வசனத்தின் ஒரு பகுதியும் கூட) சூழ நடுவில் ஒத்திகை நிலம் அமைத்து மயிலும், நாயும், மாடும், இன்ன பிற பட்சிக்கூட்டத்திற்கும், பூச்சி இனத்திற்கும் மத்தியில், அவர்கள் நிலத்தில் நாடகம் பழகி்னோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கையில் பெண்ணான எனக்கு சில அசௌகர்யங்கள் இல்லாமலும் இல்லை.

வழக்கமாக காலை வெயில் வருமுன் ஒரு ஒத்திகை, மாலை இருள் வருவதற்கு முன்பு ஒரு ஒத்திகை பார்ப்பது எங்கள் வழக்கம். நிலத்தில் ஒத்திகை முடிந்ததும் அசதியும், புழுதியுமாக உடல் புழுங்கிக் கொண்டிருக்கும். குளிப்பதற்கு அங்கே அறை வசதி கிடையாது. நாங்கள் தங்கியிருந்த கோயிலுக்கும், நாடக நிலத்திற்கும் நடுவில் அழகான, அளவான தாமரைக் குளமொன்று கம்பீரமாக இருந்தது. ஒத்திகை முடிந்ததும் நடிகர்கள் அனைவரும் குளிக்க அங்கே சென்றுவிடுவார்கள். அந்த திறந்தவெளியில் என்னால் குளிக்க முடியாது. எனவே அதே அசதியோடும், வியர்வையோடும் மாலை ஒத்திகையையும் முடித்துவிட்டு, மீண்டும் நடிகர்கள் குளிக்க காத்திருப்பேன். கடின உழைப்பிற்கு பிறகு குதூகலமாய் குளித்ததில் நீந்திக் குளிக்கும் யாருக்குத்தான் வெளியேற மனம் வரும்.

நல்ல கும்மிருட்டில் 8 மணி சுமாரில் நண்பர்கள், விஜி மற்றும் பேய் காமன் காவல் தெய்வங்களாய் குளக்கரையில் இசையுடன் அளவளாவிக் கொண்டிருக்க நான் அரைகுறையாக குளித்துக் கொள்வேன். அந்தக் குளத்திற்கு மேலும் இரண்டு கரைகள் இருந்ததால் பதற்றத்துடனே அவசர அவசரமாக துவைத்துக் குளித்து கரையேர வேண்டியிருக்கும். மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றில் ஒரு பெண்ணுடல் கிராம மனிதர்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்டத்திற்காக கோயிலில் குழுமியிருக்க, ஆளரவமற்ற ஊர்க்குளத்தில் அந்த பெண்ணுடல் முதன்முதலாக நிர்வாணமாக குளிக்கும் அனுபவத்தை எழுதியிருப்பார். ஒவ்வொரு இரவு குளியலிலும் அந்த கவிதை மட்டும் எனக்கு துணையாக என்னுடன் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தது. இது போன்ற சிறுசிறு பெண்ணுடல் சார்ந்த புறச்சிக்கல்கள் சில இருந்த போதும், விஜி மற்றும் பேய்க்காமனின் நட்பின் நேசக்கரம் அந்த இயற்கை சூழலையும், நாடக வெளியையும் ரசிக்க உதவியது மறக்க முடியாதது.

****

எது போதவில்லை, எது குறைகிறது என்று புரியாமலேயே மதுரை நிகழ்விற்கு சக நடிகர்களுடன் தயாரானேன். நாடக உடையும், இசையும், ஒளியும், காலகாலமாக கலைஞர்களின் வேர்வை பாவிய காந்தி ம்யூசியத்தின் திறந்த வெளி அரங்கமும் அவற்றிற்கேயுரிய இயல்புடன், ஒரு நடிகையாக என்னைத் தாங்க கொஞ்சம் ஒப்பேற்றினேன். தொடர்ந்து திருவண்ணாமலை நிகழ்வுகளிலும் அதே நிலை. என் உடல் மட்டுமன்றி என் குரலும் ஆரம்பம் முதல் எனக்கு தொடர்ந்து பாதகமாகவே இருந்து படுத்தியது. இன்னமும் நாடகத்தை புரிந்து கொள்ளமுடியாத எனக்கு சென்னை, ஸ்பேசஸ் அரங்கம் மேலும் என் சவாலை சிக்கலாக்கியது.

