ஓவியர் மனோகர் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய அமைப்பின் 16வது மாத கூட்டம் 14.11.10 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஓவியர் மனோகர் கலந்து கொண்டார். வழக்கம்போல் பத்திரிகையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஞாநி
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகருக்கென்று Aside என்ற ஆங்கிலப் பத்திரிக்கை வெளிவந்தது. அதில் மனோகர் தேவதாசின் ஓவியங்களை பார்த்து இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ஆங்கில நாவலை வாசித்து பிரமித்தேன். அதை உடனே மொழிபெயர்க்கக் கூட ஆசைப்பட்டேன்.
சென்ற மாதம் ஒரு நாள் ஒரு பள்ளியில் சென்னை நாளை முன்னிட்டு மனோகர் தேவதாஸ் சிறப்புரை ஆற்றினார். அந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். உடலும் மனமும் சோர்ந்து போயிருந்த எனக்கு அவருடைய பேச்சு பெரிய உத்வேகத்தை நம்பிக்கையை தந்தது. அந்த அனுபவத்தை கேணி அன்பர்கள் உணர வேண்டும் என்பதற்காக அவரை இங்கு சிறப்பு விருந்தினராக அமைத்துள்ளோம்.
மனோகர் தேவதாஸ் பன்முக தன்மை கொண்டவர். எழுத்தாளர், ஓவியர், வேதியல் துறையில் பணி என பல ஆளுமைகள் அவரிடம் உண்டு. இவர் வரைந்த ஓவியங்கள் வாழ்த்து அட்டைகளாக வெளிவந்துள்ளன.
கலைப்படைப்புகள் மூலம் இவர் ஈற்றும் வருமானம் அனைத்தையும் சங்கர நேத்ராலயா மற்றும் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொடையாக கொடுத்து விடுகிறார். மற்றபடி அவர் வாழ்வு பற்றி அவரே உங்களிடம் உரையாற்றுவார். பின்னர் நாம் அவருடன் கலந்துரையாடலாம்.
மனோகர் தேவதாஸ்
உலகின் மற்ற நாடுகளைவிட நம் நாட்டில் நல்ல குணம் உள்ளவர்கள் அதிகம். பலர் பல நல்ல காரியங்களை செய்வதினால்தான் நாடு நன்றாக உள்ளது. நல்ல குணம் வாய்ந்த உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு சொந்த ஊர் மதுரை. எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம். சிறு வயதில் விலங்குகளை ஓவியமாக வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். என் பள்ளி பருவத்தில் (1952 ஆம் ஆண்டு என் 15வது வயதில்) சேலை உடுத்திய பெண்ணை ஒவியமாக வரைவதில் ஆர்வம் அதிகம். எனக்கு அக்கா, தங்கை கிடையாது. பெண்கள் எப்படி சேலை கட்டுகிறார்கள் என்பதை பலவாறு யோசித்து அந்த ஓவியத்தை வரைந்தேன். கல்லூரி படிக்கும்போது (19 வயதில்) கட்டடகலை மீது ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் கல்லூரியில் பல பழமையான கட்டிடங்கள் இருந்த அவற்றை ஓவியமாக வரைந்தேன். பேராசிரியர்கள் பாராட்டினார்கள். இளங்கலை (வேதியல்) பட்டப்படிப்பு முடிந்ததும், முதுகலை பட்டப்படிப்பு படித்து ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.
எதிர்பாராத விதமாக எங்கள் அப்பா மரணம் அடைந்து விட்டார். குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல சம்பளம். குடும்ப பாரம் குறைந்ததும் வேலையை விட்டுவிட்டு மறுபடியும் படிக்கப் போகலாம் என திட்டமிட்டேன்.
கம்பனியில் சொன்ன போது இன்னும் 3 மாதத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சி கொடுப்பதாகவும், பயிற்சி முடிந்த பின்பு சம்பளம் கூடுதலாக கிடைக்கும் என்று சொன்னார்கள். அந்த காலத்தில் வெளிநாட்டு பயணம் என்பது ஒரு தகுதியாக கருதப்பட்டது. அதனால் வேலையில் தொடர்ந்தேன். வெளிநாடும் சென்று வந்தேன். எனக்கு சம்பளம் கூடியது. கல்யாண சந்தையில் என் மதிப்பு கூடியது. பலர் எனக்கு பெண் கொடுக்க போட்டி போட்டார்கள்.
என் உறவினர் ஒருவர் அடிக்கடி மகிமா-வைப் பற்றி என்னிடம் பெருமையயக சொல்லிக் கொண்டிருப்பதார். மகிமா படித்தப் பெண். கலையார்வம் மிக்கவள். மிகவும் நல்ல குணம் படைத்தவர். இப்படியாக. அதே மாதிரி மகிமா-விடம் என்னைப் பற்றி உயர்வாக கூறுவார். எனக்கு திருமண ஏற்பாடு தொடங்கிய நிலையில் நானும் மகிமா-வும் சந்தித்தோம். பல விசயங்களை பேசினோம். எங்கள் இருவருக்கும் பிடித்து போயிற்று. பெரியவர்கள் எங்கள் திருமண வேலைகளை தொடங்கிவிட்டார்கள்.
திருமணத்திற்கு இரண்டு மாதம் இருக்கும் நிலையில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். கோயில், சினிமா சென்றோம். போதாதற்கு பல பக்கங்களில் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதினோம். என்னுடைய கடிதங்களில் ஓவியமும் வரைந்து அனுப்புவேன்.
ஒரு முறை ஆங்கில திரைப்படம் பார்க்க சென்றிருந்தோம். அப்படத்தில் பணக்கார வீட்டு குழந்தை ஒரு பொம்மையை கட்டிபிடித்தபடி தூங்குவது போல் ஒரு காட்சி வரும். அப்போது நான் மகிமாவிடம் ‘நீ சின்ன வயசுல இதுமாதிரி தூங்கிறிக்கியா’ எனக் கேட்டேன அதற்கு மகிமா ‘சின்ன வயசுல தூங்கல, ஆனா ரெண்டு மாசத்திற்கு அப்புறம் ஒரு பெரிய பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவேன்’ என சொன்னாள். மகிமாவிற்கு சமயோசிதமும், நகைச்சுவை உணர்வும் அதிகம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எழுதிய கடிதத்தில் பொம்மையுடன் தூங்கும் குழந்தை ஓவியத்தை வரைந்து அனுப்பினேன்.
மற்றொருமுறை ஜப்பானிய திரைப்படம் பார்க்க போனோம். அதில் கதாநாயகியின் உடைப் பற்றியும், அழகுப் பற்றியும் மகிமாவிடம் வியந்து கூறினேன். பிறகு ஒரு நாள் மகிமா வீட்டிற்கு சென்றபோது மகிமா மாடியில் நிலாவை ரசித்து கொண்டிருப்பதாகவும், என்னை மேலே வர சொன்னதாகவும் கூறினார்கள். நான் மாடிக்கு சென்ற போது மகிமா ஜப்பானிய உடையில் ஜப்பானிய முறையில் என்னை வரவேற்று விருந்து உபசரித்தாள். அந்த அழகில் மயங்கி நான் மகிமாவை முத்தமிட்டேன்.
மகிமாவின் மாமா ஒருத்தர் தற்பெருமை பேசுவதில் விருப்பம் உள்ளவர். ஒரு முறை என்னைப் பற்றி கூறும்போது காட்டான் என சொல்லிவிட்டார். இது என் காதுக்கு வந்தபோது எனக்கு அதில் வருத்தம் இல்லை. ஏனெனில் காட்டானிடம் பல நல்ல குணங்கள் உண்டு. இருப்பினும் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பதில் கூற வேண்டும் என நினைத்தேன்.
மகிமாவிற்கு கடிதம் எழுதும்போது ஒரு படம் வரைந்தேன். அதாவது ஜப்பானிய உடையில் அழகான பெண் அவளுடன் காட்டுவாசி தோற்றத்தில் ஓர் ஆண். அதாவது மகிமாவும் அவளது மாமாவும் என்ற அர்த்தத்தில். கடிதம் மாமா கையில் கிடைத்து விட்டது. மகிமாவின் மாமா படத்தை பார்த்ததும் சிரித்து விட்டார். உறவினர்கள் அனைவரும் பார்த்து சிரித்து விட்டனர். அதன் பிறகு எனக்கும் மகிமா மாமாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது.
மகிமா வை சந்தித்தது முதல் என் ஓவியத்திறமை மெருகு ஏறியது. எங்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றோம். அங்கும் என் ஓவியத் திறமை வெளிப்பட்டது. மேற்படிப்பு முடிந்தவுடன் தாயகம் திரும்பினோம்.
கலையை வாழ்க்கையாக கொண்டது போல், பிறருக்கு கொடுப்பதையும் கலையாக கொள்ள வேண்டும் என மகிமா சொல்வாள். பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தாயகம் திரும்பினோம்.
மதுரைக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது எங்களுக்கு பின்னால் வந்த லாரி கார் மீது மோதி பெரும் விபத்து நேரிட்டது. அந்த விபத்தினால் மகிமா பெரும் பாதிப்புக்கு உள்ளானாள். அவளுக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. பல மாதம் படுக்கையில்தான் இருந்தாள். பிறகு வீல் சேரில் நடமாடினாள்.
விபத்து எங்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து மீள கற்றுக் கொண்டோம். இந்த நிலையில் எனக்கு கண்ணில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அது சரி செய்ய முடியாத நோய். எனது வலது கண் வேகமாக பார்க்கும் திறனை இழந்து கொண்டிருந்தது. இடது கண்ணும் ஒரு நிலையில் பார்க்கும் திறனை இழந்துவிடும் சூழல். நிறைய வரைய வேண்டும், படிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் இப்படி ஒரு பிரச்சினை எனக்கு ஏற்பட்டது.
படிப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். முதலில் எவ்வளவு வரைய முடியுமோ அவ்வளவையும் வரையுங்கள் என்று சொன்னாள். நான் ஓவியம் வரையும்போது அருகில் அமர்ந்து புத்தகம் படிப்பாள். நாங்கள் இருவரும் விரும்பியதை செய்து கொண்டு ஒன்றாகவே வாழ்ந்தோம்.
விழாக் காலங்களில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வாழ்த்து அட்டையாக, நான் வரைந்த ஓவியங்களை அனுப்புவேன்.
அதுபோல் வாழ்த்து அட்டைகள் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சங்கரநேத்ராலயா-க்கும், அரவிந்தர் கண் மருத்துவமனைக்கும் கொடுத்தோம். ஓவியம் வரைவது மட்டும்தான் என் வேலை, வாழ்த்து அட்டை சார்ந்த மற்ற எல்லா நடைமுறைகளையும் மகிமா பார்த்துக்கொள்வார்.
1997 ஆம் ஆண்டு Green Well Years நாவலை வெளியிட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு இது சாத்தியமாயிற்று. சுதந்திரத்திற்கு முன்புள்ள மதுரையை அறிந்தவன் என்ற முறையில் மதுரையைப் பற்றி எழுதினேன். மதுரை நகர் சார்ந்த பல ஓவியங்களை வரைந்தேன். My Madurai என்ற நூல் 5 பதிப்பு கண்டுள்ளது. மகிமா பற்றியும், மகிமாவிற்கு ஏற்பட்ட விபத்து பற்றியும் நூல் எழுதியுள்ளேன்.
எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை நினைத்து அழுதுக் கொண்டிருக்காமல் அதற்கு மாற்றாக ஆக்கப்பூர்வமான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.
மகிமா சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவரின் நினைவாக ஓவிய கண்காட்சி நடத்தினேன். அவள் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறேன்.
பாஸ்கர் சக்தி
ஒரு சிறப்பான உரையை கேட்டோம். உரையாடினோம். இன்றைய உரையாடல் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை தரும் என நம்புகிறோம். அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன்.
|