இதழ்: 24     ஐப்பசி (October 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பின் : போவதற்கு இடமில்லை - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 5 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 13 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 7 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 9 - தினேஷ் குமார்
--------------------------------
”காக்கா முட்டை”, திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டனுடன் நேர்காணல்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 2 - அறந்தை மணியன்.
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
சொர்க்கத்தின் நாட்கள் - வருணன்
--------------------------------
 
   

   

 

 

திரைப்படம் என்பது ஓவியத்தின் நீட்சி:

(ஓவியம்: புகைப்படம்: சினிமா)

”காக்கா முட்டை”, திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டனுடன் நேர்காணல்:

- சந்திப்பு: தமிழரசன் (படிமை மாணவர்)

பல குறும்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு, தானும் குறும்படங்கள் எடுத்து, இப்போது காக்கா முட்டை திரைப்படம் வாயிலாக, வெள்ளித்திரையிலும் காலடி தடம் பதித்துள்ளார் மணிகண்டன். இவரது காக்கா முட்டை திரைப்படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. ஒளிப்பதிவு, குறும்படங்கள், திரைப்படங்கள், மாற்று சினிமா, வெகுஜன சினிமா என பல்வேறு விடயங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியதிலிருந்து:

நீங்கள் சினிமாவில் இயக்குனராக வருவதற்கு தூண்டுகோலாக இருந்தது எது?

அடிப்படையில் நான் ஒரு ஓவியன். பின்னர், சினிமாவில் நுழைவதற்கு முன் நான் செய்துகொண்டிருந்த வேலை போட்டோகிராஃபர். திருமணங்களுக்கு புகைப்படம் எடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஓவியராகவோ, புகைப்படம் எடுப்பவராகவோ இருந்தால் உரிய அங்கீகாரமோ, பணமோ கிடைக்காது. சராசரி சாமானியன் வாங்குகின்ற மாத சம்பளமும், நாம் வாங்குகின்ற சம்பளமும் கிட்டத்தட்ட ஒரே எடையில் இருக்கும். பணம் ஒன்றே குறிக்கோள் இல்லையாயினும், நம் திறனை வெளிப்படுத்திக்கொள்ளவும் ஒரு ப்ளாட்ஃபார்ம் வேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் நிறைய சிந்திக்கவும், சிந்தித்தவற்றை செயல்படுத்தவும் ஒரே வெளியாக எனக்குத் தெரிந்தது சினிமா. மேலும், எனக்குத்தேவையான பணம் இந்த போட்டோகிராபியில் கிடைத்திருந்தால், நான் சினிமாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்க மாட்டேன்.

ஒரு படம் பார்த்தவுடன் அதன் காட்சிகளில் லயித்து, இதுபோன்றதொரு படத்தை நானும் எடுத்துக்காட்டுவேன், என்று சூளுரைக்கும் எவ்வித தூண்டுகோலும் எனக்கில்லை. என் படிப்பு ஆட்டோமொபைல் இன்சினியரிங்க். இந்த டிப்ளமோ படித்து முடித்து வேலைக்கும் சென்றுகொண்டிருந்த காலம். ”தினமும் இதே வேலையையே செய்துகொண்டிருக்கின்றோமே, இதற்கு மாறாக பிறிதொரு வேலையை புத்துணர்ச்சியோடு செய்யவேண்டும்”, என்ற எண்ணம் மனதில் இருந்தது. இந்தச் சிந்தனை தான் என்னை ஓவியம் பக்கமாக திசைதிருப்பியது. பின்னர் ’சைன் போர்ட் ஆர்டிஸ்ட்’, கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்துவந்தேன். அதிலும் எனக்குத் தேவையான தன்னிறைவு கிடைத்தபாடில்லை.

வெறுமனே ஏதோவொரு படத்தை நகல் செய்து வரைவது, ஒயின் ஷாப்பிற்கான போர்டுகள், பலகைகள் வரைவது மாதிரியான வேலைகளையே அவர்கள் செய்துவந்தார்கள். நானும் கூட.

ஓவியத்திற்கு அடுத்ததாக ’போட்டோகிராஃபி’, மீது எனக்கு ஆசை. போட்டோகிராஃபர் ஆனேன். அதிலும் என் விருப்பம் தெரு புகைப்படங்கள் எடுப்பதுதான். இதேசமயத்தில் நான் திருமணத்திற்கும் புகைப்படங்கள் எடுத்தேன். அங்கு தருகின்ற பணத்தை வைத்துக்கொண்டு, புகைப்படங்கள் எடுக்க , எனக்குத் தேவையான பிலிம்கள், இன்ன பிற உபகரணங்கள் வாங்குவதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

இயற்கைச்சூழலையும், பூக்களின் அழகையும் மட்டுமே என் காமிராக்கள் பதிவு செய்யாது. வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்களை யதார்த்தத்தோடு பதிவு பண்ணுவதுபோல அமைந்த புகைப்படங்களையே அதிகமாக தேர்ந்தெடுப்பேன். நான் அவரவர் வாழ்க்கையில் இருந்தே எடுத்த புகைப்படங்களில் ஏதோவொரு கதை இருப்பதை உணர்ந்தேன். இந்த மையம் தான் என்னாலும் கதை சொல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை அளித்தது.

நீங்கள் ஓவியராகவும், போட்டோகிராபராகவும் பணியாற்றதன் விளைவுதான், உங்கள் குறும்படங்களில் (WIND, மீண்டும் ஒரு புன்னகை) ஒவ்வொரு ஃப்ரேமும் தனித்துவத்துடன் காட்சியளிப்பதன் பின்னணியா?

இதனை ஒத்துக்கொள்கிறேன், ஒரு புகைப்படம் எடுக்கும் முன்னர் அந்தப் புகைப்படத்திற்குச் சரியான கோணத்தினை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வது என் வழக்கம். அப்பொழுதுதான் நான் எடுத்திருக்கின்ற புகைப்படத்தினைப் பார்ப்பவர்களுக்கு, இதுவரையிலும் அம்மாதிரியான இடங்களுக்குச் செல்லவில்லையானாலும், அங்கு இருப்பது போன்ற சூழலை உணரவைக்க முடியும்.

நீங்கள் இயக்கியிருக்கின்ற குறும்படங்கள் பற்றி?

நான் நிறைய இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்திருக்கின்றேன். ஒளிப்பதிவிற்கான வேலையை மட்டும் செய்துகொண்டிராமல், அவர்களின் கதை விவாதத்திலும் கலந்துகொள்வேன். முதலில் அவர்கள் சொல்கின்ற ஒற்றைவரியானது, கதையாகவும், அதுவே திரைக்கதையாகவும் மாற்றம்பெறுவதில் என் பங்கும் குறிப்பிடும்படி அமைந்திருக்கின்றது. இப்படிப் பல படங்களில் வேலை செய்த அனுபவமே, என்னைச் சில படங்களுக்கு முழுத்திரைக்கதையும் எழுதுகின்ற அளவிற்கு வளர்த்துவிட்டது.

என்னுடைய திரைக்கதைகளை மற்ற இயக்குனர்கள் படமாக்குகின்ற பொழுது சில நேரங்களில் அவர்கள் சரிவர எடுக்கவில்லை என்பதையும் படப்பிடிப்புத் தளங்களிலேயே அறிந்துகொள்வேன். இது இன்னும் நன்றாக காட்சிப்படுத்த வேண்டிய திரைக்கதையாயிற்றே என்ற எண்ணம் அங்கு தோன்றும். ஆனால் அந்த இயக்குனர்களிடம் இதனைச் சொல்லமாட்டேன். அவர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும் நாமும் முயன்று ஒருபடம் எடுத்துப் பார்க்கலாமே, என்ற சிந்தனையில் உறுதியாக இருந்தேன். இதற்குப் பின்பாக நான் எடுத்த குறும்படம்தான் Wind.

இந்தக் குறும்படத்தை நண்பர்களிடம் காண்பிக்கின்ற பொழுது அவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ”படம் நன்றாக வந்திருக்கின்றது, நீ ஒரு இயக்குனராகலாம்”, என்பது மாதிரியாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால், எனக்குப் பிடித்த குறும்படம் எனது இரண்டாவது படமான “மீண்டும் ஒரு புன்னகை”தான், காரணம் ‘WIND’, படத்தில் நிறைய உலகப்படங்களின் தாக்கங்கள் (காப்பி அல்ல) இருப்பதனைப் பார்க்கலாம். ஆனால் ”மீண்டும் ஒரு புன்னகை”, அப்படியல்ல. சினிமாவிற்காக ஏதும் மாற்றங்களைத் திணிக்காமல், முழுப்படமும் வெளிக்கொணரும் உணர்ச்சியை படம் பார்ப்பவர்களும் உணரவேண்டும் என்று நினைத்தேன். அதையேச் செய்தேன்.

“Wind”, படத்திற்கும், “மீண்டும் ஒரு புன்னகை”, படத்திற்கும் ஒன்றரை வருட கால இடைவெளி இருக்கின்றது. அப்படியானால் “Wind”, படம் இயக்கும்பொழுது இருந்த மனநிலை வேறு, ”மீண்டும் ஒரு புன்னகை”, யின் பொழுது இருக்கின்ற மனநிலை வேறு.

பலரும் என் முதல் படம் ‘Wind’, தான் சிறந்தது என்று சொன்னாலும், நமக்கு வேண்டுமானால் அது பெரிதாகத் தெரியலாம். ஆனால் அப்படத்தையே ஒரு வெளிநாட்டு இயக்குனர் பார்த்தால் ”அது ஒரு நார்மலான படம்”, என்றே சொல்வார். இது எனக்கே தெரியும்பொழுது, இதனையே ஏன் மற்றவர்களிடம் கேட்கவேண்டும்.

ஒளிப்பதிவாளரே இயக்குனராகவும் பரிணாமிக்க வேண்டியதன் அவசியம் என்ன? மேலும், நீங்கள் ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளீர்கள், இயக்குனராகவும் இருக்கின்றீர்கள். அப்பொழுது இரண்டு வேலைகளையும் ஒரே ஆளாக செய்கின்ற நேரத்தில் எழுகின்ற சாதக பாதகங்கள் என்னென்ன?

ஒளிப்பதிவாளராக இருக்கின்றபொழுது கலை இயக்குனரிடமும், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களிடத்திலும் முறையான தகவல் பரிமாற்றம் இருக்கும். ஆனால், நான் முதல் குறும்படம் எடுக்கின்ற பொழுது, என் உதவியாளர்களிடத்தில் எந்தக் காட்சியமைப்புகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஏனென்றால், கதையை காகிதத்தில் படிக்கின்றபொழுது நன்றாகயில்லை என்பது போன்ற மறுமொழிகள் வரும். பின்னர் அதனையே காட்சி ரீதியாக முன்வைக்கையில் படம் நன்றாகவந்திருக்கின்றது என்று ஒத்துக்கொள்வார்கள்.

