ஜெயமோகன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய அமைப்பின் ஒன்பதாவது சந்திப்பு 14.2.10. அன்று நடைபெற்றது. பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில் 'இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வாகவே கேணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு எதைப்பற்றியும் விவாதிக்கலாம். சபை நாகரீகத்திற்கு உட்பட்டு மனித நாகரீகத்தை மீறாமலும் கருத்து ஒற்றுமை, வேற்றுமை குறித்து திறந்த மனதோடு விவாதிக்கலாம். இந்த மாதம் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஜெயமோகன் கலந்து கொள்கிறார். தமிழின் முக்கியமான படைப்பாளி, பல துறைகள் பற்றியும் கருத்து செல்பவர். இணையத்தை சரியாக பயன்படுத்துபவர். இப்போது அவர் ''நம்மால் ஏன் விவாதிக்க முடியவில்லை'' என்ற தலைப்பில் உரையாற்றுவார். பின்னர் அவரோடு விவாதிக்கலாம் எனக் கூறி வரவேற்புரையை நிறைவு செய்தார்..
ஜெயமோகன்
சுமார் இருபது வருடங்களாக தமிழ் இலக்கிய சூழலில் நான் சொல்லாத (அ) எழுதாத பல கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறேன். இது நிழல் எதிரியோடு சண்டையிடுவது போல் உள்ளது. சலிப்பாகவும் உள்ளது.
அண்மையில் இளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து எழுதினேன். உடனே பலர் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் இருவரும் நண்பர்கள்தானே....ஏன் இப்படி?’யென்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நண்பர் என்பதனால் எதிர்க் கருத்து இருக்ககூடாதா என்ன? இவர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்? மலையாள இலக்கிய உலகம் இப்படி இல்லை. மலையாள கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதைகள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தபோது கூட அவர் என்மீது கோபம் கொள்ளவில்லை. நட்பை துண்டித்துக் கொள்ளவில்லை.
எழுபதுகளில் வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றோர் தனிமனித விமர்சனம் செய்து கொண்டதுபோல் இன்றும் இணையத்தில் பலர் அப்படியே செயல்படுகிறார்கள். பலவீனமான குழுக்கள்தான் அதிகமான சத்தத்தை எழுப்புகின்றன.
நான் மதிக்கும் நபர் யதி. அவருடைய குருகுலத்தில் உலகத் தரத்திலான பல விவாதங்களை பார்த்திருக்கிறேன். சிலவற்றில் கலந்து கொண்டு விவாதித்துமிருக்கிறேன். மிகக் கடுமையான விவாதத்தின்போது எதிர் எதிர் ஆளுமைகளின் மிகச் சிறந்த கருத்துக்கள் வெளிப்படுவதையும் கண்டிருக்கிறேன்.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் மிகச்சிறந்தது எதுவோ அவற்றிற்கு மட்டுமே பதிலளிக்கவேண்டும். ஆனால் இங்கு பலர் நான் சொன்ன கருத்துக்களை விட்டுவிட்டு தவறுதலாக பயன்படுத்திய சொற்களை பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர்.
நம் மரபில் நல்ல விவாத மரபு இருந்தது. ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளில் நடைபெற்ற விவாதங்களை தொகுத்து பார்த்தால் மனச்சோர்வுதான் ஏற்படுகிறது. 18ம் நூற்றாண்டில் அச்சுத்துறை வளர்ச்சி பெற்றதும் தோன்றியவை பெரும்பாலும் ஆபாச இலக்கியம் கண்டன இலக்கியம் ஆகியவைகள்தான்.
சைவம் - வைணவம், அருட்பா - மருட்பா, புதுமைப்பித்தன் - கல்கி, வெங்கட் சுவாமிநாதன் -பிரமிள் என வரலாறு முடக்கவும் விமர்சனம் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல்களே நடந்துள்ளது.
உதாரணமாக 1972 ஆண்டு யாத்ராவில் வெங்கட் சுவாமிநாதன் ஹிட்லர் பற்றி எழுதும்போது ஹிட்லர் உன்னதமான இசையை ரசித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் உன்னதமான இசை மனித மனதை மேம்படுத்த வல்லனவே. ஹிட்லர் உன்னதான இசை ரசித்திருந்தால் இவ்வளவு கொடுமைகளை செய்திருக்க முடியாது. கொடுமைகள் செய்தது உண்மையானால் உன்னதமான இசை ரசித்திருக்க முடியாது. இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருந்திருக்க முடியும் என சிறப்பான முறையில் விவாதத்தை தொடங்குகிறார்.
அதற்கு எதிர்வினையாக இலங்கையிலிருந்து நிர்மலா நித்தியநாதன் உயர்கலைகள் மட்டும் மனித மனங்களை மேம்பட வைக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். உதாரணமாக செங்கிஸ்தான் நல்ல கலாரசிகனாகவும், மிக கொடுமைக்காரனாகவும் இருந்துள்ளதை நினைவு கூருகிறார். இதற்கு எதிர்வினையாற்றிய வெங்கட் சாமிநாதன் விசயத்திற்கு அப்பாற்பட்ட தனிமனித விசயங்களை பேசி விவாதத்தை வேறு திசை மாற்றிவிட்டார்.
