வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


வறுமைக்கோடு

பூபதி  

இப்போது நான் காத்திருப்பது என் நண்பனின் வீட்டு வாசலில். நீண்ட நேரமாக அங்குதான் அமர்ந்திருக்கிறேன். பக்கத்துவீட்டுக்காரர் அவ்வப்போது சந்தேகத்தினால் எட்டி எட்டி பார்க்கிறார். நண்பனின் வீட்டு வாசலின் நிலைமையே அங்கு முறையாக, நிலையாக யாரும் குடியிருப்பதில்லை என்பதை உணர்த்தியது. வாய்ப்பு கிடைத்தால் தங்களின் ஆட்சியை விசாலப்படுத்திக்கொள்ள, காய்ந்த இழைகளும் குப்பைகளும் வீட்டின் கதவுகளை தட்டிக்கொண்டிருந்து. மிகவும் அமைதியான பகுதியது அது. தனியாக அமர்ந்திருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. எனக்கு துணையாக திருடர்கள்கூட விரும்பாத சில காலணிகளும் வாசலில் கிடந்தது.

ஏன் திடிரென்று நண்பன் பற்றிய சிந்தனை, அவனை எதற்காக உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினேன்! பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் அமர்ந்து படித்த நண்பன் அவன். அவனைப்பார்த்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. சில நாட்களுக்கு முன் காலைநேரத்தில் சலனமில்லாத சாலையில் நான் நடந்து செல்கையில் திடிரென்று சீரிக்கொண்டு வந்து சர்ர்ர்க் என்ற சத்ததுடன் ஒரு இரண்டு சக்கர வாகனம் நின்றது. என்மீது இடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அப்படியே நின்றுவிட்டேன். ஆனால் என் அச்சத்தை போக்கும் விதமாக அருகில் வந்ததும் நின்றுவிட்டது. வாகனத்தை ஓட்டி வந்த நபர் என்னைப் பார்த்ததும் டேய் எப்படிடா இருக்கா? என்று அதட்டினார். அது அதட்டலா அல்லது என்னை முன்பே அறிந்திருப்பதால் உண்டான அதிகாரமா என்ற குழப்பத்தில் அவரை பார்த்தேன். சற்று குண்டான் உடல், தலையில் குடியிருந்த தலைமயிரில் பாதி வீட்டை காலி செய்திருந்தன. கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் மிகுந்த அலைச்சலினால் இயற்கையான வண்ணம் மாறி ஒருவிதமான வண்ணம் தோண்றுமே அப்படிப்பட்ட வண்ணத்தில் இருந்தார். அது அலைச்சல்தான் என்பதை அவர் கண்கள் உணர்த்தியது. ம்ஹும் யாரென்று தெரிய வில்லை அப்படி ஒரு நபரை நான் பார்த்ததில்லை. என்ன தெரியலையா! டேய் நான் பாலாடா, பாலசுப்ரமணியம் என்று அவன் சொன்னான். நான் தெரியவில்லை என்று சொன்னதைக்கேட்டு அவன் ஆச்சரியப்பட அர்த்தம் இருக்கிறது. அவ்வளவு நெருங்கிய நான்பர்களாக இருந்தவர்கள் நாங்கள். அவன் யார் என்று யோசிக்கும்போதுகூட என் மனம் பரபரப்பாக இயங்கியது. ஆனால் அவன் என் நண்பன் என்று தெரிந்த பிறகு பெட்ரோல் தீர்ந்த வாகனம் போல மனம் அப்படியே நின்றுவிட்டது. அதற்குப்பிறகு என்ன செய்வது எப்படி நடந்துகொள்வது என எனக்கு தெரியவில்லை. காரணம், என்னதான் நெருங்கிய நண்பன் என்றாலும், பல வருடங்களாக பார்க்காமல் இருந்துவிட்டு திடிரென்று ஒரு சந்திப்பு நிகழும்போது முதலில் இடையூறு செய்வது உடலியல் தோற்றம்தான். நண்பனாக நாம் கற்பனை செய்து வைத்திருந்த உருவம் மாறிவிட்டதால் ஒரு இனம்புரியாத இடைவெளி அங்கு உருவாகிவிடுகிறது. என்னைப் பார்த்ததும் தோலில் கைபோட்டு பேசும் பாலசுப்ரமணியாக அவனும் இல்லை, அதை எதிர்பார்க்கும் பூபதியாக நானும் இல்லை. சரி சரி எனக்கு நேரமாச்சு எங்கவீடு தெரியும்ல? அங்கேயேதான் இப்போ இருக்கேன் வந்து பாரு என்று கூறிவிட்டு சட்டென வண்டியை திருப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். ஒரு நண்பனைக்கூட உனக்கு தெரியவில்லையே என என் முகத்தில் காரி உமிழ்வது போல இருந்தது அந்த வாகனத்தின் புகை.

ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த சந்திப்பு அது என்றாலும் அன்றைய நாள் முழுவதும் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவனா இது! வேற பாலாவாக இருக்குமோ! வேற யாரைத்தெரியும் நமக்கு அவனைத்தவிர... பல முறை அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனால் கோபித்துக்கொண்ட சிநேகிதி முகத்தை திருப்பிக்கொண்டு போ போ என்பது போல வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். ஆனால் அவன் சொன்ன “இப்போ அங்குதான் இருக்கிறேன்” என்ற வாக்கியத்தில் உள்ள இப்போது என்ற வார்த்தையே நான் தேடிச்சென்ற அப்போது அவன் அங்கு குடியிருக்கவில்லை என்பதை உணர்த்தியது. இப்போது நான் சந்தித்த பாலாவின் தோற்றம், உடலும், உணர்வும் மறத்துப்போய்விட்ட ஒரு முரட்டுத்தனமான தோற்றம். அவனின் துன்பமான வாழ்வில் துணையாக இருக்க அவன் தலைமுடிகூட விரும்பாமல் விலகிச்சென்றுவிட்டது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவனின் இந்த தோற்றத்தை பற்றி நான் கூறுகையில் நீங்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம் நீங்கள் அவனை பால்ய வயதில் பார்த்ததில்லை. அப்போது மிகவும் பிரகாசமான முகத்துடன் சுறுசுறுப்பாக, கலகலப்பாக இருப்பான். ஒரு இடத்தில் நிலையாக நிற்கமாட்டான். எதாவது பேசிக்கொண்டே இருப்பான். செய்யட்டுமா!, எடுத்துக்கொள்ளட்டுமா! வரட்டுமா! என்று உத்தரவுக்காக காத்திருக்கும் உறவல்ல அவனுடைய நட்பு. எதையும் உரிமையோடு செய்யக்கூடியவன். பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்கும் பசங்க தலைவாரியிருப்பார்களே அவர்களைப்போல தலைவாரி விபூதி வைத்துக்கொண்டு பளிச்சென்ற தோற்றத்தில் இருப்பான். அவன் அணிந்திருக்கும் சட்டையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட நூலைவீட அந்த சட்டையை காப்பாற்ற அவன் பயன்படுத்திய நூலின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். என்ன சாப்பிட்டாய் என்று அவனிடம் கேட்பதைவீட எவ்வளவு சாப்பிட்டாய் என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். பல நேரங்களில் நாங்கள் கொண்டுவரும் உணவை பகிர்ந்துகொள்வதோடு முடிந்துவிடும் அவன் மதிய உணவு. கூப்பிடாவிட்டாலும் கூட யாராவது ஒரு நண்பனின் வீட்டிற்கு வரும் அவன், விடுமுறைகாலங்களில் கூப்பிட்டாலும் வராமல் அவனின் மாமா வீடு, சித்தப்பா வீடு என்று யாராவது ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிடுவான். விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் வரும்போது அவன் வழக்கமாக அணிந்திருக்கும் சட்டை மாறியிருக்கும். அவனுக்கு பொருத்தமில்லாத அவனைவீட சற்று பெரியவர்களின் சட்டைபோல இருக்கும். பேனா, பென்சில் என அனைத்தும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். அவன் முகம் மட்டும் வேறு ஒருவர் பயன்படுத்திவிட்டு கொடுத்த பொருள்போல பொலிவற்று இருக்கும். டேய் ஏதுடா இது என்று ஆச்சரியமாக கேட்கும்போது என் மாமா கொடுத்தார் என்று உணர்வற்று அவன் கூறுவதன் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு சில காலம் அவனுடன் பழகிய பிறகுதான் அந்த பொருட்களை வாங்க வழியில்லாததால் உறவினர்களைத்தேடி ஊருக்கு செல்கிறான் என்ற விசயம் தெரிந்தது. தீபாவளி பண்டிகையின் போது புதியதாக உடை அணிந்து அதன் விலை பற்றி வீராப்பாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஊரில் இருந்து உறவினர் கொடுத்தனுப்பிய சட்டையை போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் இருப்பான். எல்லாவற்றிற்கும் பிறரை நம்பியே இருக்கும் அவனால் தேவையான பொருளின் விலை எவ்வளவு குறைந்தாலும் கூடினாலும் வாங்க இயலாது, எனவே விலை பற்றிய விழிப்புணர்வே அவனிடம் இருக்காது.

