வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 17

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

கோமதியின் காதலன், கோகில வாணி ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவவே அதற்கடுத்த ஆண்டு ராமநாதனுக்கு வாய்ப்புகள் சற்று சுருங்க ஆரம்பித்ததென்னவோ நிஜம்தான்.

முன்பே குறிப்பிட்டது போல படவுலகில் கே. வி. மகாதேவன், டி.ஆர். பாப்பா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.ஜி. லிங்கப்பா போன்ற புதியவர்களின் வருகை -புதியவர்கள்
என்பதால் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற முனைப்போடு அவர்கள் செயல்பட்டதால் திரை இசையில் புதிய புதிய பரிமாணங்கள் வேரூன்றத் தொடங்கின.

அந்தச் சூழலிலும் ஜி. ராமநாதன் தொடர்ந்து தாக்குப் பிடித்தார் என்றால் அதற்கு அவரது தன்னம்பிக்கையும், திறமையும், உழைப்பும், புதியதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன்னை பக்குவப்படுத்திக்கொண்ட விதமும் அவரது பரந்த மனமும் காரணமாக அமைந்தன. சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா போன்ற புதிய பாடகர்களை அவர்களது முழுத் திறமையும் வெளிப்படும் விதமாகப் பயன்படுத்திக்கொண்டார் அவர்.

பழைய விஷயங்களையே விடேன் தொடேன் என்று பிடித்துக்கொண்டிருக்காமல் காலமாறுதல்களுக்கேற்ப வித்தியாசமான போக்குகளை தனது இசையில் வெளிப்படுத்திய அதே சமயம் பாரம்பரிய இசையிலிருந்து மீறாமல் இசை அமைக்க ஆரம்பித்தார் அவர்.

வாய்ப்புகள் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்த பொழுதும் அவரது இசையில் வெளிவந்த படங்களில் மூன்றில் இரண்டு வெற்றிபெற்று அவரைக் கைதூக்கி விட்டு"இதோ இருக்கிறார் ஜி. ராமநாதன்" என்று அவரை அடையாளம் காட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்தன. இப்படி சற்று இறங்குவதும் மறுபடி ஏறுவதுமாக அவரது படவுலக வாழ்க்கை இருந்து வந்தது.

என்றாலும் புதியவர்களை பாராட்டி ஊக்குவித்து உற்சாகப் படுத்தத் தயங்கவில்லை அவர். புதிய இசை அமைப்பாளர்களின் சிறப்பான இசையை மனமாரப் பாராட்டுவது அவரது வழக்கமாக இருந்தது. இது சாதாரணமாக எல்லா இசை அமைப்பாளர்களும் செய்வது தானே என்று நினைக்கலாம்.

ஆனால் அதற்கு ஒருபடி மேலே சென்று அப்போதுதான் முன்னுக்கு வந்து கொண்டிருந்த இசை அமைப்பாளரின் இசையில் பின்னணி பாடவும் செய்தார் அவர். அப்படிப் பாடிய முதல் இசை அமைப்பாளர் அந்தக் காலகட்டத்தில் அவர்தான்.

ஜி. ராமநாதன் பாடிய பாடலுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை பெற்ற அந்த இசை அமைப்பாளர் "திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் அவர்கள்தான்.

ஏற்கெனவே ராமனாதனின் மெட்டுக்கு இணைப்பிசை கொடுத்த அனுபவம் கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அது எப்போது என்றால்...

மந்திரி குமரி படத்துக்காக "ஹர ஹர தேவ தேவா" என்ற அற்புதமான பக்திப் பாடல் ஒன்றை டி.எம். எஸ். அவர்களைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன். படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் பாடுவது போல காட்சி அமைப்பு இருந்தது. ஆனால் அப்போது தான் இருந்த திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது என்பதால் அந்த பக்திப் பாடல் காட்சிக்கு வாயசைத்து நடிக்க முடியாது என்று எம். ஜி. ஆர். நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடவே அந்தப் பாடல் அப்படியே நின்று போனது.

