கி. ராஜநாராயணன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய அமைப்பின் ஐந்தாவது நிகழ்வு 11.10.2009 அன்று நடைபெற்றது. பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும வரவேற்று பேசினார். ''இம்மாத சிறப்பு விருந்தினர் கி.ரா. பற்றி கூறுவதற்கு பல செய்திகள் இருந்தாலும் இரண்டு சம்பவங்களை மட்டும் நினைவு கூறுகிறேன். சா கந்தசாமி நடத்திய இலக்கிய சங்கமம் என்ற நிகழ்வில் கி.ரா.வின் கோபல்ல கிராமம் நாவலை விமர்சனம் செய்து பேசியுள்ளேன். அண்மையில் அ. ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றில் கி.ரா.வை பற்றி எழுதும்போது ''இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு வஞ்சிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். அவர்களின் குரலை கி.ரா. தன்னுடைய படைப்பில் பதிவு செய்துள்ளார். இந்த கருத்து எனக்கு மிகவும் உடன்பாடானது. அண்மை காலங்களில் கி.ரா. எழுதுவதுமில்லை. வாசிப்பதுமில்லை. நாள் முழுவதும் இசையை கேட்டு ரசிக்கிறார். இசையோடு வாழ்கிறார். இனி கி.ரா. உங்களோடு தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்வார் என கூறினார்.
கி.ரா.
நாட்டுப்புற கதைகள் என்னை வசீகரம் செய்கிறது. அவற்றிற்கு முன்னால் என்னுடைய படைப்பு பற்றி பேச ஏதுமில்லை. நான் ஏன் நாட்டுப்புற கதைகள் பற்றியே பேசுகிறேன் தெரியுமா? அவை பெரிய சமுத்திரம் போன்றவை. அவற்றிலிருந்து எவ்வளவு மீன்கள் பிடித்தாலும் மேலும் மேலும் கிடைத்துக்கொண்டே இருக்கும் நான் கேட்ட கதைகள், எனக்கு தெரிந்தவர்கள் கேட்ட கதைகள் ஆகிய அனைத்தையும் சேர்த்துதான் தொகுத்துள்ளேன்.
இங்கு நடைபெறும் இக்கூட்டம் ராகுகால கூட்டம் ஏனெனில் ஞாயிறு மாலை சாதகப்படி ராகுகாலம். ராகு போல் கொடுப்பானுமில்லை. கேது போல் கெடுப்பானுமில்லை என சொலவடை உண்டு.
நாட்டுப்புற கதைகளை கதைகளாகதான் பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு நாட்டுப்புற கதையில் ஒரு நாய் தன் பையனுக்கு பெண் பார்க்க போகுது. எதிரே மகாலட்சுமி வரா சயனம் சரியில்லை என திரும்பி விடுகிறது. என்ன காரணமுன்னு கேட்டா லட்சுமி இன்னிக்கு ஒருத்தன்ட இருப்பா நாளைக்கு வேற ஒருத்தன்ட இருப்பா என கூறியது. இரண்டாமுறை பெண் பார்க்க சென்றபோது பராசக்தி எதிரே வரா மறுபடியும் சயனம் சரியில்லை என கூறியது. பராசக்தினா வீரம். வீரம்னா சண்டை மனுச நிம்மதியா இருக்க முடியுமா என காரணம் சொல்லியது. மூணாவதா செல்லும்போது மூதேவி எதிரே வரா அடடா நல்ல சகுனம் என கூறியது. மூதேவின்னா தூக்கம் நல்லா தூங்கரவனால்தான் ஆரோக்கியமா இருக்க முடியும், ஆரோக்கியமான இறுக்கிறவ வாழ்க்கதான் சந்தோசமானது என கூறியது கடவுளையே கேலி பேசக்கூடியது. நாட்டுப்புற கதைகள். கலைஞன் என்பவன் நல்லவை, கெட்டவை இரண்டையும் பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
ஈ.வே.ரா ஒரு முறை மேடையில் பேச தொடங்குகிறார். கரண்ட் கட், பேச்சை நிறுத்தி கரண்ட் வந்தவுன் பேச தொடங்கிறார். மறுபடியும் கரண்ட் கட். இப்படியா ஆறு ஏழு முறை (இது எதிர்க்கட்சிகாரர்களின் சதி வேலை) நடந்தவுடன் பெரியார் தன்னையாரியாமலேயே அட ராமா. என நொந்து கொள்கிறார். இது நான் நேரடியாக கண்ட காட்சி. இது போன்ற நம்பிக்கைகள் நம் ரத்தத்தில் ஊரிபோய் உள்ளன. அவற்றை எளிதில் மாற்றிக் கொள்ளமுடியாது.
