கதை சொல்லிக்காக அஜயன் பாலாவை சந்திக்கச் சென்றபோது இருட்டிவிட்டிருந்தது. முன்னரே சென்று அவருடைய வருகைக்காக காத்திருந்தோம். அஜயன் பாலாவின் கதைகள் புனைவுகளில் சஞ்சரிப்பவை. ஒரு புனைவுலகை விட மிக பத்திரமாக வேறு எங்கும் உணர்ந்து விட முடியாது. சொற்களால் எழுத்தாளன் படைப்பிக்கும் அந்த உலகில் வார்த்தைகள் கொண்டே ஒவ்வொன்றும் தோற்றுவிக்கப்படுகிறது.
வார்த்தைகளின் வழி வாசகனுக்கு புனைவுலகை கடத்திவிடும் நிகழ்வுகள் அவ்வளவு எளிதாக வந்துவிடுவதில்லை. இயல்பான இந்த உலகின் மேல் சந்திக்கும் கருணையற்ற மனிதர்களையும் அவர்கள் தந்துவிட்டுப் போகும் வலிகளை மழுங்கடிக்கும் போதைப் பொருளைப் போல் இருப்பவை புனைகதைகள். அவற்றைத் தாண்டியும் புனைகதைகள் ஒரு கவித்துவமான அரூபத்தைக் கொண்ட மனதை, அசாதாரண உணர்வை உண்டு பண்ணிவிட்டுச் செல்லும்.
பெருங்கோபத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை,மனக் கிளர்ச்சியை,தத்துவங்களை,அழுகைகளை, இழப்பை உருவகங்களால் புனைவினால் கதைகளை கட்டமைக்கும் பொழுது அது நம்மை வசீகரமானதொரு வேற்று பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்லும். நேர்கோட்டில் செல்லும் கதைகளைவிட புனைகதைகள் நம் ஞாபகங்களை விட்டு அகன்றுவிடாமல் பசைகளைப் போல ஒட்டிக்கொள்ளும். அஜயன் பாலாவின் புனைகதைகளின் தொகுப்பான "மயில் வாகனனும் இன்ன பிற கதைகளும்" வாசித்திருக்கிறேன். புனைவை தேர்ந்தெடுக்க அவர் கூறிய காரணம் 'புனைவுலகை மட்டுமே என் மனதிற்கு நெருக்கமாக உணர்கிறேன்'. புனைவு என்பவை பொய்கள் அல்ல. மாயத்தை நம்மிடம் நிகழ்த்திக் காட்டிவிட்டு அதன் மூலம் உண்மைகளைக் கண்டடைதல். நத்தையைப் போல் உள்சுருங்கிக் கொள்ளும் மனிதன். ஆகையால் அஜயன் பாலாவின் புனைகதைகளை வாசித்த நாட்களில் அதில் மயக்கமுற்றிருந்தேன்.
சென்னை வந்த நாட்களில் முதல் முறை சந்தித்த எழுத்தாளர் அஜயன் பாலா. அவருடைய வாசகன் என்ற அறிமுகத்துடன் மட்டும் அன்றைய இரவு அவருடைய வீட்டிலே தங்கினேன். அன்று ஏனோ பாலா இருந்த அவசரகதியில் அவருடன் நீண்ட உரையாடல்கள் இல்லாமலே போனது. ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை. திட்டமிட்ட படப்பிடிப்பொன்று தள்ளிப் போனதால் ஆறுதலாகப் பேசினார். பாலா முதல் முறை சென்னை வந்த நாட்கள், தொன்னூறுகளில் நேரிடையாக நடக்கும் இலக்கியச் சண்டைகள், இன்று புருவம் தூக்கும் எழுத்தாளர்களின் ஆரம்ப நாட்கள் என அவர் பகிர்ந்துகொண்டவை ஏராளம். நினைவுகளில் இருப்பவை சில சமயம் கசப்பானவைகளாக இருப்பினும் எழுத்தாளனின் ஞாபகங்கள் பதிவு செய்யத் தகுதியுடையவை.
