கோலம் தொடக்க விழா
தரமான திரைப்படங்கள் தமிழில் வரவில்லையே அதற்கு நாம் என்ன செய்யலாம் என்ற சிந்தனையின் பலனாக கோலம் வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தை பத்திரிகையாளர் ஞாநி தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்வு 13.8.09 அன்று தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.
|
முதல் நிகழ்வாக ஞாநி-ன் கடந்த கால திரைப்படைப்புகளின் தொகுப்பு திரையிடப்பட்டது. அதில் ஞாநி இயக்கிய குறும்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றில் இருந்து சிறு சிறு காட்சிகளை திரையிட்டார்கள். ஒற்றை ரீல் இயக்கத்திற்காக எடுக்கபட்ட 10 நி குறுப்படம் முழுமையாக திரையிடப்பட்டது. |
திரையிடலுக்குப் பிறகு ஞாநி அனைவரையும் வரவேற்று பேசினார். அவருடைய பேச்சில் இருந்து :-
கோலம் திரைப்பட இயக்கம் என்னுடைய 20 வருட கனவு. இந்த கனவு நிறைவேறிட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். படைப்பாளிகளுக்கு படைப்புக்குள்ளும் வெளியேயும் பலவித சிக்கலகள் உள்ளன. மக்களிடம் பணம் சேர்த்து படம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஜான் ஆப்ரகாம் சந்தித்த பிரச்சனைகளை நேரிலே கண்ட பின்பும் இந்த இயக்கத்தை தொடங்க காரணம் இன்று திரைப்பட தொழில் நுட்பத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றமே கோலம் திரைப்பட
இயக்கம் தோன்றக் காரணமாகும். தரமான படங்களை விரும்புவோர் ரூ.500 செலுத்தி முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் சுமார் 1500, 2000 ஆர்வாளர்கள் சேருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். 3 மாத கால அவகாசத்தில் சுமார் 120 நிமிட முழு நீள விடியோ படம் எடுத்து முன் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த முயற்சி வெற்றி பெறும். அடுத்தடுத்த 3 மாதங்களில் ஒரு படம் தயாரிக்கப்படும் என நம்புகிறோம். இங்கு கூடி இருக்கும் ஆர்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு 5 ஆர்வலர்களை சேர்ந்தால் மேற் கூறிய அனைத்தும் சாத்தியமானதாகும்.
பத்திரிக்கை துறையில் வெகுசன பத்திரிக்கை, இடைநிலை இதழ்கள் இருப்பதுபோல் சினிமாவிலும் வர்த்தக சினிமா, இடைநிலை சினிமா என்ற நிலை ஏற்படும். கோலம் திரைப்பட இயக்கத்தின் மூலம் புதிய இளம் படைப்பாளிகள் பயனடையலாம். இந்த அமைப்பை தொடங்கி வைத்து வாழ்த்த வந்துள்ள மூன்று இயக்குனர்களுமே (பாலுமகேந்திரா, பாலசந்தர், மகேந்திரன்) வணிக சினிமாவில் செயல்பட்டுக்கொண்டே வணிக சினிமாவின் எல்லையை விரிவுபடுத்த முயன்றவர்கள்.
இயக்குனர் பாலுமகேந்திரா:
கோலம் தமிழ் சினிமாவில் அர்த்த பூர்வமான புதிய முயற்சியாகும். இது பல வருட கனவு இன்று தொடங்குகிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமெனில் நல்லசினிமா எது நச்சு சினிமா எது என்பதை அடையாளம் காணும் பார்வையாளன் (அ) நல்ல ரசிகன் வேண்டும். இதற்கு பள்ளி பாட திட்டத்தில் சினிமா ரசனை பாடமாக வைக்கப்படவேண்டும். இதை நான் பல மேடைகளில் தொடர்ந்து கூறிவருகிறேன். பள்ளியில் சினிமாவை பாடமாக வைத்தால் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போட மாட்டார்கள். தமிழர்களுடைய வாழ்க்கையில் அதுவும் அரசியல் வாழ்க்கையில் சினிமா நேரடியாகவே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ரசனை பாடமாகும்போதுதான் நல்ல சினிமாவுக்கு ஆதரவு பெருகும். ஞானி- ன் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவருடைய முயற்சிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்.
இயக்குனர் மகேந்திரன்
ஒரு படைப்பின் நோக்கம் அப்படைப்பாளின் கோபம் சார்ந்ததாகும். பழையனவற்றின் மீதான படைப்பாளின் கோபங்கள் தான் உன்னதமான படைப்பை உருவாக்குகிறது. தற்காலத்தில் மக்கள் விரும்புகிறார்கள் என கூறிக்கொண்டு படைப்பவர்களின் படைப்பில் தரம் குறைத்துக் கொண்டே செல்கிறது.
தமிழ் சினிமாவில் பலமுறை புதிய பாதைகளை பல இயக்குனர்கள் உருவாக்கினார்கள். ஆனால் அவர்களை பின் தொடர ஆட்கள் இல்லாமல் போய்விட்டது. மக்களுக்கு பொறுப்புணர்ச்சி கிடையாது. ஒரு மோசமான படைப்பை வெற்றி பெற செய்வதன் மூலம் பல மோசமான படைப்புகள் உருவாக காரணாகி விடுகிறார்கள். உலக திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லை. இருந்தால் மோசமான படைப்புகளை இனம் கண்டு ஒதுக்கி விடுவார்கள்.
தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகர்களால்தான் பெருமை. அந்த காலம் முதல் இந்த காலம் வரை நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. தமிழ் சினிமாவில் எப்பவாவதுதான் நல்ல படம் வரும் என்ற நிலை மாற வேண்டும். அதற்கு கோலம் திரைப்பட இயக்கம் போன்ற முயற்சிகள் நன்கு வளர வேண்டும். அவை தரும் படைப்புகள் தமிழில் அபூர்வராகங்களாக, அழியாத கோலங்களாக நிலை பெற வாழ்த்துகிறேன். கோலம் திரைப்பட இயக்கத்திற்கு எல்லா வகையில் உதவ தயாராக இருக்கிறேன்.
இயக்குனர் பாலசந்தர்
முன்பு ஆனந்த விகடனிலும் தற்போது குமுதத்திலும் வெளிவரும் 'ஞானியின் ஓ பக்கங்கள்' எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்கியதும் முதலில் அதைத்தான் படிப்பேன்.
ஓ பக்கங்களை படிப்பதன் மூலம் நமக்கு தெரியாத பல விசங்களை தெரிந்து கொள்ள முடியும். மக்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் கோலம் திரைப்பட இயக்கத்தை தொடங்கியுள்ள ஞாநிக்கு என்னுடைய பாராட்டுகள்.. வாழ்த்துக்கள்.
இன்று திரைப்பட சூழல் சரியில்லை. அதனால்தான் நான் விலகி இருக்கிறேன். சினிமா மீது எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், தரமான சினிமாவை எல்லோராலும் தர முடியாது.
கோலம் திரைப்பட இயக்கத்தின் படங்கள் வணிக சினிமாவின் தொழிற்நுட்ப தரத்திற்கு நிகரானதாக இருக்கவேண்டும். எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். இந்த முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குனர் பாலசந்தர் கோலம் திரைப்பட இயக்கத்திற்கு காசோலை வழங்கினார். எவ்வளவு என்பது கமுக்கமானது. நிறைய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கோலம் திரைப்பட இயக்க வெற்றிக்கு வாழ்த்துவோம். |