மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில்.
நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே ஏத்தி நிப்பாட்டின மாதிரி கேள்வி மேல கேள்வி கேக்கிறார். வயசாம் காலத்திலே நமக்கு இது தேவையா?’ என்றார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நாஞ்சில்நாடனின் இணையதளத்தை நடத்தும் சுல்தான் ஷெரீஃப் வந்தார். ஏர்வாடிக்காரர். ஏர்வாடி நாகர்கோயிலில் இருந்து தூரம், நெல்லை மாவட்டம். ஆனால் நான் எந்த அளவுக்கு ஊரில் இருந்து தூரத்தில் இருக்கிறேனோ அந்த அளவுக்கு ‘நம்மூரின்’ அகலம் அதிகரிக்கும். நாகர்கோயிலில் இருந்தால் பார்வதிபுரம்தான் நம்மூர். சென்னையில் என்றால் நெல்லையும் நம்மூரே. நம்மூர்காரரை ஆரத்தழுவி வரவேற்றோம். ’ஏற்கனவே உங்க வீட்டுக்கு வந்து புத்தகம்லாம் வாங்கிட்டு போயிடுக்கேன்’ என்றார். பஹ்ரைனிலும் திருவனந்தபுரத்திலும் மாறி மாறி வாழ்கிறார்.
நண்பர்கள் அறைக்கு வந்துகொண்டே இருந்தார்கள். எல்லாரும் அவரவருக்குரிய பதற்றத்தில் இருந்தனர். அனைவரும் கிளம்பிச்சென்றபின் நானும் நாஞ்சிலும் மட்டும் எஞ்சினோம். ‘கல்யாண மாப்பிள்ள பட்ட பாடுல்லா படுகேன்’ என்றார் நாஞ்சில். நான் அரை மணிநேரம் கண்ணயர்ந்தேன். உடனே உற்சாகம் திரும்பி வந்தது. குளித்து உடை மாற்றினேன். நாஞ்சில் பட்டுவேட்டி சட்டை போட்டுக்கொண்டார்.
அது ராமச்சந்திர ஷர்மாவின் ஆலோசனை. ஆரம்பத்தில் எல்லாருக்கும் அது கேலிக்கூத்தாகப்பட்டது. ‘இது நம்ம வீட்டு கல்யாணம்னு சும்மா சொன்னா ஆச்சா? கல்யாணம் மாதிரியே நடந்தாகணும்’ என அடம்பிடித்து அரங்கசாமியை அவர் கட்சிக்கு கொண்டுசென்றார். பின்னர் வினோத். பின்னர் சிறில். எனக்கு அது என்னவோ போல இருந்தாலும் நான் தனித்துத்தெரிய ஆசைப்படுபவனல்ல. கிருஷ்ணன் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவர் என்னுடைய கிருஷ்ண பக்ஷம்.
‘’இனியும் ஒரு அங்கத்தினு பால்யம் உண்டல்லோ’’ என்றேன் நாஞ்சிலிடம். [இனியும் ஒரு ஒற்றையொற்றை போருக்கு இளமை மிச்சமிருக்கிறது] . ’’அங்கப்போருக்கு பாலியம் இல்லைன்னாலும் டௌரி குடுத்தா சந்தோசம்தான்’’ என்றார். எனக்கு வேட்டி கட்ட தெரியவில்லை. நான் லுங்கி கட்டினால் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அது அவிழும். வேட்டி கடைசியாக கட்டியது அருண்மொழியை குமாரகோயிலில் [இரண்டாம்முறையாக] கைப்பிடித்த அன்று. அன்று என் ஒரு கையில் வேட்டியின் நுனியும் மறுகையில் அருண்மொழியின் கையும் இருந்தன.