எனக்கும்கூட காகிதத்தில் இருப்பவற்றை சரியான முறையில் உதவியாளர்கள் விளங்கும் படி புரியவைக்கத் தெரியாது. இது போன்ற சூழல்தான் படப்பிடிப்புத் தளங்களில் இடையூறுகளைத் தோற்றுவிக்கும், முறையான தகவல்கள் சரியாக பரிமாறிக்கொள்ளாவிடில் இதுவே நிகழும்.

அதுவே ஒருவர் இயக்குனராகவும், மற்றவர் ஒளிப்பதிவாளராகவும் இருந்தால், அவர்களிருவரும் எடுக்கப்போகும் காட்சி சார்ந்த உரையாடல் மேற்கொள்கின்ற பொழுது உடனிருக்கின்ற உதவியாளர்கள் அந்தக் காட்சியின் சாரத்தை உள்வாங்கிக்கொள்ள இயலும், மாறாக நான் ஒருவனே ஒளிப்பதிவாளராகவும் இருந்துகொண்டு இயக்குனராகவும் இருப்பதால் இதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.

நான் நேரடியாக படப்பிடிப்புத் தளத்திற்குச்சென்று, ”நடிகர்களை வரச்சொல்லுங்கள்”, ”கேமராவை அந்த இடத்தில் வை”, என்றெல்லாம் கட்டளையிடுகின்ற பொழுது, உதவியாளர்களுக்கு குழப்பமே மேலிடுகின்றது. அவர்களுக்கு நான் ஏன் நடிகர்களை கூப்பிடுகின்றேன் என்பதும் தெரியாது, கேமராவை ஏன் அங்கு வைக்கச்சொன்னேன் என்பதும் புரியாது.

இந்த இரண்டு வேலைகளையும் நானே செய்வதில் உள்ள முக்கியமான மற்றொரு பிரச்சனை, எடுக்கப்பட்ட காட்சிகளைத் தீர்மானிப்பவனாக நானே இருக்கின்றேன். அந்தக் காட்சி எனக்கு சரியானதாக தோன்றினால் போதும். இது பல நேரங்களில் சரியானதாக இருந்தாலும், நம்மைக் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாததன் காரணமாக, அந்தக் காட்சியை இன்னமும் வேறு எந்த விதத்தில் சிறப்பாக படம் பிடித்திருக்கலாம், என்பது மாதிரியான சிந்தனைக்கு அங்கு இடம் இருப்பதில்லை. இந்தப் பிரச்சனைகளை நான் குறும்படங்கள் எடுக்கின்றபொழுதே கண்டுணர்ந்து அதனை நிவர்த்தி செய்துகொண்டேன்.

எனவே “காக்கா முட்டை” படத்தில் இதுமாதிரியான பிரச்சனைகள் எழவில்லை. உதவியாளர்களை மிகவும் நெருக்கமாக வைத்துக்கொள்வதுதான் மேற்கூறிய பாதகங்களை நிவர்த்தி செய்வதற்கான வழி. நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்து, காட்சியை உருவாக்குகின்றோம், அதனை படம்பிடிக்கின்றோம். நாம் சொல்ல முயற்சித்த விஷயம் சரியாக மக்களுக்குச் சென்று சேரவில்லையாயின் அது எடுக்கப்பட்டது வீண். இதைத்தான் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இனிவரும் படங்களில் முடிந்தவரை நானே இரண்டு வேலைகளையும் ஒரேயாளாகச் செய்வதை நிறுத்திக்கொள்வேன்.

ஆனால் தமிழ்ச்சினிமாவிற்கு வரையறுக்கப்பட்ட காட்சியமைப்புகள் உள்ளன. இதனயேதான் அண்மைக்காலங்களாக பின்பற்றி வருகின்றார்கள். இன்றை படப்பிடிப்பு மருத்துவமனை அல்லது காவல் நிலையம் என்று சொன்னவுடன் அந்த இடங்களுக்கு ஏற்ற பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் காட்சி வரையறைகள் இருக்கின்றன. இன்று இந்தக் காட்சி இந்த இடத்தில் படமாகப்போகின்றது என்பதை மட்டும் நீங்கள் ஒளிப்பதிவாளருக்கு தெரியப்படுத்திவிட்டீர்களேயானால் போதுமானது. இன்றைக்கு மதுபானக் கடையில் காட்சி என்றால், அதற்கேற்ற லைட்டிங்க் , சூழலை ஒளிப்பதிவாளர் குழு தயார் செய்துவிடுவார்கள். “க்ளோஸ் அப்”, காட்சி என்றால், அதற்கேற்ற வரையறைக்குட்பட்ட லென்ஸ் தேர்ந்தெடுப்பார்கள். இதில் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் பேசிக்கொள்வதற்கான தேவைகள் மிகவும் குறைவு.

ஆனால், பரிட்சார்த்த முயற்சியில் நீங்கள் எடுக்கின்ற படங்களுக்கு வரையறுக்கப்பட்ட காட்சியமைப்புகளில் நிலவும் சூழல் எடுபடாது. அப்போதுதான் நீங்கள் ஒளிப்பதிவாளருக்கு அந்தக் காட்சியமைப்பைப் பற்றிய விளக்கங்கள் அளிக்க நேரிடும்.

