எழுத்தாளர் பொன்னீலனின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் பொன்னீலனின் மறுபக்கம் நாவல் வெளியீட்டு விழா 29.05.10 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக சொற்பொழிவுக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தோழர் நல்லக்கண்ணு, தவத்திரு குன்றக்குடி அடிகளார், முனைவர் வீ. அரசு, முனைவர் ந.முத்துமோகன், முனைவர் காமராசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நியு செஞ்சரி புக் ஹவுஸ்-ம் கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
தோழர் துரைராஜ்
அண்ணாச்சி பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள் நாவல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் இப்போது மறுபக்கம் நாவல் வெளிவருகிறது. இந்த நாவலை நியூ செஞ்சரி புக் ஹவுஸ் சிறப்பாக கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பாக இந்த ஆண்டு நிறைய நூல்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக செம்மொழி மாநாட்டையட்டி செவ்வியல் தொடர்பாக 30 நூல்கள் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த நியூ செஞ்சரி புக் ஹவுஸ்-ன் வைர விழா ஆண்டை முன்னிட்டு 60 நூல்கள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளோம். அண்ணாச்சி பொன்னீலனின் மறுபக்கம் நாவல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் நியூ செஞ்சரி புக் ஹவுஸ்-ன் சார்பாகவும், கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாகவும் வரவேற்கிறேன்.
முனைவர் வீ.அரசு
நாவலை ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்தார்கள். கால அவகாசத்தோடு வாசிக்க முடிந்தது. 150 ஆண்டு கால தமிழ் நாவல் வரலாற்றில் மறுபக்கம் நாவல் மரபானதா? புதியதா என பார்க்க வேண்டும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை தொடங்கி சண்முக சுந்திரம், கி.ரா. நீல.பத்மநாபன், பூமணி, வண்ண நிலவன், சுரா வரை பலரும் வட்டாரம் சார்ந்து நாவல்கள் எழுதியுள்ளனர். 1980 இறுதி தொடங்கி இப்போது வரை பல நாவல்கள் காவிய வடிவமாக வெளிவருகின்றன. விரிவான வேலைபாடுகளோடு ஜெயமோகன், ஜே.டி.குருஸ், ப. வெங்கடேசன், சு. வெங்கடேசன், கோணங்கி என பலரும் எழுதுகின்றனர்.
பொன்னீலன் 1976ல் கரிசல் நாவலும், 1991ல் புதிய தரிசனங்கள் நாவலும் எழுதியுள்ளார். 2010ல் வெளிவந்திருக்கும் மறுபக்கம் நாவல் மிக நுண்ணிய சுவதானிப்போடு எழுதப்பட்டுள்ளது. சாதாரண மனிதன் பற்றிய தேடுதல், சமூகத்தை நுண்மையாக ஆராய்தல், பண்பாடு கூறுகளின் பதிவு, குறிப்பிட்ட பகுதி சார்ந்த அனைத்து தரப்பு மக்கள் வாழ்க்கையும் மறுபக்கம் நாவலில் பொன்னீலன் பதிவு செய்துள்ளார்.
நாவல் எழுதப்பட்ட பின்பு பலர் வாசித்துள்ளார். அவர்களின் கருத்துக்களை ஏற்று, நிராகரித்து விவாதம் செய்து மறுபடியும் மறுபக்கம் நாவலை எழுதியுள்ளார். இதுவே தமிழின் முதல் சனநாயக பூர்வமான நாவல் எனக் கூறலாம். நாவலின் மானுட துறைப்பற்றியும், உளவியல் துறைப் பற்றியும், வரலாற்றுத் துறைப் பற்றியும் பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த துறை சேர்ந்தவர்கள் வாசிக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. மறுபக்கம் நாவலை சமகால வரலாற்று நாவல் எனவும் கூறலாம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பம்பாயில் திலகர், கல்கத்தாவில் ராமகிருஷ்ணர் ஆகியோர் மதத்தை முன்னிருத்தி செயல்பட்டனர். ஆனால் சென்னையில் பெரியார் மதத்திற்கு எதிராக செயல்பட்டார். மதத்திற்கு எதிராக தமிழகம் உள்ளது. ஆனால் மண்டைக்காட்டில் மதத்தை முன்னிறுத்தி கலவரம் நடைபெற்றுள்ளது. கலவரத்தின் மறுபக்கத்தேடி மறுபக்கம் நாவல் பயணிக்கிறது.
சிறு தெய்வ வழிபாடுகள் அழிக்கப் பெற்று பெரும் தெய்வ வழிபாடுகள் பெருகியுள்ளன. நாஞசில் நாட்டு தொல்குடி மரபு, கிருத்துவ மீனவர்கள், இந்துக்கள், மனிதம் சார்ந்த நம்பிக்கைகள் சார்ந்த கலாச்சார பதிவாக மறுபக்கம் நாவல் வெளிவந்துள்ளது. இவை எல்லாவற்றையும் பார்க்கையில் 150 ஆண்டு கால தமிழ் நாவல் வரலாற்றில் மறுபக்கம் நாவல் புதியதான வரவாக கொள்ளலாம்.
மறுபக்கம் நாவலை குன்றக்குடி அடிகளார் வெளியிட முனைவர் ந. முத்துமோகன் பெற்றுக்கொண்டார்.
குன்றக்குடி அடிகளார்
உறவுகளை, நண்பர்களை பிரிந்து தனிமையில் வாடும் மனிதனுக்கு புத்தகமே சிறந்த துணைவன். புத்தகம் என்பது வெள்ளைத்தாளை கருப்பாக்குவதல்ல.
பொன்னீலனின் மறுபக்கம் நாவல் நாஞ்சில் நாட்டின் கலாசாரத்தை நீண்ட நெடிய வரலாற்று கண்டோட்டத்துடனும், அந்த பூமியின் வேறுபாடுகளை, வன்முறைகளை அறிவியல் கண்ணோட்டத்துடனும் பதிவு செய்துள்ளது. மறுபக்கம் நாவல் மனித நேயத்தை தேடி அலைகிறது.
தோழர் நல்லக்கண்ணு
விளாத்திக்குளம், வெண்மணி பகுதிகளில் விவசாயிகள் பட்ட பாட்டினை தன் கரிசல் நாவலில் பதிவு செய்தார். அவசர நிலை காலகட்டத்தில் 20 அம்ச திட்டத்தை நிறைவேற்றிட தோழர்கள் அதிகாரத்திற்கு எதிராக சந்தித்த பிரச்சினைகளை புதிய தரிசனங்கள் நாவலில் பதிவு செய்திருந்தார். இப்போது மறுபக்கம் நாவலில் மண்டைக்காடு கலவரம் பற்றியும், கிறித்துவம், இந்து மத பிரச்சினைகள் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். நாஞ்சில் நாடு இயற்கை அழகு மிகுந்த பகுதியாகும். ஆனால் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது.
இந்து மதம் என்பது சாதிதான். சாதியை நீக்கிவிட்டால் இந்துமதம் இல்லை. ஒரே தொழில் செய்யும் மனிதர்கள் நாடார், முத்துவர் என வேறுபாடு கொண்டு சண்டையிட்டு கொள்கின்றனர். பெரும் தெய்வவழிபாட்டை எதிர்க்க வேண்டும். அதற்காக சிறு தெய்வ வழிபாட்டை போற்ற வேண்டுமா? நாம் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
இந்நாவலில் வரும் பெண் கதாபாத்திரம் முத்துவின் வாழ்க்கை மிகவும் துயரம் மிகுந்து காணப்படுகிறது. மூன்று திருமணம் செய்தும் அவளுக்கு நிம்மதியில்லை. அதனால் திருமண பந்தம் குறித்தே கேள்வி எழுப்புகிறாள்.
முனைவர் காமராசு
சாதி, மதம் கடந்த மனிதநேயத்தை மறுபக்கம் நாவல் வலியுறுத்துகிறது. இந்துக்கள் என்பவர்கள் யார்? இஸ்லாம் அல்லாத கிருத்துவம் அல்லாத, பார்சி அல்லாத மக்களை இந்துக்கள் என்கின்றனர். அண்ணாசி பொன்னீலன் எல்லா தரப்பு மக்களைப் பற்றியும் மறுபக்கம் நாவலில் பதிவு செய்துள்ளார்.
நாட்குறிப்புகளாக மேடை பேச்சாக, சுவரொட்டியாக என பல வடிவங்களில் அடித்தட்டு மக்கள் வாழ்க்கை நாவலில் பதிவாகியுள்ளது.
மறுபக்கம் நாவல் சாதி, மதம், ஆண், பெண் அடையாளங்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள் எனக் கூறுகிறது. சாதி, மத வேறுபாடுகளை களைய போராடிய புத்தன், இராமலிங்க அடிகள், புலே, வைகுண்டசாமி, நாராயண குரு, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் வழியில் நம் போராட்டம் தொடரவேண்டுமென மறுபக்கம் நாவல் கூறுகிறது.
முனைவர் ந. முத்துவேலன்
அண்ணாச்சி பொன்னீலன் எழுத விரும்பிய ஒரு மாபெரும் நாவல் 38 வருடங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. இடையில் கரிசல் நாவல், புதிய தரிசனங்கள் நாவல் என்ற மிகப்பெரிய அவரது சாதனை நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்கள் வெளிவந்த போதெல்லாம் மறுபக்கம் நாவலின பணிகள் பின்தங்கி போயின. 1972க்கும் 2010க்கும் நடுவில் இரு நாவல்கள் மட்டுமல்ல. அவரது மொத்த இலக்கிய பயணமே இக்காலகட்டத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
அவர் சாகித்ய விருது பெற்ற நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், ஜீவா, ரகுநாதன், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூத்த முனைப்பாள தலைவர், அற்புதமான மேடைப்பேச்சாளர், எல்லாவற்றிலும் மேலாக சிறந்த மனிதநேயவாதி, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்களைத் தம்பிமார்களாகக் கொண்ட அண்ணாச்சி என்று அறியப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளையும், அனுபவங்களையும் மறுபக்கம் நாவல் பின்புலமாகக் கொண்டிருப்பதனாலேயே இந்நாவல் நமது கூடுதல் கவனத்தையும் பெறுகிறது.
மறுபக்கம் நாவல் 1982ல் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரத்தை மையமாகக் கொண்டுள்ளது. அவர் 1972 விரும்பிய வரலாற்று நாவல் குறித்த திட்டஙகள் 1982-ன் மண்டைக்காடு சம்பவங்களோடு சேர்ந்துக் கொண்டன. மண்டைக்காடு கலவரம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சேது மாதவன் என்ற இளைஞரின் பார்வையில் இந்நாவல் சம்பவங்களாக விரிகின்றன.
மண்டைக்காடு கலவரம் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த போதிலும், இந்தியா முழுவதும் அது இந்துத்துவா எழுச்சியின் ஒரு குறியீடாக அமைந்து போயிற்று. இந்துத்துவச் சார்பு கொண்ட மனநிலையோடுதான் சேது தஞ்சாவூரிலிருந்து பனைவிளை கிராமத்திற்கு வெங்கடேசன் என்ற இடதுசாரிச் சிந்தனையாளரின் வீட்டுக்கு வந்து சேர்கிறான்.
மண்டைக்காடு கலவரம் குறித்த விசாரிப்புகள் படிப்படியாக குமரி மாவட்டத்தின் மொத்த வரலாறாகவே விரிகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் குமரி மாவட்டத்தில் கிறித்துவ மதம் பரவிய கதை, ரிங்கல தௌபே, மீட் அய்யர் ஆகிய முதல் பாதிரியார்களின் கதை, காலனிய ஆட்சி மாற்றம் கிறித்துவம் ஆகியவற்றின் ஆதரவோடு திருவிதாங்கூர் சமஸ்தான மனுதர்ம சாதி ஏற்பாடுகளுக்கு எதிராக நடந்த சமூக எழுச்சிகள், குறிப்பாக தோள்சீலைப் போராட்டம், அய்யா வழ இயக்கம், அடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள், அக்னிகாவடிப் போராட்டம் (உயர்பலி 150) சாணார்கள் ஊர்த்தலைவர்களான நாடார்கள் என்ற பெயரை சம்பாதித்த வரலாறு, பிரம்ம சமாஜம், காந்திய இயக்கம், குமரி மக்கள் தாய் தமிழகத்தோடு இணைவதற்காக நடத்திய போராட்டங்கள் என மறுபக்கம் நாவல் மண்டைக்காடு சம்பவத்தை கடந்து 19ம் நூற்றாண்டின் சமூக அசைவுகள் அனைத்தையும் பிடித்துப் பரவுகிறது.
