கேணி இலக்கிய அமைப்பின் 17வது கூட்டம் 12,12,2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் வண்ணதாசன் கலந்து கொண்டார், பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்று. சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்,
ஞாநி :
நான் எழுபதுகளில் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன், அன்றைய தலைமுறைக்கு தீபம். கண்ணதாசன். கணையாழி போன்ற சிறுபத்திரிகைகள் வாசிக்க கிடைத்தன, நான் தீபம் இதழில் வண்ணதாசனை வாசித்தேன், அன்று வாசித்ததில் "ஞாபகம்" என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,
தமிழில் எழுத்துக்கு ஏற்ற புத்தக வடிவம் வண்ணதாசனுக்கு தான் முதலில் அமைந்தது, இன்றும்கூட எழுத்தின் தன்மைக்கு ஏற்ற புத்தக வடிவங்கள் சரியாக அமைவதில்லை, வண்ணதாசனின் எழுத்து இசைமயமானது, சிவக்குமார் சர்மாவின் சாத்தூரில் இருந்து அலை அலையாக பரவும் இசையை போன்றது, என்றும் மனதை மீட்டக்கூடியது, வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதுகிறார், அண்மைக்காலங்களில் கட்டுரையும் எழுதுகிறார், அவருடைய மேடைப்பேச்சு மிகவும் அபூர்வமானது, இன்று அவர் தன் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார், பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம், சந்தியா பதிபகத்தால் வெளியிடப்படும் அவருடைய புதிய நூல்களை இன்று அவரே வெளியிடுவார்,
வண்ணதாசன் :
நான் இங்கு வரும்போது ஞாநியின் வீட்டை தேடிக்கொண்டிருந்தேன், அப்போது எனக்கு வழிகாட்டிய (எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டுதில்லை) வாசகர் குமார் என் நூலை பெற்றுக்கொண்டால் சரியாக இருக்குமென நினைக்கிறேன்,
(மற்ற இரண்டு நூல்களை நடிகர் பாரதிமணி. எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர்)
எனக்கு இப்படியான ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது, எனக்கு அதிகம் பேசவராது, பேசமுடியாததினால் எழுதுகிறேன், எழுதுகிறவன் எழுதினால் போதும் என நினைக்கிறேன், கேணிக்கு அருகில் கூட்டம் என்றதும் முதலில் வந்தவுடன் கேணியைதான் பார்த்தேன், இன்று கிராமங்களில் கூட கிணறு காணாமல் போய்விட்டது, வாய்க்கால்கள் எங்கும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது, தாமிரபரணி ஆற்றின் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது, தாமிரபரணி ஆற்றங்கரையில் நான் கண்ட தாவரங்களை. விலங்குகளை. பறவைகளை இன்று காணமுடிவதில்லை, தாமிரபரணி கரையில் நண்பர்களுடன் விளையாடியது இன்றும் நினைவில் உள்ளது.
கிணற்றுக்கும் எனக்குமான உறவு மிகவும் ஆத்மார்த்தமானது, நான் வேலையில்லாமல் அண்ணன் வீட்டில் இருந்த நாட்களில் அதிக நேரம் கிணற்றடியில்தான் இருப்பேன், அங்கு பலவிதமான மாடுகளை பார்த்துள்ளேன், அவைகளை படங்களாக வரைந்துள்ளேன், இன்று சிசுபாலன் வரையும் பலவகை மாடு ஓவியங்களை போல அவை இருக்கும், இன்று என் காதுகளில் மாடுகளின் மணியோசை கேட்கிறது, கிணற்றில் நீர் இறைக்கும்போது உருளும் உருளையின் ஓசையும் கேட்கிறது, எழுத்தாளனுக்கு ஞாபகங்கள் பெரும் சம்பத்து, எழுத்தாளனுக்கு அவஸ்தை தரக்கூடியதும் ஞாபகங்கள்தான்,
நீங்கள் வருவதற்கு முன்பு இங்கு பத்தமடைபாய் விரிக்கப்பட்டிருந்தது, யாரும் உட்கார்ந்து இருக்கவில்லை, கண்கொள்ளா காட்சி அது, நாங்கள் பத்தமடைபாயில் உருண்டு புரண்டவர்கள், எனக்கு கோரைப்பாயின் வாசம் பிடிக்கும்,
