ஐ. ராபர்ட் சந்திரகுமார் , மதுரை |
|
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது மட்டுமின்றி, அதிகமான வாக்காளர்கள் பங்கு பெறும் மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையுடன் தற்போது 15 ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன? யார் ஆண்டால் நமக்கென்ன? எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் நமக்கு என்ன ஆகப்போகிறது? நமது வாழ்வில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? எல்லா ஆட்சிகளும் ஒரே மாதிரிதானே அமைகிறது? பிறகு ஏன் வாக்களிக்கச் செல்ல வேண்டும்? அப்படியே வாக்களிக்கச் சென்றாலும் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவில் உள்ளது போல, யாருக்கும் இல்லை எனது வாக்கு என பதிவு செய்து, போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும் புறக்கணிப்பு செய்யும் வகையில் வாக்களிக்க வழிகள் இருந்தாலும் பரவாயில்லை, அப்போதாவது வாக்களிப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கலாம் என்பதே இன்று பரவலாக எழுந்துள்ள மனநிலையாகும்.
அரசியல் என்பது முடிவெடுப்பதற்கான அதிகாரம். யாருடைய கையில் முடிவெடுப்பதற்கான அதிகாரம் உள்ளதோ அவர், அவரது ஆட்சி பரப்பின் எல்லைக்குட்பட்ட மக்களுக்கான அரசியல் நிலைபாட்டை எடுக்கிறார். முடிவு எடுப்பதில் குடிமக்கள் தங்களால் நேரடியாகப் பங்கெடுப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர்த்திட வேண்டி, தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் வாயிலாக பங்கெடுத்து வருகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளையும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையம் உற்று நோக்கினால் ஆச்சரியங்களையும், கோபங்களையும், விரக்திகளையும், மிகுந்த கவலையையும், இன்னும் மக்களுக்கான பல்வேறுபட்ட போராட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தங்களையும் நிரம்பவே அளிக்கிறது. டி.என். சேஷன் இந்திய தேர்தல் ஆணையராக இருந்தபோதுதான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை வெளியே கொண்டுவந்து பூனைக்கு மணி கட்டினார்.
1. இந்தியாவில் இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் 5, 13 மற்றும் 14வது மக்களவை மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
2. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
3. கடந்த 5 ஆண்டில், மக்களவை உறுப்பினர்கள் 543 பேர்களுக்குமான செலவுத் தொகை ரூ.585 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. கடந்த ஆட்சியில், அணுசக்தி உடன்பாடு தொடர்பான 1..2..3 உடன்படிக்கையை ஏற்பது தொடர்பாக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களிக்க வேண்டி, ஆளுங்கட்சியே லஞ்சம் வழங்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய நிகழ்வு மக்களவை உறுப்பினர்களின் மூலமாக பாராளுமன்ற வளாகத்திற்குள்ளாகவே வெளிக்கொணரப்பட்டது.
5. மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து பேசவோ அல்லது பேசாமல் இருக்கவோ, வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ லஞ்சம் வாங்கிய பிறகே முடிவெடுக்கின்றார்கள் நமக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
6. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தொகுதிக்கு தேவையான திட்டங்களைப் பற்றிய கேள்வியே எழுப்பாமல் அனேகம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. சென்ற முறையும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள தமிழக மக்களவை உறுப்பினர்களில் சிலர் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை கே.வி.தங்கபாலு - சேலம்(0), த.வேணுகோபால் -திருப்பத்தூர் (0), கிருஷ்ணன்- பொள்ளாச்சி (0), ஏ.கே.எஸ்.விஜயன்-நாகபட்டினம்(0), ஆர்.பிரபு-நீலகிரி (12), தயாநிதிமாறன் -மத்திய சென்னை (0), (அமைச்சரவையிலிருந்து விலகிய பின்)
7. கடந்த 5 ஆண்டு கால பதவிக் காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முழுமையாக கலந்துகொண்ட உறுப்பினர்கள் யாருமே இல்லை. நாடு முழுவதும் 12 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே 75 விழுக்காடு வருகை புரிந்துள்ளனர் (மத்திய அமைச்சர்கள் நீங்கலாக)
8. சென்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் ஆறில் ஒரு வேட்பாளரும், தமிழ்நாட்டில் உள்ள நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களில் முப்பதுக்கும் அதிகமான தொகுதிகளின் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
9. கடந்த தேர்தலின் போது ரூ. 9.6 கோடியை தனது சொத்து மதிப்பாகக் காட்டிய ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள விஜயவாடா மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் லகடபதி ராஜகோபாலின் சொத்து மதிப்பு இன்று ரூ.299 கோடி.
14 பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகும் அவலங்கள் தொடரும் இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பதிவு பெற்ற தேசிய கட்சிகள் 7, மாநில கட்சிகள் 49 மட்டுமே. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையோ 1027. இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும், வாக்காளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வந்தாலும், அதற்கு எதிர்மாறாக தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் மட்டும் தேக்கமடைந்த நிலையே நீடித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் 1985ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலின் போது பதிவான 64.1 விழுக்காடு வாக்குகளே இன்றளவும் இந்தியாவில் பொதுத்தேர்தலில் பதிவான அதிகளவு வாக்குகளாகும்.
இந்த தேர்தலில் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 கோடி பேரில், 71.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாவார்கள். 800 முதல் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் 8,24,804 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. சுமார் 11 இலட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தேர்தலுக்காக தோராயமாக ரூ.1,500 கோடி வரையில் செலவாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வெற்று முழக்கங்கள், ஏடுகளில் மட்டுமே தொடரும் வாக்குறுதிகள், மக்களைத் தொடர்ந்து ஏழைகளாகவே நீடிக்கச் செய்திடும் வகையிலான புதிய திட்டங்கள், பணவசதி மிக்க செல்வந்தர்களுடைய நலனைப் பிரதானப்படுத்திய திட்டமிடுதல்களும், சட்டங்களும், மகளிருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிவிட்டு குறைந்தபட்சம் தங்களது வேட்பாளர் தேர்வில் கூட அதை அமல்படுத்தாதது, தீணடாமை வன்கொடுமைகளுக்கும், ஜாதிய அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டும் வகையில் செயல்படுத்தத் தக்க சரியான மாற்று செயல்திட்டங்களை முன் வைக்காதது, நிலம், நீர், காற்று போன்ற அத்தியாவசியத்தேவைகளை அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்லாமல் இன்றைய வறிய நிலை குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தாதது, கல்வியில் தொடரும் ஏற்றத் தாழ்வுகள், மத்திய அரசு குறிப்பிட்ட மாநில மக்களிடம் மட்டும் மாற்றாந்தாய் மனப்போக்குடன் பாரபட்சமாக நடந்து கொள்வது, குடிமக்களை வஞ்சிக்கும் நிலை, உலகில் எங்கோ நடக்கும் மனித உரிமை மீறலுக்கும் கடும் கண்டனம் செய்வதும், குடிமக்களின் குருதி வழிச் சொந்தங்கள் அண்டை நாடுகளில் அழித்தொழிக்கப்படும் போது கண்டும் காணாமல் இருப்பதுடன் அந்த இழிசெயல்களை ஊக்குவிக்கும் போக்கு, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் நிலையை உருவாக்குதல் என்பது போன்ற இன்னும் இன்னும் ஏராளமான காரணங்களால் அரசியல் கட்சிகள் மீதும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீதும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைகளின் மீதும் வாக்காளர்களுக்கு மெல்ல, மெல்ல நம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. இப்படியாக இவ்வளவு ஆண்டு காலமாய் மனதிற்குள்ளேயே வெம்பிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் வாக்காளர்களுக்குத் தற்போது கிடைத்தற்கரிய ஆயுதமாய் கிட்டியுள்ளது 49 ஓ.
“தேர்தல் நடத்தை விதிகள் சட்டம்” 1961ன் பிரிவு “49 ஓ” “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் உரிமை அனைத்து வாக்காளர்களுக்கும் உள்ளது” என்று கூறுகிறது.
“தேர்தலின் போது வாக்காளர், வாக்குச்சாவடிக்குச் சென்று தனது பெயரை பதிவு செய்துவிட்டு, தனது விரலில் மை வைத்துக் கொண்டவுடன், வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரியிடம், தான் இங்கே போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனக்கூறி, அதை அப்படியே வாக்குச்சாவடியில் அதற்கென வைக்கப் பட்டிருக்கும் விதி “17அ” வின் கீழான படிவத்தில் பதிவு செய்து, அதை உறுதி செய்யும் வகையில் அதன் கீழ் கையெழுத்தோ, கைவிரல் ரேகை பதிவோ செய்துவிட்டு போகலாம்” என கூறுகிறது.
“வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை அவசியம்” என 89.15% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது” என்பது சட்ட முதுமொழி. ஆனால் அதே வேளையில், இயற்றப்படும் சட்டங்களை சாமானிய மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் வகையில் பரவலாகக் கொண்டு செல்ல நமது ஜனநாயக நாட்டில் ஆளும் அரசுகள் எடுக்கும் முயற்சிகள் நாம் அனைவரும் அறிந்ததே. அரசு மற்றும் அரசாங்கத்தின், அடிப்படை மக்களுக்கான சட்ட அமலாக்கத்தில் காட்டும் அதி தீவிர ஈடுபாட்டை பிரிவு 49 ஓ-வின் பரவலாக்கத்தின் மூலமாக நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் 49 ஓ பிரிவை பரவலாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் வாக்காளர்களுடைய கையில் அதிகாரம் மிகுந்துவிடும் என்ற அச்சத்தால் அரசியல் கட்சிகள் இன்றளவும் செய்யாமல் இருக்கின்றன.
பிரிவு 49 ஓ-வைப் பயன்படுத்துவது, தேர்தல் புறக்கணிப்பு என்பதாகாது. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வாக்கை முறையாகப் பதிவு செய்வதுடன், நமது வாக்கு கள்ள வாக்காக பதிவாகாமல் நம்மால் தடுக்கப்படும். அதே நேரத்தில், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீதான நமது எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டு வருவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகவும் இது அமையும்.
தேர்தலின் போது, சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஏழை, எளிய மக்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்கின்றனர். நடுத்தர மக்களில் பாதி பேரே தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். நடுத்தர வர்க்கத்தில் பாதியும், செல்வந்தர்களில் பெரும்பாலானோரது வாக்குகளுமே குறைவாகப் பதிவாகிறது. தங்களது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாத வாக்காளர்கள் மறைமுகமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். அதே வேளையில் தங்களது எண்ணங்களை வெளிக்காட்டுவதாக நினைத்து அதற்கு செயல் வடிவம் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.
100 விழுக்காடு வாக்குகள் பதிவாகி பெருவாரியான வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிப்பு செய்யப்படுவதற்கான ஓர் ஏற்பாடே 49 ஓ. ஆனால் நடப்பிலுள்ள தேர்தல் முறையில், பெருவாரியான 51 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறாரா என்றால் இல்லை. மாறாக, அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். தற்போது 324 மக்களவை உறுப்பினர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களே. தற்போது சராசரியாக ஒவ்வொரு தேர்தலின் போதும் 50 முதல் 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி வருகிறது. இதன் காரணமாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவான ஒரு தொகுதியில் முறையான மற்றும் கள்ள வாக்குகளின் மூலமாக 30 முதல் 35 விழுக்காடு வரையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அதோடு தங்களது வாக்கைப் பதிவே செய்யாத 40 விழுக்காடு வாக்காளர்கள், எதிராக வாக்களித்த 25 விழுக்காடு வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாத குழந்தைகள் உட்பட பெருவாரியான வாக்காளர்கள் வேண்டாமெனக் கருதுகிற வேட்பாளர்களே பெரும்பாலும் தேர்தலில் வெற்றியடைந்து அனைவருக்குமான பிரதிநிதியாக அறிவிக்கப்படுகிறார். தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் 40 விழுக்காடுக்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதேயில்லை. இப்படியாக, 30 முதல் 35 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெறும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வருவதால் அது முழுமையாக மக்கள் உணர்வை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை.
நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது இரகசியமாகச் செய்ய வேண்டிய செயல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களை நிராகரிக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 49ஓ என்ற பகுதி இன்றளவும் இடம் பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. இப்போது இருக்கும் சூழலில் படிவம் 17அ-வைப் பயன்படுத்தி வாக்குச்சாவடியில் பகிரங்கமாகத்தான் பிரிவு 49ஓ -வைப் பயன்படுத்த இயலும். 49 ஓ-வைப் பயன்படுத்தும் வாக்காளரை அடையாளம் காணும் உள்ளுர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கட்சியின் ஊராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களிடம் கூறி பின்னாளில் அந்த வாக்காளருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் இடையூறு விளைவிக்க செய்யும் வாய்ப்புகள் நமது சமூகத்தில் ஏராளமாய் உள்ளது. எனவே, வேட்பாளர்களை நிராகரிக்கும் வாக்கைப் பதிவு செய்யும் வகையில் வாக்களிக்கும் இயந்திரத்திலேயே கடைசியாக 49ஓ பிரிவையும் சேர்க்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பும் மற்றும் சில அரசு சாரா நிறுவனங்களும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்செய்தன. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்த வழக்கானது இன்றளவிலும் தீர்ப்பிடப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வாக்கு இயந்திரத்திலேயே வேட்பாளர்களைப் புறக்கணிப்பு செய்வதற்கான வாக்கைப் பதிவு செய்வதற்கான பகுதியும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றிபெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்கு 49ஓ-க்கு இருந்தாலும் அந்த வேட்பாளருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிக வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராகவே அறிவிக்கப்படுவார். அந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் அடுத்த தேர்தலில் நிற்கமுடியாது, வெற்றிபெற்றது செல்லாது என்று சொல்வதெல்லாம் சுத்தப்பொய். வாக்காளர்களாகிய நாம் 49ஓ-பிரிவை பயன்படுத்தி நாட்டிற்கு தேவையில்லாத அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு மட்டும்தான் காட்டமுடியும். 49ஓ வேட்பாளர்களுக்கு நிரந்தரமாக ஓ போடும் அளவிற்கு கூர்மையான ஆயுதமாக இருக்கவேண்டும்.
இன்றைய சூழலில் வேட்பாளர் தேர்வும், அதை மாற்றியமைத்தலும் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளின் தலைமையிடமே உள்ளது. அதில் முடிவெடுக்க வாக்காளர்களின் கையில் அதிகாரமேதும் இல்லை. இச்சூழலில் 49ஓ-வைப் பயன்படுத்தி வேட்பாளர்களை நிராகரிக்கும் வாக்குகள் கணிசமாகப் பதிவாகும் சூழலில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களை நேரடியாகத் தேடிவந்து, யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என கலந்தாலோசித்து பெருவாரியான வாக்காளர்களின் விருப்பப்படி முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக அமலில் இருந்தும் தெரியாமல் இருந்த துருப்புச் சீட்டை இனியாவது சரியாகக் கையாள்வோமேயானால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. அரசியல், சமூக, பண்பாடு மற்றும் கலாச்சார அரங்கில் மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வாக்காளர்களின் கையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய நிர்பந்தங்களைக் கொடுக்கக்கூடிய வகையிலான துருப்புச்சீட்டு 49ஓ வடிவில்……… இனி என்ன செய்யப் போகிறோம்?
|