ராஜகோபாலன் வந்தார். ‘என்னது, வேட்டிசட்டை இல்லியா? அரங்கசாமி தனியா சொல்லிவிட்டாரே…’’ என்றார். ‘’எங்கிட்ட வேட்டி சட்டை இல்லையே’’ என்றேன். ‘’அது தெரிஞ்சுதான் நானே கொண்டுவந்தேன்’’ என்று சரேலென உருவினார். ‘’இல்ல…அதாவது இருந்தாலும் எனக்கு வேட்டி கட்ட தெரியாது…’’ ‘’எங்கிடட் கட்டிவிடச்சொல்லியிருக்கார் அரங்கா’’ என்று அவரே கட்டிவிட்டார்.
இடுப்புக்கு மேல் வேட்டியை சுற்றி மடிக்கும் உத்தி .’’தமிழ்ச்சமுதாயத்துக்கு முன்னாடி என்னோட ஆன்மா நிர்வாணமா நிக்கறது ஓக்கே. உடம்பு நின்னா நல்லாருக்காது’’ என்றேன். ‘’இது அவிழாது, நான் காரண்டி..’’ விட்டால் ஆன்மாவுக்கு அதுபோல ஏதாவது அணிவித்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டேன்.
விழா ருஷ்ய கலாச்சார நிலையத்தில். கமிசார்கள் எவரும் கண்ணுக்குப் படவில்லை. அரங்கு நன்றாக இருந்தது- கட்டணம் கொஞ்சம் அதிகம். இலக்கியக்கூட்டத்துக்கு கட்டுப்படியாகாது. 280 இருக்கைகள். நூறுபேராவது வருவார்களா என்ற வழக்கமான சந்தேகம் சுற்றிக்கொண்டே இருந்தது. அரங்கு முன்னால் கூடிய நண்பர்களில் தெரிந்தவர்களை சந்தித்து மரியாதையும் அன்பும் பரிமாறிக்கொண்டே இருந்தேன்.
பாலுமகேந்திராவை சுகா கூட்டி வந்தார். ‘’என்ன ஜெயன், எப்டி இருக்கீங்க?’’ என்றார். நான் ‘’சார், பாபு நந்தன்கோடு எடுத்த ஒரு படத்தோட சில காட்சிகளை பாத்தேன். நீங்க அவர்கூட வேலைபாத்திருக்கீங்களா?’’ என்றேன். ‘’இல்லை. அவன் என் நண்பன். ஆனால் அசோக் குமார்தான் அவனோட ஆள். ஸ்வப்னம்னு ஒரு படம். பிளாக் ஆன்ட் வயிட். அவனோட பெஸ்ட் பிளாக் ஆன் வயிட்டிலேதான்’’ என்றார். ‘’சார் . எக்ஸாட்டா நான் பேச வந்ததே அந்தப் படத்தைப்பத்தித்தான் ‘’என்றேன்.
பவா செல்லத்துரை அலுவலகப்பிரச்சினைகளால் வர முடியவில்லை. புத்தகக் கண்காட்சிக்காக போட்டவிடுப்புகளுக்கான தண்டனை. சு.வெங்கடேசனுக்கு நாகர்கோயிலில் இருந்து சென்னை வர டிக்கெட் எடுத்துக்கொடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. டிசம்பர் 23 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி நாகர்கோயிலின் கிறித்தவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகும். சு.வெங்கடேசன் ஒரு நிகழ்ச்சிக்காக நாகர்கோயிலுக்கு 31 ஆம்தேதியே சென்றிருந்தார். [வழக்கம்போல] பாலா வரவில்லை , படப்பிடிப்பு நினைத்ததை விட [வழக்கம்போல] நீண்டு விட்டது.
இந்தமுறை நண்பர்கள் மூவரை மேடையேற்றினோம். ராஜகோபாலன் மட்டும்தான் அவரே ஒத்துக்கொண்டார். சிறில் அலெக்ஸை கொஞ்சம் வற்புறுத்தவேண்டியிருந்தது. ’கிறிஸ்துவுக்கு அன்பா…….னவர்களே’ என்று ஆரம்பித்து பேசித்தான் அவருக்கு பழக்கம். கொஞ்சம் உழைத்து மாற்றிக்கொண்டார். தம்பி தனசேகருக்குத்தான் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம்.