அந்தப் பாடலுக்கான மெட்டின் பிரதி பாடகர் டி.எம். சௌந்தரராஜனிடம் இருந்தது. வாய்ப்புகளைத் தேடி அவர் அலைந்து கொண்டிருந்த காலமல்லவா அது.? அப்போது எச். எம். வி.யில் இசை அமைப்பாளராக இருந்த கே.வி. மகாதேவனைச் சந்தித்து அவரிடம் அந்தப் பாடலை கொடுத்தார் டி.எம்.எஸ். (அவ்வப்போது சௌந்தரராஜனுக்கு எச்.எம்.வி.யில் பாடல்கள் பாட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவருக்கு ஆதரவளித்து வந்தார் கே.வி. மகாதேவன்.) ஜி. ராமனாதனின் மெட்டை இன்னும் மெருகுபடுத்தி அருமையான முறையில் இணைப்பிசை கொடுத்து இசைத் தட்டாக டி.எம். எஸ். அவர்களைப் பாடவைத்து பதிவு செய்தார் கே.வி. மகாதேவன்.

அந்தவகையில் கே.வி. மகாதேவனின் மீதும் அவரது திறமையின் மீதும் பெருமதிப்பு ஜி. ராமநாதனுக்கு இருந்தது.

அதனால் தானோ என்னவோ, கே.வி. மகாதேவன் இசை அமைத்த "அல்லி பெற்ற பிள்ளை" என்ற படத்தில் ஒரு சோகமான சூழலுக்கு பின்னணி பாட அழைப்பு வந்தபோது சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக்கொண்டார் ராமநாதன்.

பாடல் பதிவுக்கு ஜி. ராமநாதன் வந்தபோது அந்த இசை மேதையை எப்படி வேலை வாங்குவது என்ற தயக்கம் மகாதேவனுக்கு ஏற்பட்டது.

பாடல் வரிகளைப் படித்துப் பார்த்த ஜி. ராமநாதன்"நான் பாடவேண்டிய நோட்ஸ் எங்கே?" என்று கேட்டார்.

"நீங்க பாடறபடி பாடிடுங்கோ. அதுவே சரியா இருக்கும்" என்றார் மகாதேவன்.

"அதெல்லாம் கிடையாது. நான் இங்கே ஒரு பாடகனாகத் தான் வந்திருக்கேன். அதனாலே நீங்க போட்டிருக்கிற டியூனுக்கு தகுந்தபடிதான் நான் பாடியாகணும்" - என்று பிடிவாதமாக கூறி மகாதேவன் அமைத்த நோட்ஸை ஒரு முறை படித்து மனதில் வாங்கிக்கொண்டு பாட ஆரம்பித்தார் ராமநாதன்.

"எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே.
பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே"
- பாடல் படத்தில் இடம்பெறும் சூழலுக்கேற்ற சோகம் ததும்ப ஒரே டேக்கில் பதிவானது.

ராமநாதன் பாடி முடித்ததும் அவரது குரலில் வெளிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கு அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த கே.வி. மகாதேவன், படத்தின் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் உட்பட அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதன் கல்லும் கசிந்துருகப் பாடிய அந்த அற்புதமான பாடலை நீங்களும் கேட்கவேண்டாமா? இதோ அதற்கான இணைப்பு : http://www.mediafire.com/?nqztkxdhldt

இன்னும் சொல்லப்போனால் படத்தில் யாருக்காக தான் பாடியிருக்கிறோம் என்பதைக் கூட ஜி. ராமநாதன் தெரிந்து கொண்டிருப்பாரா என்பது சந்தேகம் தான்.

வாழ்ந்து கேட்ட தனது எஜமானின் அழும் குழந்தையை தேற்றும் பணியாள் பாடும் பாடலாக அமைந்த பாடல் என்றுதான் பொதுவாக அனைவரும் நினைப்போம்.

