போரின் கோர முகம் மற்றும் நாட்குறிப்பின் சிநேகம்
1991-லிருந்து 1995 வரை க்ரோஷியா, போஷ்னியா மற்றும் செர்பிய படைகளுக்கிடையே நீடித்த உள்நாட்டுப் போரில் நீண்டதும், நாசகரமானதுமான முற்றுகை ஒன்றினை எதிர்கொண்ட நகரம் சரஜிவோ. போஷ்னியா - ஹெர்ஷகோவினா நாட்டின் தலைநகரான சரஜிவோ, அழகிய மில்ஜகா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்நகரில் மாலிக்-அலிஸியா தம்பதியினரின் மகள் ஸ்லடாஃபிலிபோவிக், தனது பதினோராம் பிறந்த நாளைக் கொண்டாடும் சமயத்திலிருந்து, இரண்டாண்டுகள் கழித்து, கிறிஸ்துமஸ¨க்கும் சற்று முன்னர் வரையிலான காலகட்டத்தில் செப்டம்பர் 1991 லிருந்து அக்டோபர் 1993 வரையில் நாட்குறிப்புகளை தொடர்ந்து எழுதி வந்துள்ளாள்.
யுத்த காலத்தில் வழக்குரைஞரும், மருந்தாளுனருமான தன் அம்மா - அப்பா படுகின்ற பாடுகள், அண்டை - அயலில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மடிந்து போதல் அல்லது நகரை விட்டு வெளியேறுதல், செல்லப் பிராணிகளைப் பிரிய நேர்வது, தன் பள்ளிப்படிப்பு நிற்பது, யுத்தத்தை நடத்திடும் பசங்களின் (அரசியல்வாதிகள்) அரசியல் தனக்கு புரியாது போவது எனப் பல விஷயங்களை ஸ்லடா அதில் பதிவுசெய்து இருக்கிறாள். மடோன்னாவின் ரசிகர் மன்றத்தில் சேர்வது, மைக்கேல் ஜாக்ஸனிடம் கையெழுத்து வாங்கி விடுவது என்னும் அபிலாஷைகளும் அங்கே இடம்பெறுகின்றன.
பியானோ கற்றுக் கொள்வது, பாப் இசை கேட்பது, புத்தகங்கள் படிப்பது, ஆங்கிலம் கற்பது என ஆர்வத்துடன் கற்றறிவதும் சுதந்திரமாகத் திரிவதுமாக இருந்த ஒரு சிறுமி, யுத்த நெருக்கடியை எதிர்கொள்ளும் போதான அதிர்ச்சியும் திகிலும் உண்டாக்கும் பாதிப்பின் மனப்பதிவுகளாக உள்ளன இந்நாட்குறிப்புகள். மின்சாரம், தண்ணீர், உணவு ஆகியன இல்லாதுபோவதும், நகரில் பரவலாக குண்டு வீச்சு தொடங்கி, அண்டை வீடுகளுக்கு நெருங்கி, தன் வீட்டு ஜன்னல்களையும் தொட்டுவிடுவதும், உறவுகள் அறுந்துபோவதும், நட்பு வட்டங்கள் மறைந்து போவதும், பிரியங்கள் கரைந்து விடுவதும், அவளின் கனவுகளை, கற்பனைகளை, புனைவுகளைக் கலைத்து விடுகின்றன.
எல்லா நாட்குறிப்புகளையும் போலவே சாதாணமாகத் தொடங்கும் இந்நாட்குறிப்பை 'பிரியமான நாட்குறிப்பே' என்று அழைக்கத் தொடங்கி, நட்பு வளர்த்து, 'மிம்மி' என்று பெயரிட்டு, அதன்பின், பிரிய மிம்மிக்கு எழுதும் கடிதங்களாக தன் குறிப்புகளைப் பாவித்து எழுதி வருகிறாள். ஆன்ஃபிராங்க் தன் நாட்குறிப்பினை என்று ரிவீttஹ் அழைத்து எழுதியிருந்ததுபோல. இதனால் இவளுக்கு 'சரஜிவோவின் ஆன் ஃபிராங்க்' என்ற பெயர் உண்டானது.