வேறொரு நாட்டுப்புற கதையில் அம்மாவும் பையனும் பாசகாரர்கள் பையன் காசிக்கு போக ஆசைபடுகிறான். அம்மாவுக்கு விருப்பமில்லை. பையன் அம்மா பேச்சை அப்படியே கேட்கிறவன்தான். இருப்பினும் இந்த விசயத்தில் பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அம்மா சொன்னாள். போகும்போது நிழலுக்கா தூங்குவதற்கு புளிமரத்தடியில் ஒதுங்கு, வரும்போது வேப்பமரத்தடியில் ஒதுங்கு என கூறுகிறாள். பையன் காசிக்கு நடக்க தொடங்குகிறான். அம்மா சொன்னபடியே புளிமரத்தடியில் ஒதுங்குகிறான். நாட்கள் செல்ல செல்ல உடம்புக்கு முடியாம போகுது. கண்ணல்லாம் எரிச்சலாக இருக்குது. ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் வீடு திரும்புகிறான். இப்போது வேம்பு அடியில் ஒதுங்குகிறான். வீடு நெருங்க நெருங்க அவனுக்கு உடம்புக்கு சரியாகிவிட்டது. வேப்பமரத்திற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை விஞ்ஞானம் பின்னால்தான் கண்டுபிடித்தது.
மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியை பயன்படுத்த கூடாது என நம்மூர் டாக்டர்கள் பல காலம் கூறி கொண்டிருந்தனர். பிறகு ஒரு ரஸ்ய விஞ்ஞாநிதான் கீழாநெல்லிக்கு மஞ்சள் காமாலையை விரட்டும் /தடுக்கும் சக்தி இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார். ஆனால் அதற்கும் பல காலத்திற்கு முன்பே நம்மூர் நாட்டு வைத்தியர்கள் அதை உணர்ந்து / அறிந்து இருந்தனர்.
நாட்டுப்புறகதைகளில் கடவுளுக்கு அதுவும் விநாயகருக்கு பல கதைகள் உண்டு. மேலும் ராஜாக்கள், பிச்சைக்காரர்கள், தேவர்கள், அரக்கர்கள், தாழ்வு மனப்பான்மை உயர்ந்த மனப்பான்மை, பேய், பிசாசுகள், வதந்திகள், அறிவாளிகள் முட்டாள்கள், கணவன் மனைவி, மாமியார், மருமகள், தந்தை மகன், பொறாமை, தயாதி சண்டைகள், வீரம், காதல், பாலியல் கதைகள், நியா தீர்ப்பு வழங்கும் கதைகள் என பல துறைகள் பற்றியும் நாட்டுப்புற கதைகள் உள்ளன.
தாழ்வு மனப்பான்மை உள்ளவனைப் பற்றிய கதை எங்க கரிசல் காட்டில் நெய் கரிசல் என்றொரு வகை உண்டு. மழை பெய்தால் மிகவும் சகதியாகும். அக்காலங்களில் மலம் கழிக்க செல்பவர்கள் இரண்டு கையிலும் சோளதட்டை கட்டை கொண்டு செல்வார்கள். ஒருத்தன் சோளதட்டை கட்டு கிடைக்காம செழிப்பா நின்ன ஆவாரையை மடக்கி அவற்றின் மீது உட்கார்ந்து காலை கடனை கழித்தான். ஆவாரையின் குணம் நாணல்போல் வளைந்தால் நிமிர்ந்து விடும். இவன் காரியம் முடிந்து எழுந்தவுடன் ஆவாரை வேகமாக நிமிர்ந்ததும் இவன் மேல் சேறும், மலமும் பட்டதும் ஆளோட தரத்த கண்டு ஆவாரையும் பீக்கொண்டு அடிக்குது. கவலையோடு சொன்னாம்.
