என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக
கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே
|