சொற்கப்பல்
சொற்கப்பல் இலக்கிய அமைப்பின் இரண்டாவது கூட்டம் சென்னை - டிஸ்கவரி புக் பேலஸில் 03.04.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, பாடலாசிரியர் நா. முத்துகுமார் கலந்து கொண்டனர். நான்கு கவிதை நூல்களுக்கு விமர்சனங்களும் பதிவு செய்யப்பட்டன.
|
சொற்கப்பலின் அமைப்பாளர் அஜயன்பாலா அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் நிறைய நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. அதற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு சிறு பத்திரிகையும் தனக்கென பதிப்பகம் நடத்துவதினால் அவர்கள் பதிப்பிக்கும் நூலுக்கு அவர்களே விமர்சனம் எழுதி கொள்கின்றனர். எந்த குழுவையும் சாராத பல நல்ல படைப்பாளிகள் புறக்கணிக்கப் படுகின்றனர். அவர்களை இனம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் சொற்கப்பல். இதன் பின்னணியில் தடாகம்.காம், அகநாழிகை, டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ்மகன் ஆகியவை உள்ளன. ஒரு காலத்தில் வாசகனும் படைப்பாளியும் பல மணி நேரம் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இன்று கணினி மனிதர்களை தனித்தனி தீவுகளாக மாற்றிவிட்டது.
சொற்கப்பல் இலக்கிய விமர்சன கூட்டத்திற்கு அழைப்பிதழ் அடிக்கால் பேஸ்புக், இமெயில், எஸ்எம்எஸ் மூலமாகவே அனைவருக்கும் விடுக்கப்பட்டது.
இலக்கியம் படைக்காமலேயே இலக்கிய மேம்பாட்டிற்காக பாடுபட்ட பலரை அடையாளப்படுத்தவும் சொற்கப்பல் விரும்புகிறது. அந்த வகையில் இந்த மாதம் காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் நாராயணன் பற்றி பேச பாடலாசிரியர் நா.முத்துகுமார் வந்துள்ளார்.
தமிழின் மூத்த படைப்பாளி கூத்துப்பட்டறை ந. முத்துசாமி இலக்கியம் சார்ந்த தம் வாழ்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்.
மூன்றாவது நிகழ்வாக கவிதை விமர்சனங்கள் நடைபெறும் கவிஞர் வெய்யிலின் கவிதை நூலுக்கு கவிஞர் அய்யப்ப மாதவனும் கவிஞர் நீலகண்டனின் கவிதை நூலை கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் அய்யனாரின் கவிதை நூலை கவிஞர் நிலாரசிகனும் கவிஞர் உமாசக்யின் கவிதை நூலை கவிஞர் நரேனும் விமர்சனம் செய்வார்கள்'' எனக்கூறி அஜயன் பாலா வரவேற்பு உரையை நிறைவு செய்தார்.
நா. முத்துக்குமார்
காஞ்சிபுரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வட்டம் அமைப்பை நடத்திக் கொண்டிருந்த நாராயணன் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் காலமானார். அவர் தஞ்சாவூர்க்காரர். வேலை நிமித்தமாக காஞ்சிபுரம் வந்தவர். காஞ்சிபுரத்திலுள்ள புற்றுநோய் மருத்துவமனையில் வேலை பார்த்தவர்.
தமிழகத்தில் புதிய கருத்துக்களோடும், புதிய இசங்களோடும் வெளிவரும் நூல்களை உடனுக்கு உடன் காஞ்சிபுரத்திற்கு அறிமுகப்படுத்துவார். நூல்கள் மட்டுமல்லாது படைப்பாளிகளையும் அழைத்து வந்து கூட்டம் நடத்துவார். காலை 10 மணி தொடங்கி மாலை வரை கூட கூட்டம் நீடிக்கும். தமிழில் எழுதுகின்ற பெரும்பால படைப்பாளிகளை காஞ்சிக்கு அழைத்து வந்துள்ளார். பல துறை சார்ந்தவர்களையும் அழைத்து வருவார். ஒரு முறை ஆன்மிகவாதி மற்றொருமுறை கடவுள் எதிர்ப்பாளர் வேறொருமுறை சோதிடவியலார் என பல வகையான ஆளுமைகளையும் கூட்டத்திற்கு அழைத்து வருவார்.
அந்த இலக்கிய கூட்டங்களால் பயன்படைத்தவர்கள் பலர். நானும், அஜயன்பாலாவும், வாசுதேவனும் அங்கிருந்து வந்தவர்கள்தான் பலருடைய படைப்பு முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தார். காஞ்சிக்கு எல்லா சிற்றிதழ்களையும் வரவழைத்து அனைவருக்கும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இலக்கிய வட்ட கூட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் அன்றே எழுதி வைத்து விடுவார். அவற்றை ஒரு நூலாக கொண்டு வந்தால் அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாக, நன்றியாக இருக்கும். தொடர்ந்து வாசிப்பது மூலமே நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். காஞ்சி இலக்கிய வட்ட நாராயணன் அவர்களை நினைவு கூர வாய்ப்பளித்த சொற்கப்பலுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ந. முத்துசாமி
வாழ்க்கைப்பற்றி பேசவேண்டுமானால் 74 வருடங்களை நினைவு கூறவேண்டும். பிறகு நாடகம், கதைப் பற்றியும் பேச வேண்டும். எதிலும் சோதனை செய்து பார்க்கும் சூழலே எனக்கு அமைந்தது. என்னுடைய ஏழாவது வயதில் என் தகப்பனாரை இழந்தேன். அவர் தீவிரமான விவசாயி. நான் படித்தது வடுகர் தெருவில். அங்கு நாயுடுகள் அதிகம். அதனால் திராவிட கொள்கை அதிகம் பேசப்பட்டது. எனக்கும் இளம் வயதிலேயே திராவிட கொள்கை மீது பற்று ஏற்பட்டுவிட்டது. திராவிட கொள்கை பார்ப்பானியத்தை எதிர்ப்பது. ஆனால் நான் பிறந்துள்ளதோ பிராமண குலம். என் பாட்டி, எனக்கும், தம்பிக்கும் மாமாவுக்கும் ஒரே சமயத்தில் பூணூல் அணிந்து கொள்ள சொன்னபோது மறுத்துவிட்டேன். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சிக்கல்களையும், முரண்பாடுகளையும் எதிர்கொண்டு போராடுவதே வாழ்க்கையாக இருக்கிறது எனக்கு.
முதலில் மறுத்தாலும் பிறகு பெரியவர்களின் வற்புறுத்தலால் பூணூல் போட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கான மந்திரங்களை கற்றுக்கொள்ளவில்லை. பிறகு பூணூலை கழட்டிவிட்டேன். அப்பாவின் திவசத்தின்போது மட்டும் பூணூல் அணிந்து கொள்வேன்.
என் திருமண வாழ்வும் அப்படித்தான். நான் இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னவுடன் என் அம்மாவுக்கு என்னைப் பற்றிய கற்பனைகள் உடைந்துவிட்டது.
சென்னைக்கு வந்து 25 வருடங்களாகி விட்டது. நான் வாழும் பகுதிகளில் எனக்கு உறவு உண்டாகவில்லை. கூத்துப்பட்டறை இலக்கியம் சார்ந்த உறவுகள் மட்டும்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு என் விருப்பு வெறுப்புகளைப் பற்றி யோசித்து பார்த்தேன் எனக்கு யார் மேலேயும் வெறுப்பில்லை என்றே தோன்றியது. ஆனால் யாத்ரா கட்டுரையில் புஞ்சையில் நான் வெறுத்த மனிதர்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். இதில் எது உண்மை, இரண்டு நாட்களுக்கு முன்பு யோசித்ததா? இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியதா?
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பல்வேறு வகைப்பட்ட நண்பர்கள் இருந்தனர் எனக்கு. நெடுமாறன் என் நண்பர்தான். கி. வீரமணியை தெரியும். அவரை எதிர்த்தேன். ஏனெனில் அவர் தி.க. நான் தி.மு.க.
அண்ணாவின் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரம்பினேன். அது முடியவில்லை. 1958ல் எனக்கு திருமணம் நடைபெற்றது. அன்று அதற்கான மொத்த செலவு ரூ.400 மட்டுமே.
சென்னையில் மீனவர்கள் வாழும் பகுதிகளிலேயே நான் விரும்பி வாழ்ந்தேன். பிராமணர்கள் வாழும் பகுதிகளில் வாழ எனக்கு விருப்பமில்லை.
திருமணத்திற்கு பிறகு என் மனைவிக்கு தீராத தலைவலி. பல மருத்துவர்களை பார்த்தும் சரியாகவில்லை. கடைசியாக உளவியல் மருத்துவரிடம் சென்றோம். அவர் முழுமையாக எங்கள் வாழ்க்கையை விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கைக்காக சில விசயங்களை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் பிறகு தொடர்ந்து பூணூல் போட்டதினால் தான் தலைவலி நின்றது என்பதை நான் நம்பவில்லை.
என் பையன்களுக்கும் பல மனப்போராட்டத்திற்கு பிறகே பூணூல் அணிவித்தேன். என் பெரிய மகன் பூணூலை கழட்டிவிட்டான். என் சின்ன பையன் பூணூலை கழற்றவில்லை. என் பெரிய பையனின் திருமணம் சாஸ்திர சம்பிரதாயம் இல்லாமல் நடந்தது. என் சின்ன பையனின் திருமணம் சாஸ்திரப்படி நடந்தது.
பூணூல் அணிவது, கழற்றுவது சம்மந்தமாக எனக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். ஆனால் என் மாமா பூணூலை விருப்பப்பட்டு அணியவுமில்லை. கழற்றும்போது எந்த பிரச்சினையும் இல்லை. வெளிநாடு சென்றார். வெளிநாட்டுக்காரியை மணந்து கொண்டார். அவருக்கு எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால், எனக்கு யூதர்களுக்கு ஏற்பட்ட மனசங்கடங்கள் போல் என்னுள் சங்கடங்கள் இருந்து கொண்டே இருந்தன.
நான் முதலில் விவசாயி. பிறகு பட்டமணியம் வேலை, தொழிற்சாலையில் வேலை என பல துறைகளிலும் வேலை பார்த்துள்ளேன்.
எழுத்து இரண்டாவது இதழ்வெளிவரும் சமயத்தில் எனக்கு சி.சு.செல்லப்பாவுடன் நட்புறவு ஏற்பட்டது. எழுத்துவில் வெளிவந்த புதுக்கவிதைகள் தமிழ் எழுத்து நடையையே மாற்றிவிட்டது. மொழியில் ஒரு பெரிய மாற்றத்தையே உண்டுபண்ணியது.
பத்திரிகைக்கு யாரும் எழுதாவிட்டாலும் பத்திரிகை முழுக்க நானே எழுதுவேன் என்ற மனோதிடம் இருந்தால் தான் சிற்றிதழ் பத்திரிகை ஆசிரியனாக இருக்க முடியும் என நம்பி பலர் செயல்பட்ட காலமது. சி.சு. செல்லப்பாவைப் பற்றி எனக்குள் விமர்சனமும் உண்டு.
கவிஞர் சி. மணி மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து ''நடை'' என்ற பத்திரிகையை துவங்கினோம். மொத்த தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பார்வையை செலுத்துவது என தீர்மானித்தோம். நான் சென்னை வந்த பிறகு, பல நாட்டிய நிகழ்ச்சிகளை காணச் செல்வேன். பரதம், கதகளி, பாலே, அமெரிக்க நடனம், ஐரோப்பிய நடனம் என வாய்ப்பு கிடைத்த அனைத்தையும் பார்த்தேன்.
கிராமத்து மனிதனாக என்னுள் இருந்த காட்சி மொழி, நடனத்தில் பார்த்த உடல் மொழி இவற்றை வைத்துக் கொண்டு நடைக்காக, ''காலம் காலமாக'' என்ற நாடகத்தை எழுதினேன். பிறகு ஒரு அயல்நாட்டு நாடக ப்பிரதி வாசித்தபோது எதையும் நாடகமாக எழுதலாம் என்ற சுதந்திர உணர்வு ஏற்பட்டது. பிறகுதான் ''அப்பாவும் பிள்ளையும், ''சுவரொட்டிகள்'' போன்ற நாடகங்களை எழுதினேன்.
தேசிய நாடகப்பள்ளி இயக்கம், நடிப்பு சொல்லிக்கொடுத்தது. அதில் பயிற்சி பெற்ற கோபாலியின் மிஸ். ஜுலி. நாடகம் பார்த்தேன். இந்தியன் தியேட்டர்ஸ் பற்றி வாசிக்க தொடங்கியிருந்தேன். இந்நிலையில், புரிசை நடேசத் தம்புரானின் கர்ணமோட்சம் பார்த்தேன். அப்போது என்னுள் கூத்துதான் தமிழ்நாடக வடிவம் தோன்றியது. பிறகு கூத்துப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.
இந்தியன் தியேட்டர்ஸ்-ல் இருந்த அனைத்தும் தெருக்கூத்தில் இருப்பவையே. தெருக்கூத்திற்கும் நாட்டிய சாஸ்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. பிறகு தான், பரந்தாமன் நடத்திய அஃக் பத்திரிகையில் கூத்தைப்பற்றி எழுதினேன்.
கொல்லன் பட்டறையில் இரும்பு சாமான் தயாரிப்பதுபோல், தச்சுப்பட்டறையில் மரச்சாமான்கள் தயாரிப்பதுபோல், நடிகர்களை உருவாக்குவதற்காக கூத்துப்பட்டறை தொடங்கினேன். கூத்துக்கென ஒரு நடிகனைமட்டும் உருவாக்காமல் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கவேண்டும்.
நவம்பர் புரட்சியின்போது ரஷ்யாவை விட்டு வெளியேறிய ஒரு கலைஞன் உருவாக்கிய நான்காவது வழி என்ற செயல் முறையை கடைபிடிக்க தொடங்கினோம். புத்திசம், இஸ்லாம், இந்துயிசம் ஆகிய மூன்றிலிருந்து நல்ல அம்சங்களை எடுத்து உருவாக்கியதுதான் நான்காவது வழி என்பதாகும்.
சங்கீத நாடக அகாதெமியில் வேர்களை தேடிச் சென்று பழைய கலை வடிவங்களை மீட்க வேண்டும் என செயல்பட்ட காலத்தில் அதே பணியை செய்து வந்த கூத்துப்பட்டறைக்கு நிதி ஆதாரங்கள் கிடைத்தன.
கணவன் மனைவி இருவரும் சமமானவர்கள். நாங்கள் சண்டையிட்டுக் கொள்வோம். உள்ளுக்குள் அன்பை பொதிந்து வைத்துக்கொண்டே சண்டையும் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான். என் மனைவி வேலைக்கு சென்றுவிடுவார். நான் பகல் முழுவதும் ஒரு சிறுகதையை தன்மையிலும், பன்மையிலும் மாற்றி மாற்றி எழுதி சிறுகதையின் வடிவத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். மாலையில் மனைவியின் வருகைக்காக காத்திருப்பேன். பல வடிவங்களில் எழுதி பயிற்சி செய்வதன் மூலம்தான் படைப்பாளி தனக்கென வடிவத்தை கண்டடையமுடியும் என நம்புகிறேன். மறுபடியும் மறுபடியும் எழுதுவதினால் படைப்புத்திறன் குறைந்துவிடாது என்றே கருதுகிறேன்.
சொற்கப்பல் இலக்கிய விமர்சன கூட்டத்தின் மூன்றாவது நிகழ்வாக கவிதை நூல்கள் பற்றிய விமர்சனம் வாசிக்கப்பட்டது.
கவிஞர் வெய்யிலின் 'புவன இசை' கவிதை நூல் குறித்து கவிஞர் அய்யப்ப மாதவன் விமர்சன கட்டுரை வாசித்தார்.
அய்யப்பமாதவன்
தமிழில் நிறைய கவிதை நூல்கள் வருகின்றன. விமர்சனம் செய்ய யாருமில்லை. ஒரு காலத்தில் க.நா.சு., சு.ரா.விமர்சனம் செய்தார்கள். அவர்கள் இப்போது இல்லை. இந்திரனும், தி.க.சி.யும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ அவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை.
எது ஒரு கவிதை என சொல்ல தெரிந்தவனுக்கு விமர்சனம் ஒரு பொருட்டல்ல. கவிஞர் வெய்யில் தம் கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் படிமங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஒன்றை ரசித்து முடிப்பதற்குள் மற்றொன்று என வரிசையாக இருக்கிறது. இச்சிறு புத்தகத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள். இவருடைய கவிதைகளில் மிடுக்கு இருக்கும் அளவுக்கு புரிதல்கள் இல்லையோ என எனக்குள் தோன்றுகிறது. கவிதை என்பது தங்கம் மாதிரி புடம் போட போடத் தான் சிறப்பாக வரும்.
கவிஞர் நீலகண்டனின் ''முயல்போல் வாழும் காமம்'' கவிதை நூலை கவிஞர் கண்டராதித்தன் விமர்சனம் செய்து கட்டுரை வாசித்தார்.
கண்டராதித்தன்
நீலகண்டனின் கவிதை நூலில் பல கவிதைகள் சிறப்பாக தொடங்கி மிகவும் சாதாரணமாக முடிந்துவிடுகிறது. ஒரு கவிஞன் 10,20 நல்ல கவிதைகள் எழுதினாலேயே மொழிக்கு உபகாரம் செய்தவனாகிறான். எளிமையான சொல்லாடல்கள் மூலம்தான் சிறந்த கவிதைகளை சென்றடைய முடியும் எனக் கருதுகிறேன். இக்கவிதை நூலில் கதை சொல்லல் முறையில் சொல்லப்பட்டுள்ள கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.
கவிஞர் அய்யனாரின் ''தனிமையின் இசை'' கவிதை நூலுக்கு கவிஞர் நிலாரசிகன் எழுதிய விமர்சன கட்டுரையை அவருடைய நண்பர் முத்துவேல் வாசித்தார். நிலாரசிகன் கூட்டத்திற்கு வரவில்லை.
அய்யனாரின் கவிதை நூலில் பல கவிதைகளின் தலைப்பே வாசகனோடு ஒரு நெருக்கத்தை தருவதாக நிலாரசிகன் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் உமாசக்தியின் ''வேட்கை நிறம்'' கவிதை நூலை கவிஞர் நரேன் விமர்சனம் செய்தார்.
உமா சக்தியின் கவிதை நூலில் அவன், அவள், அவர்கள் மற்றவை என பிரிவுகளில் கவிதைகள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று வித்தியாசம் இருப்பதாக உணரவில்லை. குறிப்பாக மற்றவை பகுதியில் உள்ள கவிதைகள் பக்கம் நிரம்பியாகவே உள்ளது என கவிஞர் நரேன் குறிப்பிட்டார்.
பிறகு கவிஞர் உமாசக்தியின் மொழி புதிய வகையை சேர்ந்தது என கூறும் நரேன், இக்கவிதை நூலின் அட்டையை கிழித்து விட்டால் இது உமாசக்தியின் கவிதைகள் என்பதற்கான அடையாளம் ஏதுமில்லை என்றும் கூறுகிறார். எல்லா கவிதைகளிலும் ஒரு உணர்ச்சியே திரும்ப திரும்ப வருவதாக கூறும் நரேன், தன்னுடைய விமர்சனத்தை ஒரு கட்டுரையாக எழுதி வாசித்திருந்தால் அவர் ஒரே விசயத்தை மறுபடியும் மறுபடியும் கூறிக்கொண்டிருப்பதை உணர்ந் திருக்கக் கூடும்.
இறுதியாக அஜயன் பாலா அனைவருக்கும் நன்றி கூறி மேலும், இலக்கியத்திற்காக படைப்பாளியாக அல்லாமல் பாடுபடுகிறவர் களையும், அடையாளம் காணப்படாத நல்ல படைப்பாளிகளை இனம் காட்டவும் சொற் கப்பலின் பயணம் தொடரும் எனக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|