எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீட்டு விழா சென்னை மாவட்ட மைய நூலகத்தில் 1.1.2011 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியர் சித்ரா, இயக்குனர்கள் ஜேடி-ஜெரி, முரளி அப்பாஸ், குமரவேல் மணிகண்டன், திரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாவல் பதிப்பித்த உயிர்மை மனுஷ்யபுத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். குற்ற உணர்வே நோயாக இருக்கும் மனித குலத்தின் மீட்சி பற்றிய இந்நாவல் தனித்துவமான படைப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
துயில் நாவலை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வெளியிட எஸ்.ராவின் வாசகர் திருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் சித்ரா நாவல் அறிமுகம் செய்து வைத்தார். துயில் நோய்மை பற்றிய நாவலாகும். துயிலாமையே மனிதர்களின் பல நோய்க்கு காரணமாகும். சிலர் முதுமை காரணமாக, பலர் கவலை காரணமாக, அவதியுறுகின்றனர். நோயிலிருந்து விடுபட நல்ல உறக்கம் தேவை. நோய் பட்டவுடன் மனமும், உடலும் பாதிக்கப்படும் சூழலில் அவர்கள் எதிர்பார்ப்பது ஆதரவான பேச்சை மட்டுமே எனக் கூறினார்.
துணையெழுத்து, கதாவிலாசம் மூலம் எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம், உபபாண்டவம் மிகச்சிறப்பான படைப்பாகும். அவரின் நெருங்கிய நண்பன் என்பதிம் நாவல் பெற்றுக்கொள்வதிலும் பெருமையடைவதாக திருமூர்த்தி கூறினார்.
சிறுவயதில் எனக்கு ஜெயகாந்தனை பிடிக்கும், பிறகு சுஜாதா-ன் எழுத்துக்கள், இப்போது எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்குமென இயக்குனர் முரளி அப்பாஸ் கூறினார்.
எஸ்.ரா. பன்முக தன்மை கொண்டவர். அவர் தொடாத துறைகளே இல்லை எனக் கூறலாம். ஒவ்வொரு முறையும் புதிய களன்களில் கதை சொல்லுகிறார். இம்முறை மதத்தை தொட்டு இருக்கிறார். அழுத்தமான அர்த்தம் நிரம்பிய பதிவுகள் இவருடையது. இவர் திரைத்துறையில் அதிகம் பணியாற்ற வேண்டுமென இயக்குனர் ஜேடி கேட்டுக்கொண்டார்.
நாங்கள் திரையில் பணியாற்றும் முன்பே வாசிக்க துவங்கி விட்டோம். அந்த வகையில் எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசித்தோம். வாசிக்கிறோம். எங்கள் வாசிப்பு தான் எங்களை இயக்குனர் நிலைக்கு கொண்டு சென்றது. எஸ்.ராவின் எழுத்துக்கள் பலருக்கு உத்வேகத்தை தரக்கூடியது என இயக்குனர் ஜெரி கூறினார்.
இன்று பல பெரிய நாவல்கள் வெளிவருகின்றன. எஸ்.ரா தேவையான அளவுக்குத்தான் எழுதுகிறார். இந்நாவலை நான்கு நாட்களில் படித்து முடித்தேன். இது நோய் பற்றிய நாவல்ல, நோய்மையை தாண்டிய நாவலாகும். இதில் நோய் ஒரு குறியீடாக உள்ளது என தலைமையுரையில் இ.பா. குறிப்பிட்டார்.
நாவல் எளிமையாக உள்ளது. பல விசயங்களை விவாதித்துள்ளது. நாவல் ஒரு பயணத்தில் ஆரம்பிக்கிறது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையே ஒரு பயணம்தான். இங்கு எல்லாமே பயணம்தான். எல்லா கதாபாத்திரங்களுமே பொறியில் அகப்பட்ட எலிகள்போல் உள்ளனர் என்று இ.பா. குறிப்பிட்டார்.
நாவல் மூன்று பகுதிகளாக உள்ளது. சிறப்பான உத்திகள் மூலம் நாவலை எழுதியுள்ளார். இது காவிய மரபில் எழுதப்பட்ட நாவலாகும். இந்த நாவலை வாசித்து நல்ல அனுபவமாக இருந்தது என இ.பா. கூறினார்.
சில படைப்புகளுக்கு உருவம் நன்றாக இருக்கும். உள்ளடக்கம் பொருத்தமில்லாதிருக்கும், சில படைப்புகளுக்கு உருவம் பொருத்தமாக இருக்காது. ஆனால் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கும். மிக அரிதான படைப்புகளில்தான் உள்ளடக்கமும், உருவமும் சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு அம்சங்களும் எஸ்.ரா.ன் துயில் நாவலில் சிறப்பாக உள்ளன என ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.
நோய்க்கு மருத்துவமனைக்கு செல்லாமல் மதத்தளங்களுக்கு பயணிக்கும் மக்களின் நம்பிக்கை ஒரு புறம், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை மருத்துவர்கள் கையாளும் விதத்தை நேரடியாக பார்த்தபோது மனதுக்கு வருத்தம்தான் ஏற்பட்டது. இந்த இரு அனுபவங்களே துயில் நாவல் உருவாக காரணமாக இருந்தன என எஸ்.ரா. தன் ஏற்புரையில் கூறினார்.
நாவல் எழுதிய இரண்டு வருடங்களில் எனக்கு அடிக்கடி உடல் நலமின்மை ஏற்பட்டது. இந்நாவலை எழுதியது மூலம் நான் பல அனுபவங்களை பெற்றேன் என எஸ்.ரா. கூறினார்.
இந்த அளவில் முதல் அமர்வு முடிவடைந்தது. இரண்டாவது அமர்வாக துயில் நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் எஸ்.ரா. இலக்கிய விமர்சகர் ந.முருகேச பாண்டியன், கவிஞர் யுவன் சந்திரசேகர், மனநல மருத்துவர் ருத்ரன் கலந்து கொள்ள கவிஞர் மனுஷ்யபுத்ரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நூல் வெளியீட்டு விழாவில் இது ஒரு புது அனுபவமாக இருந்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த கலந்துரையாடலில் நாவல் தோன்றிய கதையை மிக விரிவாக எஸ்.ரா. பதிவு செய்தார். துயில் நாவலில் உள்ள நோய்கள் பற்றியும், அதன் இயல்புகள் பற்றியும் தன் கருத்துக்களை ருத்ரன் பதிவு செய்தார். அண்மைக்கால நாவல்களில் இருந்து துயில் நாவல் எப்படி வேறுபடுகிறது என்பதை ந.முருகேச பாண்டியன் விளக்கினார். நாவலில் உள்ள கவித்துவ வரிகளை யுவன் சிலாகித்து பேசினார். கலந்துரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் எஸ்.ராவின் உரையாக மாறிவிட்டது. கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டியதன் தேவை இன்று அதிகமாகி உள்ளது.
நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:
http://picasaweb.google.com/thamizhstudio/rLZekE#
|