நாட்டிய தேவதை சந்திரலேகாவின் அபிநயங்களும், பாதமும் பரவிய அந்த வளாகமும், தன்னிகரல்லா அக்கலைமகளின் மூச்சும், பயிற்சியும் தங்கிவிட்ட ஸ்பேசஸ் மேடையும் எனக்கு பலநாள் ஆதர்ஷ நிலம். ஏற்கனவே அந்நிலத்தில் ஸ்ரீஜித் புண்ணியத்தில் ஒருமுறை கால்பதித்திருந்த போதும். இது special. சந்திரலேகாவின் மேடையில், பூபதி அண்ணனின் நாடகம், அதில்நான் நடிகை என்பது எப்பேர்ப்பட்ட விடுதலையுணர்விற்கும் இணையானது.

முந்தைய நிகழ்வுகளை விட கூடுதல் சிறப்பாக இந்த நாடக நிலத்தில் மறைந்த சந்திரலேகாவும் ஆலமரமாய் விழுது தொங்க எங்களுடன் நிகழ்வில் பங்கேற்றார். அம்மூதாயின் அரவணைப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடைத்ததைப் போலவே பாரபட்சமின்றி எனக்கும் கிடைத்தது. எந்த சிக்கலும் இன்றி என் பணியை அவள் பார்வையில் செய்து முடித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதும் பூபதி அண்ணனின் நிழலில் கோணங்கி அண்ணனின் பார்வையில் விஜி-பேய்காமனின் நட்பில் சக நடிகர்களின் அருகாமையில் இருந்தது, கோவில்பட்டி முதல் குறுமலை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை வரை பயணம் செய்து நாடகம் செய்தது இத்தனை வருட காத்திருப்பின் பலனாக இருந்தது. எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மனதிற்குள் ஏதோவொரு குறை அரித்துக்கொண்டிருக்க அயர்ச்சியுடனே நாடக வெளிக்கு மனமின்றி விடைகொடுத்தேன்.

சென்னை வீட்டிற்கு திரும்பிவந்த பின்புதான் எனக்கு உண்மையான நடிப்பு தாகமே ஆரம்பித்தாகவே உணர்கிறேன். ஒரு மாத ஒத்திகை, சக நடிகர்களின் சுவாசம், உழைப்பு, நட்பு, கோணங்கி அண்ணன், அப்பா, ப்ரியா-சத்யா, கோடங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன் எல்லாமே நாளுக்கு நாள் ஏக்கத்தையே தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தன. வீட்டில் இருப்புக் கொள்ளாமல் கொஞ்சம் ஓவிய வெளியில் பயணம் செய்து என் ஆவலை அடக்கிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் பாண்டிச்சேரி நாடக நிகழ்விற்காக கோவில்பட்டி சென்ற போது தான் மீண்டு வந்ததாக உணர்ந்தேன். இந்த முறையும் ஒத்திகையில் அதிக ஆற்றலுடன் உழைக்க முடியாத போதும் பழைய ஆற்றாமையோ பயமோ என்னிடம் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. ஏதோவொரு உந்து சக்தி எனக்கு நம்பிக்கை கொடுத்ததை இந்தமுறை தீர்க்கமாக உணரமுடிந்தது. ஒத்திகை முடிந்து புதுவையில் எங்கள் நாடக மேடையை அடைந்த போதும் கூட வழக்கமாக அரங்கேற்றத்தின் போது நம்பிக்கையின்மையால் ஏற்படும் நடுக்கம் இந்த முறை அறவே இல்லாமல் இருந்தது.