மலைகளிலிருந்து பீரங்கித் தாக்குதல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்க, பியானோவில் 'பாக்'கினையும் 'சாபினையும் பயிற்சி செய்து கொண்டிருந்த இச்சிறுமியின் பதற்றம், வேதனை மற்றும் மன அவசரத்தின் வெளிப்பாடுகள் இந்நாட்குறிப்புகள். குழந்தைப் பருவத்தை இழக்க நேர்வதன் தவிப்புகள் இவை. தனது பதினோறாம் பிறந்த நாளைப் பதினோறு நாட்கள் கழித்துக் கொண்டாட நேர்ந்த சிறுமியின் சலனங்கள் இவை.
"வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த காலம் குரூரமானதால், அதனை நாம் மறக்க வேண்டும். நிகழ்காலமும் குரூரமானதாயிருப்பதால், அதனை என்னால் மறக்க முடியவில்லை" (பக். 43). என்று எழுதக்கூடிய இச்சிறுமியின் இந்நாட்குறிப்பு ஹிழிமிசிணிதி வாரத்தை ஒட்டி, 1993இல் ஃபிரான்ஸில் முதலில் நூலாக வெளியிடப்பட்டது. 1994-இல் பிரிட்டனில் வெளியானது. 'க்ரோட்' மொழியிலான இந்நாட்குறிப்புகள் ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் பிரசித்தம்.
* Zlata's Diary / Zlata filipovic - A Child's life in sarajcvo / viking, london,
1994 - நூலிலிருந்து சில பதிவுகள் தமிழ்வடிவம் : சா. தேதாஸ்.
திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 1992
பிரியமான மிம்மி,
நேற்றுப் பாராளுமன்றத்தின் முன்னே விர்பஞ்சா பாலத்தை மக்கள் அமைதியாகக் கடக்க முற்பட்டனர். ஆனால் அவர்கள் சுடப்பட்டனர். யார்? எப்படி? ஏன்? துப்ரோவ்னிக்கைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தி கொல்லப்பட்டாள். அவள் குருதி பாலத்தில் சிதறி விழுந்தது. கடைசித் தருணங்களில் அவள் கூறியதெல்லாம் - இதுதான் சரஜிவோவா? கொடூரம், கொடூரம், கொடூரம்! இங்கே எதுவும் இயல்பாயில்லை.
பாஸ்கரஸிஜா அழித்தொழிக்கப்பட்டுள்ளது! பாலேவைச் சேர்ந்த அக்கனவான்கள்' பஸ்கார்ஸிஜா மீது சுட்டனர்!
நேற்றிலிருந்து மக்கள் பாராளுமன்றத்திற்குள் இருந்து வருகின்றனர். சிலர் அதன்முன்னே நிற்கின்றனர். இப்போது Holiday Inn-லிருந்து சுடுகின்ற அவர்கள், பாராளுமன்றத்தின் முன்னே நிற்கின்றவர்களைக் கொன்று குவிக்கின்றனர். வாஞ்சா மற்றும் ஆந்ரேஜூடன் போகிகா அங்கே இருக்கிறார். "அய்யோ, கடவுளே !
நாங்கள் நிலவறைக்குள் போகக கூடும். மிம்மி, நீ என்னுடன் நிச்சயம் போய் விடுவாய். நான் பதற்றமாய் இருக்கிறேன். பாராளுமன்றத்தின் முன்னே உள்ளவர்களும் பதற்றமாய் இருக்கின்றனர். மிம்மி, யுத்தம் இங்கே, சமாதானம், இப்போது!
சரஜிவோவின் வானொலியையும் தொலைக்காட்சியையும் தாக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் தாக்கவில்லை. எங்கள் அண்டை - அயலில் சுடுவதை அவர்கள் நிறுத்தியுள்ளனர். Knock! Knock! (அதிர்ஷ்டத்திற்காக மரச்சட்டத்தைத் தட்டுகிறேன்)
வாவ்! அது மூடியிருக்கிறது. ஓ, கடவுளே! அவர்கள் மீண்டும் சுடுகின்றனர்!! - ஸ்லடா.
