வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 16

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"தூக்கு தூக்கி"யின் மாபெரும் வெற்றி ஜி. ராமநாதனின் இசை சாம்ராஜ்யத்தை புதுப் பொலிவுடன் மெருகேற வைத்தது.

மக்களின் ரசனை மாரத்தொடங்குவதை உணர்ந்து கொண்டார் அவர்.

மாற்றங்களுக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாலும் தொல்லிசையை
கைவிட்டு விடவில்லை அவர்.

“பாரம்பரிய இசை வடிவங்களை எளிமைப்படுத்தி கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்” - என்கிற அழுத்தமான கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டார் அவர்.

அதே சமயம் முன்னுக்குவரத் துடித்துக்கொண்டிருந்த இளைய தலைமுறைப் பாடகர்களையும் பாடகியரையும் இனம் கண்டு வாய்ப்புகளை கொடுத்து ஊக்குவிக்க தயங்கவில்லை அவர்.

அந்த முறையில் அவரால் அடையாளம் காணப்பட்ட இன்னொரு பாடகர்தான் "இசை மணி" டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.

மாடர்ன் தியேட்டர்சில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு இசை அமைத்த காலம் தொட்டே ஜி. ராமநாதனுக்கு சீர்காழி கோவிந்தராஜனை தெரியும்.

சீர்காழி அவர்களின் வாழ்க்கைப் பாதை அவரது இசையைப் போலவே சுவையானது.

அதில் ஜி. ராமநாதனின் இணைவு அவர் கொடுக்கும் பிருகாக்கள் போல சுவாரஸ்யமானது.

வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் - வெற்றியை நோக்கி செயல்படத் துடிக்கும் இளைய தலைமுறை சீர்காழி கோவிந்தராஜனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவரது உழைப்பை தான். வெற்றி பெற்ற மனிதன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் தனது பெயரையும் புகழையும் எப்படி தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் தனது பண்புகளால் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக சொல்லாமல் சொல்லியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தான்.

சிறுவயதில் சீர்காழி திரிபுரசுந்தரி ஆலயத்தில் விடியலில் ஒலிக்கும் நாதசுர ஓசை காலை நான்கு மணிக்கு துயிலெழுப்ப ஆலயத்துக்கு வந்து நாதஸ்வர வித்வானின் அருகில் அமர்ந்து கொண்டு அந்த நாதத்தை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்தவர் அவர்.

தந்தை வாங்கி வந்த கிராமபோன் கருவியில் இருந்து இசைத்தட்டு வழியாக வெளிவந்த எஸ்.ஜி. கிட்டப்பாவின் இசையை செவி மடுத்து தனது இசை அறிவை வளர்த்துக்கொண்டவர் அவர்.

எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரின் இசையை தனது நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவச் செய்து கொண்டவர் அவர்.

மாடர்ன் தியேட்டர்சில் மாதம் ஏழரை ரூபாய் சம்பளத்தில் ஒரு துணை நடிகராகச் சேர்ந்தபோது ஜி. ராமநாதன் என்ற இசை மேதையால் தான் ஆசீர்வதிக்கப் போகிறோம் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார் அவர்.

ஒய்வு நேரங்களில் சாதகம் செய்துகொண்டிருந்த அந்த இளம் பாடகனின் குரலில் ஒலித்த வெண்கல நாதம் ஜி. ராமநாதனை கவர்ந்தது.

தன்னை வந்து சந்திக்கும் படி கோவிந்தராஜனுக்கு சொல்லி அனுப்பினார் அவர்.

அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக தனது சிற்றப்பாவுடன் ராமநாதனை வந்து சந்தித்தார் சீர்காழி கோவிந்தராஜன்.

"இந்தப் பையனுக்கு சாரீரம் ரொம்ப நல்லா இருக்கு. குரல் நன்னா பேசறது. ஆனா இப்போ சினிமாவிலே பாடறதுக்கு அவசரப்படவேண்டாம். மெட்ராசுக்கு அழைச்சுண்டு போய் நல்ல குருநாதர் கிட்டே சிட்சை கொடுங்கோ. பின்னாலே இவன் கண்டிப்பா ஒரு பிரபல பாடகனா வருவான்." என்று சொல்லி சீர்காழியை சென்னைக்கு அனுப்பி வைத்தார் ராமநாதன்.

