பாலம் - பதிப்பக தொடக்கவிழா
பாலம் பதிப்பக தொடக்க விழா மற்றும் முதல் நூல் வெளியீட்டு விழா தென்னிந்திய வர்த்தக சபை மையத்தில் 19.09.09 அன்று நடைபெற்றது. ஜெயந்தி சுப்ரமணியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஸ்ரீதேவி அரவிந்தன் வாழ்த்துப்பாடல் பாடினார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சா. கந்தசாமி, கவிஞர்கள் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், திரைப்பட இயக்குனர் வசந்த், துணைவேந்தர் ராஜேந்திரன் மற்றும்பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
பாலம் பதிப்பகத்தின் இயக்குனர் நீரஜா நிர்மல் தன் வரவேற்புரையில் ‘’தமிழ் பதிப்புலகில் பாலம் தன் முதல் அடியை எடுத்து வைக்கிறது. பிறமொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும் பாலமாக செயல்படவேண்டும் என்ற நோக்கிலேயே பாலம் என பெயர் சூட்டியுள்ளோம். முதல் பதிப்பாக அரவிந்த அப்பா துரை எழுதிய ‘’திரு சித்திர சதிர்’’ நாவலை வெளியிடுகிறோம். அனந்த லட்சுமி ஹேமலதா அவர்களின் மொழிபெயர்ப்பில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடப்படும்’’ எனக்கூறினார்.
இயக்குனர் வசந்த் தன்னுடைய வாழ்த்துரையில் ‘’கனிமொழி அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இங்கு வெளியிடப்பட்ட நாவலுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளார். புத்தகம் எனக்கு சிறந்த நண்பன். புத்தகங்களே எனக்கு உந்து சக்தியாக உள்ளன. நான் எழுத்துக்களால் வளர்ந்தவன். என்னுடைய கதாநாயகர்கள் சுரா, கந்தசாமி, அசோகமித்திரன் போன்றவர்களே, இப்பதிப்பகம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனக்கூறினார்.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது ‘’மரபுக்கும் நவீனத்திற்கும், அதிகாரத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் பிற மொழிகளுக்கும் தமிழுக்கும் பாலமாக ‘’பாலம் பதிப்பகம்’’ செயல்படும் என அறியும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ எனக் கூறினார்.
எழுத்தாளர் சா கந்தசாமி பேசும்போது, புத்தகங்களில் சிறந்த புத்ககம், மோசமான புத்தகம் என இருவகைகள் உண்டு. மேல்நாட்டு மூன்றாம் தர ஏழாம் தர படைப்புகளை இங்கு நாம் முதல் தரமான படைப்புகளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஓஷோ தான் படித்தவற்றில் சிறந்த நூல்கள் என 600 மேற்பட்ட நூல்களின் பட்டியலை தந்துள்ளார். அவற்றில் ஒன்று கூட தமிழ் நூல் இல்லை. அதனால் நமக்கு நட்டம் ஏதுமில்லை. அவர் தமிழ் நூல்களை வாசித்திருந்தால் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம். பாரீசில் பணியாற்றும் அப்பாதுரை தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு நம் படைப்புகளை கொண்டு செல்வார் என நம்புகிறேன் என பேசினார்.
தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசும்போது ‘’இந்நூலை வாசிக்காமலேயே பேச வந்திருக்கிறேன். ஒரே சமயத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழில் ஒரு படைப்பு வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. புலம் பெயர்ந்தவர்களால்தான் சாதிக்க முடிகிறது. விவசாயத்தில் கூட நெல்பயிர் நாற்றங்காலிருந்து வயற்காட்டுக்கு இடம் பெயரும்போதுதான் சிறப்பான விளைச்சல் கிடைக்கிறது. பெண்களின் வாழ்பும் புலம் பெயர்வதாகத்தான் உள்ளது. சாதனையாளர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். திருவள்ளுவர் காலத்தால் புலம்பெயர்ந்து வாழ்கிறார். பாலம் பதிப்பகம் மேலும் பல வெற்றிகளை ஈட்ட வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் தன் உரையில் ‘’தமிழ் மொழிக்கு வரும் ஆங்கில மொழிப்படைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் பிரெஞ்சு மொழி படைப்புகளின் வருகை குறைவாகத்தான் உள்ளது. நூற்றுக்கு மேற்பட்டோர் மாப்பசானை பகுதிகளை பிரெஞ்சு மொழிக்கு கொண்டு செல்லவும் சமகால பிரெஞ்சு மொழி படைப்புகளை தமிழுக்கு கொண்டு வரவும் பாலம் பதிப்பகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்’’ எனக்கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நிறைய பேர் கவிதை எழுதி இலக்கியத்தில் தொண்டு செய்கிறார்கள். நான் கவிதை எழுதாமல் தொண்டு செய்கிறேன். காப்கா தன் நாவலான ‘’உருமாற்றம்’’த்தை மிகவும் சிறப்பான ஆரம்ப வாக்கியத்தோடு ஆரம்பித்திருப்பார். அதுபோல் ‘’திரு சித்திர சதிர்’’ நாவலுக்கு அப்பாதுரை மிகவும் சிறப்பான ஆரம்ப வரியை எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது. எல்லோரிடத்திலும் கலையுள்ளம் உள்ளது. சூழ்நிலை அதனை தடுக்கின்றன. சூழ்நிலைகளை கடந்து அல்லது மீறி தன் கலையுள்ளத்தை வெளிப்படுத்துபவர்களை படைப்பாளிகளாக கொண்டாடுகிறோம். பாலம் தமிழுக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என நம்புகிறேன். எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாக கவிஞர் கனிமொழி உரையாற்றினார். இந்திய எழுத்துகள் என்பது பெரும்பாலும் வடமொழி சார்ந்ததாகவே கருதபடுகிறதென்றும், அதுபோல் அல்லாமல் பாலம் பதிப்பகம் தமிழ் மொழி படைப்புகளை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் உலகின் முக்கியமான படைப்புகள் வெளிவரும் மொழியான பிரெஞ்சு மொழிக்கு நம் படைப்புக்களை பாலம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தன் விருப்பத்தினையும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது ‘’அரசியலில் உள்ள அரசியலைவிட இலக்கியத்தில் அரசியல் அதிகமாக உள்ளது. கருத்து சுதந்திரம் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்நிலைகள் மாற வேண்டும் என்பதே நமது விருப்பம். பாலம் பதிப்பகம் தொடர்ந்து சிறப்பான நூல்களை வெளியிடும், அவைகள் சிறப்பான வரவேற்பை பெற வாழ்த்துகிறேன். எனக்கூறி தன்னுரையை நிறைவு செய்தார்.
ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் அரவிந்த அப்பாதுரை வழக்கமான ஏற்புரைகள் போல் அல்லாமல் இலக்கியத்திற்கும் இலக்கிய வாதிக்கும் இடையேயுள்ள உறவினை மையப்படுத்தி ஒரு கதையை சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|