நியா தீர்ப்பு வழங்கும் நாட்டுப்புற கதையன்று, ஒரு ஊர்ல ஒருத்தி 9 பால் மாடுகள்வைச்சு பால்கறந்து வியாபாரம் பார்த்தா, இன்னொருத்தி ஒரு பால் மாட்டை மட்டும் வைச்சுகிட்டு பால் யாவாரம் செய்தா. ஒரு நாள் '9 பால்மாட்டுக்காரி என்னிடம் கடன் வாங்கினா திருப்பி கொடுக்கமட்டகிறா' என ஒரு பால் மாட்டுகாரி புகார் சொன்னா. ஊர்ல எல்லாரும் ஆச்சரியம் 9 பால்மாடு வச்சிருக்கிறவ கடன் வாங்கிருப்பாளா, யாரு சொல்லறத நம்பறது. இதுக்கு ஊருக்கு ஒதுக்கபுறமா இருக்க குயவன் தான் நியா தீர்ப்பு வழங்கணும். சொன்னார்கள். குயவன் பல நியாமான தீர்ப்புகளை சொல்லியிருந்தாலும் இதில் எப்படி தீர்ப்பு சொல்ல போறான் என மக்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இவர்கள் புகார் கொடுக்க சென்றபோது குயவன் சட்டி, பானை, செய்ய மண் மிதித்துக் கொண்டிருந்தான். இவர்கள் புகாரை கேட்ட குயவன் என்னோடு சேர்ந்து கொஞ்ச நேரம் மண் மிதியுங்கள் பிறகு தீர்ப்பு சொல்றேன் சொன்னான். வேலை முடிந்து மண்சேரிலிருந்து வெளியே வந்ததும் எல்லாரும் கால் கழுவ சென்றனர். தண்ணி கொஞ்சமாதான் இருக்கு ஆளுக்கு ஒரு சொம்புகுள்ள கால கழுவுங்கன்னு சொன்னான் மொதல்ல ஒன்பது பால்யாட்டுகாரி காலை கழுவுனா ஒரு சொம்பு தண்ணி பத்தாம இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி கழுவுனா, அடுத்து ஒரு பால்மாட்டு காரி ஏமாற அவ என்னா செஞ்சானா முதல்ல அங்ககெடந்த பன ஓலையாலை காலில் இருந்து சேரை வழித்து எடுத்துபுட்டு பிறகு அர சொம்பு தண்ணியிலேயே கால சுத்தமா கழுவிட்ட இதைபார்த்த குயவன் ஒன்பது பால்மாட்டுகாரி தண்ணியை தாராளமா கையாளுவதால் இவளுக்கு எவ்வளவு வந்தாலும் சிக்கனமா இருக்க தெரியாது. அதனால இவன் கடன் வாங்குனது உண்மை, ஒரு மாட்டுகாரி சொல்றது நிசமனு சொல்லி நியாம தீர்ப்பு வழங்கியதாக கூறுவார்கள்.
லஞ்சம் வாங்குவது பற்றிய நாட்டுப்புற கதையில் ஒரு ராசா மனைவி இறந்தவுடன் இரண்டாம் கல்யாணம் செய்துகிட்டார். இரண்டாவது மனைவியுடன் அவளது தம்பியும் அந்த நாட்டுக்கு வறான். அவன் பலே கில்லாடி, ராசாவை பார்க்க வருகிறவர்களிடம் ராசா வேலையா இருக்கார். பார்க்க முடியாது என சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறான். அக்காவிடம் சொல்லி ராசாவை அரசவைக்கு வராமல் பார்த்து கொள்கிறான். ஒரு நாள் ராசாவின் நண்பரும் மதியூகிமான மந்திரி வருகிறார். அவருக்கு அதே பதிலை சொல்லி திருப்பி அனுப்பிகிறான். பலருக்கும் இதே பதில்தான்.