அவரது வார்த்தைகள் தந்த தெம்பில் சென்னைக்கு வந்து அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து "இசை மணி" "வித்வான்" ஆகிய படிப்புகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார் சீர்காழி. சென்னை மியூசிக் அகாடமி நடத்திய இசைப் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் அவர். (அவற்றில் ஒன்றுக்கு நடுவராக இருந்து அவரை தேர்வு செய்தவர் இசையுலக இளவரசர் ஜி.என்.பி. என்பது சிறப்பான விஷயம்). தமிழ் இசைச் சங்கத்தின் போட்டியில் கலந்து கொண்டு "கவர்னர் ஜெனரல் ராஜாஜி" ஸ்பான்சர் செய்த தம்பூராவை பரிசாகப் பெற்றார் அவர்.

அதன் பிறகு திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை அவர்களிடம் மூன்று வருடம் குருகுல வாசம்.

இப்படி இசைத்துறையில் புடம் போட்ட தங்கமாக, பட்டை தீட்டப்பட்ட வைரமாக மெருகேற்றிக்கொண்ட சீர்காழிக்கு திரைப்படத்துறை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்க காத்துக்கொண்டிருந்தது.

அமரர் கல்கி அவர்களின் "பொய்மான் கரடு" நாவல் "பொன்வயல்" என்ற பெயரில் படமான பொழுது அதில் பாடும் வாய்ப்பு சீர்காழிக்கு கிடைத்தது.

"சிரிப்புத்தான் வருகுதையா" என்ற கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடலை பாடியபடி திரை இசைப் பாடகராக அறிமுகமானார் சீர்காழி. பாடலுக்கு இசை அமைத்தவர் துறையூர் ராஜகோபால சர்மா.

முதல் பாடல் மிகவும் பிரபலமாகவே - தொடர் வாய்ப்புகள் ஜி. ராமநாதனின் இசையில் காத்திருந்தன.

தனது அறிவுரையை செவிமடுத்து தன்னை இசைத்துறையில் மேலும் மெருகேற்றிக்கொண்டு வந்திருந்த கோவிந்தராஜனின் மீது ராமநாத அய்யருக்கு அலாதிப் பற்று இருந்தது.

ஆகவே அவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்புகளைக் கொடுத்தார் ராமநாதன்.

ஒரு பாடகன் என்னதான் திறமை பெற்றிருந்தாலும் அவனது பாடல்கள் கேட்பவரால் பேசப்பட வேண்டும் என்றால் அவனுக்கு படத்தின் கதாநாயகனுக்கு பாடும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் அது சாத்தியமாகும்.

அந்த வாய்ப்புகள் சீர்காழி கோவிந்தராஜனுக்கு தொடர்ச்சியாக ஜி. ராமநாதனின் மூலமாக கிடைத்தன.

"நல்ல தங்கை" என்ற படத்தில் "ஏ பி சி டி படிக்கறேன்" என்ற பாடலை படத்தின் கதாநாயகனுக்கு ஜி. ராமநாதனின் இசையில் பாடினார் சீர்காழி கோவிந்தராஜன்.

அடுத்து பிரபல நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனின் சொந்தப் படமான "கோமதியின் காதலன்" படத்தில் ஜி. ராமநாதனின் இசையில் பிரதான பாடகரே சீர்காழி அவர்கள்தான். இணைப்பாடலாகவும், தனிப்பாடலாகவும் ஐந்து பாடல்களை படத்தில் பாடினார் அவர்.

ஜி. ராமநாதனின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் சீர்காழியின் வெண்கலக் குரலில் வெகு அற்புதமாக ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தன.

சீர்காழி கோவிந்தராஜனின் தலை சிறந்த திரை இசைப் பாடல்களை வரிசைப் படுத்தினால் அவற்றில் முதல் இடம் பிடிக்கும் பாடல் "கோமதியின் காதலன்" படத்தில் இடம் பெரும் "வானமீதில் ஓடிவரும் வெண்ணிலாவே." - பாடலாகத்தான் இருக்கும்.

