சதுர பூதம்
பெண்களின் ருசி கொண்டலைகிறது
சதுர பூதம்
மனித ராசியின் ஓய்வு நேரத்தை
அபத்தங்களால் நிறைத்த வண்ணம்
நாலாதிசையும் வளர்கிறது
வண்ண வண்ணமாய்
அறையுடை வெண் தோல் பருவச்சிகள்
குதறுகின்றன ஆன்மாவை .
குட்டி யாழ்களும்
இன்னதெனத் தெரியாமலே மீட்டுகின்றன
சதுர பூதம் தரும் விசப்பாக்களை
ஏதுமில்லா குகைகளுக்கு
தேவன் ஒரு நாள் பரிசளித்தான் சதுர பூதங்களை
இனிப் பசியற்றுக் கிடக்கும் மானுடம்
----------------------------------------------------------------------------------------------------------
பொய்
யார் சொல்லியிருக்கக்கூடும்
முதல் பொய்யை ?
ஏவாளிடம் ஆதாம் சொல்லியிருப்பானோ?
தெரிந்திலோம் .
மெக்கானிக் தொழில் கற்க
விட்டு வந்த இரண்டாவது வாரத்தில்
வயிற்றுவலி என வீடு சேர்ந்தது
நினைவிலிருக்கும் முதல் பொய் .
பள்ளி நாட்களில்
விடுப்புகளுக்காக
வராத காய்ச்சலும் தலைவலியும்
வந்ததாய்ச் சொன்னபோது
பொய்கள் வளர்ந்தன.
பனையுச்சியில் ஏறமுடியாமல்
தேளிருப்பதாய்ப் பொய்த்துவிட்டுத்
தரைமீண்டது
நுங்காசைப் பொய்த்துப்போன
சென்னை நண்பனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோழைத்தனத்தின் மறுபெயர் பொய்
எச்சூழலிலும் பொய்ச்சொல்லாதவன்
தூய வீரன்.
என்ன செய்ய ?
இப்போதும்
பொய்யைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது
பேராசிரியரான பிறகும்
அவசர விடுப்புக்கு!
------------------------------------------------------------------------------------------------------
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கனவுடன் அலைபவள்
முன்பொருமுறை
வெள்ளுடை தரித்த தேவதைகளில்
ஒருத்தியாக இருந்தவள்
பிறகு
இளவரசியின்
நூற்றுக்கணக்கான தோழிகளில்
ஒருத்தியாக மாறினாள்.
அவ்வப்போது அவள்
இப்படி
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
தேவைகளின் பொருட்டு
அடுக்ககத்தில்
தன் உடுப்புகளையும்
களைந்து கொண்டிருக்கிறாள்
இளவரசியாகும் கனவுடன் .
---------------------------------------------------------------------------------------------------------------
யாழினி முனுசாமி செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் 1971இல் பிறந்தார். எஸ்.ஆர்.எம். கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உதிரும் இலை (கவிதைகள்), தலித் இலக்கியமும் அரசியலும் (கட்டுரைகள்) பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும் (கட்டுரைகள்) ஆகியன இவரது நூல்கள். குறும்பட இயக்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.
|