காலச்சுவடு நூல் வெளியீட்டு விழா
காலச்சுவடு பதிப்பக வெளியீடுகளான பழ.அதியமான் பதிப்பித்த கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு சுந்தர ராமசாமி எழுதிய கு. அழகிரிசாமி நினைவோடை ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை கன்னிமாரா நூலக அரங்கில் 16.4.2011 அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக கி.ரா, சீதாலட்சுமி அழகிரிசாமி, விஜயலட்சுமி சொக்கலிங்கம், சா. கந்தசாமி, ச. தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கு.அழகிரிசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு நூலை கு. அழகிரிசாமியின் நண்பரும் எழுத்தாளருமான கி.ராஜநாராயணன் வெளியிட கு. அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி அழகிரிசாமி பெற்றுக்கொண்டார்.
சுந்தர ராமசாமி எழுதிய கு. அழகிரிசாமி நினைவோடை நூலை எழுத்தாளர் சா.கந்தசாமி வெளியிட கு. அழகிரிசாமியின் தம்பி மனைவி விஜயலட்சுமி சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கி. ராஜநாராயணன்
1944 ஆம் ஆண்டு கு. அழகிரிசாமியும் நானும் இந்த நூலகத்திற்கு முதன் முதலாக வந்தோம். அதன் பிறகு இங்கு இன்றுதான் வருகிறேன். கு. அழகிரிசாமியின் சிறப்பு என்பது அவனுடைய சிறுகதைகள்தான். அவனுடைய கதைகளை பற்றி நிறைய பேசலாம். நான் அவனுடைய சில தனிப்பட்ட குணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய கைகள் காற்றில் எழுதியபடியே இருக்கும். அவன் தீவிர சிந்தனையில் இருக்கும்போது பேப்பரில் கிறுக்குவான். ஒரு கட்டத்தில் அந்த கிறுக்கல்கள் ஒரு ஓவியமாக மாறியிருக்கும். அதையெல்லாம் சேர்த்து வைக்க வேண்டுமென்று எங்களுக்கு தோன்றாமலே போயிற்று. இதுபோல் கிறுக்கும் பழக்கம் நேருஜி, ராஜாஜி போன்றவர்களிடம் இருந்ததாக கேள்விபட்டிருக்கிறேன்.
தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம் தவிர்த்து மற்றபடி எல்லா நேரங்களிலும் வெற்றிலை போடும் பழக்கம் அவனுக்கு இருந்தது. எவ்வளவு பேசினாலும் ஒரு சொட்டு வெற்றிலை வெளியே தெரிக்காது. ஊரைவிட்டு வெளியே வந்து சென்னையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தாலும் அவன்பேச்சு வழக்கு மாறவேயில்லை. அவன் பலவிதமான கதைகள் எழுதியுள்ளான். அதில் எங்க மண்ணபத்தியும் மக்களபத்தியும் எழுதின கதைகள் சிறப்பானதழூ அந்த கதைகளை மட்டும் தனிதொகுதியாக கொண்டு வர வேண்டுமென விரும்பினேன். ஆக கைகூடாமலே போயிற்று. இன்று அவனுடைய எல்லா கதைகளும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. இக்காரியததில் பங்கெடுத்த அனைவரையும் பாராட்டி விடைபெறுகிறேன்.
சா. கந்தசாமி
கு. அழகிரிசாமி அசலான கலைஞன். அவர் மொழி புலமையுள்ளவர். கம்பராமாயணம். காவடிசிந்து பதிப்பித்துள்ளார். படைப்பு மொழியால்தான் தமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்கிறது. கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முக்கியமானவை. அவருடைய ராஜா வந்திருக்கார் சிறுகதை இந்திய மொழிகளிலே சிறந்தது என கநாசு என்னிடம் கூறியிருக்கிறார்.
புத்தகம் பிரச்சாரம் செய்யக்கூடாது. படைப்பாளன் படைப்பை தொடங்கி வைக்கிறான் வாசகன் படைப்பை நிறைவு செய்கிறான். ஒரு தேனீ எப்படி மலரில் உண்ட மகரந்தங்களை தேனாக மாற்றுகிறதோ அதுபோல் படைப்பாளி தான் கண்டவற்றை உள்வாங்கி மனதில் உறைபோட்டு படைப்பாக வெளிபடுத்துகிறான். தனது குறைகளை நீக்கி கொள்ள சரியான பேராசிரியர் இல்லையே என கு. அழகிரிசாமி வருத்தப்படுவாராம். 1968 வாக்கில் நான் அவரை சந்தித்தேன். சக்தி வெளியீடாக வந்த கு. அழகிரிசாமியின் கதைகளை வாசித்திருக்கிறேன். இன்று முழு தொகுப்பாக வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது.