கமர்ஷியல் சினிமா எடுப்பவர்கள் பற்றி?

கமர்சியல் படம் எடுப்பவர்களிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. முன் தயாரிப்புச் செலவுகளை அவர்கள் தகுந்த முறையில் உபயோகிக்கும் விதம் இதில் முக்கியமானது. உதாரணத்திற்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர்களின் காட்சியமைப்புகளின் அழகியலை விட்டுத்தள்ளுங்கள், ஆனால், தயாரிப்பு நிர்வாகம் அவர்களிடம் மெச்சும்படியிருக்கும். இதை ’பேரலல் சினிமா’, எடுப்பவர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கமர்ஷியல் சினிமா இயக்குனர்கள் நடிகர்களிடம் வேலை வாங்குவது, தயாரிப்பு நிர்வாகத்தினரை மேற்பார்வையிடுவது, என எந்த வேலையை யாரிடம் கொடுத்தால், அவன் அந்த வேலையை எவ்வளவு நேரத்தில் முடிப்பான் என்பது வரையிலும் அவர்கள் தெரிந்துவைத்திருப்பார்கள். அவர்கள் எடுக்கின்ற காட்சிதான் ஊதாரித்தனமாக இருக்குமேயொழிய, நேர மேலாண்மை எல்லாவற்றிலும் அவர்கள் அசத்துவார்கள். ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் மேல் செலவுசெய்பவனுக்கு இதை மேலாண்மை செய்யவேண்டியது அத்தியாவசியம். ஒரு காட்சி எடுக்கின்ற பொழுதே, இன்னொரு காட்சிக்கு தேவையான லைட்டிங்க் பண்ண சொல்லிவிடுவார்கள். அந்த லைட்டிங்க் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் அம்மாதிரி வேலை வாங்கும் திறன் உங்களுக்குத் தெரிய வேண்டும். பின்னர், ஒரு கிளாஸிக் இயக்குனரின் காட்சியமைப்பை நீங்கள் பிரித்துப் பார்த்தீர்களேயானால், நீங்கள் தேவையில்லாதது என்று நினைக்கும் வகையில் பல காட்சியமைப்புகளை உள்வைத்திருப்பார். எனக்குப் பிடித்த நாலைந்து இயக்குனர்களிடமிருந்தும் எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களைத்தான் எனக்குப்பிடிக்கும்.

அவர்களின் முதல் படத்தில் இருந்த தீவிரம் அடுத்தடுத்த படங்களில் இல்லாமல் போயிருக்கலாம், ப்ரொடக்சனைக் கண்ட்ரோல் பண்ணாமல் விட்டிருப்பார்கள் இது மாதிரியான தவறுகள் நிகழும். முதல் படம் எளிமையாக பண்ணியிருந்தாலும் அடுத்த படங்களில் எளிமையாக பண்ணுகிறேன் என்ற பேரில், குழப்பியிருப்பார்கள். பெரும்பாலானோர் மதுவிற்கு அடிமையாகிவிடுவார்கள். இதிலிருந்து நாம் எல்லோரிடமிருந்தும் நமக்குத்தேவையான ஏதாவதொன்றை கற்றுக்கொள்ள முடியும் என்பது நிரூபணமாகிறது.

நடிகர்களிடமிருந்து எப்படி வேலை வாங்குகின்றீர்கள்?

என் குறும்படங்களிலிலிருந்து ஆரம்பிக்கின்றேன். ஒரு படத்திற்கான முகம், இயக்குனர் இல்லை, அதில் நடிக்கின்ற நடிகர்கள்தான் என்பது என் கருத்து. ஒரு படத்தை காலாகாலத்திற்கும் கொண்டு போய்ச் சேர்ப்பவர்கள் அதில் நடிக்கின்ற நடிகர்கள்தான். எனவே அந்த ஆர்ட்டிஸ்ட் விஷயத்தில்தான் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

அதில் இரண்டு வகை.

1.) கதைக்குப் பொருந்தாவிட்டாலும் நன்றாக நடிக்கத்தெரிந்த ஆட்கள்.

2.) கதைக்குப் பொருந்தக்கூடிய கச்சிதமான முகம்


உங்கள் மனதில் இருக்கின்ற கதாபாத்திரம் கருப்பான, குட்டையான, நபர் என்றால், அதற்கு மாறான ஆள் ஒருவர் ஆடிஸனுக்கு வருகின்றார். ஆனால், அவர் மிகச்சிறந்த நடிகர் என்று உங்களுக்குத் தெரிகின்றது. இன்னொருவர் நம் மனதில் நிற்கின்ற கதாபாத்திரமாகவே வருவார். ஆனால் நடிப்பு குறைவாக இருக்கும். இதில் நான் முதல் வகையையே தேர்ந்தெடுக்கின்றேன். என் மனதில் இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதைக்காட்டிலும், சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுப்பேன்.