இந்த முறை நிகழ்விற்கு முன்பு நாடக நடிகர்களுக்கு செம்மண் குழைத்து உடலிலெங்கும் அரிதாரம் பூசுவதாக ஏற்பாடாகியிருந்தது. நடிகர்களுக்கு மட்டும். எனக்குரிய costume போட்டு தயாராகி நிற்கிறேன் புதிதாக ஒன்று என்னை தொந்தரவு செய்கிறது. ஏன் இது நடிகர்களுக்கு மட்டும் என்று கேள்வி, சரி பிரதியின்படி அவர்கள் கோமாளிகள் அவர்களுக்கு அரிதாரம் தேவை அது செம்மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது எனது பாத்திரத்திற்கு அது அவசியம் இல்லாமல் இருக்கலாம் என்று சுயசமாதானம் செய்து கொள்கிறேன். ஆனாலும் இருப்பு கொள்ளவில்லை.

வழக்கமாக எனது காட்சி வரும் வரையிலும் எனக்கு சில பின்னரங்க பணிகளிருக்கும். நாடகம் துவங்கி 4 காட்சிகள் முடிந்து விட்டது, இன்னும் இரண்டு காட்சிகள் கழித்து எனக்கு வேலை நேரம் வந்துவிடும். அந்த செம்மண் குழைவின் நினைவு என்னை ஆக்கிரமித்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. அண்ண்னிடம் அனுமதி கேட்டு நானும் செம்மண் பூசிக்கொள்ளலாமா (கேட்பது சரியா என்ற குழப்பம்), அப்படியே கேட்க நினைத்தாலும் அதற்கான சூழலுமில்லை.

எதையும் யோசிக்காமல் அந்த பின்னரங்க இருளில் செம்மண் குழவை இருந்த பாத்திரத்தைத் தேடி கால்களிலும், கைகளிலும் சிறு சிறு வரிகளிட்ட பின் தான் ஒருவாறு மனக்குதிரை ஓய்ந்து நின்றது. இப்போது என் காட்சிக்கான நேரம் (Its show time babe; and I did it). என்னை நானே வியந்து கொண்டிருந்தேன். வழக்கமாக நான் செய்யும் movements தான் ஆனால் இம்முறை உயிர்ப்புடன் இருந்தது. அதன் பிரதிபலிப்பை பார்வையாளர்களிடம் காண முடிந்தது. நான்கு அரங்கேற்றத்தில் முதல்முறையாக நான் மேடையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் என்னால் இதயத்தை வருடுகிறது. இறுதி காட்சியிலும் நாடகநிலத்தில் நின்று உயிர்ப்புடன், உத்வேகத்துடன் எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்பாடா, இதைத்தான் இந்த அனுபவத்தை தான் இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தேன். நாடகம் முடிந்து பார்வையாளர்கள் பாராட்டிய போது வழக்கமான குற்றவுணர்வின்றி பெருமிதம் இருந்தது. இந்தமுறை அனைவரும் என் குரலையும் சிறப்பாக, boldஆக இருந்ததாக சொன்னதும் உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருந்தது.

எல்லாம் முடிந்து் வெளியேறாத கண்ணீருடன் நண்பர்கள் விஜி மற்றும் பேய்க்காமனின் ஆதரவான அரவணைப்பிற்காக காத்திருந்து.., காத்திருந்தேன். வழக்கமாக என்னை அதிகம் விமர்சிப்பதும், அதிகம் ஊக்குவிப்பதும் இவ்விருவரே. இம்முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செய்ததாக உணர்கிறேன் ஆனால், எப்போதும் நிகழ்வு முடிந்ததும் அரவணைத்து வாழ்த்து சொல்லும் இருவரும் இம்முறை அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சக நடிகர்களுக்கு மட்டும் வெற்றியை பரிமாறிக்கொண்டிருந்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

நிகழ்வு முடிந்து வழக்கமாக செய்து முடிக்கும் வேலைகளை ஒருங்கு செய்துவிட்டு தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மானசீகமாக பலருக்கு நன்றியை பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்த பட்டியலில் கோவில்பட்டி மற்றும் குறுமலை நாடக நிலம், பூபதி அண்ணன், கோணங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன், சக நடிகர்கள், சத்யா, ப்ரியா, என் அம்மா வீரம்மாள், அக்கா ராதா, நண்பர் ரூபன் பால் நத்தானியல், என்னுடல், என் கண்ணீர், என் வலிகள் எல்லாமே அடங்கும். முதன்முறையாக தன் கன்னித்தன்மைக்கு விடைகொடுக்கும் பெண் தன் உடலின் பரிபூரணத்தை உணரும் திருப்தியையும், மனஅமைதியையும் அன்றைய நாடக நிகழ்வு முடிந்த போது நானடைந்தேன். இன்னும் அந்த சாந்தம் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