ஆனால் படத்தில் இந்தப் பாடல் காட்சியில் வேலையாள் பாடுவதாக அல்லாமல் ஒரு குதிரை வாயசைப்பதாக அமைத்திருந்தார்களாம். (ஒருவேளை அசரீரிப்பாடலாக கூட இருக்கலாம். யார் கண்டது.!) படம் வெளிவந்த ஆண்டு 1959 .

"ஜி. ராமநாதனை ஒரு குதிரைக்கு பின்னணி பாடவைத்து விட்டார்கள்"- என்று கூட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதற்காகவெல்லாம் ராமநாதன் அலட்டிக்கொள்ளவே இல்லை. அதுதான் ஜி. ராமநாதன்.

****

1955 -இல் ராமநாதனின் இசையில் வெளிவந்த படங்கள் அனைத்துமே சரியாகப் பேசப்படாவிட்டாலும், அதற்கடுத்த ஆண்டு அவரது இசையில் வெளிவந்த மூன்று படங்களில் இரண்டு மீண்டும் வெற்றிபெற்று அவரது நிலையை உயர்த்தின.

"சதாரம்" - ஜெமினி கணேசன், கே.ஆர். ராமசாமி, பி. பானுமதி நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற டி.எம். சௌந்தரராஜன் பாடிய "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே. நீங்கிடாத துன்பம் பெருகுதே." என்ற ஷண்முகப்ரியா ராகத்தில் ஜி.ராமநாதன் அமைத்த பாடல் கேட்பவர் நெஞ்சங்களில் இன்றும் நீங்காது நிலைபெற்ற பாடலாக அல்லவா இருக்கிறது.?

ஆனால் சதாரம் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வி ஜி. ராமநாதனைப் பாதித்து விடாத வண்ணம் அதே ஆண்டு வெளிவந்த மற்ற இரண்டு படங்கள் கைகொடுத்து உதவின.

ஒன்று - "நான் பெற்ற செல்வம்."

சிவாஜி கணேசன், ஜி. வரலக்ஷ்மி, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற கவி. கா. மு. ஷெரீப் அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழிக்கமுடியாத வண்ணம் அமரத்துவம் அடைந்துவிட்டிருக்கின்றன என்றால் அதற்கு ஜி.ராமநாதன் அமைத்த இசையே காரணம்.

"பூவா மரமும் பூத்தது. பொன்னும் மணியும் விளைந்தது." - டி.எம்.எஸ். - ஜிக்கி இணைந்து பாடும் இந்தக் காதல் டூயட் குணத்தோடு வாழும் இரு நெஞ்சங்கள் மனத்தால் இணைந்த காதலை அருமையாகப் படம் பிடித்துக் காட்டும் பாடல்.

"நான் பெற்ற செல்வம். நலமான செல்வம்." - பாடலில் ஜோன்புரி ராகத்தை அற்புதமாகக் கையாண்டு ராமநாதன் இசையமைக்க அற்பணிப்பு உணர்வுடன் அருமையாகப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். அவர்கள்.

இந்த உலகத்தின் போக்கு இருக்கிறதே.. அது மிகவும் விசித்திரமான ஒன்றுதான். ஒருவனை முன்னேறவும் விடாது. பின்னோக்கி செல்லவும் விடாது. இந்த விந்தையான போக்கை கவி. கா.மு. ஷெரீப் அவர்களின் பேனா வெகு அருமையாகச் சித்தரிக்க, கருத்தாழம் மிக்க அந்த வரிகளுக்கு "சிந்துபைரவி" ராகத்தை கையாண்டு ராமநாதன் புகுந்து விளையாட தனது கம்பீரக் குரலால் பாடலுக்கு சௌந்தரராஜன் உயிர் கொடுத்திருக்கிறார். காலத்தால் அழியாத அந்தக் காவியப் பாடல்தான் "வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். வையகம் இதுதானடா." - என்ற பாடல்.

இந்தப் பாடலின் சரணத்தில் "வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டு சிரிக்கும். வாழ்வாரைக் கண்டால் மாத்திற்குள் புழுங்கும்." என்ற வரிகளில் டி.எம்.எஸ். அவர்கள் வெளிப்படுத்தும் பாவம் இருக்கிறதே அது கேட்டு அனுபவிக்க வேண்டிய ஒன்று.

