அப்படியும் காலமொன்றிருந்தது
அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்
எமது குழுவில் இருந்தனர்
அவ்வயதையொத்த இளைஞர்களும்
அப்படியும் காலமொன்றிருந்தது
கவிதை நாடகம் பாடல் கூத்து
விவாதம் திரைப்படப் பிரதிகள் என
தேடித் தேடி அலைந்து திரிந்த
எண்ணற்ற அந்திப் பொழுதுகள்
அப்படியும் காலமொன்றிருந்தது
தெய்வத்துக்கு நிகராக
உளளத்தினுள் வீற்றிருந்த பிம்பங்களை
அவ்வாறே காத்திட
உணவின்றி
உறக்கமின்றி
தேனீர்தானுமின்றி
பொழுதுகள் பலவும் வாதம்புரிந்த
அப்படியும் காலமொன்றிருந்தது
எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத
என்னவானாலும்
மீளச் சென்று வர இயலுமானால்
எவ்வளவோ நல்லதென எண்ணக் கூடிய
அப்படியும் காலமொன்றிருந்தது
|