19ம் நூற்றாண்டையும் வெகுவாக கடந்து மறுபக்கம் நாவல் புராணியக் காலத்தினுள் ஆடிப்பாயும் சந்தர்ப்பங்களும் இந்நாவலில் ஏராளமாக உண்டு. மண்டைக்காடு அம்மனின் வரலாறு, பத்ரகாளி அம்மனின் கதை, கன்னியாக்குமரி அம்மனின் புராணம் என பல மாந்திரிகப் புராணங்கள் வரலாற்றோடு சேர்ந்துப் பிசையப்பட்டுள்ளன. எங்கே மாந்திரீகம், எங்கே புராணம், எங்கே எதார்த்தம் என பிரித்துப் பார்க்க முடியாதபடி வழக்கமான வாசன் திணரும் சந்தர்ப்பங்களும் இந்நாவலின் பல பக்கங்களில் உண்டு.
பழைய பனை ஓலை ஏடுகள் சொல்லும் கதைகள், அச்சு எந்திரம் பதிந்த காகிதங்கள் சொல்லும் வரலாறுகள், தனிப்பட்ட சில மனிதர்கள் பேனாக்களாலும், பென்சில்களாலும் எழுதி வைத்த பல நாட்குறிப்புகள், தினசரி ஆங்காங்கே ஆட்கள் கூடிக் கூடிப் பேசிப் பேசி வளர்த்தெடுத்த வாய்மொழிக் கதைகள், காலம் காலமாக நடந்தனவாகவும், நம்பியவையாகவும் மக்கள் மனங்களில் கூடிக் குமைந்து கிடக்கும் நினைப் படிமங்கள் எல்லாமே இந்த நாவலின் முதன்மையான ஆதாரங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
19-20 ஆம் நூற்றாண்டுகளின் வரலாறு குறித்த நினைவுகளை ஒவ்வொரு பக்கத்திலும் புரட்டிப்பார்க்கும் இந்நாவல் மண்டைக்காடு கலவரத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் பதிவுச் செய்துள்ளது. இதற்கு முன்னும், இனியும் இப்படி ஒரு பதிவு, மனிதர்கள் மனிதர்களைத் தேடிப்பிடித்துக் கொல்லும் பயங்கரப் பதிவு, ரத்தமும் சதையும் சகதியாகச் சரியும் கொலைப் பதிவு, கடைகளும் வீடுகளும் மட்டுமல்ல, நிலமும் கடலும் பழிநெருப்பில் எரிந்து பிடிச் சாம்பலாகும். அக்கினிப் பதிவு இலக்கியத்தில் நிகழ்ந்ததில்லை. நிகழபோவதுமில்லை. மண்டைக்காடு கலவரத்தில் விழுந்த கொலைகளையும் எரிந்த நெருப்பையும் கடவுள்களும் இறையியல்களும் ஆசிர்வதித்தார்கள் என்பதை மறந்து விடமுடியாது.
மானுடனின் பெயரால் சொல்லப்படும் கருத்தியல்களை விட கடவுளர்களின் நாமத்தால் எழுதப்பட்ட கருத்தியல்களுக்கு ஆணவம், அகங்காரம், மமதை, உயிர்க்கொலை வெளி பல மடங்கு அதிகம் என்பதற்கு மண்டைக்காடு கலவரம் சாட்சியாக உள்ளது.
19 ஆம் நூற்றாண்டை தமிழர்களின் அடையாள அரசியல் நூற்றாண்டு என்று சொல்ல வேண்டும். தமிழர் கூட்டங்கள் தத்தமது அடையாள உருவாக்கங்களோடுதான் காலனிய நவீன அரசியனுள் நுழைந்தார்கள். அவர்களது சாதிகளும், மதங்களும் அவற்றிக்கிடையிலான எல்லாவித மோதல்களும், முரண்பாடுகளும், அப்போதுதான் நவீன அரசியலுள் நுழைந்தன. அடையாள அரசியல் ஒடுக்கப்பட்ட தமிழர் கூட்டங்களின் விடுதலை அரசியலுக்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுண்டு. அதே அடையாள அரசியல் இன்னும் சில தமிழர் கூட்டங்களின் ஆதிக்க அரசியலுக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
காலனிய முதலாளியம் அறமற்ற நடுநிலைத் தன்மை கொண்டது. அது ஆதிக்கத்தையும் விடுதலையையும் ஒருசேர உசுப்பி விட்டது. இருவகைச் சமூக சக்திகளையும் அது ஒரு சேர விளையாட விட்டது. அந்த சோக விளையாட்டு இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. மண்டைக்காட்டு கலவரம் அதற்கொரு சாட்சி, மறுபக்கம் நாவலின் பரப்பு சமகால அரசியலிலும் சாதி மத அடையாளங்களின் ஆற்றலைச் சுட்டிக்காட்டுகிறது.
