இதழ்: 3, நாள்: 15-மாசி்-2013 (Feb)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
குட்டி ரேவதியுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
திரைமொழி 2 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 2 - யாளி
--------------------------------
அம்ஷன் குமாரின் சினிமா ரசனை - அருண் மோகன்
--------------------------------
ரோமன் பொலான்ஸ்கியின் நேர்காணல் - தமிழில் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
புரொபெசர் ஹானிபல் - எஸ்.ஆனந்த்
--------------------------------
நேசிக்கப்படுகிறதா சினிமா? - அருண் மோகன்
--------------------------------
A Separation - - எம். ரிஷான் ஷெரிப்
--------------------------------
Ten டென் மினிட்ஸ் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
   
   


அம்ஷன் குமாரின் "சினிமா ரசனை"

அருண் மோகன்

தமிழ்நாட்டில் திரைப்பட ரசனை தொடர்பாக பேசுவதும், எழுதுவதும் வெகுவாக குறைந்து வரும் வேளையில், சினிமா ரசனை போன்ற புத்தகங்களின் தேவை இன்றியமைததாகிறது. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான அம்ஷன் குமாரின் "சினிமா ரசனை" புத்தகம் இப்போதும் மீண்டும் சில முக்கியமான மாற்றங்களுடன் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்ற மாதம் 29 ஆம் தேதி சென்னை புக் பாய்ன்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பாலு மகேந்திரா, வசந்த், பாலாஜி சக்திவேல், இந்திரன், சுபகுணராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், தமிழ் ஸ்டுடியோ அருண், நூலாசிரியர் அம்ஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நூலை பாலு மகேந்திரா வெளியிட, வசந்த் பெற்றுக் கொண்டார். இந்த நூலை நிச்சயம் எல்லாரும் வாசிக்க வேண்டும். முக்கியமாக திரைப்படம், புகைப்படக் கலையில் இருப்பவர்கள் தவற விடக்கூடாத நூல் இது.

பொதுவாகவே நாம் நமது சினிமா பற்றிய ரசனையை மறுபரிசீலனை செய்யாமல், முன்னமே நமக்கு கற்பிக்கப்பட்ட சில கூறுகளுடன் சினிமாவை இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகில் சினிமா தோன்றிய அடுத்த வருடம், இந்தியாவிலும் அறிமுகமானது. இன்னமும் உலகில் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு நடந்தால் அது உடனே இந்தியாவிலும் வெளிவந்து விடுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பரவலாக சினிமா சார்ந்து இருக்கும் ரசனை மட்டும் இன்னமும் முற்றிலுமாக இந்தியாவை வந்து அடையவில்லை என்பது எத்தனை சோகமானது. திரைப்பட ரசனைக்கு மிக முக்கியாமனது அதிக அளவில் திரைப்படங்களை பார்ப்பது. ஆனால் எந்த வகையிலான திரைப்படங்களை பார்ப்பது என்பதில் தொடங்குகிறது நமது திரைப்பட ரசனையின் அறியாமை. எந்த ஒன்றையும் ரசனையோடு அணுக அது சார்ந்த சில புரிதல் அவசியம். அதன் வரலாறு, தொழில்நுட்பம், அணுகுமுறை போன்றவற்றை குறைந்த அளவிலாவது தெரிந்துக் கொண்டால்தான் நாம் அது சார்ந்த ரசனையை வளர்த்துக் கொள்ள முடியும்.

திரைப்படங்களை நாம் எப்படி பார்க்கிறோம் என்கிற கேள்விக்கு உடனடியாக, நக்கலாக நாம் சொல்லும் பதில் கண்களால்தான் பார்க்கிறோம் என்பது. ஆனால் உண்மையாகவே திரைப்படங்களை பார்ப்பது நமது கண்களாக இருந்தாலும், அதை புரிந்து கொண்டு பார்ப்பதற்கு நமது மூளையே பிரதான காரணி என்பது பலருக்கு தெரியாத உண்மை. ஒரு நொடிக்கு 24 சட்டகங்கள் (Frames) நகர்ந்தால் மட்டுமே நம்மால் திரைப்படத்தை பார்க்க முடியும். இதற்கிடையில் ஒவ்வொரு சட்டகத்திற்கும் இடையில் இருக்கும் அந்த சிறிய இடைவெளி எங்கே போகிறது? அந்த இடைவெளி ஏன் நமது கண்களுக்கு தெரிவதில்லை என்கிற மிக எளிய கேள்விக்கு கூட நம்மிடையே அறிவுப் பூர்வமான பதில் இல்லை. ஆனால் சினிமாவை நமது மூளைதான் பார்க்கிறது என்று இந்த நூலில் அம்ஷன் குமார் விளக்கும் இடத்தில் புத்தகத்தின் மீதான நமது பார்வை மாறத் தொடங்குகிறது.