என் மனதிலிருக்கும் கதாபாத்திரத்திற்கான தோரணை அவரிடம் இல்லையானாலும், சிறந்த நடிகராக அவர் இருந்தால் என் மனதில் இருக்கின்ற கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுப்பார். ஒரு சிறந்த நடிகர் என்பவர், நீங்கள் பேப்பரில் எழுதி வைத்திருக்கின்ற கதாபாத்திரங்களையும், கதையையும் ஒரு படி மேலே எடுத்துச் செல்பவராக இருக்கவேண்டும். எனக்கு நடித்துக்காட்டி நடிப்பு வாங்குவதில் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கான சூழலைத்தான் நான் ஏற்படுத்தித்தர முடியும், மீதியை அந்த நடிகர்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

காட்சியமைப்பைப் பற்றிய முழு விவரணைகளையும் அவர்களுக்குச் சொல்லிவிட்டு அவர்களைப் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச்சென்று, நடிகர்களுக்கு எந்த அளவிற்கு தகுந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்க முடியுமோ அவை அத்தனையையும் செய்வேன். அவர்களுக்கு படப்பிடிப்புத் தளத்தில் வைத்திருக்கின்ற ”லைட்டிங்க்”, இடையூறு ஏற்படுத்தினால் கூட, அவற்றை எடுத்துவிடச் சொல்வேன்.

அடுத்து அவர்களுக்குப் பிடித்த நடிகர்களின் பாவனைகளும் அவர்களிடத்தில் வருவதற்கான வாய்ப்புண்டு. அவற்றை மட்டும் கவனமாகப் பார்த்து நீக்கச்செய்ய வேண்டும்.

நீங்கள் குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள். பெரிய படங்களும் இயக்கி வருகிறீர்கள். குறுந்திரையிலிருந்து, பெரியதிரைக்கு நீங்கள் செல்கின்றபொழுது அங்கு நிலவுகின்ற மாற்றங்கள் என்னென்ன?

இரண்டிற்குமே தேவைப்படுவது ஒரே உழைப்புதான். ”காக்கா முட்டை”, என்னைப்பொறுத்தவரை நான் இயக்கிய மூன்றாவது படம். இன்னொரு முக்கியமான வித்தியாசம், குறும்படங்கள் எடுக்க காசு என்னுடையது. பெரிய படங்களுக்கு இன்னொருவர் தயாரிப்பாளராக வருவதனால், அந்தக் கஷ்டம் கிடையாது.

”காக்கா முட்டை”, எடுக்கின்ற பொழுது படத்தின் தயாரிப்பாளர்களின் குறுக்கீடுகள் ஏதேனும் சந்தித்தீர்களா?

தயாரிப்பாளர்கள் கதையிலோ, திரைக்கதையிலோ குறுக்கிடவில்லை. முழு சுதந்திரத்துடன் நான் எடுத்த குறும்படங்கள் அரைமணி நேரம் என்றால், ”காக்கா முட்டை”, 2 மணிநேரம் தானே தவிர எந்தப் பெரிய மாற்றமும் இல்லை.

நீங்கள் எடுக்கின்ற படங்கள் காட்சிமொழி ரீதியாக கதை சொல்கின்றது. இதனை நீங்கள் உணர்ந்துகொண்ட இடம் எது?

இந்த மாதிரியான காட்சிமொழியை நம் தமிழ்சினிமாவிலேயே நிறைய இயக்குனர்கள் கையாண்டுள்ளார்கள். அதேபோல வெளிநாட்டு இயக்குனர்களும் இந்தமாதிரியான கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். இப்பொழுதும் எடுத்துவருகின்றார்கள். ஆனால், நாம் அண்மையில்தான், வசனங்களால் நிரப்பப்பட்டு வருகின்ற படங்களை எடுக்கின்றோம், சினிமாவிற்கான மொழியையும் இழக்க ஆரம்பித்துவிட்டோம். நீங்கள் கூறிய காட்சிமொழி வாயிலாக கதை சொல்லும் யுக்தியை, நான் புதிதாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை, ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.

”ஆனந்த் அண்ணாமலை”, என்ற ஓர் எழுத்தாளர். அவர் குறிப்பிடுவது என்னவெனில் திரைப்படம் என்பது ஓவியத்தின் நீட்சி. ஒரு கவிதை, சிறுகதை, நாவலின் நீட்சி சினிமா கிடையாது. அவரின் தரப்புப்படி ஓவியம், புகைப்படம், திரைப்படம். ஓவியத்தின் நீட்சியே சினிமா. அதுதான் என் மனதிற்கு மிகவும் பிடித்த வார்த்தை. ஓவியம் மூலமாக சொல்கின்ற கதைகளை நீங்கள் இசையையும், ஒளியையும் பயன்படுத்திக் கோர்க்கின்றீர்களேயொழிய அது நாவலின் நீட்சியன்று.

தீவிர வாசகன் ஒருவன் படம் பார்ப்பது வேறு. ஒரு ஓவியனாக படம் பார்த்து ரசிப்பது என்பதும் வேறு. இரண்டுமே வேறுவேறு புரிதல்களைக் கொண்டுவரும்.

நீங்கள் புதிதாக எடுக்கவிருக்கும் படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இயங்கிவருகின்றபொழுது, உங்கள் கதைக்களத்தோடு ஒன்றிப்போகின்ற மற்ற படங்கள் வேறொரு மொழியில் இருக்குமேயானால், அதனையும் உங்கள் ஆய்விற்காக எடுத்துக்கொள்வீர்களா?