வியாழக்கிழமை, மே 7, 1992
பிரியமான மிம்மி,
யுத்தம் நின்றுபோகும் என்றே நம்பினேன், ஆனால் இன்று . . . என் சிநேகிதிகளுடன் நான் விளையாடும் பூங்காவில் - என் வீட்டின் முன்னே இருக்கிறது - ஒரு குண்டு விழுந்தது. அநேகம் பேர் காயம் பட்டனர். ஜகா, ஜகாவின் அம்மா, ஸெல்மா, நினா, பக்கத்து வீட்டு டாடோ மற்றும் எத்தனைபேர் காயம்பட்டனர் என யாருக்குத் தெரியும். டாடோ, ஜகா மற்றும் அவளது அம்மா ஆகியோர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஸெல்மா சிறுநீரகம் ஒன்றினை இழந்துள்ளாள் - இன்னும் மருத்துவமனையில் இருப்பதால், அவள் எப்படி உள்ளாள் எனத் தெரியவில்லை. மற்றும் நினா இறந்து விட்டாள். துப்பாக்கிக் குண்டின் ஒருபகுதி அவள் மூளையில் தங்கிவிட, அவள் இறந்து போனாள். அவள் அவ்வளவு அருமையானவள். நாங்கள் மழலையர் பள்ளிக்கு ஒன்றாகப் போனோம், பூங்காவில் சேர்ந்து விளையாடினோம். மீண்டும் நினாவைப் பார்க்க முடியாது போவது சாத்தியமா? கள்ளங்கபடமற்ற பதினோறு வயதுச் சிறுமி முட்டாள்தனமான யுத்தத்திற்குப் பலியானாள். வேதனைப்படுகிறேன், ஏன் என்று கதறுகிறேன் மற்றும் ஆச்சரியப்படுகிறேன். அவள் எதுவும் செய்திடவில்லை. அருவருப்பான ஒரு யுத்தம் சிறுமியின் வாழ்வை நாசப்படுத்தியுள்ளது. நினா, ஓர் ஆச்சரியகரமான சிறுமியாக உன்னை எப்போதும் நினைத்திருப்பேன்.
மிம்மிக்கு என் நேசம். . . - ஸ்லடா.
ஞாயிற்றுக்கிழமை, மே 30, 1992
பிரியமான மிம்மி,
நகர மகப்பேறு மருத்துவமனை எரிந்துபோயுள்ளது. நான் அதிலே பிறந்தேன். சரஜிவோவின் நூற்றுக்கணக்கான புதிய குழந்தைகளுக்கு இனி அங்கே பிறக்கும் அதிர்ஷ்டம் வாய்க்காது. புதிதாய் கட்டப்பட்டது. தீ அனைத்தையும் கபளீகரம் செய்து விட்டது. தாய்மார்களும், குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். நெருப்பு சூழ்ந்ததும் இரு பெண்டிர் பிரசவித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பிழைத்துள்ளன. கடவுளே, மக்கள் இங்கே கொல்லப்படுகின்றனர், இங்கே மடிந்து போகின்றனர், மறைந்து போகின்றனர், இங்கே தீப்பிழம்பில் உயிர்கள் போய்விடுகின்றன. தீப்பிழம்பிலிருந்து புதிய உயிர்கள் பிறக்கின்றன ! - உனது ஸ்லடா . . .
வியாழக்கிழமை, ஜூன் 18, 1992
பிரியமான மிம்மி,
இன்று மேலும், மேலும் துயரமான செய்திகளைக் கேள்விப்பட்டோம். கிர்னோடினாவிலுள்ள, சுமார் 150 ஆண்டுக்கால எங்களது பண்ணை வீட்டுக் கோபுரம் எரியுண்டு போனது. அஞ்சலகம் போன்று அது தீக்கிரையானது. அதனை நான் பெரிதும் விரும்பினேன். போன கோடைக்காலத்தை நாங்கள் அங்கே கழித்தோம். அது அற்புதமாயிருந்தது. அங்கே செல்ல எப்போதும் நான் - ஆவலாய் இருப்பேன். அதனை மாற்றியமைத்து, புதிய தரை விரிப்புகள் விரித்து, மேஜை - நாற்காலிகளைப் புதிதாய் வாங்கி எங்களது நேசம் - பிரியத்தை எல்லாம் சேர்த்து, அழகாக ஆக்கியிருந்ததால், அது எங்களுக்கு வெகுமதிபோல் இருந்தது. ஏகப்பட்ட யுத்தங்களைத் தாண்டி பல ஆண்டுகள் தாக்குப்பிடித்திருந்த அது, இப்போது இல்லை. தரைமட்டமாகியுள்ளது. அண்டை அயலார்களான ஸிகா, மெஹோ மற்றும் பெஹிர் கொல்லப்பட்டனர். அது இன்னும் வேதனையானது. வில்டானாவின் வீடும் எரியுண்டு போனது. எல்லா வீடுகளும் எரிந்து போயின. அநேகம் பேர்
கொல்லப்பட்டனர். இது மிகவும் வேதனையான செய்தி.
ஏன்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதற்காக? யாரைக் குற்றஞ் சாட்டுவது? - நான் வினவுகிறேன். ஆனால் பதிலில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், நாங்கள் வேதனையில் வாழ்கிறோம் என்பதே. இதற்கெல்லாம் காரணம் அரசியல் என்றறிவேன். எனக்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றேன், ஆனால் பதிலைக் கண்டுபிடிக்க, அதுபற்றி ஏதேனும் நான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் ஒரு சிலவற்றையே தெரிவிக்கின்றனர். ஒருநாளில் நான் கண்டறிந்து, மேலும் புரிந்து கொள்வேன். அம்மாவும், அப்பாவும் என்னுடன் அரசியலை விவாதிப்பதில்லை. நான் மிகவும் இளையவள் என்று அவர்கள் எண்ண வேண்டும் அல்லது அவர்களுக்கே எதுவும் தெரியாதிருக்கும். அவர்கள் இப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போய் விடுவார்கள் ... அது கடந்து போயாக வேண்டும் ????? - உனது ஸ்லடா . . .
திங்கட்கிழமை, ஜூன் 29, 1992
பிரியமான மிம்மி,
சலிப்பு !!! துப்பாக்கிச் சூடு !!! குண்டுவீச்சு !!! மக்கள் கொல்லப்படுதல் !!! நிராசை !!! பட்டினி !!! வருத்தம் !!! பயம் !!!
அதுவே என் வாழவு! பதினோறு வயது கள்ளங்கபடமற்ற பள்ளி மாணவியின் வாழ்வு! பள்ளியின் கலகலப்பும் குதூகலமும் இல்லாது, பள்ளியை இழந்த ஒரு பள்ளி மாணவி, விளையாட்டுகள், நண்பர்கள், சூரியன் (வெயில்), பறவைகள், இயற்கை, பழங்கள், சாக்லேட் (அ) இனிப்ள் இல்லாமல், சிறிது பால்பவுடர் மட்டும் கொண்டுள்ள ஒரு குழந்தை. சுருக்கமாகச் சொல்வதானால், குழந்தைப் பருவம் இல்லாத ஒரு குழந்தை. யுத்த காலக் குழந்தை. நான் நிஜமாகவே ஒரு யுத்தத்தினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை இப்போது உணர்ந்து கொள்கிறேன். அருவருப்பூட்டுகின்ற ஓர் அசிங்கமான யுத்தத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்நகரிலுள்ள நானும் ஆயிரக்கணக்கான பிற குழந்தைகளும் நாசமாக்கப்படுவதை, அழுது கொண்டிருப்பதை, அரற்றுவதை, உதவி கோருவதை, ஆனால் ஏதும் கிடைக்காதிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கடவுளே, இது எப்போதேனும் நிற்குமா, மீண்டும் எப்போதேனும் பள்ளி மாணவி ஆவேனா, என் குழந்தைப் பருவத்தை மீண்டும் பெறுவேனா? வாழ்வின் அற்புதமான பருவம் குழந்தை பருவம் என ஒருமுறை கேள்விப்பட்டேன். அப்படித்தான், அதனை நேசித்தேன். மற்றும் இப்போது ஓர் அசிங்கமான போர் அதனையெல்லாம் என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு போகிறது. ஏன்? நான் வேதனைப் படுகிறேன். அழ வேண்டும் போல் தோன்றுகிறது. அழுது கொண்டிருக்கிறேன். . . - உனது ஸ்லடா
திங்கட்கிழமை, ஜூன் 29, 1992
பிரியமான மிம்மி,
நாளெல்லாம் நான் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், உலகத்தினை ஜன்னல் வழியாகக் கவனிக்கிறேன். உலகின் ஒரு துண்டினை மட்டும்.
தெருக்களில் ஏகப்பட்ட அழகான நாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. தங்களால் இனியும் இரைபோட இயலாது என எஜமானர்களால் அவை கைவிடப்பட்டிருக்க வேண்டும். பாவம்! எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல், பாலத்தைத் தாண்டிச் சென்ற வேட்டைநாயினை நேற்றுப் பார்த்தேன். முன்னோக்கிப் போக விரும்பிய அது, நின்று திரும்பி பின்னோக்கியது. தனது எஜமானனைத் தேடியிருக்கலாம். அதனது எஜமானன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்பது யாருக்குத் தெரியும்? மிருகங்களும் இங்கே வருந்துகின்றன அவை கூடப் போரினால் விட்டு வைக்கப்படவில்லை. சியாவோ! . . . - ஸ்லடா
புதன்கிழமை, ஆகஸ்ட் 5, 1992
பிரியமான மிம்மி,
செய்தித்தாளில் இன்னொரு வேதனையான செய்தி. தன் மாமா (ஹாலிம் மாமா) இறந்து போயிருப்பதை அம்மா அறிந்து விட்டாள். வயதானவர்தான் என்றாலும் இந்த யுத்தம் அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி விட்டது. நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர் ஆச்சரியகரமான கிழவர். அவரை நேசித்தேன். யுத்த காலத்தில் அப்படித்தான் மிம்மி, உனக்குப் பிரியமானவர் இறந்து போவார். உனக்கு அது தெரியாது இருக்கும். யுத்தம், நெருங்கியவர்களுடன் தொடர்பு கொண்டிருக்க விடாது. அண்டை அயலார் தவிர்த்து, அண்டை வீட்டார் வாழ்வே இப்போது எங்கள் வாழ்வு. எல்லாமும் அந்த வட்டத்திற்குள் நிகழ்கிறது. மற்றவை எல்லாம் தொலைதூரத்தவை. . . - ஸ்லடா
வியாழக்கிழமை, நவம்பர் 19, 1992
பிரியமான மிம்மி,
அரசியல் தளத்தில் புதிதாய் ஏதுமில்லை. சில முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர். 'பசங்க' பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாங்களோ இறந்து கொண்டு, உறைந்து கொண்டு, பட்டினி கிடந்து, அழுது அரற்றி, நண்பர்களைப் பிரிந்து கொண்டிருக்கிறோம், நேசத்துக்குரியவர்களிடமிருந்து விலகி வந்து கொண்டிருக்கிறோம்.
இம்முட்டாள்தனமான அரசியலை எனக்கு நானே விளக்கிக் கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் யுத்தத்தினை ஏற்படுத்தி, அன்றாட நிஜமாக்கியது அரசியல்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. யுத்தம், பகல் பொழுதை அழித்துவிட்டு, கொடூரத்தால் நிரப்புகிறது. இப்போது பகல்களுக்குப் பதிலாக கொடூரங்கள் விரிவு கொள்கின்றன. இந்த அரசியல் என்பது செர்பியர், க்ரோஷியர் மற்றும் இஸ்லாமியர் என அர்த்தப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர்களெல்லாம் மானுடரே. ஒரே மாதிரியானவர்களே, பேதமில்லை. கை, கால்கள் தலைகள் கொண்டுள்ளனர். அவர்கள் நடக்கின்றனர் மற்றும் பேசுகின்றனர். ஆனால் இப்போது 'ஏதோஒன்று' அவர்களை வேறாக்க விரும்புகின்றது.
என் சிநேகிதியரிடையே, எங்கள் நண்பர்களிடையே, என் குடும்பத்திலே செர்பியர், க்ரோஷியர் மற்றும் இஸ்லாமியர் உள்னர். அது ஒரு கலவையானது, அவர்கள் யார் செர்பியர், க்ரோஷியர் (அ) இஸ்லாமியர் என ஒருபோதும் அறிந்து கொண்டதில்லை. இப்போது அரசியல் குட்டையைக் குழப்புகின்றது. அவர்களைப் பேதப்படுத்த விரும்புகிறது. அதன்பொருட்டு மிகவும் கருப்பான பென்சிலைத் தெரிவு செய்துள்ளது - அழிவு மற்றும் மரணம் என்று மட்டுமே பொருள்படும் யுத்தம் என்னும் பென்சில் அது.