12 - 16 இந்த நான்கு நூற்றாண்டுகளில் உன்னதமான இசை செழித்து வளர்ந்த மண் பரப்பில்தான் மிக கொடுமையான சாதிய அடிமை முறையும் இருந்தது என்பதை நினைவு கூர்ந்து பார்க்கலாம்.
விவாதம் என்பது தர்க்க பூர்வமாக இருக்க வேண்டும். இங்கு பெரும்பாலும் விவாதிக்க வேண்டிய விசயங்களை விட்டுவிட்டு, தேவையற்ற விசயங்கள் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். உருப்படியாக விவாதிக்கும் சூழலில் தான் நல்ல இலக்கியம் உருவாகும்.
நம் குடும்ப அமைப்பே விவாதத்திற்கு எதிராக உள்ளது. நண்பர் பிரேமுடன் விவாதிக்கும் போது நான் வேறுபல தளங்களுக்கு செல்கிறேன். அதுபோன்ற விவாதங்களையே நான் விரும்புகிறேன்.
என்னை விமர்சனம் செய்வதாக கூறிக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 150 மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவைகள் தனி மனித குரோதம் சார்ந்தே உள்ளது.
அண்மையில் காந்தி பற்றி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாக பெரியார் பற்றியும், வைக்கம் போராட்டம் பற்றியும் எழுதினேன். அவற்றில் என் தரப்பு 1. பெரியார் வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்து வைக்கவில்லை. (பெரியார் செல்வதற்கு முன்பே போராட்டம் தொடங்கிவிட்டது) 2. பெரியார் வைக்கம் போராட்டத்தை முடித்து வைக்கவுமில்லை. (பெரியார் சென்று வந்த பிறகும் வைக்கம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது) 3. பெரியாரும் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். என்பது மட்டுமே உண்மையானது. ஆனால் நம் பள்ளி பாடத்தில் பெரியார் வைக்கம் போராட்டத்தைத் துவங்கி, அதில் வெற்றி பெற்றார் என்பதாக திரித்து பதிவாகியிருக்கிறது. இவை எனக்கு உடன்பாடு இல்லாதவை. ஏனெனில் வைக்கம் போராட்டம் சுமார் 400 கிராம மக்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம். கேரள சமூக சீர்திருத்தவாதியான நாராயண குரு இதற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டார். இதையே என் கட்டுரையிலும் விரிவாக எழுதியிருந்தேன். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழச்சி நான் உருவாக்கிய தருக்கங்களை விடுத்து, நான் எழுதாததை எழுதியதாக கூறி பதில் எழுதினார். இதற்கு எவ்வாறு நான் பதில் சொல்லுவது?
மலையாளிகள் நவீன இலக்கியத்தை எவ்வாறு கொண்டாடுகிறார்கள். எந்த அளவு சுதந்திரமாக விவாதிக்கிறார்கள் என இங்கு சுட்டிக்காட்டினால் என்னை மலையாளி என இங்கே திட்டுகிறார்கள். கேரளத்தில் மலையாளத்திற்கு அடிப்படை தமிழ் மொழிதான் என சுட்டிக்காட்டினால் என்னை தமிழன் என அவர்கள் திட்டுகிறார்கள்.
இந்துத்துவாவை எதிர்த்து சுமார் 30,40 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். என்னை எந்த அளவு கோலின்படி இந்துத்துவா ஆதரவாளன் என முத்திரை குத்துகிறார்கள் என்பது புரியவில்லை.
விவசாயம் சார்ந்த வாழ்க்கை சார்ந்து நான் கதைகள் எழுத வாய்ப்பில்லை. எனக்கு அந்த அனுபவம் கிடையாது. தமிழில் கண்மணி குணசேகரன் சு. வேணுகோபாலன் ஆகியோர் விவசாயம் சார்ந்து மிக நுண்மையாக பதிவு செய்கிறார்கள்.
நான் எல்லா நூல்களையும் படிப்பதில்லை. நான் விரும்பும் (அ) மதிக்கும் நபர் சிபாரிசு செய்யும் நூல்களையே வாசிக்கிறேன். என் நேர மேம்பாடு கருதியே இவ்வாறு செயல்படுகிறேன்.
பத்திரிகை செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. நடந்த பல செயல்கள் வெளியிடுவதில்லை. பத்திரிகையில் வெளிவரும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கருத்தை (அ) ஒரு நம்பிக்கையை உருவாக்கக் கூடாது.
திரைத்துறையில் நான் இதுவரை பணியாற்றிய இயக்குனர்கள் என் வாசகர்கள். அதனால் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. ஒருவகையில் எழுத்தாளனாக என்னை அதிக மரியாதையுடன் திரைத்துறையினரே நடத்தியுள்ளனர். காட்சிகளை புரிந்து கொள்ள இளையராஜாவின் இசை பேருதவியாக உள்ளது.
வாசகர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ''ஏன் விவாதிக்க மறுக்கிறோம் என்பதற்கு பதிலாக ஏன் விவாதிக்க துடிக்கிறோம் என சொல்லுமளவுக்கு வாசகர்கள் விவாத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். என பேசியதோடு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.
|