வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


கொத்தமங்கலம் சுப்பு

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு.

கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம்.

1936ல் எம் கே ராதா கதாநாயகனாக நடித்த 'சந்திரமோகனா' என்னும் திரைப்படத்தில் எம் கே ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937ல் மைனர் ராஜாமணி என்கிற படத்தில் ஒரு நல்ல வேடம். சிங்காரப் பப்புச் செட்டியார். தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், நந்தனார் (ஜெமினி) பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்தார். இதன் பிறகு எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது திறமையை நன்குணர்ந்திருந்த எஸ் எஸ் வாசன் தனது பல படங்களுக்கு இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான 'கண்ணம்மா என் காதலி' திரைப்படத்திற்கு வசனம் தவிர இயக்கமும் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்தான். இந்தப் படத்திற்கு முன்பாக வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி பட அனுபவம் 'கண்ணம்மா என் காதலி' படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. 1945ல் இப்படம் வெளிவந்தது. கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்ட நடிகை எம் எஸ் சுந்தரிபாய் இப்படத்தில் கதாநாயகியாக எம் கே ராதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த படம் 'மிஸ். மாலினி' இதுவும் ஜெமினி தயாரிப்பு தான். பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947ல் வெளியிட்டனர். இப்படத்தில் 'சம்பத்' ஆக மிகவும் சிறப்பாக நடித்து மிகப்பெரிய பெயரைப் பெற்றார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் அப்போது பிரபலமாகாத ஜெமினி கணேசன் தலையைக் காட்டியிருந்தார்.

படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில்தான் இரண்டாவது உலகப் போர் முடிந்தது. நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலம். ஏராளமான தேவையான பொருட்கள் ரேஷன் கடையில் தான் பெற வேண்டும். இந்த ரேஷன் முறையையும், வாழ்க்கை அவலத்தையும் கிண்டல் செய்த பாடல் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
'காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்'
என்று தொடங்கும் இப்பாடலில், சில ரசமான வரிகள் இடம் பெற்றிருந்தன.
'சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்' என நீண்டு கொண்டே போகும் பாடல் மிகவும் பிரபலமாயிற்று.

இப்படத்தில் இடைவேளைக்குப் பிறகு உதிரியாக, கார்ட்டூன் தாணுவின் கார்ட்டூன் படம் ஒன்று காண்பிக்கப்பட்டது அக்காலத்தில் ஒரு புதுமையான நிகழ்ச்சி.

இதைத் தொடர்ந்து ஜெமினியிலிருந்து 1948ல் 'ஞான சௌந்தரி' என்றொரு படம் வந்தது. அதே நேரம் சிட்டாடல் கம்பெனியாரும் இதே கதையைத் தயாரித்து வெளியிட்டனர். ஜெமினி 'ஞான சௌந்தரிக்கு' கொத்தமங்கலம் சுப்பு, கே.வி. வேணுகோபால் மற்றுமொருவர் ஆக மூன்று பேர் கூட்டாக வசனம் எழுதியிருந்தனர். ஆனால் சிட்டாடலின் 'ஞான சௌந்தரி' படம் தான் மகத்தான வெற்றியடைந்தது. ஜெமினியின் 'ஞான சௌந்தரி தோல்வியைத் தழுவியது. ஜெமினியிலிருந்து தோல்விப்படம் என்பதே கிடையாது. எனவே இப்படத்தின் தோல்வி வெகுநாள் வரை அப்போது பேசப்பட்டது.

இதையடுத்து வி.நாகையா நடித்த 'சக்ரதாரி' என்கிற படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டியது. இப்படத்தில் சில பாடல்களை சுப்பு எழுதியிருந்தார். இப்படத்திலும் ஜெமினி கணேசன் ஒரு சிறிய பாத்திரத்தில் சற்று நேரம் வந்து போனார்.