வியாபாரிகள் இவனை எப்படி மடக்கலாம் என யோசிக்கிறார்கள். ஒரு மனிதனின் குணங்கள் அவன்செய்யும் தொழில் சார்ந்துதான் இருக்கும் வியாபாரிகள் தந்திரசாலிகள். அவனுக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்டுகிறார்கள். இதனை அனைவரும் தொடர்கின்றனர். ராசாவின் தோழனான மந்திரிக்கு இது வேதனை தருகிறது. என்ன செய்யலாம் என யோசிக்கிறார்.
ஆண்டுக்கு ஒரு முறை ராசா வேட்டைக்கு செல்லும் பழக்கமுள்ளவர். அப்போது ராசாவை சந்தித்து நாட்டில் நடக்கும் விவகாரங்களை சொல்கிறார். மந்திரியின் ஆலோசனைப்படி இரண்டாவது மனைவின் தம்பிகாரனை தண்டிக்க அவனை காட்டு கடத்துகிறார். தண்டனைக்கா காட்டுக்கு வந்தவன் அங்குள்ள மரங்களை வெட்டி கடத்த தொடங்குகிறான் இது ராசாவின் பார்வை வந்ததும் அவனை நாட்டுக்கு அழைத்து பணம் புழங்காத துறை என்ன என யோசித்து கடல் அலைகளை எண்ணும் வேலையை அவனுக்கு கொடுக்கிறார்.
கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அவன் என்ன ஆவான் என்பதை கண்டறிய சொல்கிறார் ராசா. அவனை தேடிப் போய் பார்த்தால் அவன் ராசாவைவிட பெரிய பணக்காரனா மாறியிருக்கான். எல்லோருக்கும் ஆச்சரியம். எப்படி இது நடந்ததுனா கடல் அலை எண்ண சென்றவன் கடலுக்குள் யாரும் செல்லகூடாதுன்னா ஏன்னு கேட்டா கடல் அலை எண்ணும் வேலை நடக்குதுனு சொன்னான். மறுபடியும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களை கடலுக்குள் விட்டான். இப்படியாக பணம் சேர்த்து ராசாவைவிட பெரிய பணகாரணாயிட்டான் எல்லா காலத்திலேயும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மையா இருக்கு.
இதுபோல வீட்டுகார கலவாணி, தோட்டகார களவாணி என பல களவாணி கதைகள் உண்டு. இப்போது எல்லோரும் ஹாரிபாட்டர் படம் பார்த்தேன். அதைவிட பலமடங்கு சிறப்பான கதைகள் நம்முடைய நாட்டுப்புற கதைகளில் உள்ளது. உதாரணமா நாட்டுக்கு வெளியே ஒரு பெரிய மலை அதை சுற்றியும் பெரிய காடு. அந்த காட்டில் ஒரு பாட்டி வாழ்ந்து வந்தா. அவ வேலையில்லா காலங்களில் பறவைகளின் முட்டையை பொறுக்கி வந்து சமைத்து சாப்பிடுவான். ஒரு முறை முட்டையை ஒடைத்ததும் அதிலிருந்து ஒரு குட்டி பையன் கட்டை விரல் அளவு வெளிவந்தார். முதலில் ஆச்சரியப்பட்டாலும் பிறகு தனக்கு ஒரு துணை கிடைத்தான் என மகிழ்ந்து பையனை மாடக்குழில் பத்திரப்படுத்தி வைத்தார்.
