பாலுமகேந்திரா பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய வட்டத்தின் முன்றாவது நிகழ்வு 9.8.09 அன்று நடைபெற்றது. பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் அவர் பேசுகையில் அதிகமான இலக்கிய ஆர்வலர்கள் வந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் கூட்டம் தொடர்ந்து இங்கு தான் நடைபெறும். எக்காரணத்தை முன்னிட்டும் அரங்குக்கு மாற்றப்படாது.
இந்த மாதம் இலக்கிய நிகழ்வுக்கு வந்திருக்கும் இயக்குனர் பாலுமகேந்திரா முதலில் எழுத்தாளராகத் தான் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார். பிறகு திரைப்பட இயக்குனராக மாறியதால் எழுத முடியால் போய்விட்டது. அவர் ஒரு தீவிர வாசகர். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையில் தனி தன்மையுடன் பல சாதனைகள் புரிந்தவர். இலக்கியமும் சினிமாவும் என்ற தலைப்பில் பேசுவார் என்று பேசினார்.
இயக்குனர் பாலுமகேந்திரா தன் உரையில் இந்த சூழல் மிகவும் ரம்மியமானது. எங்கள் ஊரில் கேணி என்றால் சிறு குளம் போல இருக்கும். இக்குளத்தை கிணறு என்று தான் சொல்ல வேண்டும். இந்தக் கிணற்றடிக் கூட்டம் என்னுள் பல நெகிழ்வான நினைவுகளை ஏற்படுத்திகிறது. முதலில் நான் ஒரு இலக்கிய உபாசகன். சினிமா என் இரண்டாவது காதலி. முதலில் எழுதினேன். பிறகு சினிமா பணிகள் அதிகமாகி விட்டதால் எழுதுவது குறைந்து வாசிப்பது அதிகமாகி விட்டது. எனக்கு கொடுக்கப்ட்டுள்ள தலைப்பு மிகவும் விருப்பமானது. என்னிடம் உதவி இயக்குனராக சேர வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் கடைசியாக எழுதிய சிறுகதை எது? கடைசியாக வாசித்த நாவல் யாருடையது? என்று தான் கேட்பேன். என்னுடைய திரைப்பட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் ஒரு சிறுகதை கட்டயமாக படிக்கவேண்டும். அதுப்பற்றி சிறு குறிப்பும் எழுத வேண்டும்.
நான் ஒரு தீவிரமான வாசகன் என்பதால் பல சிறுகதைகளை படிக்கும் போதே இவற்றை படமாக்கினால் நன்றாக இருக்கும் என மனதுக்குள் தோன்றும். அந்த எண்ணம் நிறைவேறும் வகையில் 1999 - 2000 ஆண்டுகளில் சன் தொலைக்காட்சிக்காக தொடர் இயக்கும் வாய்ப்பு அமைந்தபோது அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். அதற்காக வேண்டி நான் படித்த சிறுகதைகளை மறு வாசிப்புக்கு உட்படுத்தினேன். மறு வாசிப்பானது பேரானந்தத்தையும், அதிர்ச்சியையும் எனக்குள் ஏற்படுத்தியது.
நான் சாதாரணமானது என நினைத்தப் பல கதைகள் மிக உயர்வானதாகவும், உயர்வான கதைகள் என நினைந்திருந்த படைப்புகள் சாதாரணமாகவும் இருந்தது. ஒரு கதையை தேர்ந்தெடுக்க சுமார் 75 சிறுகதைகளைப் படித்தேன்.
எழுத்தை திரைக்குள் கொண்டு வர பல மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த புதிர் தன்மையை எழுத்தாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எழுத்துக்கும், திரைக்குமான சாத்தியங்களையும், சாத்தியமின்மைகளையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எல்லா வகையான படைப்புகளுக்கும் இரண்டு விஷயங்கள் ஊடாடி இருக்கும். ஒன்று உருவம் மற்றொன்று உள்ளடக்கம். எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன். எழுத்தாளனை மதிப்பிட உருவமே முதன்மையானது. உள்ளக்கடத்தை வைத்து எழுத்தாளனின் சார்புகளை புரிந்துக் கொள்ளலாம். ஆனால், எழுத்தை திரைக்குக் கொண்டு வரும் போது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு வர முடியும். அதன் உருவாத்தை அல்ல. உருவம் என்பது எழுத்தாளனின் மொழி திறன் சார்ந்தது. அது அவனுடைய தனித் தன்மை. அதை திரைக்குள் கொண்டு வர முடியாது.
எந்த ஒரு விஷயம் எழுத்தாளனை எழுத துண்டியதோ அந்த விஷயம் தான் என்னை திரைப்படம் எடுக்கத் துண்டியது. மனித உணர்வுகளை பரிமாறிக் கொள்ள மொழி ஒரளவுக்கு மேல் பயன்படாது. மொழி பற்றாக்குறையானது. திரைப்படத்திற்கான இயங்குதளம் வேறு. அதன் சாத்தியமும், சாத்தியமின்மையும் பலவாக உள்ளது. திரைக்கென்று ஒர் இலக்கணம் உண்டு. எழுத்தில் உள்ளதை விடுத்து இன்னும் ஆழமானதாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். ஒரு மொழியில் எழுதப்பட்டதை மற்றொரு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யவது போல, ஒருவர் வைத்த புள்ளிகளில் மற்றொருவர் கோலமிடுவது போல எழுத்து மொழியில் இருக்கும் படைப்பை திரை மொழிக்கு மாற்ற விரும்புகிறேன். இதில் இயக்குனர் எழுத்தாளனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதில்லை. படைப்பின் தேவை கருதி சேர்ப்பதும், நீக்குவதும் இயக்குனரின் உரிமை சார்ந்தது என பேசினார்.
இறுதியாக எழுத்தாளர் மாலனின் 'தப்பு கணக்கு' என்ற சிறுகதை முழுவதும் வாசித்து பிறகு எப்படி அதை திரை மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை செயல் முறை விளக்கமாக கூறினார். தப்பு கணக்கு குறும்படமும் திரையிடப்பட்து. கலந்துரையாடலின் போது தான் இயக்கியதில் பிடித்தப் படங்கள் வீடு, சந்தியா ராகம். பிடிக்காதது நீங்கள் கேட்டவை எனவும் குறிப்பிட்டார் . வீடு, சந்தியா ராகம் பாடங்களின் நெகட்டிவ் அழிந்து விட்டதையும் வருத்தத்துடன் கூறினார்.
இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|