இறுதியாக பூபதி அண்ணனின் பித்த நிலம் எனக்கு துடிவரம் தந்துவிட்டதாக உணர்கிறேன். இனி வெறிகொண்டு் வாசிக்கவும், கலைக்குள் இயங்கவும் தீர்மானித்துள்ளேன். அற்பக் காரணங்களுக்கெல்லாம் தளர்வடைந்து போகும் இயல்புடைய எனக்கு இப்பித்தநிலம் மீட்டுத்தந்த சகோதர நேசமும், நட்பின் உத்வேகமும், காதலின் வனப்பூவும் தொடர்ந்து உற்சாகமும் உந்துதலும் தந்துகாக்க வேண்டுமென்று பிரபஞ்ச நாடக நிலத்தை வேண்டிக்கொள்கிறேன்.


-------------------------------------------------

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidya)

 

 

லிவி

 


ரணங்கள், வலி, புறக்கணிப்பு, அழுகை, நரகம், துயரம் இந்த சொற்களில் இருக்கும் அழுத்தத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? என்ற கேள்வி அடிக்கடி எழும். நாம் அதிகம் அழுதது இந்த உலகத்தில் எதற்கானதாக இருந்திருக்கும்? அதிகபட்சம் பிரியமானவரின் மரணம் அல்லது பிரிவு? பிறந்ததில் இருந்தே மேற்சொன்ன சொல்லாடல்களை உண்மையில் அனுபவிக்கும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும்? இந்த கோர வார்த்தைகளுக்கு எதிர்வினையாக புன்னகைக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. திருநங்கைகளைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத அறிவுஜீவியான இந்தச் சமுதாயத்தில் போராடும் வல்லமை கொண்ட நெஞ்சங்களில் ஒன்று அவருடையது. வாழ்வின் இரக்கமற்ற தருணங்களோடு மோதி தன்னை நிரூபித்திருக்கும் அழகிய முகம் லிவிங் ஸ்மைல் வித்யா.

வித்யாவை கதைசொல்லிக்காக சந்திப்பதற்காக மதிய நேரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். முதல் மூன்று நாட்கள் பெய்த மழையால் அதிக வெப்பம் இல்லாமல் லேசான குளிர்காற்று வீசியது. திருநங்கைகள் பற்றிய அறியாமையினை கொண்டுள்ள இந்தச் சமூகத்தை என்ன செய்வது? நம் குழந்தைகள் அவர்களை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே சொல்லிக் கொடுக்கப் படுவதெல்லாம் திருநங்கைகள் ஏளனத்துக்கு உரியவர்கள் என்பது மட்டுமே. சினிமா கோமாளிகளின் பங்கு இதில் அளப்பறியது. பெண்களுக்கே என்ன உடை உடுத்த வேண்டுமென சொற்பொழிவு தரும் கலாச்சார அறிவீனர்களை விளங்கிக் கொள்ளச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை.

சைதாப்பேட்டை பெருமாள் கோவில் அருகே செல்லும் ஒழுங்கையின் சில திருப்பங்களில் இருந்தது அவர் தங்கியிருக்கும் வீடு. அடையாளமாக பிள்ளையார் கோவிலுடன் அந்த தெரு முடிவடைந்தது. அருகே இருந்த நாகலிங்க மரம் பூத்துக் குலுங்கியது. உருண்டையாக காய்களும் புடைத்துத் தொங்கியது. பார்வையைச் சுழற்றினேன் மாடியில் இருந்து கையசைத்தார் வித்யா. பதில் புன்னகையோடு கையசைத்தேன். அவர் தங்கியிருந்தது மிகச் சிறிய வீடு. கதிரைகள் எதுவும் இல்லை. பாயில் வாகாக அமர்ந்து கொண்டு உரையாடத் தொடங்கினோம்.

