சா. கந்தசாமி
பிறந்த ஆண்டு 1940. பிறந்த ஊர், மயிலாடுதுறை(முன்பு மாயூரம் அல்லது மாயவரம்). இருபத்தைந்து வயதில் இந்தப் புதினத்தை எழுதி இருக்கிறார். இருபத்தொன்பது வயதில் வெளியாகி இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் இது. இவரது 'விசாரணை கமிஷன்' என்ற இன்னொரு நூலும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 11 புதினங்களையும் இவர் எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கிய வட்டத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்.
"கதையிலிருந்து 'கதை'யை வெளியேற்றுவதுதான் என் வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை.எல்லோரும் கதை சொல்வதுபோல , கற்பனையாக, போலியாக கதை சொல்ல முடியாது.நான் வாழ்க்கையை எழுதுகிறேன். வாழ்க்கை என்பது கதை அல்ல.நான் தனிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையைப் பற்றியும் சொல்வது இல்லை.தனிப்பட்ட மனிதனை முன்நிறுத்தி மனித சமுதாயத்தின் வாழ்க்கை முழுக்க
சொல்ல முடியுமா என்று பிரயாசைப் படுகிறேன். மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது. மனிதனுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொள்வதுதான் என் நாவல்கள்." இது சா.கந்தசாமி தனது கதைகளைப் பற்றி கூறியது.
விவசாயத்தை மையமாகக் கொண்ட "சாயாவனம்" நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான சா.கந்தசாமியின் சொந்த ஊர் மயிலாடுதுறை.
ராஜாராம் ,ந.கிருஷ்ணமூர்த்தி ,ஞானக்கூத்தன் மற்றும் ந.முத்துசாமி ஆகியோர் சேர்ந்து நடத்திய இலக்கிய கூட்டங்கள் அறுபதுகளில் மிக பிரபலம். க.நா.சு ,கு.அழகிரிசாமி போன்ற பலர் அங்கே கட்டுரைகளை வாசித்திருக்கின்றனர். பின்னர் கிட்டதட்ட இதே குழு 'கசடதபற' என்ற சிறு பத்திரிக்கையை மூன்று ஆண்டுகள் நடத்தியது. 'கசடதபற'வின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
சாயாவனம் (1968),அவன் ஆனது (1974),சூரிய வம்சம் (1983),தொலைந்து போனவர்கள் (1983),விசாரணை கமிஷன் (1994) ஆகிய நாவல்களை எழுதியிருக்கும் சா.கந்தசாமி எதையும் தொடர்கதையாக பத்திரிக்கைகளில் எழுதியதில்லை.
இவரது 'தொலைந்து போனவர்கள்' நாவல் தொலைக்காட்சி தொடராக டி.டி யில் வந்த போது மிகுந்த வரவேற்பை பெற்றது. 'தக்கையின் மீது நான்கு கண்கள்'கிழக்கு பார்த்த வீடு, சாந்தகுமாரி, சொல்லப்படாத நிஜங்கள்,இன்னொரு மனிதம் ஆகிய சா.காவின் சிறுகதைத் தொகுப்புகளும் கவனத்திற்குரியது.
"சா.கந்தசாமியின் பல கதைகளும் நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும் போது தமிழர்கள் எத்தனை தான் குப்பைப் பத்திரிக்கைகளுக்கு அடிமைப்பட்டிருந்தாலும் இலக்கிய ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது" இது சா.க பற்றி க.நா.சு. கூறியது.
எழுத்தைத் தவிர குறும்படம் எடுப்பதிலும் தீவிரமாக இயங்கும் சா.கந்தசாமி சிற்பி தனபால் பற்றி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார்.சுடுமண் சிற்பங்களைப் பற்றி 'கிராம தேவதை'என்ற குறும்படம் இயக்கிய சா.க. திரைப்பட தணிக்கை குழுவிலும் ,சாகித்ய அகதமி குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்.
எழுத்துக்காக சாகித்ய அகதமியின் விருது பெற்ற சா.கா வின் 'காவல் தெய்வம்' என்ற குறும்படம் அன் ஜியே திரைப்பட விழாவில் [Angio Film Festival, Nicosia, 89] முதல் பரிசு பெற்றிருக்கிறது.
தற்போது புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவுகளையும், கதைகளையும் பதிவு செய்யும் ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சா.கந்தசாமி அது பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறார்.
-------------------------------------------------
|