யார் நல்லவர் மற்றும் நல்லவரில்லை என நமக்கே தெரிந்திருக்கையில், அரசியல் ஏன் நம்மை பிரிந்து சந்தோஷமற்றவர்களாக ஆக்குகின்றது? நாங்கள் நல்லவர்களுடனே அல்லாமல் கெட்டவர்களுடன் சேர்ந்திருக்கவில்லை. நல்லவர்களிடையே செர்பியரும் க்ரோஷியரும் இஸ்லாமியரும் இருக்கின்றனர் - கெட்டவர்களிடையே இருப்பது பாலவே. இது எனக்குப் புரியவே இல்லை. நிச்சயம் நான் சிறுமிதான்; அரசியல், பெரியவர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சிறியவர்களான நாங்கள் சிறப்பாகச் செய்வோம் என்று நான் எண்ணுகிறேன். நாங்கள் நிச்சயமாக யுத்தத்தைத் தேர்வு செய்திருக் மாட்டோம்.
'பசங்க' விளையாடுவதால், பசங்களாகிய நாங்கள் விளையாடுவதில்லை. அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வருத்தப்படுகிறோம், வெயிலையும், பூக்களையும் அனுபவிக்கவில்லை. எங்கள் குழந்தை பருவத்தை அனுபவிக்கவில்லை. நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம்.
எனது பங்கிற்கான தத்துவம் - நான் தனித்திருந்ததால் உனக்கு இதனை எழுத வேண்டும் என்று உணர்ந்தேன், மிம்மி. நீ என்னைப் புரிந்து கொள்கிறாய். அதிர்ஷ்டவசமாக நான் பேசிக் கொள்ள நீ கிடைத்திருக்காய் மற்றும் இப்போது நேசம் . . . - ஸ்லடா.
திங்கட்கிழமை, மார்ச் 15, 1993
பிரியமான மிம்மி,
மீண்டும் எனக்கு உடல்நலமில்லை. தொண்டை எரிகிறது. தும்மிக் கொண்டிருக்கிறேன். மற்றும் வசந்தம் வந்து கொண்டிருக்கிறது. போரின் இரண்டாம் வசந்தம். காலண்டரிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் நான் அதனைப் பார்க்க வில்லை. அதனை உணர முடியாததால், என்னால் பார்க்க இயலவில்லை. என்னால் பார்க்க முடிவெதெல்லாம், தண்ணீர் எடுத்துச் செல்லும் மக்களைத்தான் மற்றும் இன்னும் மோசமாகப் பாதிக்கப் பட்டவர்களைத் தான் - கை, கால்களை இழந்த இளைஞர்கள். உயிர்த்திருக்கும் அதிர்ஷ்டம் (அ) துரதிருஷ்டமாக இருக்கக்கூடும் - பெற்றிருந்தவர்கள் அவர்களே.
பூப்பதற்கு மரங்கள் இல்லை, பறவைகள் இல்லை, போர் அனைத்தையும் அழித்துள்ளது. வசந்தத்தில் பறவைகளின் சப்தங்களே காணோம். புறாக்களைக் கூட - சரஜிவோவின் குறியீடுகள் - காணோம். ஆரவாரிக்கும் குழந்தைகள் இல்லை. ஆட்டபாட்டங்கள் இல்லை. குழந்தைகளும் குழந்தைகளாகத் தோன்றவில்லை. தம்மிடமிருந்து குழந்தைப்பருவம் அகற்றுப் பெற்றுவிட்டதும், அவர்கள் குழந்தைகளாய் இருக்க இயலாது. சரஜிபோ மெல்ல இறந்து கொண்டிருப்பதாக, மறைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. வாழ்வென்பது மறைந்து போதல். எனவே என்னால் எப்படி வசந்தத்தை உணர முடியும்? வசந்தம் என்பது வாழ்வை விழிப்புற வைப்பது - இங்கே வாழ்வில்லாது, அனைத்தும் மடிந்து விட்டதாகத் தோன்றுகிறது.
மிம்மி, நான் திரும்பவும் வேதனைப்படுகிறேன். நான் மேலும் மேலும் வேதனைப்படுவதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். சிந்திக்கின்ற இடத்திலெல்லாம் வேதனைப்படுகிறேன். நான் சிந்திக்க வேண்டியுள்ளது. . . - உனது ஸ்லெட்டா
வியாழக்கிழமை, செப்டம்பர் 2, 1993
பிரியமான மிம்மி,
அலெக்ஸாண்ட்ரா (Le Figaro இன் பத்திரிகையாளர்) வந்தார். என்னிடம் விடைபெறவும், மேலும் சில புகைப்படங்கள் எடுக்கவும். அவரை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. சில சந்திப்புகளிலேயே நாங்கள் நிஜ நண்பர்களாகி விட்டோம்.
மோஸ்டாரில் இருந்த அவர் மிகவும் வேதனையில் இருந்தார். மோஸ்டார் பயங்கரமாகத் தோன்றுகிறது என்கிறார். உண்மையில், அது உயிர்த்திருக்கவில்லை, அவ்வளவு அழகிய நகரம், இல்லாது போயிருக்கிறது. மோஸ்டாரில் தான் பார்த்தவற்றால், மிகவும் நிலைகுலைந்து போயிருந்தார்.
சரஜிவோ இதே கதியைத்தான் அடையும் என்பதே நகரெங்கும் பேச்சாக இருக்கிறது. மிம்மி, நான் பயப்படுகிறேன். இப்போது மற்ற விஷயங்கள் முக்கியமென உனக்குத் தெரியும். இப்போது அதிகாரம் ஆளுகின்றது. அது மக்களை, குடும்பங்களை, நகரங்களை துடைத்தெறியக் கூடியது. இலட்சத்து ஒன்றாவது முறையாக என்னை நான் கேட்டுக் கொள்கிறேன் ! ஏன்? ஏன்? நான்? ஏன் இது நிகழ்கின்றது?
அலெக்ஸாண்ட்ரா தாயகம் திரும்புகிறார், தனது அமைதியான தேசத்திற்கு, அமைதியான நகரத்திற்கு தனது நண்பர்களிடமும் மற்றும் பணிக்கும் திரும்புகிறார். அவரிடம் அபரிமிதமாக உள்ளது. என்னிடம்?. எரியுண்டு நாசமான தேசமும், சிதைந்து போன நகரமும், உலகெங்கிலும் அகதிகளாக திரியும் நண்பர்களும் என்னிடம் உள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக, நீயிருக்கிறாய் மிம்மி, நிசப்தமான உனது பக்கங்கள் இருக்கின்றன. என் வேதனை மிக எண்ணங்களால் நிரப்பப்படுவதற்கென பொறுமையுடன் எனக்காகக் காத்திருக்கின்றன.
சரஜிவோவின் பழைய நூலகம் விஜெக்னிகாவிற்கு அலெக்ஸாண்ட்ராவுடன் சென்றேன். அதன் எண்ணற்ற புத்தகங்களைப் புரட்டியும் படித்தும், தலைமுறை, தலைமுறைகளாக மக்கள் தம் அறிவை செழுமைப்படுத்தினர். புத்தகங்கள் தான் மாபெரும் புதையல், மாபெரும் நண்பன் என யாரோ ஒருவர் ஒருமுறை குறிப்பிட்டார். விஜெக்னிகா அத்தகைய புதையலாக இருந்தது. அங்கே எங்களுக்கு நிறைய நண்பர்கள். இப்போது நாங்கள் புதையலையும், நண்பர்களையும் இனிமையான பழங்காலக் கட்டிடத்தையும் இழந்துள்ளோம். எல்லாம் தீக்கிரையாகி விட்டன.
விஜெக்னிகா இப்போது சாம்பல், செங்கல், பழைய காகிதத் துண்டுகளின் புதையலாக இருக்கிறது. நண்பர்களின் புதையலாக இருந்த அதன் ஞாபகத்தின் அர்த்தமாக ஒரு செங்கல் துண்டு மற்றும் ஓர் உலோகத் துண்டினை எடுத்து வந்தேன்.
அலெக்ஸாண்ட்ராவிடம் விடைபெற்றேன். மற்றும் திரும்பவும் சந்திக்கும் நம்பிக்கை உள்ளது என்றேன். .
- உனது ஸ்லடா.
|