வித்யா இன்று நவீன நாடகங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். மாலை பெச‌ன்ட் ந‌க‌ரில் உள்ள ஸ்பேஸில் ந‌டைபெறும் பரிக்ஷா நடத்தும் நாடகத்திற்கு செல்வதாக இருந்தார். அதனால் பின்னேரத்திற்குள் முடித்துக் கொள்வதாக இருந்தது. ஒரு குழந்தை போல கதைத்தார். கதை சொல்லும் போதும் அவ்வாறே இருந்தார். மிக ரசித்துக் கொண்டே அவருடன் உரையாடினேன். இடையிடையே கதைகள் சொல்கையில் சிறு சம்பவம் மறந்துவிட்டால் அவர் கொண்ட‌ சின்ன ப‌த‌ற்ற‌ம் மெல்லிய‌ புன்ன‌கையை என‌க்குள் வ‌ர‌வ‌ழைத்துக் கொண்டிருந்த‌து.

மதியம் கதை பதிவு செய்யத் தொடங்கியபோது இருவரும் உண‌வருந்தியிருக்கவில்லை. 'வெளியே சென்று இருவரும் சாப்பிட்டுவிட்டு தொடர்வோம் என்றேன்.'இங்கு மிடில் கிளாஸ் குடும்பங்கள் அதிகம். நாம் இருவரும் ஒன்றாக சென்று திரும்பி வந்தால் தப்பாக எடுத்துக் கொள்வார்கள்' என்றார். எவ்வாறு புரிந்து கொள்ளச் செய்ய‌ப் போகிறோம் இந்த‌ ந‌ன்னில‌த்தை? கதைகளின் பதிவு தொடர்ந்தது. நிகழ்ந்தது.

திருந‌ங்கைக‌ளுக்காக‌ போராடி வ‌ரும் க‌ள‌ப்போராளி லிவிங் ஸ்மைல். வெற்று காகித‌ப் புலி ம‌ட்டும் அல்ல‌ அவ‌ர். குழ‌ந்தைக‌ளுக்குச் சொல்ல‌ அவ‌ரிட‌ம் நிறைய‌ க‌தைக‌ள் இருந்தன‌. இர‌ண்டு க‌தைக‌ளை மாத்திர‌ம் ப‌திவு செய்து கொண்டோம். குழந்தைக் கதைகள் நம்மையும் சிறுபிராயத்தில் வாயைப் பிளந்து கொண்டு கேட்கும் தன்மையைக் கொண்டிருந்தது. த‌ன‌க்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷின் கதை நெடுநாட்கள் முன்பு படித்து மறந்திருந்தாலும் அதைச் சொல்ல அவர் எடுத்துக் கொண்ட பிராயத்தணம் அத்தனை அழகு.‌

க‌தைக‌ள் அனைத்தையும் முடித்து திருப்புகையில் பூக்கள் சொறிந்த அந்த‌ நாக‌லிங்க‌ ம‌ரத்தாலும் வித்யாவின் நினைவாலும் நிர‌ம்ப‌ப் பெற்றிருந்தேன். வாழ்வின் துய‌ரை வென்று க‌ளிக்கும் தொட‌ர் போராட்ட‌த்தைக் கொண்ட‌வ‌ரிட‌ம் ப‌ழ‌கினால் உலகமே புதிதாகத் தோன்றும் அரூப‌மான‌ உண‌ர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------

சில முக்கியக் குறிப்புகள்:

* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.

* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.

* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.

* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.

* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள்.  thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------

லிவிங் ஸ்மைல் வித்யா கதைகள் - 1

 

நிமிடம்: 15 --  நொடி: 46

 



லிவிங் ஸ்மைல் வித்யா கதைகள் - 2
நிமிடம்: 08 --  நொடி: 14

 
லிவிங் ஸ்மைல் வித்யா கதைகள் - 3
நிமிடம்: 07 --  நொடி: 25
 
லிவிங் ஸ்மைல் வித்யா கதைகள் - 4
நிமிடம்: 10 --  நொடி: 10
 
லிவிங் ஸ்மைல் வித்யா கதைகள் - 5
நிமிடம்: 06 --  நொடி: 17
 
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </