ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி (நிறைவரங்கம்)
ஈழத் தமிழர்களின் துயரத்தை தன் தூரிகையினால் பதிவு செய்து, அதை கண்காட்சி வைத்துள்ளார் ஓவியர் புகழேந்தி. சென்னை தி.நகரில் நடைபெற்று வந்த கண்காட்சியின் நிறைவரங்கம் 25.07.09 சனிக்கிழமை நடைபெற்றது. பல ஆளுமைகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.
நிறைவரங்க விழாவிற்கு வந்திருந்தவர்களை கவி பாஸ்கர் வரவேற்று பேசினார். தமிழ் தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்த மணியரசன் தலைமையுரையாற்றினார். தன்னுடைய வாழ்க்கையில், ஓவியர் புகழேந்தியின் பல கண்காட்சிகளை பார்த்திருப்பதாகவும் 1987 ஆண்டு தஞ்சை வீதியில் கண்காட்சிக்கு வைத்ததை நினைவு கூர்ந்தார். மேலும், குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டபோதும், அம்மக்களின் துயரத்தை தன் தூரிகையினால் பதிவு செய்துள்ளார். கற்பனையின் உச்சத்தில்தான் மனித தன்மை வெளிப்படும். எல்லா வகை உணர்வுகளையும் மிகைப்படுத்தும் கலை ஓவியம் தான். அவ்வளவு பலம் பொருந்திய ஓவியத் திறமையை விடுதலைக்காக போராடும் மக்களுக்காக பயன்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகள் தோற்கடிக்கப்பட்டதற்கு சிங்கள பகை மட்டும் காரணமல்ல. சிந்து சமவெளியில் தொடங்கிய பகையும் இன்னும் முடியவில்லை. தமிழ் தேசிய குடியரசு தோன்றும் வரை அதை வீழ்த்த முடியாது. தமிழனின் மிகப்பெரிய பகைவன் இந்தியாதான். இது வரலாற்று பகைமை. இதை வெல்ல நம் மரபுகளை பாதுகாக்க வேண்டும். தமிழர்கள் விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர்.
உதாரணமாக ராசராச சோழன் காலத்தில் வடிக்கப்பட்ட ராசராசன் சிலை இன்று குஜராத்தில் உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும். எப்படி மீட்க போகிறோம். தஞ்சை பெரிய கோவில் பரம்பரை பாதுகாவலராக ஒரு மராத்தியர் உள்ளார். அவரை மாற்றக் கோரி இப்போதுதான் போராட தொடங்கியுள்ளார்கள்.
எல்லாமே இயல்பாக உள்ளதாக நாஜி பத்திரிகை இந்து (ராம்) கூறுகிறது. அங்கு எங்கேயுமே இயல்பு வாழ்க்கை இல்லை. தமிழ்நாட்டிற்குள் பிற இன மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசு இதை திட்டமிட்டே செய்கிறது. தமிழ்நாட்டை கலப்பு இன க்கள் வாழும் மாநிலமாக மாற்றுகிறார்கள். விழிப்புடன் இதை எதிர்ப்போம். தமிழரின் எண்ணிக்கை பெருக வேண்டும். அதனால் குடும்ப கட்டுப்பாட்டை பரிசீலனை செய்யுங்கள். ஈழத் தமிழ் குடியரசு மலர உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். தன் மன குமறலை ஆக்கப்பூர்வ பணியாக மாற்றிய ஓவியர் புகழேந்திக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள் என கூறினார்.
அடுத்ததாக மருத்துவர் செ. நெ. தெய்வநாயகம் பேசுகையில் ஈழத் தமிழ் க்கள் படும் துயரத்தை ஓவியர் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். அங்கு நடக்கும் அநீதி, முறை பிறழ்வு, மனித உரிமை மீறல்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். இலங்கை தலைமை நீதிபதி, ஐ நா பொதுச் செயலார் பான் கீ மூன் ஈழ தமிழர்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். வணங்காமண் கப்பல் அலைகழிக்கப்படுவது குறித்து டெல்லி சுல்தான்கள் கவலைப்படவில்லை. தமிழக மக்களின் குரல் அவர்களுக்கு கேட்கவில்லை. இந்திய கப்பற்படையும் தமிழ மீனவர்களை காப்பதில்லை. ஈழத்தில் இருப்பவர்கள் பழங்குடி தமிழ் மக்கள் அவர்களுக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை.
சவுதிக்கு அனுப்பப்படும் இந்திய தூதர் இஸ்லாமியர்தான். ஆனால் இலங்கைக்கு தமிழரை தூதுவராக அனுப்புவதில்லை. மேல்நாட்டு கலாச்சாரத்தை இறுக்குமதி செய்து நமது கலாச்சாரத்தை அழிக்கிறார்கள். தமிழ் மொழி மட்டுமே வடமொழியை வென்றது, தொடர்ந்து வெல்லும். சீனர்கள் ஒற்றுமையின் சிகரத்தில் உள்ளார்கள். அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். குடி போதையில் மூழ்கி, சின்னத் திரையில் வாழ்வை தொலைக்கும் தமிழர்கள் எப்படி ஈழத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள். இன்று ஈழ தமிழனுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் நேரலாம் விழிப்போடு இருங்கள். என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
கவிஞர் சூரீயதீபன்
மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ, விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்காக தன் ஓவியம் மூலம் ஆதரவு தெரிவிக்கும் புகழேந்தியின் ஓவியங்கள் இந்த முறை ஈழத் தமிழர்களின் துயரத்தை பிரதிபலிக்கிறது. ஓவியங்கள் ஓவியர்களுக்கானது என்ற கலை சூழலில் ஓவியம் மக்களுக்கானது என்பதை கூறுகிறது, இவரது ஓவியங்கள். வங்க தேச எழுத்தாளர் சரத் சந்தர் எளிய மக்களின் துயரத்தை ஆசையை பெண்களின் விடுதலையை நிறைய எழுதினார். அவரின் எழுத்து பரவலான மக்களுக்கானது. ஒரு முறை மக்கள் அவரிடம் கேட்டனர். உங்கள் எழுத்து எங்களுக்கு புரிகிறது. ஆனால் தாகூரின் எழுத்துகள் எங்களுக்கு புரியவில்லை. நீங்கள் அவரை போற்றி புகழ்கிறீர்களே ஏன்? அதற்கு சரத் சொன்னார். நான் உங்களுக்காக எழுதுகிறேன். அவர் என்னை போன்றவர்களுக்காக எழுதுகிறார். ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் மக்களுக்கானது.
மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த என கோரிக்கை வைத்து நேர்த்தி கடன் செய்து போரை நிறுத்த பிரார்த்தனை செய்தார்கள். எதையும் இந்தியா காதில் வாங்கிக் கொள்ள வில்லை. பிறகு எப்படி நான் இந்தியன் என கூறிக் கொள்ள முடியும். முதலில் நான் மனிதன். பிறகு தமிழன். அதன் பிறகு சர்வதேச மனிதன். இந்தியன் எவனும் மனிதனாக இல்லை என்பதனால், நான் இந்தியனாக இல்லை. இந்தியா துளி கண்ணீர் கூட சிந்த மறுக்கிறது.
துரோகி ஷோபாசக்தி போன்றவர்கள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கிம் கூறியதை திரித்து கூறுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு சிங்கள அரசு அமைதி ஒப்பந்தத்தை மீறியதை கண்டு எரிக் சோல்கிம் கடும் கண்டனம் தெரிவித்தார். அதற்கு இந்தியாவின் சார்பில் எம் கே நாராயண் சொன்னார் நீ கொஞ்சம் வாயை மூடு என்று.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தளர்கிறது. அதன் அடையாளமே ஓபாமா வின் வரவு. தெற்காசிய பொருளாதாரம் உச்சத்தை நோக்கி செல்கிறது. மூன்றாவது உலக ஏகாதிபத்தியம் வன்னியை ஆடுகளமாக மாற்றிவிட்டது.
செஞ்சோலையில் 62 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் பலவும் கண்டன குரல் கொடுத்தன. இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்தியாவே கொத்துக் குண்டுகளை கொடுத்தது. சர்வ தேசியம் என்பது அரசுகளைத் தாண்டி மக்களோடு கொள்கிற உறவுதான்.