அபராஜிதன் என்ற பேரில் குறிப்பிடத்தக்க கதைகளை தனசேகர் எழுதியிருக்கிறான். ஞாநியின் நாடகங்களின் முக்கியமான நடிகர்களில் ஒருவன். ஞாநியின் உள்வட்டக்காரர் என்றாலும் அரசியல் அற்ற பச்சைப்பிள்ளை. மிகச்சிறந்த இலக்கியவாசகன். ஆனால் மேடை என்றதுமே முகம் எனிமா செலுத்தப்பட்டவன் போல ஆகிவிட்டது. அரங்குக்கு முன்னால் வரவேற்புரை தொகுப்புரை முதலியவை மனப்பாடம்செய்யப்படுவதை அன்றுதான் என் இலக்கியவாழ்க்கையில் முதல்முறையாகக் கண்டேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் வந்தார். நெடுநாட்களுக்குப்பின் அவரை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. ராமகிருஷ்ணன் பேசவேண்டும் என நான் எதிர்பார்த்திருந்தேன். காரணம் சாகித்ய அக்காதமி விருது பரிசீலனைப்பட்டியலில் நாஞ்சிலுக்கு அடுத்து இருந்த பெயர் அவர்தான். அதேசமயம் அவர் வரமாட்டாரோ என்ற எண்ணமும் இருந்தது என்பதை மறைக்கவிரும்பவில்லை. ஏனென்றால் பணம் கொடுத்தும்கூட விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சியின் விளம்பரத்தை வெளியிட உயிர்மை மறுத்திருந்தது. ஹமீது எப்படி ‘செல்வாக்கு’ செலுத்துவார் என நான் அறிவேன்.
ராமகிருஷ்ணனை கூட்டத்திற்கு அழைக்க முதலில் நினைத்திருந்தோம். ஆனால் இந்த சீசனுக்கு அவர் எல்லா கூட்டங்களிலும் பேசியிருந்தார். மேலும் அந்த கூட்டங்கள் அனைத்திலும் அவர் மட்டும் நன்றாக பேசியிருந்தார், கிட்டத்தட்ட சென்னையில் வேறு பேச்சாளர்களே இல்லாதது போல பட்டது என்றார்கள் நண்பர்கள். [ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஒரு புத்தகக் கண்காட்சி சீசனில் ஒரு கூட்டம், அதிகம்போனால் இரண்டு கூட்டம் மட்டுமே பேசவேண்டும் என்பது என் எண்ணம். நான் அதை கண்டிப்பாக கடைப்பிடிக்கிறேன். அபூர்வத்தன்மையை எழுத்தாளனின் உரை இழக்கக்கூடாது. அவன் பேச்சாளனாக ஆகவே கூடாது.
ஆனால் நானும் சுகாவும் ராமகிருஷ்ணனுடன் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஒரு நாஞ்சில்பக்தர் ‘ராமகிருஷ்ணன் பேசலையா?’ என்றார். ‘இல்லை’ என்றதும் ‘நீங்க பேசறீங்க. நீங்க ரெண்டுபேருமே பேசினா அதுதானே நாஞ்சிலுக்கு மரியாதை?’ என்றார். அது சரிதான் என்று பட்டது. நாஞ்சில்நாடனை பற்றி அவரது வாழ்த்து பலவகையிலும் முக்கியமானது. அடுத்த தலைமுறையின் மையமான எழுத்தாளர் என்றமுறையில் அவரது அங்கீகாரம் அது.
ராமகிருஷ்ணனிடம் அவர் பேசமுடியுமா என வேண்டிக்கொண்டேன். அழைப்பில் பெயரில்லாமல் அவரைப்போன்ற ஒருவரை பேச அழைப்பது மரியாதை அல்ல. ஆனால் அப்படி அழைக்க அவரது இருபத்திரண்டாண்டுக்கால நண்பர் என்ற முறையில் எனக்கு உரிமை உண்டு என்ற எண்ணமும் இருந்தது. சிரித்தபடி ‘அதுக்கென்ன…இதெல்லாம் நீங்க சொல்லணுமா’ என்று ஒப்புக்கொண்டார். ஆனால் பாலா படப்பிடிப்புக்காக தேனி செல்ல எட்டரை மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸை பிடிக்கவேண்டும் என்றார்.
நான் மேடைக்குச் சென்று தனாவிடம் நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன் பேசப்போவதைச் சொல்லி அவரை ஆரம்பத்திலேயே பேச அழைக்கச் சொன்னேன். அதாவது தலைமையுரைக்குப் பின்னர். தனா பீதியுடன் ‘அப்டியா சார்?’ என்றார். ராமகிருஷ்ணனைப்பற்றிய குறிப்பை பேச்சில் சேர்க்க ஆரம்பித்தான்.
விழா ஆரம்பம். சிறில் வரவேற்புரை. ஜோக்குகளைக்கூட எழுதிவைத்து வாசித்தார் சிறில். நல்ல சுமுகமான நடுக்கம். ஆனாலும் குரல் கைகொடுத்தது. அடுத்து தொகுப்புக்கு வந்த தனா வெற்றிகரமாக குழம்பி தலைமையுரைக்கு ராஜேந்திரசோழனை அழைப்பதற்குப்பதில் முதல் உரையாற்ற ராமகிருஷ்ணனை அழைத்தான். அதன்பின் தலைமையுரை என்றால் சரியாக அமையாது. ஆகவே தலைமையுரையே வேண்டாம், வரிசையாக உரைகள் போதும் என முடிவெடுக்கப்பட்டது.
ராமகிருஷ்ணன் அவருக்கே உரிய முறையில் சிறப்பாகப் பேசினார். கையில் தன் மண்ணின் வாசனைகொண்ட மாதுளம்பழத்துடன் நாட்டைவிட்டுக் கிளம்பும் ஆர்மீனியனைப்போன்றவர் நாஞ்சில். அவரது கதைகள் அவரது மண்ணின் மணம் கொண்டவை என்றார்.
சுல்தானை மேடைக்கு அழைத்து ஒரு நினைவுப்பரிசு கொடுத்தோம். அதை நாஞ்சில்நாடன் கையால் பெறுவதையே அவர் விரும்புவார் என்பதனால் அவரைக்கொண்டே கொடுக்கச்செய்தோம். சுல்தான் மேடையிலேயே கண்கலங்கியபடி வந்தார். அதைப்பற்றி பேசும்போதெல்லாம் கண்கலங்கிக்கொண்டிருந்தார்.
தனா மேற்கொண்டு சமாளித்துக்கொண்டான். அவனுக்குள் இருந்த நடிகன் விழித்துக்கொள்ள, தொகுப்புரையின் நேரக்கணக்கும் சிறிய நகைச்சுவை துணுக்குகளும் அரங்கை கலகலப்பாக்குவதை கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் பாரதிமணி சுருக்கமாக இருசொற்களில் முடித்தபோதும், கண்மணி குணசேகரன் அறிமுகம் முடிவதற்குள்ளேயே மைக்குக்கு வந்தபோதும் தனா அந்நிகழ்ச்சிகளை வேடிக்கையாக ஆக்கிய விதம் சிறப்பு.
பாலு மகேந்திரா தன்னை ஒரு இலக்கிய வாசகனாக அறிமுகம்செய்துகொண்டார். பாரதி அவரது கவிதைகளின் கைப்பிரதியில் ‘வல்லமை தாராயோ இவ்வையகம் புகழ்ந்திட வாழ்வதற்கே’ என முதலில் எழுதி புகழ்ந்திட என்பதை அடித்து பயனுற என்று மாற்றியிருப்பதைக் கண்டேன் என்றார். புகழும் அங்கீகாரமும் எந்தக் கலைஞனும் தேடுபவை. அவன் விழைவது காலத்தில் ஓர் இடத்தை. உரிய புகழ் தேடி வருவதென்பது எந்தக் கலைஞனுக்கும் நிறைவளிப்பதே என்றார்.
பாரதிமணியுடன்தான் சென்னை வரும் நாஞ்சில் தங்குவது வழக்கம். அது தந்தை மகன் உறவு போன்றது. நாஞ்சிலின் நாவறிந்து சமைத்துப்போட்டுக்கொண்டே இருப்பார் மணி. பாலு மகேந்திரா வெளியிட ‘கான்சாகிப்’ தொகுப்பை மணி பெற்றுக்கொண்டார். ஆனால் தன் மனம் நெகிழ்ந்திருப்பதனால் பேசமுடியவில்லை என நின்றுவிட்டார்.
ராஜகோபாலன் எதிர்பார்த்தது போலவே நன்றாகப் பேசினார். அவரது முதல் உரை. ஆனால் அவரது தொழிலே மேடைதான். காப்பீட்டு ஊழியர்களுக்கான பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். எங்கள் நட்புக்குழுவில் சர்வதேசப் பொருளியல் விஷயங்களை சிறப்பாக பேசக்கூடியவர். நல்லகுரலில் நாஞ்சில்நாடனின் கதைகளின் போதனைசெய்யாத நேர்மையைப்பற்றி பேசினார்.
ஞாநி அவருடைய அரசியல் தளத்தில் இருந்து விருதுகளுக்கு வந்தார். தி.ஜானகிராமன் டெல்லியில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தவர். ஆனால் அவரது புனைவுலகில் டெல்லியை குறைவாகவே காணமுடியும். ஆனால் நாஞ்சில்நாடன் அப்படி அல்ல. அவரது புனைவுலகில் அவரது நாஞ்சில்நாட்டுக்கு நிகராகவே மும்பையின் சித்திரங்களையும் காணமுடியும். அது சமகாலத்துடன் அவருக்கு இருக்கும் உறவின் சாட்சி. எழுத்தாளனுக்கு சமகால அரசியல் பிரக்ஞை தேவை. நாஞ்சில்நாடனின் வலு அதுவே என்றார்.
ராஜேந்திர சோழன் கிட்டத்தட்ட முப்பதாண்டுக்காலமாக அரசியல் மேடைகளில் பேசிவருவர். மிக இயல்பான பேச்சுநடையும் உடல்மொழியும் கொண்டவர். கிழக்கு பத்ரியின் இணைப்பில் அவரது உரையை மீண்டும் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. சாகித்ய அக்காதமி விருதுக்கு இத்தனை சரிவுகளுக்கு பின்னரும் வரும் முக்கியத்துவம் அது ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக உள்ள அரசாங்கத்தால் அளிக்கப்படுவதே என்றார். ஆகவே அது மக்களால் கண்காணிக்கப்படவேண்டும், விமர்சிக்கப்படவேண்டும் என்றார்.
கண்மணிகுணசேகரனின் பேச்சை ஒரு கலைநிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். நம் காலகட்டத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் அவர். இலக்கியவிருதுகள் எப்படி ஓர் எழுத்தாளனுக்கு இன்று அவன் குடும்பத்திலேயே ஓர் அடையாளத்தை உருவாக்கி அளிக்கின்றன என்று அவர் பேசியபோது நான் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கலைமாமணி விருதை எட்டாயிரம் ரூபாய் செலவிட்டு சென்று வாங்கியதைப்பற்றி ஆ.மாதவன் சொன்னதை நினைத்துக்கொண்டேன்.
கடைசியாக நாஞ்சில். நாஞ்சில் நாடனின் வழக்கமான தன்னடக்கம் கொண்ட பேச்சு நடுவே சட்டென்று கும்பமுனி வெளிவந்தார். இந்த நிகழ்ச்சியை தினதந்திக்காக நான் செய்தியாக்கினால் கொட்டை எழுத்தில் ‘தாயளி நானும் எழுதறேண்டா!!! நாஞ்சில்நாடன் பேச்சு !!! ’ என்று ஏழு ஆச்சரியக்குறிகளுடன் கொடுத்திருப்பேன்.
விழா முடிவில் தனாவிடம் ராஜேந்திர சோழன் மருத்துவர் பினாயக் சென் பற்றி சொன்னதை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழிமொழிகிறது என்று சொல்லும்படி கோரப்பட்டது. ராஜேந்திர சோழன் தலைமையுரை எப்படி ‘தற்செயலாக’ மாறியது என்றும் சொல்லும்படியும் சொல்லப்பட்டது. தனா சொன்னான். ஆனால் எனக்கு அது கேட்கவேஇல்லை. சொன்னதாகவும் பாதியை விழுங்கிவிட்டதாகவும் சிறில் சொன்னார்.ராமகிருஷ்ணனை ராமச்சந்திரன் என்று சொல்லி உடனே சமாளித்துக்கொண்டான். சரிசெய்ய ராமகிருஷ்ணனின் பிற சிறப்புகளைச் சொல்லி விட்டாலும் பினாயக் சென் விஷயம் எவராலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது என்பது பதிவுகளை பார்த்தால் தெரிகிறது
விழா முடிந்ததும் ஒரே உற்சாக நிலை. தொடர்ந்து வந்து பாராட்டிக்கொண்டே இருந்தனர். இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடிய பலபேர் கடந்த பத்தாண்டுகளில் சென்னையில் நிகழ்ந்த இலக்கிய நிகழ்ச்சிகளில் இதுவே மிகச்சிறப்பாக அமைந்தது என்றார்கள். ஒரு கணம் கூட நிகழ்ச்சி தொய்வாகவில்லை, அத்தனைபேரும் சிறப்பாகப் பேசினார்கள் என்றார்கள்.
அதற்குக் காரணம் நாஞ்சில்நாடன். அவருக்கு விருது கிடைத்தபோது உருவான உற்சாகம்போல சமீபத்தில் தமிழில் ஒன்று நிகழவில்லை. ஏனென்றால் அனைவராலும் விரும்பப்படும் ஒருவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைத்து நெடுநாட்களாகிறது. பேச்சாளார்களும் கூட்டமும் எல்லாம் அந்த ஊக்கநிலையிலேயே இருந்தார்கள்.
ஆனால் ஒன்று தோன்றியது, இத்தனை பெரிய சென்னை நகரில் கேணி கூடுகையை தவிர்த்தால் இலக்கியதிற்கென ஒர் அமைப்பு இல்லை. பதிப்பகங்கள் தங்கள் நூல்களுக்காக நடத்தும் வெளியீட்டுவிழாக்களே இங்கே இலக்கிய நிகழ்ச்சிகள். இந்த அரங்கை கோவை, ஈரோடு, திருச்சி , மதுரை என பல ஊர்களில் இருந்து வந்து கூடி நாங்கள் நடத்தியிருக்காவிட்டால் வேறு எவருமே நடத்தியிருக்கப்போவதில்லை.
வழக்கமாக கூட்டங்களில் தென்படும் பலர் இந்தக்கூட்டத்திற்கு வரவில்லை. வேறெந்த கூட்டத்திலும் இல்லாத பலரை காணமுடிந்தது.என் தளத்தில் வழக்கமாக கடிதங்கள் எழுதும் பலரை நேரில் முதல்முறையாகச் சந்தித்தேன். சிலர் வயதானவர்கள் என்பது அதிர்ச்சி. இருவர் உளவியல் மருத்துவர்கள். ஒருவர் சென்னை ஐஐடி பேராசிரியர். இருவர் அணு விஞ்ஞானிகள்.
நண்பர்கள் கூடி சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். செந்தில்குமார் ஜெர்மனியில் ஆராய்ச்சி செய்கிறார். ஷிவாஸ் ரீகல் கொண்டு வந்திருந்தார். ஓர் அறையில் ஷாஜி சுல்தான் அரங்கசாமி தலைமையில் ஜமா சேர்ந்தது. நாஞ்சில் சட்டையை கழற்றி அதற்கான சீருடை யான ஈரிழை துவர்த்தை பாந்தமாக போர்த்தி கிளம்பிச் சென்றார். வினோத் ஏற்கனவே அங்கே நடமாடிக்கொண்டிருந்தார்.
என் அறையில் நான் கட்டிலில் அமர்ந்துகொண்டேன். குடிக்காத நண்பர்களான அதியமான் போன்றவர்கள் இங்கே இருந்தார்கள். எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான். தனா வந்து கட்டிலில் என்னருகே படுத்துக்கொண்டான். ‘ரொம்ப தலைய வலிக்குது’ என்றான். ஒரு மேடையுரை ஆறடி உயரமான ஒரு ஆளுமையை சாய்ப்பதை எண்ணி வியந்தேன்.
‘பேசினது நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க சார். எனக்கு பேசவிட்டுப்போனதுதான் மனசிலே நிக்குது’ என்றான். ‘சரி…தப்புகள் தெரிஞ்சுதுல்ல. பரவாயில்லை. அடுத்த பேச்சிலே வேற தப்புகள் பண்ணிடலாம்’ என ஆறுதல் சொன்னேன். அப்போது தினமலர் தங்கமணி வந்து அவருக்குச் சாத்தியமான அப்பாவித்தனத்துடன் தனாவிடம் ‘சரக்கு எடுத்து வச்சாச்சுன்னு சொல்லச்சொன்னாங்க’ என்றார். தனா உச்சகட்ட அதிர்ச்சியுடன் ‘எனக்கா? அய்யோ!’ என்றார். ஞாநியின் பரீக்ஷா குழுவில் சிறப்பாக நடிப்பு சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
இரவு இரண்டு மணிவரை பேச்சு. ஒருகட்டத்தில் மொத்த காட்சிக்கும் சுல்தான் தலைமை வகிக்க ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். ‘அருமையா பேசறார் சார்’ என விஜயராகவன் புளகாங்கிதம் அடைந்தார். அதியமான் அந்த கொண்டாட்டம் நடுவிலும் பொருளியல் விவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றது வரலாற்றில் பதிவுசெய்யத்தக்கது. வேறு ஓட்டலாக இருந்தால் உடனே காலி செய்ய சொல்லியிருப்பார்கள். பிரதாப் பிளாசா இப்போது என் சொந்த வீடு போல.கோபம் வந்தால் மானேஜரை காலிசெய்யும்படி நான் சொல்லிவிடுவேன்.
விடிகாலையில் கொஞ்சம் அமைதி. நாஞ்சில் மீண்டு வந்தார். எனக்கு ஷிவாஸ் ரீகல் மீதான நம்பிக்கை தகர்ந்தது. சாதாரண கிங்ஃபிஷருக்கே எவ்வளவு தத்துவம் வழிந்தோடும். அப்படி ஒன்றும் நிகழவில்லை. சிறில் அலெக்ஸ் மட்டும் கொஞ்சம் ஆன்மீகமாக ஏதோ பேசினார். புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு நுட்பமான ஆன்மீகம்.
காலையில் ஏழு மணிக்கு நான் கண்விழித்து எழுந்து பல்தேய்த்து கறுப்பு டீ சாப்பிட்டுவிட்டு சோகமாக அமர்ந்திருந்தேன்.நாஞ்சில் தி இண்டு வாசித்துவிட்டு ‘நாடு எங்கிண போய்ட்டிருக்கு ஜெயமோகன்?’ என்று கேட்கும் நிலையில் இருந்தார். ஷிவாஸ் ரீகல் ஏப்பத்துடன் சுல்தான் வந்தார். என்னைப்பார்த்து ‘பாவம், அந்த அய்யிரு பையன் வேட்டிய எப்டியோ சுத்திகட்டிட்டு அவர் வீட்டுக்கு போய்ட்டார். சார் ரெண்டுநாளா உள்ள அகப்பட்டுட்டு கஷ்டப்படுறார்’ என்று அனுதாபத்துடன் சொன்னார்.
நன்றி. ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=11434
|