ஒரு நா அவளுக்கு உடம்பு சரியில்லை. அது வேல காலம். வேல காலத்தில உடம்பு சரியில்லாம போயிட்டுதே என கவபட்டுகிட்டு படுத்து கெடந்தா. பையன் மாடக்குழியிலிருந்து வெளிகுதித்து நா வேலைக்கு போறனு சொன்னான்.அவளுக்கு மகிழ்ச்சிதான் ஆனா குட்டி பையன் வெளியே நடமாடும்போது ஆடு,மாடு மிதித்துவிட்டால் என்னாவது என யோசனையோடு இருக்கும்போதே குட்டி பையன் வெளி சென்று விட்டான்.
ஆட்கள் வேலை செய்சுகிட்டு இருந்தாங்க. மிராசுதார் வரப்பில் நின்று கொண்டு இருந்தார். எனக்கு வேல கொடுங்க அப்படினு குட்டி பையன் கேட்டான். மிராசுதார் சுற்றும் முற்றும் பார்த்தார். குரல் கேட்குது ஆள காணுமே பார்த்தார். குட்டி பையன பார்த்ததும் அவர் சிரிசுக்கிட்டே நீ என்ன வேல செய்யவனு எளக்காரம கேட்டார். நான் நாலாலு வேலை செய்வேன். எனக்கு என் மூக்கு துணை நிறையும் அளவுக்கு கூலி கொடுத்தபோதும்னான். மிராசுதாருக்கு மகிழ்ச்சி மூக்கு துளைக்கு ஒரு நெல்போதுமே நாலு ஆள் வேலை மிச்சமேனு சரி வேல செய்யனு சொல்லிட்டார்.
பையன் சொன்னமாறியே வேல செஞ்சுட்டான் அவனுக்கு முதல்ல கூலி கொடுக்க சொன்னார். மத்தவங்களுக்கு மொதல்ல கொடுங்க நா கடசியா வாங்கிறேனு குட்டி பையன் சொன்னாள். கடைசியாக குட்டி பையனுக்கு கூலி கொடுக்கும்போது மிராசுதார் மலைத்துவிட்டார். ஒரு நெல்மணியில் நிறையும் என நினைத்த மூக்கு துணை நிறைய பல மூட்டை நெல் தேவைபட்டது. கூலியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போய் பாட்டியை ஒரு ஓரமாக நகர சொல்லிவிட்டு மூக்கை சிந்தினால் வீடு முழுவதும் நெல்நிறைந்துவிட்டது. பாட்டிக்கு ஒரு வருசத்துக்கு தேவையானவை ஒரேநாளில் கிடைத்துவிட்டது.
பாட்டி மிகவும் மகிழ்ந்து குட்டி பையனை பாராட்டி பேசினாள். வெறும் பாராட்டுதானா பேரனுக்கு கல்யாணம் செய்துவை என குட்டி பையன் சொன்னான். எனக்கும் ஆசதான் ஆனா யாரு பொண்ணு தருவா என மயங்கினார். குட்டி பையன் சொன்னான் இந்தநாட்டு ராசாவிடம் பொண்ணு இருக்கு நான் போயி நேரா கேட்டுவிட்டு வாரேனு புறப்பட்டான். போர வழியிலே எறுபுகள் அவனை மறித்துக் கொண்டு எங்க போறாது கேட்டது. குட்டி பையன் விபரத்தை சொன்னான். நாங்களும் வறோம்னு சொல்லிச்சு. சரினு எறும்புகளை ஒரு காதுக்குள் ஏற்றிக் கொண்டான். இன்னும் கொஞ்ச தூரம் சென்றவுடன் நரிக்கூட்டம் குறிக்கிட்டு எங்க போற நாங்களும் வரட்டுமா என கேட்டது. அவற்றையும் மற்றொரு காதுக்குள் இருந்த எறும்புகளை இறக்கி விட்டான். எறும்புள் யானையை சூழ்ந்து அதன் காதுக்குள் சென்றதும் யானை நிலை தடுமாறியது. இதை கண்டு பயந்தாலும் ராசாவுக்கு கோபம் தீரவில்லை. படை வீரர்களை ஏவி இவனை அழிக்க சொன்னார். உடனே இவன் தன் மூக்குக்குள் சேர்த்து வைத்திருந்த ஏரி தண்ணியை சிந்திவிட்டான். அரண்மனை முழுவதும் தண்ணி, ஆற்று வெள்ளம் போல் அரண்மனை தண்ணிரால் நிறைந்தது. அனைவரும் தாங்கள் தப்பித்தால் போதும் என நினைத்தனர். இப்போது குட்டி பையன் ராசாவையும் அவர் குடும்பத்தையும காப்பாற்றினான். இவனுடைய திறமைகளை பார்த்த ராசா தன் பொண்ணை இவனுக்கு கட்டி கொடுத்தார். தாலிக் கட்டி மாலை மாத்தியவுடன் குட்டி பையன் அழகான வாலிபனா மாற்றம் கொண்டான். எல்லோருக்கும் ஆச்சரியம். முன் காலத்தில் பெற்ற சாபம் இன்றோடு முடிந்தது இனி பிரச்சினையில்லை என கூறினான்.
இவன் கதய கேட்ட ராசா அவனை ராசகுமாரனாக இந்த நாட்டை ஆள சொன்னார். ஆனால் அவன் என் பாட்டி காட்டில் தனியாக இருக்கிறாள் நான் அவளுக்கு துணையாக அங்கே வாழ போகிறேன் என சொல்லிட்டு தன் புது மனைவியோடு காட்டுக்கு புறப்பட்டான்.
இந்த நாட்டுப்புற கதையில் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. இதுபோல இன்னும் பல கதைகள் உள்ளன. நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப நாட்டுப்புற கதைகளும் தோன்றிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இங்கிலீஸ்காரன் நம்மை ஆண்டபோது அவனுடைய நிர்வாகத்தை கேலி பண்ணி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார்கள். அதாவது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒருவன் கேள்வி கேட்டான். நெல் செடியில் காய்கிறதா? மரத்தில் காய்க்கிறதா என்பதுதான் அவனது சந்தேகம். இங்கிலாந்து பாராளுமன்றம் இந்திய கவர்னிடம் அதற்கான விடை கண்டுபிடிக்க சொல்லி உத்தரவு போடுகிறது. கவர்னர் அந்த பணியை மாவட்ட நிர்வாகிக்கு அனுப்புகிறார். மாவட்ட நிர்வாகி அதை கிராம மணியகாரனிடம் அனுப்பி வைக்கிறார். மணியகாரனுக்கு பதில் தெரிந்தாலும் எதுக்கும் தலையாரிடம் கேட்டு வைப்போம் என நினைத்து தலையாரியை கூட்டிட்டு நெல் எதில் விளைகிறது பார்த்துவா என அனுப்புகிறார். குடிபோதையில் இருந்த தலையாறி, ஊரெல்லாம் சுற்றி கடைசியில் ஒரு பனைமரத்தில் முட்டிக்கொண்டான். உடனே அவன் மணியகாரனிடம் சென்று நெல் பனை மரத்தில் விளைகிறதுனு சொன்னான். மணியகாரர் அந்த பதிலால் திருப்தி அடைந்து அதை அப்படியே தன் மேலதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அந்த பதில் மறுபடியும் அந்த அதிகார அடுக்கு வழியாக இங்கிலாந்தை அடைந்தது என கூறுவார்கள்.
பேய் கதைகளை கேட்டு பயந்தவர்கள் டார்ச்லைட் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னால் வெளிச்சம் வந்த பிறகு யாரும் பயப்படுவதில்லை, பெரியவர்களான பின்பும் உங்களுக்கு இருட்டை கண்டால் பயமாக இருந்தால் உங்களுக்கு ஏதோ கோளாறு என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புறவியல் என்ற தனி துறையே உள்ளது. இங்கு அந்த மாதிரி இல்லை. முதன்முறையாக புதுச்சேரியில் கி.வேங்கிடசுப்ரமணியம் துணை வேந்தராக இருந்தபோது நாட்டுப்புவியல் துறையை உருவாக்கி என்னை அங்கு கொண்டு சென்றார்.
இறுதியாக பாஸ்கர் சக்தி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|