இந்த உலகில் எந்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பும் திட்டமிட்டு அரங்கேறுவதில்லை. தற்செயலாகவே அது நடந்துவிடுகிறது. மின்னல்தாங்கி, பென்சிலின் ஊசி, மின்சாரம் என பலவற்றை இதில் அடக்கலாம். சினிமாவும் அதே போல்தான் எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டதுதான். திட்டமிடப்பட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. தவிர இன்று நாம் பார்க்கும் சினிமா பலபடிகள் தாண்டிதான் இன்றைய முழு உருவத்தை அடைந்துள்ளது. இடையில் என்னென்ன வடிவில் எல்லாம் சினிமா என்கிற மாய ஊடகம் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும்போது நமக்கு அதன் மீது ஏற்படும் சிலிர்ப்பு அலாதியானது.

நிர்வாணத்தை கூட நாம் எப்படி பார்க்கிறோம், அதை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த நூலில் அம்ஷன் குமார் மிக அருமையான கூற்று ஒன்றை முன் வைக்கிறார். ஒரு திரைப்படம் பார்த்தவுடம் புரியதான் வேண்டுமா? அப்படி புரியாமல் அதை நாம் அசைபோட்டு அது பற்றி சிந்தித்து அதை புரிந்துக் கொள்ள நம்மை தயார் செய்து கொள்வதில் நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம்? என்கிற கேள்வியில் தொடங்கி இறுதியாக நமக்குள் திரைப்படம் சார்ந்த மிக பெரிய ரசனை மாற்றத்தை இந்த நூல் ஏற்படுத்தி விடுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் திரைப்படம் என்பது நாடகத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் திரைப்படம் என்பது நாடகத்தின் நீட்சியல்ல, அதே வேளையில் நாடகத்தை விட சினிமா உயர்ந்ததா என்கிற நமது ஐயத்திற்கும் அம்ஷன் குமார் இதில் பதிலளிக்கிறார். நாடகம் வேறு, திரைப்படம் வேறு. நாடகத்தில் ஒரு ஒற்றை ஆள் இந்த உலகத்தையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட முஇட்யும். அதற்கான சுதந்திரத்தை நாம் கொடுக்கிறோம். அங்கே நாம் நாடகம் என்பதற்குள் பொதிந்து இருக்கும் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு தர்க்க ரீதியிலான கேள்விகளை கேட்பதில்லை. மாறாக திரைப்படங்களில் அவ்வாறு, ஒற்றை ஆள் இந்த உலகை நம் கண்முன் கொண்டுவந்தால் அது சார்ந்த தர்க்க ரீதியான கேள்விகளை முன்வைக்கிறோம். திரைப்படம் என்பது நிறைய கலைகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து நம்மை சில்லிட செய்திடும் வித்தை அறிந்த ஒன்று. அங்கே நாம் அத்தனை எளிதாக நம்மை ஏமாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.

சினிமாவைப் பற்றி மட்டும்தான் இந்த புத்தகம் பேசுகிறதா என்றால், சினிமா எனும் ஊடகம் சார்ந்த கலைகள் பற்றியும் இந்த புத்தகம் பேசுகிறது. குறிப்பாக புகைப்படக் கலையில் இருந்து படிப்படியாக எப்படி சினிமா என்கிற ஜனரஞ்சக ஊடகம் உருவானது என்பதும், திரைப்படங்களில், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும் இந்த புத்தகம் பேசி செல்கிறது.

சாதாரணமாக இசை இப்படி இருக்க வேண்டும், ஓளிப்பதிவு இப்படி இருக்க வேண்டும் என்று வியாக்யானம் பேசாமல், அதன் பின்னணி பற்றியும், வரலாறு, உருவாக்கம் பற்றியும், பேசி நம்மையே சிந்திக்க வைப்பதுதான் அம்ஷன் குமாரின் வெற்றி. இந்த நூலில் பல உலகப் படங்கள் பற்றியும், அதன் ரசனைப் பற்றியும் விரிவாக பேசி செல்கிறார் அம்ஷன் குமார். ஆனால் ஒரே தமிழ் படம் பற்றிக் கூட இதில் குறிப்பு இல்லை. காரணம் இந்நாள் வரை எந்த தமிழ் படமும் உலகின் திரைப்பட ரசனை என்கிற வட்டத்திற்கு வரவே இல்லை. தவிர இங்கே எடுக்கப்படும் எதுவும் சினிமா என்கிற ஊடத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை ஆசிரியர் உறுதியாக நம்புகிறார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் பாலு மகேந்திரா உள்ளிட்டோர் இதில் தமிழ் படங்கள் இல்லாதது வருத்தம் தெரிவித்தனர். ஆனால் இந்த நூலில் தமிழ் படங்கள் இல்லாமல் இருப்பதே அதன் சிறப்பு என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த நூல் வாசிக்கப்படுவதோடு நிறுத்தப்படாமல் தொடர்ந்து மறுவாசிப்பும் செய்ய வேண்டிய ஒன்று. ஒரு விவாதக் களத்தை இந்த நூல் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் திரைப்பட ரசனை என்பது ஒரு பாடமாக வைக்கப்பட்டு அதில் முதன்மை நூலாக இந்த நூல் சேர்க்கப்பட வேண்டும்.

 

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </