வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

விளிம்பு நிலை மனிதர்கள், அதிகம் அறியப்படாத மனிதர்களின் அனுபவங்கள்
 
 
 

 

 

 

 

 

 
     
     
     
   
அனுபவம் புதுமை
1
 
 

நாம் தினம் தினம் பார்த்துப் பழகிப் போன மனிதர்கள், பார்த்தாலே அருவருவருப்பாக உணரும் மனிதர்கள் என இந்த சமூதாயத்தில் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை அவன் தொழிலை வைத்து எடைபோடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிணவறையில் காவல் காக்கும் காவலாளி, மனநிலை மருத்துவமனியில் வேலைபார்க்கும் பணியாள், செங்கல் சூலை மனிதர்கள் என இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வேலையை நம்மால் ஒரு நாள் கூட செய்ய முடியாவிட்டாலும், அவர்களை கேலி பேசுவதும், வசைபாடுவதும் சிலரின் மரபு.

இதுப் போன்ற விளிம்பு மனிதர்களின் தொழில் பற்றி அவர்களின் மனநிலையையும், அவர்களின் தொழில் பற்றி மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் நோக்கில் இந்தப் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதேப போன்று உங்களுக்கு தெரிந்த விளிம்பு நிலை மனிதர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

editor@thamizhstudio.com

   
   
   
   
   
   
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS மற்றவை TS அனுபவம் புதுமை


அனுபவம் புதுமை - கரி சூளைக்காரர் - பாலமுருகன் - காட்டேறிக் குப்பம்

ஆதவன், சா.ரு.மணிவில்லன்


உச்சந்தலையில் பட்டு உடல் வழியாக உள்ளங்காலை அடைந்து உசுரை உருக்கும் நண்பகல் நேர வெயிலில் நெருப்போடு கொஞ்சி விளையாடும் வித்தை கைவரப்பெற்றவர்கள் இவர்கள். கருவேல மரத்தை எரித்து அதன் புகையை சுவாசித்தால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்று எந்த மருத்துவ உண்மைகளும் தெரியாமல் தங்கள் தொழிலில் முனைப்போடு வேலை செய்யும் இவர்கள்.. அந்தப் புகையை கூட இன்முகத்தோடு சுவாசிப்பவர்கள்.

கால் இடறி சூளையின் குழிக்குள் விழுந்தால் உயிரே போகும் என்று தெரிந்திருந்தும், தினமும் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் கரி சூளைக்காரர்கள். விழுப்புரம் அருகே வழுதாவூர் என்று கிரமாத்தை சேர்ந்த இவர் பல ஆண்டு காலமாக இந்தத் தொழிலை செய்து வருகிறார். கரி சூளை அமைக்க புதியவர்களால் முடியாது என்பதும், இவர் தாத்தாக் காலத்தில் சூளை அமைக்கும் பணியை செய்தவரின் வாரிசுகள் மட்டுமே இப்போதும் பக்குவமாக சூளை அமைக்க முடியும் என்பதும் ஆச்சரியமான செய்தி. சூளையில் புகை வெளியேற இவர்கள் செய்திருக்கும் துளையில் தவறி இவர்கள் விழுந்தால் உயிரே போகும் என்பது நெஞ்சம் பதைக்கும் செய்தி. இவர்கள் செய்யும் தொழிலுக்கு எவ்வித அங்கிகாரமும் கிடையாது. தொழில் சங்கங்களும் இவர்களுக்கு கிடையாது.

தனது தொழில் பற்றியும், தேவைகள் பற்றியும் S. பாலமுருகன் நம்மிடம் பேசுகிறார்.

கரி சுடர இடத்துக்கு பேரு சூல. சூலையிலே இரண்டு வகை இருக்கு. ஒன்று மண்ணால் செய்த சூலை. இன்னொன்று விறகால் செய்த வேலை.

பட்டாவுல மரம் வாங்குவோம். ஏரிக்கரை மரங்கள அரசாங்கம் ஏலம் விடும்போது, அதுலபோயி நாங்க ஏலம் எடுப்போம். மரங்கள் அதிகமாக இருந்தா லட்ச கணக்கில போகும். மரம் கம்மியா இருந்தா கொறஞ்ச பணத்துக்கு கிடைக்கும். மரம் வெட்டற ஆளுங்கல விட்டு மரம் எல்லாத்தையும் வெட்டிஒரு இடத்துல கொண்டாந்து கும்மிச்சிருவோம்.

நூறு டன் விறகுன்னா எரிந்து முப்பது டன் கரியாகும். இந்த கரி எதுக்காக பயன்படுதுன்னா கம்பனிக்கு பயன்படுது, லாண்ரிக்கு பயன்படும். அடுத்தப்படியாக டீக்கடைக்கு பயன்படுது.

அப்பறம் இந்த மரம் எப்டி கரியாக சுட்டு எடுக்கிறம்னா, மரத்த ஒரு அகலமான இடத்துல கொட்டி சைஸ் வாரியா ஆள் வச்சி பொறுக்கி பிரித்து எடுப்போம். கீழ சுத்தமா செதுக்கி மொதல்ல மெலிசான சுள்ளிகல அடுக்குவோம். அதுக்குமேலே மொத்தமான கட்டைகல அடுக்கிடுவோம். விறகு அடுக்குவதற்கு பத்து நாளாகும். விறகை எல்லோராலும் சரியாக அடுக்க முடியாது.

எங்களுக்கு கட்ட அடுக்கிறவரு அவங்க அப்பா, தாத்தா என பரம்பரையா கட்ட அடுக்கறத தொழிலா கொண்டவர். கட்டைகளை அடுக்கினப்றம் அதுக்கு மேல சூல போடுவோம். சூல மேல மண்ணு போட்டு மூடுவோம். அது போல சுத்தி மண்ணு போட்டு மூடி தண்ணி தெளிச்சிடுவோம்.

சூலைக்கு அடியில வீட்டுக்கு எப்படி அடுப்பு கட்டுவோமோ அப்படி சுத்தி அடுப்பு கட்டுவோம். அடுப்புல தீ வைக்கைல புகை கீழே போகும். இதுல எரியக்கூடியது சோல கதிரு. உள்ளே நெருப்பு போட்டு, அதாவது பத்து அடியில கழிய போட்டு கழிக்கு மேல எட்டடி இல்லேனா பத்தடியிலே சூல வரும். அந்த சூலைக்கு மேல சந்து வரும். அந்த சத்துல நெருப்பு கொட்டி மேல மண்ணு போட்டு மூடிடுவோம். கீழே வந்து எறியாத அளவுக்கு, அதாவது வெறுமனே பொகஞ்சிக்கிட்டே வரணும், பொகையறத்துக்கு பத்து நாளாகும். பத்து நாளைக்கு அப்பறம் எங்களுக்கு சரியா தெரியும் சூல முடிஞ்சிடிச்சுனு. அதுக்கப்றம் மூன்று நாளு, மேலஎல்லாம் சுத்தி காத்து போகாம மண்ணு கொட்டி மூடிடுவோம். மூணு நாளுக்கு அப்புறம் தண்ணி ஊத்தி அணைச்சா அது கரியாகும்.

இந்த கரி மார்க்கெட்டுக்கு போனா ஒரு டன் பத்து ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் போகும். இங்க தரகு வியபாரிகளே வந்து கேட்டாங்க. நாங்க விறகு வாங்குனது, வெட்டுக் கூலி, வண்டிக்கூலி, சூல போட்ட ஆள் கூலி எல்லாம் கணக்கு பண்ணுவோம். எங்களுக்கு போதுமான லாபம் வந்தா இடை தரகர்கிட்ட கொடுத்திடுவோம். இல்லனா ஏமாத்தமா பணம் வேணுமின்னா கம்பெனியில கொடுத்திடுவோம்.

கரி மார்கெட்டுல நல்ல ரேட்டு போகுது. எங்களுக்கு அரசாங்க மானியம் கிடையாது. இது ஒரு கை தொழில். நெனைச்சா தொழில் பண்ணலாம். நெனைக்கலன்னா தொழில் பண்ண முடியாது. அதனால, கவர்மெண்டுக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. இது சொந்தமா செய்யற தொழில்.

ஒரு மாசத்துக்கு பத்து டன் கரி ரெடி பண்ணுவோம். இதுக்கு சுமார் முப்பது டன் மரம் போடணும். பெரிய மரம்னா ஒரு இருபது மரம் சேர்ந்தா முப்பது டன் வரும். சின்ன மரம், சுள்ளின்னா கணக்கு சொல்ல முடியாது.

ஆட்களுக்கு மரம் வெட்ட கூலி கொடுப்போம். இப்போ பெரிய மரங்கல வெட்டறதுக்கு மெசின் வந்திருச்சு. நாங்க வாங்கி வெட்டறது முள்மரம். வேலிகாத்தான் மரத்தை அரசாங்கமே அழிக்க சொல்லுது. இந்த மரத்தினால தண்ணீர் பாதிக்கப்படுது. வேற வகை மரங்களை வெட்டுனா ஒரு மரத்துக்கு பதிலா பத்து மரக்கண்ணுகல நடனும்னு அரசாங்கம் சொல்லுது. முள்ளு மரத்த வெட்டிதினால நமக்குதான் பலனே தவிர பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல.

இன்னைக்கு நாங்க கஷ்டப்பட்டாலும் நாளைக்கு எங்க குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும் நம்பிக்கையோடு உள்ளோம்.

இது லாபகரமான தொழில்தான். சூலையில நெருப்பு வச்சி ரெண்டு நாளுக்கு அப்பறம் மழை பெய்ஞ்சா பாதிப்பு இல்ல. நெருப்பு வச்ச அன்னிக்கே மழை பெய்ஞ்சா பாதிப்புதான்.

இன்னைய கால கட்டத்துல கவர்மெண்டுல வேலைய எதிர்பார்க்காம ஒவ்வொரு இளைஞரும் சொந்த கால்ல நிக்கனும், சொந்த தொழில் பண்ணனும் நேர்வழியில போகனும், குறுக்கு வழி போகக்கூடாது.

இந்த சமுதாயத்துல எவ்வளவோ இளைஞர்கள் பாதிக்கப்படறாங்க. நானும் ஒரு இளைஞன் நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். எவ்வளவு பேர் அறிவுரை சொல்லி கேட்காம எவ்வளவோ சீரழஞ்சி போயிட்டேன்.

நான் பல முறை சொந்தமா யோசித்து பார்த்தேன். இன்னைக்கு நாம மத்தவங்கள பாத்து அவர் லட்சாதிபதியா இருக்காரு, இவரு கோடீஸ்வரனா இருக்காரு என்று சொல்றோம். ஏன்னா அவங்கல்லாம் திருட்டு வழியில போகல, அவங்களும் ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டுதான் ஒரு தொழில் பண்ணி முன்னேறியிருக்காங்க.

அதுபோல நாம்பலும் பொறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம்னு இருக்கிறதவிட நாம் பொறந்து குடும்பத்துகு என்ன பண்ணினோம், இந்த ஊருக்கு நாம என்ன பண்ணினோம், நாமும் வாழ்க்கையில முன்னேறுனும் அப்பதான் இந்த சமூகத்தல நாலு பேர் மதிப்பாங்க. இல்ல நம்மல இந்த சமுதாயம் மதிக்காது. என்னுடைய லட்சியம், கொள்கை எல்லாம் லட்சாதிபதியாகனும், ஏன் அதைவிட கோடீஸ்வரனாகுனும் என்பதுதான். நான் கண்டிப்பா கோடீஸ்வரனாகுவேன். என்னுடைய உழைப்பு உழைப்பு உழைப்புத்தான் மூலம் இந்த சூலை மூலமாகவே நான் பெரியாளாவேன்.

அதுக்கு இந்த சமுதாயம் ஒத்துழைக்கும். பல பேரும் எனக்கு நன்மை செஞ்சுகிட்டு இருக்காங்க. ஒரு தொழில் பண்ணனும்னா சொந்த பணத்த வச்சுதான் தொழில் பண்ணனும் அவசியம் கிடையாது. சொந்த முயற்சி இருந்தா கடன் உடன் பட்டாவது தொழில் பண்ணலாம். செய்யும் தொழிலே தெய்வம். தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

இந்த தொழில தமிழ்நாடு முழுக்க செய்யுறாங்க. இங்க 25 கிலோ மீட்டர் சுத்துவட்டாரத்துல நாங்க செய்யுறோம். எங்க தொழிலுக்கு சங்கம் எதுவுமில்லை. விழுப்புரம் மாவட்டத்துல சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பியுள்ளோம். அவர்களை எல்லாம் ஒண்ணுசேத்து சங்கம் அமைக்கலாம் என உள்ளோம். எல்லோரும் ஏழை விவசாயிகள். மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்யுற இந்த தமிழக அரசாங்கம் எங்களும் உதவும் என நம்பிக்கையோடு உள்ளோம்.

மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/09062010#

சந்திப்பு & ஒளிப்படங்கள் : ஆதவன்
எழுத்து: சா.ரு. மணிவில்லன்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.