கல் மனிதர்கள் - ஆவணப்படம் திரையிடல்
வாழ்க்கை மிகவும் நவீனமயமாகி வருகின்றது. பல வகையான உணவு, புதுமையான உடையலங்காரம், நவீன கட்டட முறையிலான உறைவிடம், பயணத்திற்கு தங்க நாற்கரசாலை என எல்லாவற்றிலும் நவீனதன்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேற்சொன்ன அனைத்திலும் அடிப்படையான மூலப்பொருளாக கல் இருக்கின்றது. பெருமலையை சிறு சிறு கற்களாக உடைத்தெடுக்கும் தொழிலாளி எப்படி வாழ்கிறான். அவனுடைய குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகின்றனர் என்பது பற்றி நம்மில் எத்தனை சிந்தனை செய்திருப்போம்.
கல்லுடைக்கும் தொழிலாளியாய் வாழ்வைத் தொடங்கிய தோழர் ஞானமணி. கல்லுடைக்கும் தொழிலாளி படும் அவலத்தை கண்டு அவர்களின் துயர் துடைக்க, தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்லுடைக்கும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ‘’தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கம் (டிகேடிஎஸ்) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் 16வது ஆண்டு தொடக்க விழா 6.09.09 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது.
கல்லுடைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு சொல்லும் விதாக ‘’கல் மனிதர்கள்’’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. 54 நிமிட கால அளவு கொண்ட இப்படத்தை கவிஞர் குட்டி ரேவதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமையுரையாற்றிய பென்ட் பெஞ்சமின் ‘’இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு’’ என்றார். கல்லுடைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினையை வெளியுலகம் உணரும் வகையில் ஆவணப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதை பாராட்டினார். உலகில் தோன்றிய முதல் தொழில் கல்லுடைக்கும் தொழிலாகும். ஆனால் இன்று கல்லுடைக்கும் தொழிலாளிக்கு உணவு இல்லை. குடிநீர் இல்லை, சுகாதார வசதி ஏதுமில்லை. கல்வி வசதி இல்லை, கடன் தொல்லை, குடியிருக்க வீடு இல்லை. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சமூக கல்வி அவசியம். சமூக ஒன்றிணைப்புடன் கூடிய போராட்டம் தேவை எனவும் கூறினார்.
பத்திரிகையாளர் ஆர் சி ஜெயந்தன் பேசுகையில் ‘’ஊடகத்தின் வெளிச்சம் இந்த தொழிலாளர்கள் மீது குவியவில்லை. சுற்றுச்சூழல், குழந்தை தொழிலாளர் பிரச்சினை, திருநங்கையர் பிரச்சினை என எல்லாவற்றிலும் ஊடக வெளிச்சம் பெற்ற பிறகுதான் அரசின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியது. கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்" என கூறினார்.
கல்குவாரிகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதை தடுக்க வேண்டும். கல்குவாரியை கல்லுடைக்கும் தொழிலாளர்களிடைமே ஒப்படைக்க வேண்டும் என மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் பாலபாரதி, இந்த ஆவணப்படம் விருது கொடுத்து கவுரபடுத்த வேண்டும். இன்றைய நிலையில் பத்திரிகையாளன் வெறும் தொழிலாளி. ஊடக முதலாளிகள் இவர்கள் இயக்குகிறார்கள். முதலாளியின் ஊடகத்தில் தொழிலாளியின் உணர்வுகள் பதிவாகும் என எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சினையை சட்டமன்றத்திற்குள் கொண்டு சென்று கல்லுடைக்கும் தொழிலாளர்களின் துயர் துடைக்க போராடுவேன் என்றார்.
இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்த தோழர் இரா நல்லகண்ணு, அனைவரையும் வாழ்த்தி பேசினார். ‘’ஆவணப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். சிறப்பாக உருவாக்கி உள்ளார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவே பல நிகழ்ச்சிகளுக்கு இடையே இங்கு வந்தேன் என்றார். பயிற்சி இல்லாமல் அரிதாரம் பூசாமல் இயல்பான முறையில் கல்லுடைக்கும் தொழிலாளியை இப்படத்தில் காண முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் பிரச்சினைகளை களைய சங்கம் அமைத்து போராடும் ஞானமணி பாராட்டுகுரியவர். பல சோதனைகளை கடந்து வந்துள்ளார்கள். போட்டி சங்கம் தோன்றாமல் இருக்க வேண்டும் என்று ஒற்றுமை நிலைத்து இருக்க வேண்டும். உழைப்பவனுக்கு நிலம் வேண்டும் என்பது போல் கல்லுடைப்பவனுக்கு கல்குவாரி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராடுகிறார்கள். சமகால அரசியல் நிலைமை பின்னோக்கிய பயணமாக உள்ளது. நேரு காலத்தில் தனியாரிடமிருந்து பொதுதுறைக்கு மாற்றினார். ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். இந்தநிலையில் இவர்களது கோரிக்கையை வென்றெடுப்பது எப்படி? இவர்கள் தொடர்ந்து போராட வேண்டும். இவர்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொல் திருமாவளவன் சிறப்புரை வழங்கினார். கல்லுடைக்கும் தொழிலாளர்களின் துயரங்களை கண்டும் காணாமலும் வாழும் நாமெல்லாம் ‘’கல் மனிதர்களே’’ என்று உணர்த்துவதாக உள்ளது ஆவணப்படத்தின் தலைப்பு. இயக்குனர் கவிஞர் என்பதனால் தலைப்பே கவித்துவமாக உள்ளது. ஒவ்வொரு வாழ்க்கை உலகமும் கடுமையானதுதான். ஒடுக்கப்படும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெற நாம் என்ன செய்ய போகிறோம். வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படும் இவ்விளிம்பு நிலை மக்களில் 70 விழுக்காடு தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் உள்நாட்டிலேயே அகதியாக்கப்பட்டுள்ளனர். நரிக்குறவர்கள் நல வாரியம், திருநங்கை நல வாரியம், புதிரை வண்ணார் நல வாரியம் இந்த மூன்று நல வாரியங்கள் அமையவும் விடதலை சிறுத்தைகள் முதன்மை பங்கு வகித்தது. அதுபோல் கல்லுடைக்கும் தொழிலாளர் நல வாரியம் அமையவும் தொடர்ந்து பாடுபடும் என கூறினார்.
ஏற்புரை நிகழ்த்திய ஆவணப்பட இயக்குனர் கவிஞர் குட்டி ரேவதி, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இப்பட உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த அனைவரையும் அவைக்கு அறிமுகப்படுத்தி தனக்கு கிடைத்த பாராட்டுகளை அனைவருமிடமும் பகிர்ந்துகொண்டார். ‘’இங்கு கிடைத்த பாராட்டுகள் நான் மகிழ்ச்சி கொள்ள முடியாது. கல்லுடைக்கும் தொழிலாளியின் பிரச்சினை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கவேண்டும். இதன் மூலம் தோழர் ஞானமணி தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்து ஆரம்பித்துள்ள கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு பல உதவிகள் பெற்று தர வேண்டும். இரண்டாவதாக கல்லுடைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினையை மனித உரிமை விவாதமாக மாற்ற வேண்டும். மூன்றாவதாக அனைத்து கல்லுடைக்கும் தொழிலாளிக்கும் குடியுரிமை பெற்றுத் தரவேண்டும். இவையெல்லாம் நிறைவேறிட நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என கவிஞர் குட்டி ரேவதி கூறினார்.
இறுதியாக தோழர் ஞானமணி தன் நன்றியுரையில் கல்லுடைக்கும் தொழிலாளியாக தான் பெற்ற அனுபவமே இன்று மற்ற தொழிலாளியும் அந்த அவலத்தை அடையக்கூடாது என கருதி சங்கம் அமைத்து போராடி வருகிறோம். கல்லுடைக்கும் தொழிலாளியின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லும் இந்த ஆவணப்படத்தை சங்கத்தின் சார்பிலேயே உருவாக்கியுள்ளோம். எங்கள் போராட்டம் வெல்ல அனைவரிடத்தும் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என நிறைவு செய்தார்.
இந்த ஆவணப்படத்தின் நோக்கம் நிறைவேற, அனைத்து மக்களிடத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் தொழில்சார்ந்தும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பாடுபட முயற்சி செய்வோம்.
|