ச. தமிழ்செல்வன்
உலகத்திலேயே எனக்கு பிடித்தவர் கு. அழகிரிசாமிதான். அப்பா, அம்மாவை விட அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய சிறுகதைகள் உயிர்துடிப்பு மிக்கவை. அவருடைய கதைகள் மொத்தமாக வெளிவராதா என்ற பலரின் ஏக்கம் இன்று நிறைவடைந்துள்ளது.
திரிபுரம் என்ற கதையை படித்து கண்ணீர் விட்டிருக்கிறேன். அதனால் எனக்கு பத்து நாள் உடம்பு சரியில்லாமல் கூட போயிற்று. அன்பளிப்பு என்ற கதையில் சிறுவர்களின் உலகை துல்லியமாக பதிவு செய்திருப்பார். ஒரு கதைக்கான தலைப்பு வெறும் நாய். மனிதனின் ஆதி தோழன் நாய்தான். அந்த நாய்க்கு இருக்கும் உணர்வு கூட இந்த மக்களுக்கு இல்லாமல் போயிற்றே என்பதன் வெளிப்பாடுதான் அந்த கதை. அருடைய மொழி நடை எளிமையானது. அவரை படிக்கும் போது அப்படியே கரைந்து போகிறேன். அழகம்மா என்றொரு கதை மனித மனங்களின் விசித்திரங்களை அதில் பதிவு செய்திருப்பார். (ஒவ்வொரு கதையையும் விரிவாக உணர்ச்சி மேலிட சொன்னார் தமிழ்ச்செல்வன் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையிலே பேசினார்).
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கு.அழகிரிசாமியின் எழுத்து பற்றி பாவண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை கௌரவமானதாக இல்லை. அடுத்த பதிப்பில் அதை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும். கு, அழகிரிசாமி பற்றி அதியமான எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கு. அழகிரிசாமியின் மனநிலைகளை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன்.
பழ. அதியமான்
கு. அழகிரிசாமி வாழும்போதே எட்டு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவரது மறைiக்கு பிறகு ஐந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த பதிமூன்று தொகுப்புகளில் உள்ள கதைகள், அவர் தொகுக்காமல் விட்ட கதைகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 105 கதைகள் காலவரிசைப்படி இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ள.
கு. அழகிரிசாமி (1923 1970) 47 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். கம்பராமாயணம் (யுத்த காண்டம் தவிர) பதிப்பித்துள்ளார். முதலில் சிறுகதைக்காக சாகித்ய அகதெமி விருது கு. அழகிரிசாமிக்குதான் வழங்கப்பட்டது. எளிமையான மொழியில் தான் சொல்ல வந்த விசயத்தை சொல்லாமல் சொல்லி விடுவார். சிக்கலான மன விசித்திரங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
சுந்தர ராமசாமியின் கு. அழகிரிசாமி நினைவோடை மூலம் கு. அழகிரிசாமியின் விருப்பங்கள், அவர் கோபப்படும் விசயங்கள், விரும்பி உண்ணும் உணவு, அவர் அணியும் உடை, அவர் யாரை கொண்டாடினார். யாரை நிராகரித்தார் என பல விசயங்களை அறிய முடியும். அவரின் வாழ்க்கையை அறிந்து கொள்வதன் மூலம் அவரின் படைப்பை கூடுதலான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
கு. அழகிரிசாமியின் இளமை காலம் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் அறிந்து கொள்ள கி.ராவின் கட்டுரை உதவியாக இருக்கும் என்ற நோக்கில் கி.ராவின் கட்டுரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அதிகம் கண்டு கொள்ளாமல் விடுபட்ட கலைஞனை இத்தொகுப்பு மூலம் அனைவரும் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
ஊர்காரர், கட்சிக்காரர் என்ற முறையில் அல்ல கு. அழகிரிசாமியை கொண்டாடுபவர் என்ற முறையிலேயே தமிழ்ச்செல்வனை இம்மேடைக்கு அழைத்தோம்.
இந்நூல் வெளியீட்டு விழா சரியாக ஒன்றரை மணி நேரத்தில் நடந்து முடிந்தது. அரங்கு முழுவதும் ஆர்வலர்கள் நிரம்பியிருந்தனர்.
|