பாலாவின் கார்டுன் நூல் வெளியீட்டு விழா
குமுதம் இதழில் ஓவியர் பாலா வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பான "ஈழம் ஆன்மாவின் மரணம்" என்ற கார்ட்டூன் நூலின் விமர்சனக் கூட்டமும் வெளியீட்டு விழாவும் சென்னை இக்சா மைய அரங்கத்தில் 11.06.10 அன்று மாலை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக தமிழருவி மணியன், கவிஞர் மாலதி மைத்ரி, அருள் எழிலன், ஓவியர் வீர சந்தானம், வழக்கறிஞர் சுந்தரராஜன், இயக்குனர் புகழேந்தி, பாமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெங்கட் பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார்.
தலைமையுரையாக தமிழருவி மணியன்
எனது நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையில் இதுவரை எந்த நூலுக்கும் முன்னுரை எழுதாத நான் பாலாவின் ஈழம் ஆன்மாவின் மரணம் என்ற இந்த கார்ட்டூன் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளேன்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவுப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஈழ உணர்வுகளை ஆவணங்களாக பதிவு செய்ய வேண்டும். ஆவணங்கள் மூலம்தான் ஈழத்தில் நடந்தவை இனப்படுகொலையென நிரூபிக்க முடியும். ஆவணப்படுத்துதலை பாலா தன்னளவில் சரியாக செய்துள்ளார்.
நான் காங்கிரஸை விட்டு வெளியே வந்துவிட்டேன். என்னை முன்னாள் காங்கிரஸ்காரனாக இனம் காண வேண்டாம். பழைய காங்கிரஸ் மக்கள் பேரியக்கம். இன்றைய காங்கிரஸ் மாபெரும் வணிக நிறுவனம் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.
பாரதி சொன்னதுபோல் முதலில் என் மொழி, இரண்டாவது என் இனம், மூன்றாவது நாடு. நான் என் மொழியை, இனத்தை, நேசிப்பவனாக உள்ளேன். இந்திய நாடு என்பது சரியல்ல, இந்தியக் கூட்டமைப்பு என்பதுதான் சரியானது.
இந்தியாவில் இந்துத்துவம் (ஆர்எஸ்எஸ்) போல் இலஙகையில் சிங்க பேரினவாதம் செயல்படுகிறது. இரண்டுக்கும் வேறுபாடுயில்லை.
தமிழன் என்றோர் இனமுண்டு அவனுக்கென தனிக்குணம் உண்டு என்கிறார்கள். அந்த தனிக்குணம் என்பது ஈசகுணம் போலும். திமுகவும், காங்கிரசும் தமிழின துரோகிகள். துரோகிகள் ஒன்றுப்பட்டு செயல்படுகின்றனர். ஆனால் தமிழிரின் நலனுக்காக போராடுகிறார்கள் பல கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். ஒவ்வொருவரும் தன்னைக் கட்சிக்காரணமாக உணராமல் தமிழனாக உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் தமிழ் இனத்தை அழிப்பதில் தெளிவாக உள்ளது. ஆனால் தமிழனத்தை காப்பதற்காக போராடுகிறோம் என சொல்பவர்கள் சுயநலத்திற்காக தனித்தனியே இயங்குகின்றனர்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தவிர எதிர்ப்பவர் யார்? தமிழனின் எதிரி காங்கிரஸ் என்பதனை இத்தீர்மானம் மூலம் மக்களுக்கு தெளிவுப்படுத்த முடியும்.
செக் ஸ்லோகியாவில் 8000 அல்பேனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுமே உலக நாடுகளின் தலையீட்டால் தனி நாடு பெற்றிருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கென தனிநாடு பெறமுடியவில்லை. உலக நாடுகள் பாராமுகமாக உள்ளன. உலக நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்ப எல்லா துயரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும்.
மும்பையில் ஒரு பீகாரி தாக்கப்பட்டால் பீகாரே பற்றி எரிகிறது. பீகார் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கின்றனர். பிரான்ஸில் சீக்கியர்களின் தலைபாகைக்கு தடையென்றால் பிரதமரே தலையிடுகிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திக்காரன் தாக்கப்பட்டால் ஈழத்தில் பல லட்சம் மக்கள் படுகொலை செய்யப்படும் சூழலில் கூட நாம் ஒன்றுப்பட்டு போராடாமல் தனித்தனியே போராடிக் கொண்டிருக்கிறோம்.
கவிஞர் மாலதி மைத்ரி
கடந்த ஒன்றை ஆண்டாக நான் எதுவும் எழுதவில்லை. ஈழத்தில் நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்படுகையில், இந்த பேரழிவுச் சூழலில் எப்படி எழுத முடியும். ஆனால், தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டு விழாக்களை பெரும் கொண்டாட்டமாக செய்தனர். எழுத்தளன் என்பவர் யார்? அவன் யாருக்காக சிந்திக்கிறான்.
அண்மையில் மாபலி விருந்து அழைப்பு என்று ஒரு கவிதை எழுதினேன். அது ஆனந்த விகடன் இதழிலும், பிரசுரமாகியுள்ளது.
அந்த கவிதை இங்கு வாசித்து விடுகிறேன்.
மாபலி விருந்து அழைப்பு
ஆன்றோரே சான்றோரே
பேரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்தது ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்து ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்களப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனித குலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்து கொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு
அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள் போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொஙகும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணர்வு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலக தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவர்ஸ்
ஆண்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ்
அசோசியேஷன்
குறிப்பு - தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலேத்திலேயே அயல்நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்து விடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
நன்றி - ஆனந்த விகடன்
போராடியவர்களுக்குள்ளும் உள் அரசியல் சிக்கிக் கொண்டனர். எந்த சூழலில் யாரை விமர்சனம் செய்து என்பதில் பலருக்கும் குழப்பம். சிலர் புலிகளை விமர்சித்தனர். சிலர் பக்சேவை விமர்சித்தனர். சிலர் மௌனமாக இருந்தனர். அறிவு ஜீவிகளின் மௌனம் அவமானகரமானது. அது தீராத கரையாக நம்மேல் படிந்துள்ளது. மக்களை திசை திருப்புவதற்காக உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. சிந்தனாவாதிகள் அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அறிவுஜீவிகளின் மௌனம் மக்களை கோழைகளாக மாற்றுகிறது.
அருள் எழிலன்
முத்துக்குமாரின் மரணம் தமிழர்களை ஒன்று படுத்தியது. ஈழ மக்களின் பிரச்சினை முன் வைத்து பல போராட்டங்கள் நடக்க தூண்டுகோலாக செயல்பட்டோம். முத்துக்குமாரின் மரணம்தான் பாலாவை கார்ட்டூன் வரைய தூண்டியது. படுகொலைகள் செய்த நாடுகள் எப்படி சனநாயக நாடுகளாக இருக்க முடியும். இலங்கை இரண்டாக பிரிக்கப்பட்ட வேண்டும். இனி தமிழர்கள் சிங்களர்களோடு சேர்ந்து வாழ முடியாது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தா, வரதராச பெருமாள் இங்கு அரச விருந்தினராக வருகின்றனர். உண்மைகளை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஓவியர் வீர சந்தானம்
1984 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை ஓவியங்களாக வரைந்து கண்காட்சி படுத்தினேன். அந்த ஓவியங்களை தொகுத்து "முகில்கள் மீது நெருப்பு" என்ற நூலாக கொண்டு வந்தேன். இன்றைய சூழலில் இலங்கை பிரச்சினை சம்பந்தமாக பாலா வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு நூலாக வந்திருப்பது காலத்தின் தேவை தான். பல லட்சம் மக்களை படுகொலை செய்த கொலைகாரர்களோடு இந்திய தலைமை கைகுலுக்குகிறது. இந்திய வெளியுறவு கொள்கை என்பது தமிழர்களை கொன்று குவிப்பதுதான். தமிழினத்தை காக்க முடியாத நான் தமிழன் என்று சொல்லிக் கெண்டு வாழ்வதில் அர்த்தமில்லை என்றே கருதுகிறேன்.
வழக்கறிஞர் சுந்தரராஜன்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை வெளிக்கொண்டு வராத ஊடகவியலாளர்களின் துரோகம் மன்னிக்க முடியாதது. பேச வேண்டியவர்கள் பேசவில்லை. பேசியவரகள் சரியாக பேசவில்லை. சாதாரண பேச்சில் இருந்த சமூக நோக்கம் அவர்களின் செயல்களில் இல்லை. எல்லாம் உதிரி நிகழ்ச்சிகளாகவே நடைபெற்றன. எந்த சுதந்திரமும் கொடுக்கப்படுவதில்லை. நாம்தான் விரிவுபடுத்திக் கொண்டே செல்லவேண்டும். பாலாவின் கார்ட்டூன்களில் நான் அதை தான் பார்க்கிறேன்.
இயக்குனர் புகழேந்தி
இங்கு நம்மவர்களின் இலக்கு சரியாக இல்லை. சோனியா தமிழ்நாட்டுக்கு வந்தபோது எல்லோரும் ஒன்றுபட்டு சரியான எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தமிழக தலைவர்கள் சுயநலத்திற்காக இன அழிவை வேடிக்கை பார்க்கிறார்கள். இனியாவது நாம் வெளிப்படையாக பேசியாக வேண்டும். சுயநலத்தை விட்டுவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு நம் போராட்டத்தை கூராக்க வேண்டும்.
பாமரன்
என்பதுகளில் நான் தீவிர கழக அனுதாபி. அப்போது இங்கு வந்திருந்த ஈழ சிறுவன் (வயது 14) தமிழக தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து எழுப்பிய கேள்விகள்தான் என்னை தெளிவுப்படுத்தியது. ஆனால் இன்று வெளிநாடுகளில் வாழும் ஈழ அன்பர்கள் பலர் தமிழக தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் தமிழக தலைவர்களை நம்பினால் உங்கள் தேசிய தலைவரை அவமதிப்பது போல் உள்ளது என பதில் கூறினேன்.
ஏற்புரையாக பாலா
முத்துக்குமாரின் மரணம்தான் எனக்கு இந்த கார்ட்டூன்களை வரைய உத்வேகம் தந்தது. முத்துக்குமார் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நபர். அவரின் இறுதி கடிதம் ஒரு வரலாற்றுப்பூர்வமான ஆவணமாகும். முத்துக்குமாரின் தீர்க்க தரிசனத்தை கடித வரிகள் உறுதிப்படுத்துகிறது. உலகமயமாக்கலில் எல்லோரும் சுயநலமிகளாகப்பட்டுள்ளனர். என்னுடைய கார்ட்டூன்கள் வெளிவர காரணமாயிருந்த குமுதம் ஆசிரிய குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் பேரால் இங்கு நடக்கும் நாடகங்களை, நாடகம் நிகழ்துபவர்கள் எல்லோரையும் என் கார்ட்டூன்கள் மூலம் அம்பலப்படுத்துவேன். ஒருவேளை அச்சி ஊடகத்தில் சாத்தியம் இல்லாது போனால் என் வலைப்பகுதிகளில் இப்பணியை தொடர்ந்து செய்வேன். இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த கீற்று ரமேஷ்க்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக கீற்று ரமேஷ் அனைவருக்கும் நன்றிக்கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|