இதே ஆண்டில்தான் ஜெமினியின் திரைக்காவியம் 'சந்திரலேகா' வெளியிடப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தயாரிக்கப்பட்ட காலத்தில் (1947-48) இப்படத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது. இத்தொகை அக்காலத்தில் மிகவும் பெரிய தொகை. இப்படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. ஆங்கில 'சப் டைட்டில்' போட்டு ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இந்தியாவிலேயே அதிக 'பிரிண்ட் (சுமார் 610) போட்ட படம் என்கிற பெயரும் இப்படத்திற்கு உண்டு. இப்படத்தில் கே ஜே மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு ஆகியோருடன் கொத்தமங்கலம் சுப்புவும் இணைந்து வசனம் எழுதியிருந்தார்.

கொத்தமங்கலம் சுப்புவிற்கு நாட்டுப்பாடல்கள் மீது அலாதிபிரியம் உண்டு. நாட்டுப்பாடல்கள் மெட்டில் அவரே பல பாடல்களும் எழுதியுள்ளார். இந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு அருமையான பழைய நாட்டுப்பாடல் ஒன்றை இப்படத்தில் சேர்த்திருந்தார்.
'ஆத்தோரம் கொடிக்காலாம்,
அரும்பரும்பா வெத்திலையாம்,
போட்டா சிவக்குதில்லே,
பொன் மயிலே உன் மயக்கம்,
வெட்டி வேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்'
என்கிற தொகையறாப் பாடலாக இப்படத்தில் இப்பாடல் ஒலித்தது. இன்றளவும் நம் காதுகளை விட்டு அகலவில்லை.

ஜெமினியின் அடுத்த படம் 'அபூர்வ சகோதரர்கள்' எம் கே ராதா இரட்டை வேடத்தில் நடித்த அற்புதமான படம். அலக்ஸாந்தர் டூமாவின் 'கார்சிகன் பிரதர்ஸ்' என்கிற நாவலை ஆதாரமாகக் கொண்ட படம். இந்தப் படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949ல் வெளிவந்தது.

1951ல் 'சம்சாரம்' என்று ஒரு படம். இதுவும் ஜெமினி தயாரிப்பு. இந்தப் படத்தைப்பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழாதவர்களே கிடையாது என்பார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் அழுதகண்களோடுதான் வருவார்கள். அந்த அளவு சோகமான இப்படத்தில் எம் கே ராதா கதாநாயகன். பாடல்கள் சுப்பு எழுதியிருந்தார். 'அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே' என்கிற இப்படப்பாடல் தமிழ் நாட்டின் பிச்சைக்காரர்கள் அனைவராலும் அனேக ஆண்டுகள் பாடப்பட்டது.

இதன் பிறகு வந்த படம் மூன்று பிள்ளைகள் மூன்று பிள்ளைகளில் ஒருவராக ஓரளவு நல்ல பாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். மிகவும் சிரம தசையில் இருந்த சந்திரபாபுவுக்கு இந்தப்படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திற்குப் பாடல்களை சுப்பு எழுதியிருந்தார்.

ஜெமினியின் அடுத்த மகத்தான தயாரிப்பு ஔவையார். இது ஒரு மாபெரும் வெற்றிச் சித்திரம். இப்போதும் கூட அடிக்கடி சின்னத் திரையில் கண்டு களிக்கலாம். மிகப் பிரம்மாண்டமான இப்படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தையும் ஏற்று ஔவையார் படத்தை ஓர் அற்புத காவியாக உருவாக்கிய பெருமை கொத்தமங்கலம் சுப்புவுக்கு உண்டு.

