கதை சொல்லிக்காக பவாசெல்லதுரையை சந்திக்கச் செல்ல இருந்த அன்றைய பொழுது சென்னையை புயல் தாக்குவதான அறிகுறிகளோடு சிறு தூறலையும் சேர்த்துக் கொண்டது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கான நான்கரை மணி நேரப் பயணமும் மழை நேரக் கிளர்ச்சியை தந்து கொண்டிருந்தது. மிகச் சிலரே தன் இருப்பை எந்தவொரு சுயநலமின்றி மொழிக்காக இலக்கியத்திற்காக தம் வாழ்க்கை முழுமையும் கலைச் செயல்பாடுகளோடு அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். பவா செல்லதுரையும் அவர் குடும்பமுமே அதற்குச் சான்று.
பவாசெல்லதுரையை சந்திக்க வேண்டும் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வந்தவர் அவர் மனைவி எழுத்தாளர் கே.பி.ஷைலஜா. பதின்பருவ வயதில் என் மனக்கட்டமைப்பை மாற்றி அமைத்த புத்தகங்களில் ஒன்று "சிதம்பர நினைவுகள்". அதில் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஷைலஜா. வாழ்வின் கீழ் மனிதர்கள் மீதான புதிய தரிசனம், கலைஞனுக்கே உரிய பித்த மன நிலை, இருத்தலில் ஏற்படும் போராட்டங்கள் என வாழ்வின் மீதான தீர்மானங்களை மாற்றி அமைத்த புத்தகம் அது. அவரைச் சந்திக்கப் போகிறாம் என்ற உற்சாக மன நிலையுடன் இருந்தேன்.
திருவண்ணாமலை வந்து சேர்ந்ததும் பவாவை செல்போனில் அழைத்து, வந்திருப்பதைச் சொல்லியவுடன் "ஆட்டோ ஒன்றை பிடித்து ஓட்டுனரிடம் செல்போனைக் கொடுங்கள் நான் முகவரி சொல்கிறேன்" என்றார்.அவ்வாறே செய்ததும் பவா முகவரியை சொல்லத் தொடங்கினார். ஆட்டோகாரர் தான் பேசுவது பவா என்பது தெரியாமல் "எதுங்க? பவா சார் வீடுங்களா ?" என்றார்.ஆட்டோக்காரர் திருப்பி சவாரி முறைப்படி நிற்கும் ஆட்டோகாரரிடம் "பவா சார் வீடு" என்று மட்டும் சொன்னார்.திருவண்ணாமலையில் நன்கு தெரிந்தவராக பவா செல்லத்துரை இருக்கிறார். தமிழ் எழுத்தாளனுக்கு மிக ஆச்சரியமாகவே கிடைக்கும் பாக்கியம்.மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டை அவர் ஊரில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்று வாசித்த ஞாபகம் வந்தது.
|
பவா பார்ப்பதற்கு ஒரு கிராமத்து மனிதரைப் போல. அவர் பேசுகையில் இருக்கும் நட்பும் அன்பும் எளிதில் யாரையும் வசீகரித்துவிடும். பவா வீட்டிற்கு செல்பவர்களுக்கு இரு தோழர்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள். நம்முடன் விளையாட, கதை பேச விவாதிக்க அவ்வீட்டில் உங்களையும் நெருக்கமானவர்களாக உணரவைக்க அவர்கள் எந் நேரமும் அன்பையும் உரையாடலையும் வைத்திருக்கிறார்கள். பவாவிற்கு இரு பூரணத்துவ கவிதைகள் குழந்தைகள். மூத்த மகன் வம்சி. மிகப் பெரிய ஓவியர். நன்றாக பாடவும் செய்வார், இருந்தும் இவருக்கு ஓவியத்தில் இருக்கும் காதலால் பிற துறைகளில் கவனம் செலுத்துவதில்லை.இளைய மகள் மானசி. கருணையே உருவான ஆசிரியர். எந்த மாணவரையும் அடிக்க மாட்டார். எவரையும் வேறுபடுத்தாமல் எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி சமமாக நடத்துபவர். நிறைய பேசுவார்.இவரும் நன்றாகப் பாடுவார். வம்சிக்கு வயது பன்னிரெண்டு. மானசிக்கு வயது எட்டு. அவர்கள் கனவுகளும் அவர்களைப் போல அழகானது.
வம்சிக்கும் மானசிக்குமான ரசனை முதிர்ச்சிகள் அதிகம். அவர்கள் வீட்டின் மாடியில் இருவரும் சேர்ந்து உலகத் திரைப்படங்களை திரையிடுகிறார்கள். நந்தலாலா படத்தினை என்னோடு சேர்ந்து விவாதிக்கிறார்கள்.அவர்கள் மேதமைகள் ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. கதை சொல்லிக்காக அன்றிரவு இருவரும் தயாரான போது வம்சி பவாவிடம் "அப்பா, நான் கீ.ரா தாத்தாவோட கதை சொல்றேன்பா" என்றான். மானசி "நான் அந்த தோசைக் கதை(அம்பையின்) சொல்றேன்பா" என்றாள். இருவரும் கொஞ்ச நேரத்தில் தயாராகிவிட்டு கதை சொல்லத் தொடங்கினார்கள். வம்சியும் மானசியும் எந்தவொரு தடங்களும் இல்லாமல் கதைகளை சரளமாக சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஷைலஜா தான் ஒருமுறை குறிப்பிட்டார் "தினமும் அவர்கள் தூங்க போவதற்கு முன்பு ஒரு கதை சொல்வேன். கதைகள் கேட்டு வளராத குழந்தைகளுக்கு கற்பனை இராது". இரவு உணவை எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பவா "வம்சி, இலட்சுமணப்பெருமாள் பெரியப்பா இருக்கார்லடா, அவர் கொட்டகை அனுபவத்த எழுதியிருக்கிறார்...ரொம்ப சிரிச்சு படிச்சேன்டா...கொட்டாகைனா..." என்று சொல்லிக் கொண்டு போனார். அவர்களுக்கு இலக்கியம் வாழ்வில் வெகு சாதாரண ஒரு நிகழ்வைப் போல் இருக்கிறது.
மானசியிடம் சீக்கிரம் ஒரு நண்பன் ஆனேன். சரியாகச் சொன்னால் அவள் என்னை தோழன் ஆக்கிக் கொண்டாள். அவளிடம் நமக்குச் சொல்ல விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. தன் பள்ளிக்கூடம் தன் தோழி தனக்குப் பிடித்தது பிடிக்காதது தன் சுவையான நினைவுகள் அவள் அடுக்கிக் கொண்டே போகையில் ஒருபோதும் அலுக்காது. உங்கள் தனிமையை சற்றேயும் தீண்ட அனுமதிக்காத குட்டி தேவதை. மானசி சொன்னாள் "நீங்க இல்லேன்னா எப்பயும் முருகண்ணே இருப்பாரு.யாரச்சும் வந்துட்டே இருப்பாங்க, யாரும் இல்லாட்டி போர் அடிக்கும்". பவா வீட்டில் எப்போதும் கல்யாணச் சமையல் தான்.
மானசி வம்சியை விட பவாவுக்குத்தான் கதை சொல்லத் தயாரிப்புக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
பிற எழுத்தாளர்களை கதை சொல்லிக்காக சந்திக்கும் பொழுது கதை சொல்கையில் கண்களை பார்ப்பதை தவிர்த்து கதை உலகில் சஞ்சரித்து கதை சொல்வார்கள். பவா சற்று வித்தியாசமாக "கற்றது தமிழ்" இயக்குநர் ராம், ஃப்ரண்ட்லைன் (Frontline) இதழின் ஆசிரியரும் அவர் நண்பரும் ஷைலஜாவும் என அனைவரையும் தன் புடைசூழ வைத்துக் கொண்டார். அவர் கதை சொல்கையில் எல்லோரையும் பார்த்து, அவர் அவர் தலை அசைப்பை உணர்ந்தவர் போல் கதைகளை கதை சொல்லியின் உடல் மொழியுடன் கதைகளைச் சொன்னார். பவாவின் கம்பீரத் தோற்றமும் கணீரென்ற குரலும் கதைக்கேற்ப குரலை தாழ்த்தி பிறகு கூட்டுதலுமென கதை கேட்கும் கணங்களை அற்புதமாக மாற்றும். பவா இருகதைகளை பதிவு செய்தார்.
வம்சி பதிப்பகம் இந்த முறை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 25 புத்தகங்களை வெளியிடுவதென திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான பரப்பரப்புடனே அவர்களின் ஞாயிற்றுக்கிழமை இருந்தது. ஷைலஜா அவர்களுக்கு அதனால் கதை கூற நேரம் இல்லாமல் போனது. மறுபடியும் நிச்சயம் சந்தர்ப்பங்கள் கிடைக்கையில் கதைகளை பதிவு செய்து தருவாதாகச் சொன்னார். சென்னை திருப்புவதற்கு ஆயுத்தமான தருணங்களில் மானசி சொன்னாள் "அண்னா, சென்னை ஏன் கிளம்புறீங்க இங்கேயே இருந்து விடுங்கள்". 'சென்னை சென்றால் தான் நான் ஆஃபிஸ் செல்ல இயலும்' என்றேன். " ஆஃபிஸ் போய் என்ன செய்ய போகிறீங்க" திருப்பிக் கேட்டாள். "நான் வேலைக்குப் போய் தான் சம்பாதிக்கணும், சம்பாதிச்சாதான் சாப்பிட முடியும்" என்றேன். அதுக்கு " எங்க வீட்லயே சாப்பிடுங்க" என்றாள். அன்பை மட்டுமே தரத் தெரிந்தவளுக்கு என்னிடம் பதில் இல்லை. போய் வருகிறனென கையசைத்ததும் வம்சியும் மானசியும் மௌனத்தால் தண்டித்தார்கள். எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. கொஞ்ச தூரம் வீட்டை விட்டு கடந்த பிறகு கத்தி அழைத்து கையசைத்தார்கள் இருவரும்.
அன்பைக் கண்டு பயந்து நண்பர்கள் இன்றி தனிமையில் உழன்றவனுக்கு அவர்கள் பிரிவு எத்தகைய வலியை தந்திருக்கும் என் அவர்கள் அறிய நியாயம் இல்லை.
பவா,மானசி, வம்சியின் கதைகளை கேட்பதற்கு ப்ளே ஐகானை தட்டுங்கள்.
|
"குட்டி தேவன்" வம்சி |
|
|
"குட்டி தேவதை" மானசி |
|
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
|