ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி (உயிர் உறைந்த நிறங்கள்)
ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டம் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது. என்ன வகையான போராட்ட முறை முன்னெடுப்பது என பலரும் விவாதித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஓவியர் புகழேந்தி இதுவரை ஈழம் சார்ந்து தான் வரைந்த ஓவியங்களை உயிர் உறைந்த நிறங்கள் (தமிழீத்தின் ஓர் இரத்த பதிவு) என்ற தலைப்பில் கண்காட்சியை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ. தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் தொடக்க விழா 17.07.09 அன்று மாலையில் அய்யா நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. நடிகர் சத்தியராஜ் இயக்குனர் சேரன், மதுரா பாலன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்தவர்களை சோழன் நம்பியார் வரவேற்று பேசினார்.
நடிகர் சத்யராஜ் தன்னுடைய பேச்சில் சாதி, மதம் மறந்து மக்கள் ஒன்று சேர வேண்டும். அண்மையில் என் தாயாரின் 80-வது பிறந்த நாள் வந்தது. அம்மா உன் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டேன். எதுவும் வேண்டாம் என்றார். நான் மறுபடியும் வற்புறுத்தி கேட்டபோது அகதி முகாமில் இருக்கும் ஈழ தமிழர்களுக்கு ஏதாவது செய் என்றார். நானும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினேன். தமிழ மக்கள் அனைவரும் ஈழ தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அய்யா நெடுமாறன் போன்றோர் முன்னின்று எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும் என கூறினார்.
அடுத்ததாக பேசிய மதுரா பாலன் புகழேந்தியின் ஓவியங்கள் மனிதம் பேசுகின்றன. உலகின் எந்த மூலையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அதற்கான தன் எதிர்வினையை ஓவியங்கள் மூலம் பதிவு செய்கிறார். காந்திய தேசத்தில் காந்தியம் வளர வேண்டும் என தன் குரலை பதிவு செய்தார்.
இயக்குனர் சேரன் தன் பேச்சில் புகழேந்தியின் ஆரம்பகால ஓவியங்களில் துயரத்தின் வெளிப்பாடாக ப்ரொன் நிறம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்மை கால ஓவியங்களில் சிவப்பு நிறம் அதிகமாக உள்ளது. இதை கோபத்தின் அடையாளமாக உணர்கிறேன். பெருவாரியான மக்களை சென்றடையும் தினசரின் வரலாற்று சுவடுகள் பகுதியில் சினிமா சாதனைகள் குறித்தே அதிகம் பதிவு செய்தவர்கள் இப்போதுதான் உண்மையான வரலாற்று சுவடுகளை ஈழதமிழரின் வரலாற்றை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் வரவேற்க்கத்தக்கது. ஈழப்பிரச்சினைக்காக தீக்குளித்து முத்துகுமார் ஏற்படுத்திய மக்கள் எழுச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது. ஏன் இந்த அவல நிலை?
ஈழ மக்களின் உணர்வுகளை ஆங்கில படமாக எடுக்கவுள்ளேன். அதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈழ மக்கள் பெறுவார்கள் என நம்புகிறேன். வெளிப்படையாக பேசுவதினால் அண்மைக் காலமாக பாதுகாப்பற்றவனகாக உணர்கிறேன். அவர் அவர் தொழிற் சார்ந்ததும் ஈழ மக்களின் துயர் துடைக்க தொடர்ந்து போராடுவோம். ஓவியர் புகழேந்தி இந்த ஓவிய கண்காட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தன் உரையில் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார்கள் எல்லா வகையிலும் சிறப்பான கவனிப்பை பெற்றவர்கள். சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் இன அழிப்புக்கும் மனித உரிமை மீறலுக்கும் உதவிகரம் நீட்டுகின்றன. காலம் மாறும் நாங்கள் தனி தேசாக மீண்டெழுவோம் என்று கூறினார்.
சிறப்புரையாக அய்யா நெடுமாறன் பேசினார். வரலாற்றில் நெருக்கடியான நிலையில் நாம் வாழ்கிறோம். எத்தனை நாளைக்கு சோக சித்திரம் தீட்டிக் கொண்டிருக்க போகிறோம். இந்திய பிரதமர், வைகோவிடம் இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாது என கூறினார். இதையே பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பல முறை சொன்னார். ஆனால் பசில் தன்னுடைய பேச்சில், எழுத்தில், இந்தியாவின் ஆயுத உதவியால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறுகிறார். இந்தியா ஒருபோதும் எங்களை போரை நிறுத்துமாறு கோரவில்லை. இந்திய அதிகாரிகள் உயர்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவே வந்தார்கள் என்கிறார். இப்போது பிரதமர் இதுபற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?
விடுதலைப்புலிகள் இந்தியாவின் எதிரிகளிடம் இராணுவ உதவி பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் சிங்கள ராணுவம் இந்தியாவின் எதிரிகளிடம் ராணுவ உதவி பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தங்கள் துறைமுகத்தையே (ஹம்பன் தோட்டா) தாரைவார்த்துள்ளார்கள். இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இறையாண்மை பேசும் மேதாவிகள் இதை உணர்ந்த மாதிரி இல்லை.
நாம் தொடர்ந்து போராடுவது மூலம்தான் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற முடியும். அந்த வகையில் ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சேரனின் ஆங்கில பட முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என கூறினார்.
தோழர் தியாகு தன்னுடைய உரையில், ஓவிய கலைஞராக தன் சமூக பொறுப்புகளை உணர்ந்து புகழேந்தி தீட்டியுள்ள இந்த ஓவியங்கள் நம்பிக்கை அளிப்பவையாக உள்ளது.
இழந்த ஆயுதங்களை மறுபடியும் பெறமுடியும்
இழந்த இடங்களை மறுபடியும் பெறமுடியும்
இழந்த உயிர்களை கூட மறுபடியும் பெறமுடியும்
ஆனால் இலட்சியத்தை இழந்தால் மறுபடியும் பெறமுடியாது. நம் இலட்சியங்கள் பொய்த்து போய்விட்டதாக ஊடக பிரச்சார ஆயுதம் ஏந்துகிறார்கள். இதை கவனமாக எதிர்கொண்டு தொடர்ந்து போராடி வெல்வோம் உறுதி ஏற்போம், என்றார்.
இறுதியாக ஓவியர் புகழேந்தி ஏற்புரை வழங்கினார். 1983 கருப்பு ஜுலை நினைவாக வரைந்துள்ள ஓவியங்களை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். நான் மாணவனாக இருந்த காலத்திலிருந்த ஈழ ஆதரவு போராட்டங்களே என்னுள் உலக பார்வையை கொண்டு வந்தது. அதன் தாக்கத்தினாலேயே தென் ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம், குர்தீஸ், கொசுவா, குஜராத் படுகொலை வரை என்னுடைய எதிர்வினையை படைப்புகளாக உருவாக்கி இருக்கிறேன். தொடர்ந்து மனிதம் சார்ந்த குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த கண்காட்சியில் நான் வரைந்த ஈழம் சார்ந்த 50 ஓவியங்களை வைத்துள்ளேன். 1983 தொடங்கி 2003 வரையில் 27 ஓவியங்கள் வரைந்துள்ளேன். இந்த ஓவியங்கள் 2005 ஆண்டு ஈழத்திலும் பிற நாடுகளிலும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது. கடந்த மே 6 பிறகு வரைந்த 23 ஓவியங்களையும் சேர்த்து இங்கு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓவியங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். அவரே அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
ஒவ்வொரு ஓவியத்தின் அருகிலும் தமிழீழம் குறித்த சிறுகவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அவற்றுள் சில:-
வெளி
தகர்க்கப்பட்டது
எங்கள்
வீடு அல்ல
நாடு
காத்திருப்பு
இழப்பதற்கு
முடிவெடுத்தோம்
பெறுவதற்காக
எதிர்நோக்கி
எந்த இன்றைக்கும்
உண்டு நாளை
பெருமூச்சு
பதுங்கு குழியும்
பிதுங்கும் விழியுமாய்
எத்தனை காலம்.. .?
வெளிச்சம்
விடிந்துதான்
ஆக வேண்டும்
இரவு
அலைவு
அடிமைத் தனத்தின்
வெட்கம் சுமந்து
அங்கும் இங்குமாய்
பதுங்கு குழி – 1
எங்களைக் காக்க
அல்ல
எங்கள் சேதத்தைக்
காக்க
கொலை கயிறுகள்
மறுதலிக்கப்படுகிறது
இயல்பான வாழ்வுமட்டுமன்று
இயல்பான சாவும்
போராளி
வீரன்
பிறந்து கொண்டே
இருப்பான். . .
விடதலை
பிறக்கும் வரை
பழி
குண்டு கொடுத்தது
புத்தனை
ஈன்ற நாடு
கொன்று முடித்தது
புத்தனை
வணங்கும் நாடு |