அதோடு இப்படத்தில் மனைவிக்கு பயந்தவராக ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் இவர் நடித்த காட்சிகள், கொத்தமங்கலம் சுப்பு எந்த அளவு அற்புதமான நடிகர் என்பதையும், எடுத்துக்காட்டியது. நட்ட கல் ஒன்றை மனைவியாக உருவகப்படுத்தி, தன்னந்தனியே ஒரு இடத்தில் அமர்ந்து அதட்டிக் கொண்டிருப்பார். அந்நேரம், மிகவும் பசியுடன் ஔவையார் அங்கு வந்து சேருகிறார். தனக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யும்படி சுப்புவை வேண்டுகிறார். ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி ஔவையாரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்வார். என்றாலும் ஔவையாரின் வற்புறுத்தலுக்குப் பணிந்து, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். ஔவையாரை வெளியிலே நிறுத்திவிட்டு, வீட்டினுள் செல்வார். கோபாக இருந்த மனைவியிடம் நைசாகப் பேசி விஷயத்தைத் கூறுவார். கோபமடைந்த மனைவி சுந்தரிபாய், பாத்திர பண்டங்களை யெல்லாம் வீசி எறிவாள். ஒரு வழியாக, கடைசியில் மனைவியை சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்து விட்டு வெளியே வருவார். ஔவையாருக்கு எல்லாம் புரிந்து விடும். ஆனால் சுப்பு, வீட்டினுள் பூனை ஒன்று வந்து அட்டகாசம் செய்ததாகக் கூறி, 'அடிச்சிட்டேன்' என்று வசனம் பேசுவார். நகைச்சுவையின் உச்சமான அக்காட்சி ரசிகர்களால் கைதட்டி ரசிக்கப்பட்டது.

ஔவையாரும் சுப்புவும் சாப்பிட அமர்கிறார்கள். 'கடு கடு' வென்ற முகத்துடன் பரிமாறும் சுந்தரிபாயின் உபசரிப்பில் கோபமடைந்த ஔவையார் உணவருந்தாமலேயே வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். போகும்போது, சுப்புவைப்பார்த்து ஒரு பாட்டு, அந்தப் பாட்டில் மனைவி என்பவர் எப்படி இருக்க வேண்டுமெனவும், அப்படி இல்லாவிட்டால் கணவன் என்ன செய்ய வேண்டும் எனவும் பாடுகிறார். அந்தப் பாட்டின் கடைசி அடி,

'சற்றேனும் ஏறுமாறாக
இருப்பாளேயாமாகில்,
கூறாமல் சந்நியாசம் கொள்' என்று முடியும்.

வீட்டிற்குள் செல்கிறான் கணவன் (சுப்பு), சட்டையை கழற்றி எறிகிறான். உடலெல்லாம் விபூதிப்பட்டை போட்டுக்கொண்டு வெளியே கிளம்ப எத்தனிக்கையில், மனைவி தடுத்து என்னவென்று கேட்கிறாள்.
'சட்டை கழன்றது,
சம்சாரம் விட்டது' என்று கூறி சந்நியாசியாக வெளியேறுகிறான். திரையரங்கில் கைதட்டல் காதைப்பிளக்கும்.

1955ல் வெளிவந்த 'வள்ளியின் செல்வன்' ஒரு 'கிளாஸிக்' வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய திரைப்படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல், இயக்கம் அனைத்தும் சுப்பு ஏற்று, மிகச்சிறப்பாக இப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரு வெற்றிப்படம்.

ஒரு மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 1958ல் ஜெமினியிலிருந்து வெளியான மற்றுமொரு பிரம்மாண்டமான திரைப்படம் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' மிகவும் வெற்றியடைந்த படம். பத்மினி - வைஜயந்திமாலாவின் போட்டி நடனத்தையும் பிஎஸ் வீரப்பாவின் 'சுபாஷ், சரியான போட்டி!’ வசனத்தையும் எவரும் மறந்திருக்கமுடியாது. இப்படத்திற்கான வசனம், பாடல் கொத்தமங்கலம் சுப்பு, அத்துடன் ஆரம்பக் காட்சி ஒன்றில் ஒரு முஸ்லிம் பெரியவராக ஒரேயொரு காட்சியில் வந்து மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு ஜெமினியிலிருந்து வெளியே வந்து விட்டார் கொத்தமங்கலம் சுப்பு, என்றாலும் வாசனின் ஆனந்தவிகடனில் கலைமணி என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். தில்லானா மோகனாம்பாள்' மிகுந்த பரபரப்புடன் தொடராக வெளிவந்து கொத்தமங்கலம் சுப்புவுக்கு மிகப்பெரிய இலக்கிய அந்தஸ்தை அளித்தது.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு வில்லுப்பாட்டில் விசேஷ அக்கறை இருந்திருக்கிறது. காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நடத்தி மிகவும் பிரசித்தி பெற்றார்.

