இதழ்: 5, நாள்: 15 - சித்திரை -2013 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 3- ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
திரைமொழி 4 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 4 - யாளி
--------------------------------
வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – வெங்கட் சாமிநாதன்
--------------------------------
ஐந்தாவது முத்திரை - The Fifth Seal - எஸ். ஆனந்த்
--------------------------------
வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் - வி.களத்தூர்ஷா
--------------------------------
லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு - கார்த்திக் பாலசுப்ரமணியன்
--------------------------------
பிழை மறைக்கும் கலை அழகியல் - தினேஷ்
--------------------------------
   
   


ஒரு கதை கவிதையாகும் தருணம் - 4

கதை நேரம் - மாலனின் "தப்புக் கணக்கு"

- யாளி


" கல்விதான் நம் குழந்தைகளின் எதிர்காலம் என்பதை நாம் அறிவோம். அவர்கள் நல்ல வேலைக்காக இண்டியானாவில் இருக்கும் குழந்தைகளோடு மட்டுடின்றி இந்தியா, சீனா மற்றும் உலகில் உள்ள அத்தனை நாட்டுக் குழந்தைகளோடும் போட்டியிடப் போகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம் " - பாராக் ஒபாமா.

இந்தியாவில் பொறியியல் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள மாபெரும் கனவு, நாடு முழுவதும் விரவியிருக்கும் பதினாறு ஐ.ஐ.டிகளில் ஏதேனும் ஒன்றில் எப்படியாவது ஒரு சீட்டைப் பெற்றுவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். (இப்படி ஒரு ஸ்தாபனம் இருப்பதைக் கூட அறியாமலே இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதற்காக முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். பிரிட்டிஷ் காலத்தில் வெளிப்படையாக அறிமுகப்படுத்தப்பட்ட "கீழ்நோக்கிய வடிகட்டும்" தியரி, அதாவது சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு கிடைத்தது போக மிச்சம் மீதி மத்திய வர்க்கத்திற்கும், அதிலும் மீந்தது அடித்தர வர்க்கத்திற்கும் அளிக்கப்பட்டது. அது இன்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிலவுவது நம் ஜனநாயகத்தின் மிகப் பெரிய சவால்.). ஆண்டுதோறும் அதிலிருக்கும் பத்தாயிரத்திற்கும் குறைவான சீட்டுகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இப்படி நாட்டின் ஆகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் வெறும் மூன்றே மூன்று மட்டுமே ஆசியாவின் சிறந்த கல்லூரிகளின் முதல் 100க்குள் இடம் பிடிக்க முடிந்தது. உலக அளவில் கூட இல்லை. ஆசிய அளவில் மட்டுமே. முதல் இருபத்தைந்தில் ஒன்று கூட இல்லை.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒரு உத்தரவு போட்டது. அக்கழகம் பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யச் சொல்லியிருக்கிறது. காரணம்? இவற்றில் பல கல்லூரிகள் வேலைக்குத் 'தகுதியற்ற' பல்லாயிரக் கணக்கான பட்டதாரிகளை ஆண்டுதோறும் வெளியேற்றுகின்றன.

மற்றும் ஒரு செய்தி. அண்ணா பல்கலை கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய கணிதப்பாடம் ஒன்று, முதல் இரண்டாண்டுகள் ஒவ்வொரு செமஸ்டரிலும் உண்டு. அதில் இந்த வருடம் 60% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அனைத்து வகை பொறியியலுக்கும் அடிப்படையே கணிதம் தான்.

இந்த செய்திகள் எல்லாம் சுட்டிக்காட்டுவது, நாட்டின் கல்வி முறைகளில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டையை. நமது பள்ளிக்கூடங்கள் ப்ரி.கே.ஜியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து கடும் முயற்சியால் லட்சோபலட்சம் ஜெராக்ஸ் மிசின்களை உற்பத்தி செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தை உதாரணமாகக் கொண்டு, இந்தியாவின் கல்வி அமைப்பையே கேள்வி கேட்கிறது ஒரு குறும்படம். ஏன் குறும்படம் கேட்கக்கூடாதா? அதற்கும் ஐ.ஐ.டியில் இருந்து ஒருவர் வந்துதான் கேட்க வேண்டுமா?

