அனில் சீனிவாசன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி இலக்கிய அமைப்பின் 15 மாத கூட்டம் 10.10.10 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசன் கலந்து கொண்டார்.
ஞாநி
இது 15 மாத கூட்டம். கடந்த ஒரு வருடமாக 12 கூட்டங்களில் இலக்கிய வாதிகள் கலந்து கொண்டனர். 2-வது வருடத்தின் தொடக்கம் முதல் இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அடுத்த மாதமும் (நவம்பர்) இசைக் கலைஞராக இருக்கலாம். டிசம்பர் மாத கூட்டத்திற்கு வண்ணதாசன் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இம்மாத சிறப்பு விருந்தினர் அனில் சீனிவாசன். பியானோ இசைக் கலைஞர் மேற்கத்திய இசையை முறைப்படி கற்றுக் கொண்டுள்ளார். இவர் பொருளாதார துறையில் உயர் படிப்பு படித்து அமெரிக்காவில் பணிபுரிந்தவர். இசையின் மீதான ஆர்வத்தின் காரணமாக வேலை துறந்தவர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு இசையை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இன்று நம்மோடு இசைப்பற்றி பேசுவதுடன் பியானோ-வும் வாசித்துக் காண்பிப்பார்.
அனில் சீனிவாசன்
கர்நாடக இசையின் மும்மூர்த்தியான தியாராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் பிறந்த ஊரான திருவாரூரில் அண்மையில் பள்ளி குழந்தைகளுக்கு இசையைப் பற்றி சொல்லிக் கொடுக்க சென்றிருந்தேன். அம்மாணவர்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன? இந்த ஊரில் பிறந்த மேதைகள் யார்? எனக் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. ஆசிரியர்களுக்கு கூட நம் வரலாறு தெரியாமல் நம் குழந்தைகள் வளர்கிறார்கள்.
பியானோ உலகம் முழுவதும் 95 சதவீத நாடுகளின் இசையில் பயன்படுத்தப்படுகிறது. பியானோ இந்திய இசை மரபில் உருவானது. காஷ்மீர் மக்களின் சாத்தூர் வாத்தியத்தையும், தமிழ் மக்களின் யாழ் வாத்தியத்தையும் இணைத்து இத்தாலியில் கால்வியானோ உருவாக்கப்பட்டது. அதன் பரிணாமம்தான் இன்றைய பியானோ.
பதினொட்டாம் நூற்றாண்டை இசையின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு மேற்கத்திய இசையுலகில் பாக், பீத்தோவன், மொசார்ட் ஆகிய மூவரும் இந்திய இசையில் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும் ஒரே சமயத்தில் வாழ்ந்தனர்.
மேற்கத்திய இசை முதலில் தேவாலய வழிபாட்டில்தான் தொடங்கியது. பிறகுதான் மேடைக்கு வந்தது. மேற்கத்திய இசையின் சிறப்பு அதன் ஹார்மணிதான். பலரும் சேர்ந்து பாடும் தன்மை மேற்கத்திய இசையின் சிறப்பம்சம்.
இந்திய இசை முதலில் கோவிலில் தொடங்கி பின்னர் மன்னர் வழிபாடு, ஜமீன் வழிபாடு என பயணித்து பிறகுதான் மேடைக்கு வந்து சேர்ந்தது. இந்திய இசை பெரும்பாலும் தனிநபர் சார்ந்ததாகவே உள்ளது. இன்றும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்திய இசையில் சிறப்பாக திரையிசையில் மேற்கத்திய இசையின் பாதிப்ப அதிகம். அவர்கள்தான் ஹார்மனியை அதிகம் உள்வாங்கியுள்ளனர். பல நாட்டு ராகத்திற்கும் காப்போடியா நாட்டு இசைக்கும் தொடர்புண்டு. மலைய மாருதம் ராகத்திற்கும் இசையே அடிப்படையானது.
கட்டட கலைக்கும் இசைக்கும் தொடர்புண்டு என்பதனை முன் வைத்து பாக் தன் இசையை உருவாக்கினார்.
மொசார்ட் தன் 4 வயதில் தொடங்கி 35 வயதுக்குள் சுமார் 6000 இசைக் கோவைகளை உருவாக்கினார். மொசார்ட்-ன் இசையை கேட்டால் புத்திசாலி தனம் பெருகும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு எதிர் கருத்தும் உண்டு.
பீத்தோவன் சிம்பொனியை உருவாக்கினார்.
இசை எண்ணங்களை பாதிக்கும் தன்மையுடையது. குரல் இல்லாத இசையை கேட்பது நல்லது.
புதியதாக இசை கேட்க ஆரம்பிப்பவர்கள் முதலில் இந்துஸ்தானி இசையையும், மேற்கத்திய இசையையும் கேட்கலாம்.
இசைக்கு நோயை குணப்படுத்தும் தன்மையுண்டு. ஆனால் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இசை என்பது அபத்தம்.
பேச்சின் இடையிடையே பியானோவை வாசித்துக் காட்டி விளக்கம் அளித்தார்.
இறுதியாக பாஸ்கர் சக்தி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|