தில்லானா மோகனாம்பாள் தொடர் வெளிவந்து சில காலத்திற்குப்பின் 'ராவ் பகதூர் சிங்காரம்' என்னும் ஒரு தொடரும் வெளி வந்து வெகுஜன வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு புதினங்களுமே திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு 'தில்லானா மோகனாம்பாள்' மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. 'ராவ் பகதூர் சிங்காரம்' புதினத்தை ஜெமினி நிறுவனம் 'விளையாட்டுப் பிள்ளை' என்கிற பெயரில் படமாக்கினார்கள். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஜெமினியை விட்டு வெளியே வந்துவிட்டாலும் அந்நிறுவனம் தயாரித்து 1960ல் வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படத்தின் வசனம், பாடல் எழுதும் பொறுப்பு இவருக்கே அளிக்கப்பட்டது. அதே ஆண்டு ஏ.விஎம் நிறுவனத்தாரின் 'களத்தூர் கண்ணம்மா' என்கிற படத்தில் சிறுவர்கள் நடிக்கும் ஒரு நாடகத்தின் பாடல்களை சுப்பு எழுதினார். சிறு முயலாக கமலஹாசன் நடித்த இந்த நாடகமும், அதன் பாடல்களும் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றன.

வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து 1965ல் படித்த மனைவி படத்திற்கு வசனம் எழுதினார். இதற்கிடையில் 'பாவமன்னிப்பு' படத்தில் குப்பத்தில் வசிக்கும் ஒரு பிராமணராக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1971 ல் பத்மஸ்ரீ விருது.

கொத்தமங்கலம் சுப்பு போன்ற சிறந்த கலைஞர்கள் எப்போதாவதுதான் தோன்றுவார்கள்.

சுப்புவின் திரைப்பணிகள்
1938 - அனாதைப்பெண் - நடிப்பு
1939 - அதிர்ஷ்டம் - நடிப்பு
1939 - சாந்த சக்குபாய் - வசனம், நடிப்பு
1939 - அடங்காப்பிடாரி - நடிப்பு
1939 - சுகுண சரசா - நடிப்பு
1940 - பக்த சேதா - நடிப்பு
1941 - சூர்ய புத்ரி - நடிப்பு
1941 - மதனகாமராஜன் - நடிப்பு
1942 - நந்தனார் (ஜெமினி) நடிப்பு
1942 - பக்த நாரதர் - நடிப்பு
1944 - தாசி அபரஞ்சி (ஜெமினி), கதை, வசனம், பாடல் மற்றும் நடிப்பு
1945 - கண்ணம்மா என் காதலி (ஜெமினி) - வசனம் இயக்கம்
1947 - மிஸ் மாலினி (ஜெமினி) வசனம், இயக்கம்
1948 - ஞான சௌந்தரி - வசனம் (கூட்டாக)
1948 - சக்ரதாரி (ஜெமினி) - பாடல்
1948 - சந்திரலேகா - வசனம் (கூட்டாக) (ஜெமினி)
1949 - அபூர்வ சகோதரர்கள் (ஜெமினி) பாடல்
1951 - சம்சாரம் (ஜெமினி) - பாடல்
1952 - மூன்று பிள்ளைகள் (ஜெமினி) - பாடல்
1953 - ஔவையார் (ஜெமினி) திரைக்கதை, பாடல் மற்றும் இயக்கம் - நடிப்பு
1955 - வள்ளியின் செல்வன் (ஜெமினி) - திரைக்கதை, நடிப்பு - இயக்கம்
1958 - வஞ்சிக்கோட்டை வாலிபன் (ஜெமினி), வசன பாடல், நடிப்பு
1960 - இரும்புத் திரை (ஜெமினி) வசனம் - பாடல்
1960 - களத்தூர் கண்ணம்மா (ஏவிஎம்) பாடல்
1965 - படித்த மனைவி - வசனம் (கூட்டாக)
1968 - தில்லானா மோகனாம்பாள் - (கதை)
1970 - விளையாட்டுப் பிள்ளை - கதை

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</