பேச்சுக்கும். எழுத்துக்கும் எவ்வளவு தூரம், அல்லது நெருக்கம் 1962 ஏப்ரல் வெயில் காலம் முதல் 2010 டிசம்பர் மழைக்காலம் வரை எவ்வளவு தூரம், என் முதல் கதையான புதுமைக்கும் அண்மையில் வெளிவந்த துரு கதைக்கும் எவ்வளவு தூரம், என்னை தேடிவந்த என் முதல் வாசகன் நம்பிராஜனுக்கும் இன்றைக்கு புதியதாக வரும் வாசகனுக்கும் எவ்வளவு தூரம், என் முதல் நூலை வெளியிட்ட அ*க் பரந்தாமனுக்கும் அண்மையில் என் நூலை வெளியிட்ட சந்தியா நடராசனுக்கும் எவ்வளவு தூரம். நெருக்கம் என்பது தோளை தொட்டுக்கொண்டு இருப்பதல்ல, என் கதைகள் மூலம் தொடுகிறேன், பல முறை தொட்டுயிருக்கிறேன்,
வாழ்க்கை எனக்கு எதை தந்ததோ அதை உங்களுக்கு தருகிறேன், மழைக்காலம் என்னுள் துக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் அதே மழைதான் என்னுள் சந்தோஷத்தையும் உண்டாக்குகிறது,
அண்மையில் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திற்கு சென்று இருந்தேன், ஆசிரமத்தில் நுழைந்ததும் மயில் கூவும் ஓசை கேட்டது, மயில் எங்கோ தூரத்தில் இருப்பதாக சொன்னார்கள், நான் பார்க்கவில்லை, மயில் ஓசையை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன், அது தியான நேரம், ஆராதனை மண்டபத்தில் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள், எல்லோருடைய அமைதியையும் என்னுடைய அமைதியாக உணர்கிறேன், ஒரு திபெத்திய மனிதன் கையில் நாகலிங்க பூவை வைத்துக்கொண்டு தியானத்தில் அமர்ந்துள்ளார், நான் அவரை கடக்கும்போது அவர் நாகலிங்கபூவை என்னிடம் கொடுப்பார் என எதிர்பார்த்தேன்ன், அவரை கடக்கும்போது அவர் தரவில்லை, ஆனால் நான் திரும்பும்போது அவர் கையில் பூ இல்லை, அவர் யாருக்காவது கொடுத்திருக்கலாம், யாராவது அவரிடம் கேட்டு பெற்றிருக்கலாம், இல்லை அவர் சன்னல் ஓரத்தில்கூட வைத்திருக்கலாம், அதுவல்ல பிரச்சினை, பூ அவர் கையில் இல்லை, எனக்கு கிடைக்குமெனஎதிர்பார்த்தேன் கிடைக்கவில்லை, பெறுதலும் அடைதலும் தான் என் எழுத்து என நினைக்கிறேன்,
வீட்டில் பல சன்னல்கள் இருந்தபோதிலும் நமக்கு பொருத்தமான வெளிச்சத்தை தரும் சன்னல் என்று ஒன்று இருக்கும், எனக்கு எழுத்து அப்படிப்பட்டதுதான்,
அண்மையில் சென்னை முகப்பேர் பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன், சேறும் சகதியுமான சாலை, அதுகூட ஆசிரமம் போல்தான், ஒரு தாய் சைக்கிளில் மகளை அழைத்துச் செல்கிறாள், குழந்தை சீருடையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தது, தாய் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றாள், வழியில் பன்னீர் பூக்கள் நூற்றுக்கணக்கான. ஆயிரக்கணக்கான பூக்கள் சேறில் விழுந்து கிடக்கின்றன, "எப்பா எவ்வளவு பூ" என அந்த தாய் சொன்னாள், அவள் யாரைப்பார்த்தும் சொல்லவில்லை, இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் என் எழுத்தும்,
எல்லா மனிதர்களும் என்னை பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் பாரத்தை சுமந்து செல்கிறார்கள், அவர்களின் பாரத்தை எனக்கு தெரிந்த மொழியில் எனக்கு தெரிந்த வடிவத்தில் உங்களுக்கு தருகிறேன், நான் தருவதுபோலவே நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.