ஒரு கிடார், ஒரு தபேலா, ஒரு வயலின், ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு சீர்காழியின் குரலில் இந்தப் பாடலில் இந்திரஜாலமே புரிந்திருக்கிறார் ஜி. ராமநாதன் என்றால் அது மிகை அல்ல.

அது போலவே "அன்பே என் ஆரமுதே வாராய்" என்ற கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியத்தின் இலக்கிய நயம் மிக்க டூயட் - ஜி. ராமநாதனின் மனம் கவர்ந்த "பீம்ப்ளாஸ்" ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜன் - ஜிக்கி இணைந்து பாடும் கேட்கத் தெவிட்டாத ஒரு பாடல். இது போன்ற அருப்தமான பாடல்களை இந்தத் தலைமுறையினர் கேட்கத் தவறக்கூடாது. மயிலிறகால் மனதை மென்மையாக வருடுவது போன்ற இந்தப் பாடல்களுக்கான இணைப்பு :
(http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001594)

ஆனால் "கோமதியின் காதலன்" படம் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. ஆனால் இசையைப் பொறுத்த அளவில் பாடல்கள் பெருவெற்றி அடைந்தன.

அடுத்து சீர்காழி கோவிந்தராஜனுக்காகவே ஜி. ராமநாதன் இசை அமைத்தாரோ என்று என்னும்படியாக அமைந்த படம் தான் "கோகிலவாணி" இந்தப் படத்தில் இடம் பெற்ற "சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்" என்ற "சுத்த தன்யாசி" ராகத்தில் அமைந்த பாடலில் சீர்காழி அவர்களின் நாதமும், ராமநாதனின் கீதமும் அற்புதமாக அமைந்தது.

அது மட்டுமல்ல. விருத்தம் பாடுவதில் சீர்காழி அவர்களின் திறமை வெளிப்படும் விதத்தில் கவிஞர் எஸ்.டி. சுந்தரம் அவர்கள் எழுதிய "மாலையிலே மனச்சாந்தி தந்து" என்ற விருத்தத்தை ஜி. ராமநாதன் அமைத்திருக்கும் விதம் அற்புதம். பந்துவராளி, காம்போஜி, ஷண்முகப்ரியா- போன்ற சுத்தமான கர்நாடக ராகங்களில் ராமநாதன் அமைத்திருக்கும் ராகமாலிகையின் அமைப்பை சொல்வதா, அந்த ராகமாலிகை சீர்காழி அவர்களின் குரலில் உயிர் பெற்று உலவும் விதத்தை சொல்வதா.

பாடல்களுக்காகவே பாராட்டைப் பெற்றது "கோகிலவாணி" படம்.
(http://www.vanavil.com/music/tamilFilm.php?id=884&tamilfilm=Gokilavani)

இந்தப் பாடல்களின் வெற்றியால் ஜி. ராமநாதனின் இசையில் சீர்காழிக்கு ஒரு நிரந்தர இடம் கிடைத்தது. அது மட்டும் அல்ல.

சிவாஜிக்கு பின்னணி படும் வாய்ப்பு பலத்த போராட்டத்துக்கு பிறகு டி.எம். எஸ். அவர்களுக்கு "தூக்கு தூக்கி" படத்தின் மூலம் கிடைத்தது.

ஆனால் சீர்காழி அவர்களுக்கோ அப்போது கதாநாயகனாக முன்னேறிக்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு பல படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு எந்தப் போட்டியும் இல்லாமல் கிடைத்தது.

ஆரம்பத்தில் எம்.ஜி. ஆர். அவர்கள் அறிமுகமான படங்களின் அவருக்கு பின்னணி பாடியவர் எம்.எம். மாரியப்பா. (திருச்சி லோகநாதனின் ஒன்று விட்ட அண்ணன் இவர். இவரும் திருச்சி லோகநாதனும் தான் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்கள்.) எம்.எம். மாரியப்பாவுக்கு பிறகு எம். ஜி. ஆர் அவர்களுக்கு பொருத்தமான குரலாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பல படங்களில் பாடிய பெருமை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களையே சாரும். அதற்கு காரணகர்த்தா யார் என்றால் ஜி. ராமநாதன்தான்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</