இங்கே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒபாமாவின் அந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை. நம் குழந்தைகளுக்குப் போட்டி பக்கத்து வீடுகளிலிருந்த காலம் மாறி இன்று பக்கது நாடுகளிலிருந்து வருகின்றது. ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே அது குறித்த அச்சம் இருக்கும் பொழுது, நாம் இந்தப் போட்டிக்கு எந்த அளவில் தயாராகி இருக்கிறோம்? நமது கல்விமுறை இப்போட்டிகளை சமாளிக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளதா? கல்விமுறை என்றால் வெறும் பாடப் புத்தகம் மட்டுமல்ல. பள்ளியின் தரம், ஆசிரியர்களின் தகுதி, கற்றுக் கொடுக்கப்படும் முறை என ஏராளம்.

இந்தக் குறும்படத்தின் மூலக்கதையான "தப்புக் கணக்கு" கதையை எழுதியவர் தற்போதைய புதிய தலைமுறை இதழின் ஆசிரியரான எழுத்தாளர் மாலன் அவர்கள். " என்னுடைய கதைகளில் 'நுட்பத்தைவிட சத்தம் அதிகம். அது வேண்டுமென்றே தேர்ந்து கொள்ளப் பட்டது. எனக்குப் பூடகமாக சொல்வதில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஊசிகள் செய்வதில் ஆர்வமில்லை. ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான்" - இவை தன் கதைகள் குறித்து மாலனே கூறியவை. அவரின் மிகக்கூர்மையான ஈட்டியே இக்கதை. இந்த ஈட்டியின் பாய்ச்சலை விரைவுபடுத்தி வீரியமூட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா.

ஒரு வாரத்திற்கு 7 நாட்கள் என்றால், இரண்டு வாரத்திற்கு எத்தனை நாட்கள் என்ற கேள்விக்கு குழந்தை சக்தி (சிறுகதையில் ஜனனி) 7 * 2 = 14 என்று விடையளித்திருக்கிறாள். அவளது டீச்சரால் அது தவறு என்று போடப்பட்டுள்ளது. அதன் பொருட்டு கேள்வி கேட்கப் புறப்படுகிறார் சக்தியின் தாத்தா. அதற்கு அந்த டீச்சர் இது இரண்டாம் வாய்ப்பாடுக்கான கணக்கு எனவே, இதன் விடை தான் சொல்லிக் கொடுத்த மாதிரியே 2 * 7 = 14 என்றே இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இந்தப் பிரச்சனையை பிரின்சிபால், மாவட்ட கல்வி அலுவலர் என்று எடுத்துச் செல்லும் அந்தத் தாத்தாவிற்கு கிடைத்த விடை என்ன என்பதே இக்குறும்படத்தின் கதை.

மாலனே சொல்வது போல அலங்கார பூச்சுக்கள் ஏதுமின்றி நேரடியாக தப்புக் கணக்கில் தொடங்குகிறது கதை. ஆனால் அதை குறும்படமாக வார்க்கும் போது அப்படியே எடுத்துவிட முடியாது . எடுத்துக் காட்டாக ஒரு சிறுகதையில் " அன்று பொங்கல் காலை. வீடே கலை கட்டியிருந்தது. " என்ற ஒற்றை வாக்கியத்தில் முடிந்துவிடும் ஒரு சிறு நிகழ்வை திரைமொழியில் படமாக்கும் பொழுது அது கோரும் உழைப்பு அசூரத்தனமானது. அதே போல்தான், சிறுகதையில் வரும் சிறுமிக்கும், அவள் தாத்தாவிற்கும் இடையேயான உறவை பார்வையாளனுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அந்த முதல் ஆடல் பாடல் காட்சி இருக்கும். அதற்கு அடுத்த காட்சி அந்தக் குழந்தையின் மாற்றுச் சிந்தனை, எதையும் கேள்வி கேட்கும் அறிவு போன்ற குணங்களை வெளிப்படுத்துவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

தலையில் போடும் ரப்பர் பேண்டை கையில் வளையலாக அணிவது, ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ரோஜாவிற்கு ஏன் ரோஜா எனப் பெயர் வந்தது என்று தாத்தாவுடன் ஆராய்வது, படிக்கும் நோட்டை இரண்டு துண்டாக வெட்டி உபயோகிப்பது, அவரை விடாமல் கேள்விகளால் துளைத்தெடுப்பது போன்ற வசனங்களாலும், காட்சிகளாலும் அக்குழந்தையினைப் பற்றிய பிம்பத்தை முதல் காட்சிகளிலேயே அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர். அதுவே பின்பு இயக்குனரின் வேலையை எளிதாக்கி விடுகிறது. அக்குழந்தையின் அறிவினை விளக்க இத்தனை காட்சிகள் தேவையா என்ற கேள்வி எழலாம். ஆனால் மற்றவர்களை விட மாற்று வழியில் சிந்திக்கும் குழந்தை அது என்பதை உணர்த்தவே அடுத்தடுத்த காட்சிகள் அவ்வாறாக வைக்கப் பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒரே விஷயத்தை திரும்பச் சொல்லும் போது பார்வையாளன் சலிப்படைந்து போகாத வண்ணம் சுவாரஸ்யமாகவும் சொல்ல வேண்டும். அதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, தான் ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர் என்பதை தெரிவுபடுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா அவர்கள்.