இந்த “காக்கா முட்டை” படத்திற்கான முதல் சிந்தனை என் மனதில் வந்ததிலிருந்து, கதை எழுதிமுடிக்கப்படும் வரையிலும் எந்த படத்திலிருந்தும் என் படத்திற்குத் தேவையான காட்சியமைப்பிற்கு குறிப்புகள் எடுக்கவில்லை. நானும் கதை எழுதிமுடித்த பின்னர் வழக்கம்போல நண்பர்களிடம் கதையினை பகிர்ந்துகொள்கின்ற நேரத்தில், அவர்கள் பார்க்கின்ற சினிமாத்தளத்திலிருந்து “இந்தக் கதை போல வேறொரு படம் வந்திருக்கின்றது” என்று கூறினார்கள். ஒரே மாதிரியான காட்சியமைப்புகள், குறிப்புகள் இருக்கின்றன என எனக்கும் அவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்த்து தெரிந்ததன் காரணமாக எனது கதையை மாற்றி அமைத்துக்கொண்டேன். கண்டிப்பாக எனது கதைப்பாணியில் அமைந்த மற்ற படங்களையும் பார்ப்பேன்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், படம் எடுத்து முடித்த பிறகு, எனது ”காக்கா முட்டை” கதையில் வருகின்ற ஒரு குறிப்பிட்ட காட்சியமைப்புப் போலவே, சைனீஸ் திரைப்படம் ஒன்றிலும் அதே மாதிரியான காட்சியமைப்பு இருப்பதாக தோழி ஒருத்தி சொன்னாள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உண்மை. என் கதையில் சிறுவர்கள் டி.வி.யின் முன் அமர்ந்து பேசுவதுபோல ஒரு காட்சி படம்பிடித்து வைத்திருந்தேன். ஆனால், அதேபோலவே சைனீஸ் படத்திலும் ஒரு காட்சி வந்திருக்கின்றது. இதை நான் தெரிந்தே செய்யவில்லை. வசனங்கள் தான் வேறே தவிர, காட்சி ஒன்றேதான். இருப்பினும், இரு காட்சிகளும் ஒன்றேபோல இருக்கின்ற காரணத்தினால், என் படத்தின் காட்சியை நீக்கிவிட்டேன்.

இன்றைய இயக்குனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக்காட்ட நீங்கள் பின்பற்றுகின்ற தனி பாணி என்ன?

ஐந்து படங்கள் செய்த பிறகு என்னுடைய பாணி தானாகவே வெளிப்பட்டுவிடும். ஆனால் கமர்சியல் சினிமாக்களைத் தவிர்த்துவிட்டு, சினிமாவின் அனைத்து வகைமைகளைச் சேர்ந்த படங்களையும் பண்ணுவதே எனது ஆசை.

குறும்பட இயக்குனர்களின் எண்ணிக்கையும், குறும்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இந்த வளர்ச்சி உங்கள் பார்வையில்?

இது எவரைக்கேட்டாலும் சொல்வார்கள். வளர்ச்சியை நோக்கி போகவில்லை. குறும்படங்களின் எண்ணிக்கை அதிகமிருப்பினும், அதன் தரம் பற்றியும் சிந்திக்க வேண்டும். பயணம் கீழ்நோக்கியதாகயிருக்கின்றது.

பிடித்த எழுத்தாளர்கள்? பிடித்த புத்தகங்கள்?

பிடித்த புத்தகங்கள் என்று கேட்டால் நிறைய சொல்லவேண்டும். சமீபமாகப் படித்ததில் யுவன் சந்திரசேகரின் ”மணற்கேணி” மிகவும் ரசித்துப் படித்த புத்தகம். அது சிறுகதைக்கும், சின்ன கட்டுரைக்கும் நடுவில் பயணிப்பது. ஒவ்வொரு செய்தியும் ஒன்றரை பக்க அளவிலானதாக இருக்கும். மிகவும் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அவற்றிலிருந்து நீங்கள் ஒரு வார்த்தையைச் சேர்க்கவும் முடியாது, நீக்கவும் முடியாது. அப்படியிருக்கும்.

ஒரு எழுத்தாளர் எப்படித் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார், அப்படியெனில் படம் எடுக்கின்ற நாம் எப்படியெல்லாம் ஒவ்வொரு காட்சியையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும், இத்தனைக்கும் புத்தகத்தில் பக்கம் பக்கமாக எழுதுவதில் செலவு ஒன்றும் அதிகமாக ஆகிவிடாது. ஆனால் அது அந்த எழுத்தாளரின் நேர்த்தி. அதைவிட இயக்குனருக்கு இந்நேர்த்தி அவசியம். காரணம் , எடிட்டிங்க் ரூமில் அரைநொடி கால அளவு உள்ள ஒரு காட்சியை வெட்டினால்கூட மொத்த காட்சிக்குமான சூழ்நிலையும், நெருக்கமும் மாறிப்போகும். இதில் கவனம் வேண்டும், என்பதை நினைவில்கொள்ள இந்தப்புத்தகம் உதவியது. தமிழ்ப்புத்தகங்களைத் தவிர்த்து, தஸ்தயெவ்ஸ்கியின் ”குற்றமும் தண்டனையும்”,படித்திருக்கின்றேன்.

இன்றைய சூழ்நிலையில் நாவல்களை மையமாக வைத்து படம் இயக்கும் எண்ணம் உங்களுக்கு உண்டா?

இருக்கிறது.

நாவல்களிலிருந்து படம் இயக்குகின்ற பொழுது, எழுத்தாளர்களின் தலையீடுகளை நீங்கள் எவ்விதம் அணுகுவீர்கள்?

என் அடுத்த திரைப்படம், நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கும் திட்டம் இருக்கின்றது. அப்பொழுது, கவனிக்கவேண்டியது எழுத்தாளர் அந்த நாவலில் சொல்ல வந்த விஷயத்தை நாம் படத்தில் தவற விட்டுவிடக்கூடாது. கதையை எழுதியவருக்கு திருப்திதரும் வகையில் அந்தப் படத்தை எடுக்கவேண்டும். எழுத்தாளர் சொல்லவருகின்ற விஷயத்தை நாம் ஏதும் மாற்றிச் சொல்லிவிடக்கூடாது.

ஒரு காட்சி எடுப்பதற்கு முன்னால் உங்களை எப்படி தயார் செய்துகொள்வீர்கள்?

இந்த நேரத்தில்தான் படப்பிடிப்பு தொடங்கவேண்டும் ., இந்த ஒளியளவில்தான் காட்சி படமாக்கப்பட வேண்டும். என்றெல்லாம் முன்கூட்டியே திட்டமிடுவோம். கதைப்படி காலை 7 மணிக்கு எடுக்கவேண்டிய காட்சியை மதியம் பன்னிரண்டு மணிக்கு எடுக்க மாட்டேன்.

ஒரு வெளிச்ச அளவிற்காக 2 மணிநேரங்கள் காத்திருக்கவேண்டுமாயின் , அந்த இடைப்பட்ட நேரத்தில் கதைக்குத் தேவையான க்ளோஸ் அப் காட்சிகள், இன்செர்ட் சாட்ஸ் (Insert Shots) எல்லாம் எடுத்து முடித்துவிடுவோம். லெட்டர் படிப்பது, போன் பேசுவது, சிகரெட் பிடிப்பது, புத்தகம் வாசிப்பது, சிரிப்பது எல்லாவற்றிற்கும் இந்த இரண்டு மணிநேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்வோம் (உதாரணத்திற்கு. Wind குறும்படம்).

”காக்கா முட்டை” படத்தில் காகம், சாதம் சாப்பிடுகிற மாதிரியான ஒரு காட்சிக்காக மட்டும் இரண்டு மணிநேரங்கள் காத்திருந்தேன். அந்தமாதிர்யான காட்சிகளுக்கு கண்டிப்பாக காத்திருத்தல் தேவைப்படுகிறது. அந்நேரத்தில் நீங்கள் ஏதும் பிற வேலைகளைச் செய்ய முடியாது. நான் இரண்டு மணிநேரம் சும்மாவே உட்கார்ந்திருந்தேன் என்றால், அது இந்தக்காட்சியில்தான்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இந்த மாதிரியான காட்சிகள் எடுக்கின்ற சமயத்தில் உங்கள் குழுவினரின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கேமரா, அதற்கான உதவியாளர்கள் மட்டுமே இதுபோன்ற காட்சிகளுக்கு தேவையானதாக இருக்கும்.

காக்கா முட்டை படத்தைப் பற்றி?

சேரியில் வாழ்கின்ற சிறுவர்களைப் பற்றியது இந்தப் படம். படம் வெளியான பின்பு மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாம்.

”காக்கா முட்டை”, உங்களின் முதல் கதையா?

இல்லை. நான்கு கதைகளைத் தாண்டித்தான் ”காக்கா முட்டை”, படம் பண்ணினேன். முதல் கதை விஜய் சேதுபதிக்காக எழுதினேன். அப்போது அவர் நடிகராக இல்லாத காலகட்டம். தயாரிப்பாளர் தரப்பினரது சூழ்நிலைகளின் காரணமாகவும், என் குடும்பச் சூழல் காரணமாகவும் அந்தப் படங்கள் எடுக்கமுடியாமல் போயின. ஆனால், கதையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தள்ளிப்போன படங்களை எடுக்க பல தயாரிப்பாளர்கள் இப்போது முன்வருகின்றனர்.

ஒரு கதை எழுதி முடித்தபின்பு அதனை தயாரிப்பாளர்களிடமோ, நடிகர்களிடமோ சொல்லி அனுமதி வாங்குகின்றபொழுது, அந்தக்கதை சரியாக பிறரிடத்தில் சென்று சேரவில்லையானால், அந்தக்கதையை அப்படியே ஓரமாக வைத்துவிடுவேன். ஒரு கதை சரியானதாக அமைந்துவிட்டால் அதுவே பிறரை வேலைபார்க்க வைக்கும். உங்களுடைய வேலை சரியான கதையை எழுதுவது மட்டுமே. தயாரிப்பாளர் கதையின் ஈர்ப்பினால் அவராகவே வந்து உங்கள் படத்தை தயாரிப்பார், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோருமே தானாகவே வந்து வேலைசெய்கின்றேன் என்று வருவார்கள். இதெல்லாம் நடக்க கதை சிறப்பாகயிருக்க வேண்டும். இதெல்லாம் நடக்கவில்லையென்றால் அந்தக்கதையை வைத்துவிட்டு, அடுத்து ஒரு சிறப்பான கதையை உருவாக்க வேண்டும் என்பது என் கருத்து.

இயக்குனராவதற்கு முக்கிய தகுதியாக நீங்கள் கருதுவது?

என்னைப்பொருத்தவரை முதல் தகுதி சுற்றி நடக்கின்ற விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் ஆட்களாகயிருந்தாலும், நிகழ்ச்சிகளாகயிருந்தாலும் ஓர்மையுடன் கவனித்துப் பழகவேண்டும். பின்னர் நமக்கு நடக்கின்ற விஷயங்களையும், நம் செயல்களையும் பொதுத்தன்மையுடன் அணுகுகின்ற பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச்செய்வது ஒரு படம் எடுக்கின்றபொழுது அந்தப் பயிற்சிகள் எல்லாமே கைக்கொடுக்கும். சாதாரண மனிதன் ஒரு சம்பவத்தைப் பார்ப்பதற்கும், இயக்குனர்களாக முயற்சிப்பவர்கள் அதே சம்பவத்தைப் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கவேண்டும்.