அம்மன் எனும் ஆதித்தாயைத் தேடும் ஓர் அடிப்படையான குரல் இந்நாவல் முழுவதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கன்னியாகுமரி அம்மன் கதையில் அவள் இந்து, கிறித்துவம் என்ற எல்லைகளைத் தாண்டி வெளியில் நிறுத்தப்படுகிறாள். அம்மன் என்பது தெய்வம் அல்ல. அவள் நம் ஆதித்தாய் என்ற விளக்கமும் ஒலிக்கிறது.
நாவலில் பல ஆண்கதாபாத்திரங்களை விட பெண் கதாபாத்திரங்கள் மிக வலுவானவர்களைச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக முத்து, பிச்சிப்பூ, சிவகாமி ஆகிய கதாபாத்திரங்களை சொல்லலாம். அம்மையைத் தேடுவது என்பது இந்நாவலில் சொந்த மரபைத் தேடுவது என்ற பொருளிலும், பயின்று வருகிறது. மரபில் வேர் பதிக்காமல், மரபைக் கைப்பற்றாமல் விடுதலை அனுபவம் கைக்கூடாது என்ற செய்தி நாவலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டைக்காட்டில் நடந்தவை சமய மோதல்களே அல்ல. அவற்றிற்குப் பின்னால் காயம்பட்ட பழைய ஆதிக்கச் சாதிகளின் பழி உணர்வே உள்ளது. மேட்டுக்குடிச் சாதிகள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதிகள் என அறியப்பட்ட மக்கள் கூட்டங்களினுள்ளும் ஆதிக்கப் பண்பு அணிகள் உள்பொதிந்து நிலவுவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது.
மறுபக்கம் நாவல் இந்தியக் சாதிகளின் வரலாறு குறித்த ஒரு நுட்பமான, ஆய்வின் உண்மையான தகவலை இங்கு விவாதிக்கிறது. அதாவது நாவல் சாதிகளின் வரலாற்றை கட்டுடைப்பு செய்கிறது. இந்நாவல் சாதி, மத அடிப்படைகளை உள்ளீடவற்றை என வெறுமைப் படுத்திக் காட்டுவதில் சென்று முடிந்திருக்கிறது. இது இந்நாவலின் மாபெரும் வெற்றியாகும்.
ஏற்புரையாக பொன்னீலன்
காலத்தின் குரலை பதிவு செய்யவனே சரியான கலைஞன். நில மீட்பு போராட்டங்கள் அவற்றின் பதிவாக கரிசல் நாவலை எழுதினேன். அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் பதவுகளே புதிய தரிசனங்கள் நாவலாகும். மறுபக்கம் நாவலில் கலாச்சார போராட்டங்களை பதிவு செய்துள்ளேன்.
தோள்சீலைப் போராட்டம் பற்றி நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் 1967 ஆண்டு தோன்றியது. அந்த எண்ணம் ஈடேராமல் காலம் கலந்துக் கொண்டே சென்றது. 1982 மண்டைக்காடு கலவரம் நடைபெற்றது. அதன் உண்மைகளை அறிய முற்பட்டபோது பல செய்திகள் திடுக்கிட வைத்தன. அறியப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திற்கும் மறுபக்கம் வேறொன்றாக இருந்தது. நான் எழுத திட்டமிட்டு இருந்த நாவல் சுமார் 43 வருடங்களுக்கு பிறகு மறுபக்கம் நாவலாக இன்று வெளிவருகிறது.
இந்த நாவலை ஒரு சனநாயக வேலை திட்டத்துடன்தான் எழுதி முடித்தேன். என் நாவலின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள், என் எழுத்துக்களை விமர்சனம் செய்யுங்கள் அதுதான் என்னை மேலும் செயல்பட தூண்டும் சக்தியாக இருக்கும். ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
தோழர் கந்தசாமி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|