பாடல் முடியும் கட்டத்தில் "வையகம் இதுதானடா" என்று டி.எம். எஸ். அவர்களின் குரலை உச்சத்துக்கு ஏற்றி அப்படியே நிறுத்தி பாடலை முடித்துவிடுவார் ஜி. ராமநாதன். அதுதான் அவரது பலம்.

இதே போல் "மாதா பிதா குரு தெய்வம். அவர் மலரடி போற்றி வணங்குதல் செய்வோம்." - என்ற பாடல் ராதா ஜெயலக்ஷ்மி, ஏ.பி. கோமளா இணைந்து பாடும் ஒரு சிறுவர் பாடல்.

"ஒதாதிருப்பது தீது... தெய்வம் தொழுதிடல் வேண்டும்." - என்றெல்லாம் விளையும் பயிர்களுக்கு சுலபமாக மனதில் பசுமரத்தாணி போல பதியும் வண்ணம் கருத்துக்கள் அமைந்த பாடல் இது.

அந்த நாளில் இது போன்ற சிறுவர் பாடல்கள் படத்துக்கு ஒன்றாவது இருந்தன. சினிமா என்பது அனைத்து தரப்பினருக்குமான ஒரு பொழுதுபோக்கு சாதனம். அனைத்து தரப்பினர் என்றால் அதில் குழந்தைகளும் அடக்கம் அல்லவா? ஆகவே குழந்தைகளுக்காக - அவர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லவேண்டும் என்ற சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு - தயாரிப்பாளர்கள் இப்படிப் பட்ட பாடல்களையும் படத்துக்கு ஒன்றாவது இடம்பெறச் செய்தார்கள்.

இன்று தனியார் தொலைக்காட்சிகளில் முகம் சுளிக்கவைக்கும் அங்க அசைவுகள் கொண்ட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியரை ஆடவைத்து ரசிக்கும் பெற்றோர்களும், அவர்களுக்கு மதிப்பெண்கள் போடும் நடுவர்களும் - ஏன் "மாதா பிதா குரு தெய்வம்" போன்ற கருத்தாழம் மிக்க நல்ல பாடல்களுக்கு இளம் சிறார்களை ஆடவைத்து பழக்கக் கூடாது.? நல்ல கருத்துக்கள் பிஞ்சு மனங்களில் சுலபமாகப் பதிய இதனை பயன்படுத்திக் கொள்ளலாமே. ஜி. ராமநாதன் போன்ற இசையமைப்பாளர்கள் இப்படிப்பட்ட பொக்கிஷங்களாக எத்தனை எத்தனை சிறுவர் பாடல்களை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்?

நமது தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான தரமான பாடல்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அவற்றை அவர்களுக்கு அறிமுகப் படுத்தத்தான் யாரும் இல்லை.

அவற்றை பிஞ்சு உள்ளங்களில் பதியன் போடாமல் அவர்கள் வயதுக்கு ஒவ்வாத பாடல்களைப் பாடவும், ஆடவும் வைப்பது அவர்களது எதிர்காலத்துக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி அல்லவா? சம்பந்தப் பட்ட பெற்றோர்கள் முதலில் உணரவேண்டும்.
****
சிறந்த கதையம்சமும், அருமையான நடிப்பும், கருத்தாழம் மிக்க பாடல்களும், இவற்றோடு ஜி. ராமனாதனின் மிகச் சிறப்பான இசையும் "நான் பெற்ற செல்வம்" படம் வெகு ஜன வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களின் வரிசையில் சேர உதவின.

நமது மக்கள் நல்லதை வரவேற்க என்றுமே தயங்குவதில்லை என்பது இந்தப்படத்தின்
வெற்றியால் நிரூபணமானது.

அதே ஆண்டு ராமனாதனின் இசைக்கு இன்னொரு வெற்றிமகுடத்தைச் சுமந்து வந்தான் "மதுரை வீரன்".

"வாங்க மச்சான் வாங்க."

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</