கம்யூனிஸ்ட்டுகள் தேசியவாதியாகவும் இல்லை. சர்வதேச மனிதனாகவும் இல்லை. போர்ச்சுகல், அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை போராட்டம் நடைபெற்றபோது பொருள் உதவி, மருத்துவ உதவி மற்றும் ராணுவ உதவிகள் என அணைத்து உதவிகளையும் கியூபா செய்தது. அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தபோது, கியூபா தன் சர்வதேச கடமை அது என கூறியது. ஆனால் இன்று தன் சர்வதேச கடமையை கியூபா கூட மறந்துவிட்டது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இயக்குனர் சீமான்
ஓவியர் புகழேந்தி நம் இனத்தின் வலியை சாட்சியாக நின்று பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு ஓவியத்திற்கும் பின்னாலும் ஒரு சோகத்தின் வரலாறு உள்ளது. இறுதி ஓவியத்தை மிகவும் நம்பிக்கை தரும் விதாக பதிவு செய்துள்ளார். இனி வரும் ஈழ போராட்டம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. சேகுவாரா மனித நேயத்தின் குறியீடு அதை இவரும் பதிவு செய்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் விடுதலை புலிகளுக்கு தடை உள்ளது. அவர்களைப் பற்றி பேசுவதற்கு தடை ஏதுமில்லை. ஆனால், ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் இந்தியாவில்தான் பேசுவதற்கு தடை சொல்கிறார்கள். போரை நிறுத்து என கூறியபோது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்றவர்கள், இப்போது எதற்காக 5000 ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள்?
இலங்கையின் வடக்கு வசந்தம் திட்டபடி விவசாயத்தை மேம்படுத்த போகிறார்களாம். போரினால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட பெண்களையும், குற்ற செயல்களுக்காக சிங்கள சிறையிலுள்ள 30 ஆழீரம் ஆண் கைதிகளையும் விவசாய கூலிகளாக பணிபுரிய சொல்ல போகிறார்கள். திட்டமிட்டே இன கலப்பு செய்து தமிழர்களை ஒழித்துகட்ட திட்டம் போடுகிறார்கள். இதை யார் தட்டி கேட்பது?
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுக்கப் போவதாக கூறுகிறார்கள். முதலில் வடக்கு வசந்தம் திட்டக் குழுவில் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுங்கள். திட்டக் குழு உறுப்பினர்கள் 20 பேரில் ஒரு தமிழன் கூட இல்லை. ஒரு குழுவிலேயே சம உரிமை தராதவர்கள், நாட்டில் சம உரிமை தருவார்களா? யோசியுங்கள் தோழர்களே? 20 நாடுகளின் உதவியோடுதான் தனக்கு போரில் வெற்றி கிட்டியது என்கிறது இலங்கை அரசு. அப்படியானால் விடுதலைப்புலிகள் பலமான ராணுவம் தான் என்பதை ஒப்புகொள்கிறீர்களா?
ஆஸ்த்ரேலியாவில் அடிப்பட்டால் இந்தியன், ராமேஸ்வரத்தில் அடிப்பட்டால் தமிழக மீனவன். என்னவொரு கருணை மிக்க இறையாண்மை உங்களுடையது. உலக தொண்டு நிறுவனங்களை செஞ்சிலுவை சங்கத்தை, அனைத்துலக ஊடகத்தை அனுமதிக்க மறுப்பவர்கள் இந்து பத்திரிகையை மட்டும் எதனால் அனுமதிக்கிறார்கள். ஸ்ரீலங்க ரத்னா விருது கொடுத்து பாராட்டுகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
தமிழர் நலனுக்காக உலக வங்கியிடம் பணம் பெற்று அதை சிங்கள குடியேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஒரு வழக்கை முடிப்பதற்காக எங்கள் வாழ்க்கையை மொத்தமாக முடிப்பீர்களா? காஷ்மீரை தலை என நினைத்து தொடர்ந்து அதற்காக போராடுகிறார்கள். கச்சத் தீவை செருப்பு என நினைத்து விட்டு கொடுத்தீர்களா? காஷ்மீரை விட்டுவிடு இல்லையெனில் கச்சத் தீவை மீட்டுக்கொடு!! என்றுதான் இனி போராட வேண்டும்.
பாலஸ்தீனத்தில் குண்டு விழுந்தபோது கண்டனம் தெரிவித்தவர்களே ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மௌனம் சாதித்தது ஏன்? கடைசி இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து லட்சம் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். தோழர்களே இனி இழப்பதற்கு ஏதுமில்லை. பெறுவதற்கு நாடு இருக்கிறது. நம்பிக்கையோடு தொடர்ந்து போராடுவோம்.
இறுதியாக ஓவியர் புகழேந்தி தன் ஏற்புரையில், ஒவ்வொரு ஓவியத்தை வரையும்போதும் ஈழம் சென்றபோது நான் கண்ட மனிதர்கள், அவர்களின் நற்செயல்கள் பலவும் என் நினைவுக்கு வந்து என் துயரை பன்மடங்காக்கியது. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்ப என் ஓவியங்களும் உதவ கூடும் என நம்புகிறேன். கண்காட்சி கண்டு தங்கள் கருத்துகளை வழங்கிய தோழர்களுக்கும், பாராட்டுரை வழங்கிய தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். |