முதன் முறையாக அஜயன் பாலா 'முன்றில்' இலக்கிய கூட்டத்திற்கு உதவிப் பையனாக சென்னை வந்திருக்கிறார். அங்கு வந்த எழுத்தாளர்களுக்கு தேனீர் வழங்குவது தான் அவர் பணி. எல்லா எழுத்தாளர்களையும் ஒரு சேர பார்க்கும் புழுகு இவர் மனதுக்குள். இலக்கிய கூட்டத்தின் இரண்டாம் நாள் தமிழில் வந்த நாவல் ஒன்றைப் பற்றிய விவாதம். அதன் முதல் நாள் இரவு இலக்கிய விவாதத்திற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது. அமைப்பியல், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் ஒரு கூட்டும், மார்க்சிய எழுத்தாளர்கள் ஒரு கூட்டாகவும் பிரிந்து நின்றனர் (தீவர வாசகர்கள் பிரித்துணர்ந்து எழுத்தாளர்கள் பெயர்களை கண்டடைக). இரவு ஆலோசனைக் கூட்டம் தொடங்கிற்று. ஒரு கூட்டிற்கு தலைமை ஏற்றவர் "நாளை அவன் நாவலைப் பற்றிய கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது நான் எழுந்து சென்று ஆட்சேபித்து கையில் இருக்கும் காகிதத்தை பிடுங்கச் செல்வேன். நீங்கள் எல்லோரும் எனக்கு ஆதரவாக எழுந்து வர வேண்டும்" என்றார். இவற்றை எல்லாம் மிரட்சி கலந்த பெருமிதத்துடன் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார் அஜயன் பாலா.
கதைகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுவது அஜயன் பாலாவின் வழக்கம்.'ஒரு கதையை மீண்டும் மீண்டும் எழுதுவேன். கதைகள் எழுதுவது என்பது மொழியைக் கட்டுக்குள் கொண்டு வருவது. அதற்கு ஒருவித பழக்கம் வேண்டும். அதனால் அக்கதையை நிறைய தடவை எழுதிப் பார்பேன்' என்றார். பாலாவிடம் எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கி பற்றிய நினைவுகள் மிக இனிதானவை. எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் நாடோடிகளைப் போல் ஊர் சுற்றுபவர்கள். ஆரம்ப காலங்களில் ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்துவிட்டு பிறகு மறுபடியும் அங்கிருந்து வேறெங்கோ செல்லத் தொடங்குவார்கள். தான் ஊர் சுற்றியதைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் நிறைய கட்டுரைகளில் எழுதியிருந்தாலும் பாலவின் குரலில் கேட்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் பாலா தங்கியிருந்த அறைக்கு வந்திருக்கிறார்கள். அவருடைய 'முகம்' என்கிற கதையைப் படித்துவிட்டு ஒரு எழுத்தாளனை கண்டுபிடித்து விட்ட சந்தோசம் அவர்களுக்குள். நீண்ட நேரம் கதையைப் பற்றி இலக்கியத்தைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு இரயில் நிலையத்திற்கு இருவரையும் வழி அனுப்புவதற்கு வந்திருக்கிறார். மூவரின் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது. இரயில் கிளம்பவும் பேச்சு தொடர்ந்து கொண்டு இருக்கவே அவர்களுடன் சேர்த்து இவரும் இரயில் ஏறி விட்டார். 'நான் படுத்துக் கொண்டே எஸ்.ராவும் கோணங்கியும் பேசிக்கொண்டிருந்ததை நெடு நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன்' என்றார்.
அஜயன் பாலாவும், குட்டிரேவதியும் இணைந்து ஒரு இலக்கிய அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் லீனா மணிமேகலையும் அவர்களோடு இருந்திருக்கிறார். அமைப்பை தொடங்கி சில கூட்டங்கள் தான் நடத்தி இருந்திருக்கிறார்கள், பின்னர் மனக் கசப்புகளால் விலகி பேசாமல் இருந்திருக்கிறார்கள். 'தனிப்பட்ட காரணங்கள் என்றில்லாமல் கருத்து முரண்பாடுகளே அதற்கு காரணம். படைப்பாளிகள் சேர்ந்து ஒரு செயலை செய்வது மிகக் கடினம்' என்றார்.
அஜயன் பாலாவின் மிகப் பெரிய தேடல் திரைப்படமாகவே இருந்திருக்கிறது. அவர் பத்திரிக்கையில் சில காலம் வேலை செய்து கொண்டும் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். இன்றும் திரைப்படம் இயக்குவதில் தான் அவர் முழு கவனம் இருக்கிறது. ஒரு நடிகராகவும் உருமாற்றம் பெற்றிருக்கிறார் அஜயன் பாலா.'எனக்கு இருக்கும் பிம்பத்தை தாண்டி அடிப்படையில் வேறொரு மனிதன் நான். என்னைப் பற்றிய கருத்துக்கள் எவ்வாறு உள்ளனவோ அதை உடைக்க விரும்பவில்லை. அவ்வாறே இருக்கட்டுமென பேச்சுக்கிடையில் குறிப்பிட்டார்' பாலா. கதைகளையும் மிக சிரமம் தராமல் அவராகவே ஒலிப்பதிவுக் கருவியை பிடித்துக் கொண்டு கதைகளைச் சொன்னார். கதைகளை தன் நினைவுகளில் இருந்து மீட்டு தன் மனதில் பதிந்திருந்தவற்றை சொன்னார்.
அஜயன் பாலாவின் கதைகளைக் கேட்க கீழே உள்ள ப்ளே ஐக்கானைத் தட்டுங்கள்.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
|