நேரம் ஆக ஆக வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. வாசலில் உட்கார்ந்து இருக்க முடியாது என்பதால் நிழலுள்ள இடம் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் போதுதான் தென்பட்டது வாசலில் விழுந்திருந்த வண்ணத்துளிகள். அவை அவனுடைய அப்பாவை ஞாபகப்படுத்தியது. அவனுடைய அப்பா ஒரு ஓவியர். ஓவியர் என்றால் ஓவியர் அல்ல ஓவியமும் வரைவார். அவன் அப்பாவிற்கு என்று தனிப்பட்ட தொழில் என்று எதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன். நான் பார்க்கும்போதெல்லாம் வேறு வேறு வேலைகளை செய்துகொண்டிருப்பார். சில நாட்கள் மரம் இழைத்துக்கொண்டிருப்பார், சில நாட்கள் படம் வரைந்துகொண்டிருப்பார். இப்படி கிடைத்த வேலைகளை செய்து கிடைத்ததைக்கொண்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவர் அவர். நான் பார்க்கும் போதெல்லாம் அழுக்குக் வண்ணத்தில் ஒர் லுங்கியை கட்டியிருப்பார். ஏழைகளின் புத்திசாலித்தனமான நடவடிக்கை இது என்று நினைக்கிறேன். புதிதாக உடை வாங்கினால்கூட பளிச்சென்ற வண்ணத்தில் வாங்காமல் இப்படி மங்கிய வண்ணத்தில் வாங்குவதால் பழையதா புதியதா என்ற வித்தியாசம் தெரியாது. சலவை செய்யாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். தருவதற்கு எதுவுமில்லை என்றாலும் மிக தாராள குணம் கொண்ட மனிதர் அவர். அவரிடம் ஒரு பழைய இரண்டு சக்கர வாகனம் இருந்தது. ஒவ்வொரு முறை நான் அவரின் வீட்டுக்கு சென்று திரும்பும்போதும் இருப்பா வண்டியில ரோடுவரைக்கும் கொண்டுவந்து விடுறேன் என்பார். அந்த வாகனத்திற்கு லிட்டர் எவ்வளவு என்று கேட்டு பெட்ரோல் ஊற்றமாட்டார். ஒரு லிட்டர் எவ்வளவு என்று அவருக்கு தெரியுமா என்ற சந்தேகம்கூட எனக்குள்ளது. கையில் இருக்கும் பணத்தில் ஏதாவது மிஞ்சினால் அந்த பணத்திற்கு பெட்ரோல் போடும் நபர் அவர். ஆனாலும் அவர் வார்த்தைகளில் பெருந்தன்மை அதிகமாகவே இருக்கும். வண்டி எடுத்திட்டு போறியா? என ஒவ்வொரு முறையும் கேட்கத்தவறியதில்லை.

நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு எதிரே உள்ள கோவில் சுவரில் உள்ள அம்மன் படங்கள் கூட அவர் வரைந்ததுதான். அம்மனின் கண்கள் மட்டும் சற்று பெரியதாக வரைந்திருப்பார். இந்த படம் வரைந்த சமயத்தில் கோவில் பூசாரி படம் வரைந்ததற்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு, என்ன வரைஞ்சிருக்க, சாமி கண்ண பாரு எரும கண்ணுமாதிரி வரைஞ்சிருக்க என்று குறை கூறிய பூசாரியை கோபமாக பாலாவின் அம்மா திட்டிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவன் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். என்ன இருந்தாலும் வரைந்துள்ள சாமியை அப்படி குறை சொல்லக்கூடாது இல்லையாப்பா என்று அவன் அம்மா என்னிடம் கேட்ட போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அசையாமல் அப்படியே இருந்திருக்கிறேன். இந்த காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி குழம்பு வைக்கும் பெண்ணல்ல அவர். கிடைத்த ஐந்து பத்துக்கு கிடைக்கும் காய்களைக்கொண்டு சமாளிக்கக்கூடியவர். குழம்பு வைத்திருக்கிறேன் என்று கூறுவாரே தவிர இன்ன குழம்பு வைத்திருக்கிறேன் என்று கூறியது கிடையாது. நான் எப்போது சென்றாலும் இருப்பா வரேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் சிறிது நேரத்தில் பிரபலமான டீ தூளைக்கொண்டு டீ வைத்துக்கொண்டு வருவார். டீ நல்லா இருக்காப்பா என்று கேட்கும்போது இவ்வளவு காசு இவர்களுக்கேது என்று நான் ஆச்சரியமாக பார்ப்பதை புரிந்துகொண்டு, டீ தூள் விலை எவ்வளவு இருந்தா என்னப்பா நான் வாங்குவது இரண்டு ரூபாய்க்குத்தானே, இரண்டு ரூபாய்க்கு எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே என்பார்.

ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டேன் இதற்குமேல் வீட்டிற்கு யாரும் வரப்போவதில்லை இன்னொரு நாள் வரலாம் என்று மனம் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாலும். அதே இடத்தில் அமர்ந்து அங்கு குப்பையாக கிடந்த பழைய செய்தித்தாள்களை விரித்து படித்துக்கொண்டிருந்தேன். அதில் கிடைத்தற்கரிய பிரதமரான, படிப்பில் மேதையான நம் பாரதப்பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் சொன்னதாக ஒரு செய்தியிருந்தது “ஏழைகள் விலை ஏற்றத்தில் பாதிக்கப்படுவதில்லை”.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</