இயக்குனராக வருபவர்கள் கதைசொல்வதிலும், எழுதுவதிலும் உள்ள நேர்த்தியை தயாரிப்புச்செலவுகளை முறைப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொள்ளவில்லை. சிலர் 5D கேமராவில் எடுத்தால் தான் படம் நன்றாக வரும் என்று சுற்றிக்கொண்டிருப்பார்கள். என் நண்பர் ஒருவர் தன் படத்தை அலெக்ஸாவில் தான் படம்பிடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். அவர்களுடனேயே இன்னொரு குழு ”ஐ போனில்”, படம் எடுத்துக்கொண்டிருக்கும். உங்கள் படத்திற்கு 4K துல்லியம் தான் வேண்டும் என்று எதை வைத்து தேர்ந்தெடுக்கின்றீர்கள்.

4K வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றது?, சினிமா வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன?. மறக்கவேண்டாம், ஹேண்டி கேமராவில் எடுக்கப்பட்டு ஆஸ்கார் வாங்கிய படங்களும் இருக்கின்றன. நான் எடுத்திருக்கின்ற ”காக்காமுட்டை”, படத்தில் ஒரு ட்ராலி, க்ரேன் காட்சி இல்லை. காரணம் அது அப்படத்திற்கு தேவையில்லை. இப்பொழுது நான் எடுத்துக்கொண்டிருக்கின்ற படத்திற்கு ட்ராலி தனியாக வாங்கினோம். காரணம் கதைக்கு அது தேவை. பழைய லென்ஸ்களையே விலைக்கு வாங்கி பயன்படுத்தினோம். காரணம் 4000 ரூபாய் மிச்சப்படுத்தலாம். அந்தக்காசை வைத்து படப்பிடிப்பில் ஒருவேளை சாப்பாட்டு செலவை ஈடுகட்ட முடியும்.

ஒரு இயக்குனருக்கு தொழில்நுட்பத்திலும் தகுந்த பரிட்சயம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் அவன் இன்னொரு நண்பனை சார்ந்து இருப்பான். குறும்படம் செய்யவேண்டும் என்றால் ஒளிப்பதிவாளரையும், படத்தொகுப்பாளரையும் சார்ந்து இருப்பார்கள். இதுபோன்ற சமயத்தில் இவை அனைத்தையும் நாமே கற்று இருப்பது சிறந்தது. இயக்குனரைச் சார்ந்த வேலைகள், இதுபோன்ற எல்லா வேலைகளுக்கும் எல்லாரையும் சார்ந்து இருப்பது தவறு. நீங்கள் மாற்று சினிமாவை விரும்பினால் குறைந்த செலவில், பெரிய பெரிய படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு உங்களது படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் மாற்று சினிமா எடுக்கும் உங்களுக்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறைவுதான்.

கமர்சியல் படங்கள் கூட போட்டி போடுவது உங்களது வேலை இல்லை. உங்களது திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

”ஸ்லம்டாக் மில்லினியர்”, எடுத்த ”டேனி போய்ல்”, பின்பு ஏன் அவரின் அடுத்த படமான ”127 ஹவர்ஸ்”,யை 7D கேமராவில் எடுக்கவேண்டும். ”ப்ளாக் ஸ்வான்”, எப்படியான படம்?, ஆனால் அதில் பல காட்சிகள் 5D கேமராவில் எடுக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் பற்றி பிரச்சனையில்லை என்று சொல்கின்றவர்களை மனதில் வைத்து நான் இதனை சொல்லவில்லை, ஆனால் என்னிடம் பணம் இல்லை என்று சொல்கின்ற படைப்பாளிகளை மட்டுமே சொல்கின்றேன். தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பெரிய பெரிய ஸ்டூடியோக்களில் நீங்கள் செய்த வேலைகளை இப்போதெல்லாம் ஒரு அறைக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட கலர் கரெக்‌ஷன் கண்ட்ரோலர் மட்டும் 30 லட்சத்திற்கு இருந்தது. இப்பொழுது அது 1.75 லட்சத்திற்கு வந்துவிட்டது. இரண்டும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. மறுபடியும் நீங்கள் ஏழு லட்சத்திற்கு DI செய்வேன் என்றால் யாருக்கு நஷ்டம். ’நாகரா’,விற்கான வாடகை ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இன்றைக்கு ரெக்கார்டர் மட்டுமே ரூபாய் பத்தாயிரம் விலையில் கிடைக்கின்றது. சொல்லப்போனால் ’நாகரா’,வைக்காட்டிலும் இதில் ஒலி வசதிகள் அதிகம். புதிதாக வருகின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளாதது யார் தவறு? எந்த அளவிற்கு நாவல்களையும், கதைகளையும் படிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு தொழில்நுட்ப விஷயங்களையும் படித்துக்கொண்டேயிருங்கள். ஒரு படைப்பாளி தொழில்நுட்ப விஷயங்களை அதிகமாக கற்றுக்கொண்டால் தனக்குள்ளிருக்கும் கலைத்தன்மை போய்விடும் என்றெல்லாம் சொல்லக்கூடாது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
    </