சிறப்பு மலர் வெளியீட்டு விழா
சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் அறக்கட்டளை சார்பில் சிங்கார வேலரின் (18.02.1860-18.01.2010) 150வது ஆண்டு பிறந்த நாள் நிறைவு நாளான 18.02.2010 அன்று சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னை மாவட்ட மைய நூலக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், ஆசிரியர் கி வீரமணி, பேரா. வீ.அரசு, தோழர் நல்லக்கண்ணு, தோழர் சங்கரய்யா, தோழர் த. பாண்டியன், தோழர் இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை அமைப்பாளர் வீரமணி அனைவரையும் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில் சிங்காரவேலன் 150 ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழாவினை முன்னிட்டு இச்சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இம்மலரில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக அறிஞர்களின் சீரிய சிந்தனைகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
சிங்காரவேலன் இந்திய விடுதலை போராட்ட வீரர், தொழிற் சங்கவாதி, கட்சி சார்ந்து மட்டுமல்லாமல் பிரபஞ்சம் தழுவிய மானுட விடுதலைக்காகப் போராடியவர். வழக்கறிஞராக தொழிலை தொடங்கினாலும் காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தின்போது வழக்கறிஞர் தொழிலை விட்டொழித்தவர். இறுதிவரை வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பாதவர்.
1922 ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது தன்னை தொழிலாளர்களின், விவசாயிகளின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
1925 ஆண்டிலேயே தலித் பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார். இந்த சமூக சீரழிவு நீங்க வேண்டும். அவர்களுக்கு பொருளாதார மேம்பாடு வேண்டும். எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என போராடியுள்ளார்.
இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகள் பற்றியும், ஆங்கிலோ - இந்திய சமூகம் பற்றியும் சிந்தித்துள்ளார். 1972 ஆண்டு தான் ஐ.நா. சுற்றுப்புற சூழல் சார்ந்த கொள்கைப் பற்றிய அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால் சிங்காரவேலர் 1935 ஆண்டு வாக்கிலேயே சுற்றுப்புற சூழல் பற்றி சிந்தித்து எழுயுள்ளார். அவர் தொடாத துறைகளே இல்லை என்னும் அளவுக்கு பல துறைகள் பற்றியும் தன்னுடைய சிந்தனைகளை பதிவு செய்து வைத்துள்ளார். அவரின் பல முகங்களை அறிந்து கொள்ள இச்சிறப்பு மலர் உதவும் என கூறி உரையை நிறைவு செய்தார்.
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சில கோரிக்கைகளை முன்வைத்து என் தலைமை உரையை சுருக்கமாக முடித்து கொள்கிறேன். 1. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்கார வேலரின் பெயரை சூட்ட வேண்டும். 2. சென்னை பல்கலைக்கழகத்தில் சிங்காரவேலர் பெயரில் அறக்கட்டளை நிறுவ வேண்டும். 3. சிங்காரவேலரின் உருவம் பொறித்த தபால்தலை, நாணயம் வெளியிட வேண்டும். 4. சிங்காரவேலர், ஜீவா பெயரில் விருதுகள் வழங்கவேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை நிறைவேற்ற என்ன அளவுகோல் தேவைப்படுகிறதோ அவை எல்லாவற்றையும் விட அவர் உயர்வானவர்.
ஆசிரியர் கி. வீரமணி
பெரியார் நடத்திய குடியரசு இதழ்களில் சிங்காரவேலர் பல்வேறு துறைகள் பற்றி நிறைய எழுதியுள்ளார். குடியரசு இதழ்களை இன்றும் அப்படியே வெளியிடும் அளவுக்கு தரமான செய்திகளை கொண்டுள்ளது. இன்னும் இருநூறு வருடங்களுக்கு பிறகும் சிங்காரவேலரும், ஈவேராவும் இச்சமூகத்திற்கு பயனளிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
பேராசிரியர் வீ. அரசு
தென்னிந்திய சிந்தனை மரபு, பௌத்த, சமண மரபுகள் மனிதனையே முதன்மைபடுத்தின. கி.பி. 4 நூற்றாண்டு முதல் எல்லாம் வைதீகமாக மாற்றப்பட்ட சூழலில் ஐரோப்பிய புத்தெழுச்சியால் ஊக்கம் பெற்றவர்கள் பலர். அந்த வகையில்தான் சிங்காரவேலர் மார்க்சியத்தை நமக்குள் கொண்டு வந்தார். 1922ம் ஆண்டு பி அண்டு சியில் பெரிய போராட்டத்தை நடத்தினார். 1923ம் ஆண்டு மே தினத்தை கொண்டாடினார். 1925ம் ஆண்டு கான்பூர் மாநாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன் குறித்து பேசியுள்ளார். வலிமையான இடதுசாரி இயக்கம் உருவாக பாடுபட்டுள்ளார். சுமார் 15 ஆண்டு காலம் ஈவேராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சிங்காரவேலரின் புரிதல் மிகவும் ஆழமானது. அவர் ஒரு தத்துவ அறிஞர் என்றால் மிகையாகாது.
தோழர் நல்லக்கண்ணு
கறுப்புக்கோட்டை தூக்கியெறிந்த முதல்தமிழ் வழக்கறிஞர் சிங்காரவேலன் அவரைப்போல் போர்குணம் மிக்க செயல் முன்னோடி வேறுயாருமில்லை.
கயா மாநாட்டில் சர்வதேச உழைக்கும் மக்களின் பிரதிநிதி என தன்னை அடையாள படுத்திக்கொண்டவர். 1920-ல் பள்ளியில் மதிய உணவு திட்டம் இருந்தது. பிறகு நிறுத்திவிட்டார்கள் சிங்காரவேலர் போராடியதால் மறுபடியும் மதிய உணவு கிடைத்தது.
1928 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தை உலுக்கிய பத்து நாட்கள் அவை. அரசாங்கம் சிங்காரவேலருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் ஈவேராவின் முயற்சியால் தண்டனை காலம் குறைக்கப்பட்டது. சிங்காரவேலர் மீது பெரியாரும் திரு வி.கவும். உளபூர்வமான மரியாதை வைத்திருந்தனர். மதபேதம், சாதி பேதம், பொருளாதார பேதம் ஆகிய மூன்றும் சமூகத்தை அழிக்கக் கூடியவைகள் என சிங்காரவேலர் கருதினார்.
தோழர் சங்கரய்யா
இந்த சிறப்பு மலர் சிறப்பான ஆவணம். இதை செழுமையான முறையில் பள்ளி, கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். சிங்காரவேலர் சிறந்த தேசியவாதி பூர்ண சுதந்திரம் வேண்டும் என போராடியவர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆவார். 1924 ஆம் ஆண்டு கான்பூர் சதி வழக்கில் உடல் நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 1928-30 ஆம் ஆண்டுகளில் நாகப்பட்டினம் போராட்டம் வழக்கில் சிறைதண்டனை பெற்று சிறையிலிருந்தார்.
பேராசிரியர் க. அன்பழகன்
அதிகம் பேசப்படாத தலைவர் சிங்காரவேலர், சமூகம் சார்ந்த எல்லா துறைகள் பற்றியும் சிந்தித்தவர். நடைமுறை உலகை புரிந்துகொண்டு எதிர்கால வாழ்க்கைக்காக சிந்தித்தவர், சிங்காரவேலன் இயக்கம் நடத்தவில்லை. அவரே ஒரு இயக்கமாக வாழ்ந்தவர். தன் வருமானத்தின் பெரும்பகுதியை நூல்கள் வாங்குவதற்காகவே செலவிட்டவர். எதைப்பற்றியும் தெளிந்த அறிவுடன் ஆய்வு நடத்தியவர். பொதுவுடமை கொள்கையும் பகுத்தறிவுக்கொள்கையும் ஒன்றிணைந்து சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.
சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்தனர்.
|