எழுத்தாளர் வல்லிக்கண்ணனை பார்த்து பிரமித்து இருக்கிறேன், அவர் என் அப்பாவுக்கு எழுதிய கடிதங்களை வாசித்து வாசித்துதான் நான் எழுதவே தொடங்கினேன், அவர் நினைவாக என் அண்ணன் வல்லிதாசன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார், அவருக்கு தெரியாமல் அந்த பெயரை எடுத்துக்கொண்டு வண்ணதாசன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன், கல்யாண்ஜி என்பது எழுத தொடங்கும் முன்பே என் கல்லூரி தோழன் எனக்கு வைத்த பெயர், கதைக்கு ஒரு பெயர் கவிதைக்கு இன்னொரு பெயர் என்பது ஒரு விளையாட்டுக்காகத்தான்,
நான் கதை எழுதபோகிறேனா கவிதை எழுத போகிறேனா என்பதை அந்த நிமிடம்தான் தீர்மானிக்கும், இன்னும் சொல்லப்போனால் முதல் வரி தான் தீர்மானிக்கும், எந்த முன்தீர்மானத்தோடும் எழுதுவதில்லை,
எழுத்தாளன் என்பவன் அதிமனிதனில்லை, அவனும் உங்களை போன்ற மனிதன்தான், அவனுக்கும் சுகதுக்கங்கள் உண்டு, எது நல்ல படைப்போ அது அசலான வாழ்க்கையை கொண்டதாக இருக்கும், தனிமையில் எழுதுவது சுலபம், நடப்பதுபோல்தான் எழுதுவதும் மிக இயல்பானது,
உறவுகளை சொல்லி அழையுங்கள், புழங்க புழங்கத்தான் மொழி கூர்மையடையும், எழுத்தாளன் தோரனைக்காரன், அவன் சிந்தனை கூர்மையடையும்போது எந்த விமர்சனமும் அவனை பாதிப்பதில்லை,
இணையத்தில் வாசிக்கிறேன், அதிகமாக வாசிக்க முடிவதில்லை, இணையத்தில் எழுதுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன், நம் வாழ்க்கையில் இலக்கணம் கிடையாது, வரையறை கோட்பாடும் கிடையாது, ஏன் வரையறுக்க வேண்டும்,
என்னை முதலில் கவர்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான், முப்பத்தைந்துக்கு பிறகுதான் பாரதி. புதுமைப்பித்தனை புரிந்துகொண்டு வாசிக்கத் தொடங்கினேன்,
ஆனந்த விகடனில் எழுதிய அகம்புறம் பல புதிய வாசகர்களை பெற்றுத் தந்தது, புத்தக சந்தையில் என்னுடைய பழைய நூல்களை தேடி வாங்கிச் சென்றார்கள்,
நாஸ்டால்ஜியா என்பது ஞாபகங்கள், ஞாபகங்கள் நிரம்ப உள்ளவர்கள் அதுபற்றி எழுதுகிறார்கள், வரும் தலைமுறைக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று தோன்றுகிறது,
நாவல் எழுதும் அளவுக்கு என் உலகம் பெரியது அல்ல, என் உலகம் சிறியது, நான் வாழ்க்கையில் உருண்டு பிரண்டு எழவில்லை,
படைப்பு யாரையும் அடைப்பதில்லை, எழுத்தாளனையும், வாசகனையும் படைப்பு விடுதலை செய்கிறது, கலை சொல்லிரிக் கொடுத்து வருவதில்லை, அடுத்தவரால் சொல்லிக்கொடுக்கவும் முடியாது,
ஹைக்கூ தத்துவம் சார்ந்தது, ஆனால் இங்கு வடிவம் சார்ந்து மூன்று வரியில் எழுதுவதெல்லாம் ஹைக்கூ என சொல்லிக் கொள்கிறார்கள், பாஷோக்கள் வருத்தப்படுகிறார்கள்,
முதியவர்களை கைப்பிடித்து அவர்களோடு பேசுங்கள், அவர்கள் விரும்பவதெல்லாம் அன்பான தொடுதலைதான்,
மார்க்சியம் முழுமையான தத்துவம், அது இன்னும் உயிர்ப்போடுதான் உள்ளது, அதை மிஞ்சிய தத்துவம் வேறொன்று இதுவரை வரவில்லை, மார்க்சியத்தை கடைபிடிப்பதில், நடைமுறைப்படுத்துவதில்தான் குறைபாடுகள் உள்ளன, மாற்றம் வரும் என நான் முழுமையாக நம்புகிறேன்,
நானும் வண்ணநிலவனும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள், அவன் பார்த்த தெரு வேறு, நான் பார்த்த தெரு வேறு, வாழ்க்கையும் அப்படித்தான் உள்ளது,
என் குடும்பத்திலும் சரி. என் மனைவி குடும்பத்திலும் சரி உறவுகள் அதிகம், அவர்கள் மத்தியில்தான் நான் பலவற்றை கற்றுக் கொள்கிறேன், அவர்கள்தான் என் கதைகளில் வருகிறார்கள்,
நான் சினிமா அதிகம் பார்ப்பதில்லை, ஆனால் சமூகத்தை சீரழிப்பது சினிமா என நம்புகிறேன், எழுத்தாளனை அவன் சொற்களாலேயே அவனை மடக்காதீர்கள், நான் விரும்பாவிட்டாலும் என் வீட்டினுள் சினிமா வருவதை என்னால் தடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
பெரியாரையும் அதிகம் படித்ததில்லை, ரமணரையும் அதிகம் படித்ததில்லை, அவர்களை படிக்காமல் அவர்களைப்பற்றி கருத்து சொல்ல முடியாது,
நகர வாழ்க்கையில் ஞாயிறு மாலையில் இலக்கியம் பற்றி பேசவும். கேட்கவும் இவ்வளவு பேர் கூடியுள்ளது சந்தோஷமாக உள்ளது, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இறுதியாக பத்திரிகையாளர் ஞாநி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:
http://picasaweb.google.com/thamizhstudio/12122010#
|