அதே போல பேத்தியின் மாற்றுச் சிந்தனை குறித்து எப்போதும் பெருமை கொள்கிறார் அந்த தாத்தா. அதை எடுத்துக் கூறும் வகையில் அந்த "தப்புக் கணக்கு" பிரச்சனைக்கு முன்பாகவே ஒரு காட்சியை வைத்திருப்பார் இயக்குனர். தன் பேத்தி அவளது நோட்டை இரண்டு துண்டாக்கிக் கொண்டு வந்து " நானே செய்தது" என்று தாத்தாவிடம் கூறுவாள். வழக்கமான தாத்தாவாக அப்படி நோட்டை இரண்டாக துண்டாக்கியது குறித்தோ, அதன் பொருட்டு கத்தியை உபயோகித்தது குறித்தோ கண்டிக்காமல் அதிலிருக்கும் அவளது கற்பனைத்திறத்தை பாராட்டுகிறார் தாத்தா.

எதற்கு இப்படியான முன்-காட்சிகள் அவசியம்? இத்தகைய காட்சிகளே கதையின் பாத்திரங்கள் குறித்தான பிம்பங்களை பார்வையாளனிடத்தே ஏற்படுத்த உதவுகின்றன. சொல்ல வரும் கதையின் நம்பகத்தன்மையை நிலை நாட்ட இவை மிகவும் அவசியம். தற்போது தமிழில் வரும் சில குறும்படங்கள் மிக வலுவான கதையை தன்னில் வைத்திருந்தாலும் கூட, சரியான பாத்திர படைப்புகள் இல்லாத காரணத்தாலும், அதை சரியான முறையில் பார்வையாளனிடத்தே கொண்டு சேர்க்காததாலும் அவற்றின் வலுவான கதை கூட சமயத்தில் நீர்த்துப் போய்விடுகின்றது. அதே நேரத்தில், இத்தகைய முன்-காட்சிகள் அதிகமாக போய்விடும் பட்சத்தில், குறும்படம் கதையை நோக்கிச் செல்லாமல் விலகிச் சென்றுவிடும் அபாயமும் உண்டு.

நான் மேலே சொன்னப்படி திரைக்கதையை சுவாரஷ்யம் கலையாமல் எடுத்துச் செல்ல உதவுபவை வசனங்கள். அதற்கு உதாரணம் இக்குறும்படத்தில் வரும் தாத்தா-பேத்திக்கு இடையேயான வசனங்கள்.

சக்தி : ஒன் பேர் என்ன தாத்தா?
தாத்தா: (ஆச்சர்யமாக ) ஆ.. அது தெரியாதா.. வைத்திய லிங்கம்
சக்தி : (கேலியாக தன் வயிற்றை முன்னால் தள்ளி அதை கையால் தட்டி காண்பித்தபடி) வைத்துலிங்கமா?
தாத்தா : (சிரித்தபடி) வைத்துலிங்கமெல்லாம் இல்ல.. (கையை உயர்த்தி கர்வமாக) வைத்திய லிங்கம்
சக்தி : (தாத்தா சொன்ன அதே பாவனையில்) வைத்திய லிங்கம்.. இது யாரு வச்ச பேரு தாத்தா?
தாத்தா: வேற யாரு வப்பாங்க.. எங்க அப்பா அம்மா..
சக்தி : அப்பாவா? அம்மாவா?
தாத்தா: (தடுமாறியபடி..) அது வந்து வந்து நான் கேக்கலமா.
சக்தி : ஏன் கேட்கல?

இப்படியாக சுவையாகவும், சுவாரஷ்யமாகவும் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள். (மேலே குறிப்பிட்ட வசனங்களில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விவரணைகளும் வசனங்களிலேயே அடங்கும். அதுதான் எழுத்தை இயக்கமாக்கும் பொழுது, எழுத்திற்கும் படைப்பிற்குமான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. கடந்த பேசாமொழி இதழில் வெளியான படிமை மாணவர் செந்தூரன் அவர்களின் "பெல் அடிச்சாச்சு" திரைக்கதையை வாசித்தவர்கள் கவனித்திருப்பார்கள். செந்தூரன் தனது ஸ்கிரிப்டில் வசனங்களினூடே கேமரா வைக்கப்பட வேண்டிய கோணம் குறித்தெல்லாம் கூட எழுதியிருப்பார். தவறவிட்டவரகள் வாசிக்க: http://www.pesaamoli.com/mag_4_script.php. இப்படி ஒரு கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லாத பட்சத்தில் களப்பணியில் இறங்கியதும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க வேண்டியவரும்). அதே நேரத்தில் அவற்றைப் பேசும் கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்தும் அவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு சக்தியின் டீச்சர் கதாப்பாத்திரம் பேசும் வசனங்கள் மென்மையாக அமைக்கப் பட்டிருந்தால் அங்கேயே இந்தக் குறும்படம் தோல்வியை நோக்கித் திரும்பிவிடும். அந்த டீச்சர் கேரக்டரின் வசனத்திலும், நடிப்பிலும் இருக்கும் அந்த அலட்சியமும் கடினமுமே படத்தில் அக்குழந்தையின் மீது பரிவையும், நமது கல்வி முறை பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றன.

அதே போல சக்தியாக வரும் அந்தச் சிறுமி பேசும் வசனங்கள் யாவும் அறிவார்த்தமாக அதே நேரத்தில் யதார்த்தத்தில் குழந்தைமையை மீறாத வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இதுதான் வசனகர்த்தாவின் வெற்றி. அந்த வசனங்களில் வசனகர்த்தா தனது மேதமையைப் புலப்படுத்தும் வண்ணம் வசனம் எழுதியிருந்தால், அவை பார்வையாளனின் நம்பகத் தன்மையைச் சிதைத்துவிடும். அதுவே பார்வையாளனை படத்திலிருந்து விலகிச் செல்ல வைத்துவிடும். குறும்படத்தில் ஒரு காட்சியில் வகுப்பில் டிக்டேஷன் சொல்லிக் கொண்டிருப்பார் ஆசிரியர். அவர் " சன் " என்று கூறிய பின்னும் கூட சக்தி எதையும் எழுதாமல் உட்கார்ந்திருப்பாள். அது குறித்து, ஆசிரியர் கேட்கும் பொழுது சக்தி கேட்பாள் " எந்த சன் டீச்சர் ? மகனா சூரியனா? " என்று. சலித்துக் கொண்டு சூரியன் என்று சொல்வார் ஆசிரியர். ஐடியலாகப் பார்த்தால் இந்தக் காட்சி எப்படி இருந்திருக்க வேண்டும். அப்படி ஒரு கேள்வி கேட்ட குழந்தையை உச்சி முகர்ந்து பாராட்டியிருக்க வேண்டாமா? ஆனால் அதுவா இங்கு நடக்கிறது? வகுப்பறையில் நுழைந்ததும் ஆசிரியர்கள் பலரும் சொல்லும் முதல் வார்த்தையே "சைலன்ஸ்". அப்போது வாயை மூடியவர்கள் தான், அதன் பின் எந்தக் காலத்திலும் மாணவர்கள் வாயைத் திறப்பதே இல்லை. கை கட்டி, வாய்ப் பொத்தி, ஏவியதைச் செய்யும் குமாஸ்தாக்களை மட்டுமே வார்த்தெடுக்கின்றன நம் பள்ளிகளும், கல்லூரிகளும். இதை பிரதிபலிக்கும் விதமாகவே டீச்சரின் கதாப்பாத்திரமும், அப்பாத்திரத்திற்கான வசனங்களும் எழுதப்பட்டிருக்கும்.

சக்தியாக வரும் குழந்தையின் நடிப்பு அபாரம். தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சலாம் போலிருக்கிறது. செல்லம் கொஞ்சும் குரலில் பேசும் வசனங்களும், அதற்கேற்ற முகபாவங்களுமாய் இக்குறும்படத்தை உயிர்ப்பித்திருக்கிறாள். அம்மாவிடம் பொய் சொல்லும் அந்த கண்களும், தாத்தாவிடம் கொஞ்சும் அக்குழந்தையின் மழலையும் அழகு. அதிலும் 100% வாங்காமல் தாத்தாவிடம் வந்து நிற்கும் அந்த உடல்மொழி பேசும் வார்த்தைகள்தாம் எத்தனை எத்தனை !. அதே போல் தாத்தாவாக வருபவரின் இன்றைய கல்விமுறை பற்றிய ஆதங்கம் நம்மையும் பற்றிக் கொள்கிறது. பேத்தியுடன் பேசும் காட்சிகளில் குழந்தையாக மாறும் பொழுதும், அவளுக்காக கல்விமுறையையே எதிர்த்து அலைந்து போராடியபடி தார்மீகக் கோபம் கொண்டு பொங்கும் போதும் அவர்மீதான நமது மரியாதை கூடுகிறது. அதுதான் நடிப்பின் வெற்றி. டீச்சராக வரும் சுஜிதா இரண்டே காட்சிகளானாலும் மனதில் நிற்கிறார். அந்த இளம் பருவத்து ஆசிரியர்களுக்கே உரித்தான கர்வம் இயல்பாய் வந்திருக்கிறது அவருக்கு. அப்பாவாக வரும் தலைவாசல் விஜய் முதலான மற்றவர்கள் தங்களுக்களிக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்தி போயிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் 90களின் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வியலை இந்த கதைநேரம் தொடரைப் போல அழுத்தமாக பதிவுசெய்த வேறேந்த ஆவணமும் நம்மிடத்தே இல்லை என்றே தோன்றுகிறது. சிறுகதையில் கதை நடக்கும் "களம்" குறித்த விளக்கங்கள் பெரிதாக இல்லை. என்றபோதும், அதில் சொல்லப்பட்டிருக்கும் கதையின் தன்மையை வைத்தே களத்தை முடிவு செய்திருக்கிறார் இயக்குனர். இதே கதையை மேல்தட்டு மக்களிடத்தே நடக்கும் நிகழ்வாக கற்பனை செய்து பாருங்கள். களம் கதையோடு பொருந்தவே பொருந்தாது. அப்படியே முயற்சித்திருந்தாலும் இந்த அளவிற்கு சிறப்பாக வரச் சாத்தியமே இல்லை. இப்படி தகுந்த களத்தை தேர்ந்தெடுப்பது இயக்குனர் என்றால் அதைச் சாத்தியப் படுத்துவது கலை இயக்குனர். இருக்கும் குறைந்த நேரத்தில், பணக்கட்டுபாடுகளுக்கு உட்பட்டு அதைச் சாத்தியப்படுத்துவதற்கு அசாத்திய திறமை இங்கு அவசியம்.

இப்படியாக அகழ்ந்தெடுத்த கதை, நுண்ணிய விவரங்களோடு எழுதி எழுதி திருத்திய வசனங்கள், கதையோடு இயைந்த பாத்திர படைப்புகள், பாத்திரத்தோடு ஒன்றிப்போகும் நடிகர்கள் தேர்வு, படைப்பை மீறி துருத்தாத ஒளிபதிவு மற்றும் இசை, தேவையற்றதை நீக்கி தெளிவு பெற்று நிற்கும் சிற்பம் போன்ற படத்தொகுப்பு, இவற்றையெல்லாம் ஒரு நேர்கோட்டில் பயணிக்கச் செய்யும் இயக்கம் என இத்தனையும் சேர்ந்தால் மட்டுமே நம்மில் ஒரு உலகத்தரத்தில் இது போன்ற குறும்படங்களைத் தர முடியும். மறுபடியும் இங்கு சொல்ல விரும்புகிறேன். பாலு மகேந்திரா எடுத்திருப்பது படம் அல்ல பாடம்.

குறும்படம் ஆரம்பித்ததில் இருந்து நமது கல்விமுறை பற்றிச் சாடினாலும், முடியும் தருவாயில் அது முன் வைக்கும் மற்றொரு பிரச்சனையும் இன்றளவும் முக்கியமான ஒன்று. குழந்தையின் மாறுபட்ட சிந்தனையை மறுத்துப் பேசி, அப்பாக வரும் தலைவாசல் விஜய் சொல்லும் காரணம் இதுதான். "பொம்பளயா பொறந்தா ஊரோட ஒத்துப் போகணும். இல்லேனா அவளுக்கும் அவஸ்தை, மற்றவர்களுக்கும் இம்சை". மாற்றுச் சிந்தனையை எதிர்க்கும் இந்தச் சமூகம், அதே மாற்றுச் சிந்தனையை முன்மொழிந்தது ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அதையே மூர்க்கத்தனமாய் எதிர்க்க ஆரம்பித்துவிடுகின்றது. ஆக, இதில் சொல்லப்பட்ட இரு முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வென்னவோ ஒன்றுதான். கல்விமுறையில் கொண்டு வரப்படும் மாற்றம். அதுவே மொத்த சமூகச் சிந்தனையிலும் மாற்றம் கொண்டு வரும்.

ஒரு நாட்டின் கல்விமுறையே எதிர்த்துக் கேள்வி கேட்கிறது இந்தச் சிறுகதையும், குறும்படமும். ஆனால் இது உரியவர்களைச் சென்றடைந்தா என்றால் எஞ்சி நிற்பதென்னவோ மிகப்பெரிய கேள்விக்குறி மட்டுமே.

* * *

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </