மகேந்திரன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய அமைப்பின் நான்காவது சந்திப்பு 13.09.09 அன்று நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்று பேசினார். இம்மாத சிறப்பு விருந்தினர் ‘’சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருபவரும், தமிழில் அதிக நாவல்களை திரைப்படமாக எடுத்துவருபவருமான இயக்குனர் மகேந்திரனுக்கு பெரும்பாலனவர்கள் அறியாத வேறு இருமுகங்கள் உண்டு. ஒன்று சிறந்த இலக்கிய வாசகர். மற்றொன்று பத்திரிகையாளர். ஆரம்ப காலங்களில் ‘’துக்ளக்’’ இதழில் பணியாற்றியுள்ளார். இன்று நம்முடன் ‘’நாவல்களும் திரைப்படங்களும்’’ என்ற தலைப்பில் உரையாற்றுபவார்’’ என கூறினார்.
‘’ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இவ்வளவு பேரா’’ என்ற வியப்புடன் இயக்குனர் மகேந்திரன் தன் உரையை ஆரம்பித்தார். மேலும், இந்த மாதிரியான சூழலில் நான் உங்களுக்கு அறிவுரை வழங்கப்போவதில்லை. எனக்கு நானே பேசிக்கொள்ள போகிறேன். நான் எப்போது வாசிக்க தொடங்கினேன், வாசிப்பின்மீது எனக்கு ஏன் விருப்பம் என பின்னாட்களில் அதிகம் யோசித்து பார்த்திருக்கிறேன். குறை பிரசவமாக ஏழாவது மாதத்தில் பிறந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்த சாரா டாக்டரை தினமும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். முதலில் பிழைக்காது என்றவர்கள் நான் வளர்ந்து பள்ளிக்கு செல்லும்போது இது மற்ற குழந்தைகள் போல் இருக்காது என கூறியதை என் காதுபடவே கேட்டிருக்கிறேன். அப்போது என்னுள் வைராக்கியம் ஏற்பட்டு இருக்கலாம். நான் தனித்தன்மை வாய்ந்தவனாக காட்டிக்கொள்ள வாசிப்பை தேர்ந்து எடுத்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
எல்லோரும் மைதானத்திற்கு விளையாட செல்லும்போது, நான் மட்டும் நூலகத்தை நோக்கி சென்றேன். நிறைய வாசித்தேன். தமிழ், ஆங்கிலம், என வேறுபாடு இல்லாமல் புரிந்தாலும் புரியாவிட்டாலும் வாசிக்க வேண்டும் என தீஜீரமாக பல நூல்களை வாசித்தேன்.
பள்ளி பருவத்தில் அணில், டமாரம், ஜிங்கிலி போன்ற சிறுவர் இதழ்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தன. அந்த வயதிலேயே பாட்டாளி, லட்டு என்று கையெழுத்து பத்திரிகைகளை நடத்தினேன். நான் பள்ளி இறுதி தேர்வில் எப்படி வெற்றி பெற்றேன் என்பது இன்று வரை விளங்கவில்லை. ஒரு மாணவனின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தோ அல்லது பாவப்பட்டோ நான் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண் அளித்த அந்த முகம் தெரியாத கணக்கு ஆசிரியரை இன்றும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
கல்லூரிக்கு வரும்போது வட என் வாசிப்பு வேகம் குறையவில்லை. அப்போது எல்லாவற்றையும் வாசிக்காமல் தேர்ந்தெடுத்து வாசிக்க கற்றுக்கொண்டுவிட்டேன். இந்த அனுபவம் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். அந்த காலம் முதல் இன்று வரை எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் புதுமைபித்தன், தி, ஜானகிராமன், கி, ராஜநாராயணன் இந்த 3 பேர் மட்டுமே. அதற்காக மற்ற எழுத்தாளர்களின் எழுத்து எனக்கு பிடிக்காது என்ற அர்த்தமில்லை. அனைவரையும் வாசிக்கிறேன். நல்ல புத்தகத்தை படிப்பது என்பது அற்புதமான தியானமாகும்.
நான் திரைதுறைக்கு வந்தது ஆசைப்பட்டோ, விருப்பப்பட்டோ அல்ல. அது ஒரு விபத்து. இங்கு நான் இழுத்து வரப்பட்டேன்.
ஒரு ஆணுக்கு பெண்ணுக்கு விருப்பமில்லாத பெண்ணை ஆணை கட்டாய திருமணம் செய்து வைப்பது போலதான் நிகழ்ந்தது. அந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லாதுபோனாலும் அந்த பெண்ணுக்கு ஏற்ற கணவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதுபோலத்தான் எந்த சினிமாவை எதிர்த்து வந்தேனோ அதே சினிமா உருவாக நானும் ஒரு காரணமாக இருந்தேன். நான் விரும்பாது செய்த வேலைகள் மற்றவர்களுக்கு பிடித்து போயிற்று, தமிழில் படுதோல்வி அடைந்த படத்தை எடுத்துக்கொண்டு இந்த படம் தோற்ற என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து சீர்படுத்தி அதை இந்தியல் மிகப்பெரிய வெற்றிப் படமாக hற்றிக் காட்டியவர் தேவர். வெற்றி கற்றுதராது. தோல்வி கற்றுத்தரும் பாடம் மகத்தானது.
திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியபோது தமிழ் சினிமாவில் எதையெல்லாம் குறை என கருதினேனோ அதையெல்லாம் அகற்றிவிட்டு ஒரு திரைப்படம் செய்தபோது அது அனைவருக்கும் பிடித்து போயிற்று. நம் பயணத்தின் நோக்கம் உயர்வானதாக இருந்தால் நாம் சிறப்பான இடத்தை அடையலாம். அண்மை காலங்களில்தான் உலக திரைப்படங்களை பார்க்க தொடங்கினேன். இதை அன்றே செய்திருந்தால் இன்னும் சிறப்பான படங்களை நான் எடுத்திருக்கக் கூடும். பிற மொழி இலக்கியங்களையும் இன்று ஆவலுடன் வாசிக்கிறேன். தாய்க்கு வயசாகலாம், தாய்மைக்கு வயசாகாது. அதுபோலதான் என் சினிமாவும் என பேசினார்.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இறுதியாக அனைவருக்கும் நன்றி கூறியதோடு அடுத்த நிகழ்வு இ.ரா. வருகிறார் என்ற தகவலுடன் கூட்டத்தை நிறைவு செய்தார்.
|