வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -12

பி.ஜி.எஸ். மணியன்  

வெற்றியிலும் தேக்கம்...

"மனோகரா" - "நாடகத் தந்தை" என்று சிறப்பிக்கப்படும் பம்மல் கே. சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய பிரபலமான நாடகம் இது.

திரை உலகில் நுழைவதற்கு முன்பே "நாடகக் கம்பெனியில்" இந்த நாடகத்தில் ராணி பத்மாவதியாக (மனோகரனின் அன்னை) ஸ்திரீ பார்ட் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்தார் சிவாஜி கணேசன்.

ஜுபிடர் நிறுவனம் "மனோகர் பிக்சர்ஸ்" என்ற புதிய பானரில் "மனோகரா" படத்தை தயாரித்தது. "பராசக்தி"க்குப் பிறகு நடிகர் திலகம் கலைஞரின் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி நடித்த படம் இது. தெலுங்கில் முன்னணியில் இருந்த "கிரிஜா" சிவாஜி கணேசனுக்கு இணையாக நடித்தார். ராணி பத்மாவதியாக கண்ணாம்பா அவர்களும், வசந்தசேனையாக டி.ஆர். ராஜகுமாரியும் நடிக்க திரைக்கதை எழுதி இயக்கியவர் எல்.வி. பிரசாத் அவர்கள். இந்தப் படத்துக்கு இசை அமைத்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

ஆனால்... கலைஞரின் கனல் பறக்கும் வசனங்களும், நடிகர் திலகம் மற்றும் கண்ணாம்பாவின் உணர்ச்சி கொந்தளிக்கும் நடிப்பும், விறுவிறுப்பான திரைக்கதையும் - மேலோங்கி நின்றதால் பாடல்கள் அவ்வளவாக எடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். வெளியான விமரிசனங்களும் பாடல்களைப் பற்றியோ இசை அமைப்பைப் பற்றியோ பெரிதாக குறிப்பிடவில்லை. அனைத்தையும் மீறி சில பாடல்கள் அனைவராலும் சற்று முணுமுணுக்கக் கூடியவையாக அமைந்தன.

"பிளாஷ் பாக்" உத்தியாக மாறுபட்ட விதத்தில் அமைந்த நாடகப் பாடல் காட்சி சற்று நீளமான ஒன்று. பழம் பெரும் பாடகர் டி.ஏ. மோதி அவர்கள் இந்தப் பாடலில் தன் பங்கை சிறப்பாக செய்திருந்தார்.

வசந்த விழா கொண்டாட்டப் பாடலாக அமைந்த "இன்ப நாளிதே" பாடலை வெங்கட்ராமனால் அறிமுகப் படுத்தப் பட்ட ஜிக்கி குழுவினருடன் இணைந்து இனிமை பொங்கப் பாடியிருந்தார். (http://videos.desishock.net/index.php?module=item&action=show_item_full&itemid=
326003&itemurl=aHR0cDovL3lvdXR1YmUuY29tLz92PUdrTjVqcTNtWGl3.)

இந்தப் பாடலில் கோரஸ் பாடகியாக முதல் முதலாக தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தார் எல்.ஆர். ஈஸ்வரி.

"சிங்காரப் பைங்கிளியே பேசு" - ஏ.எம்.ராஜா - (ராதா) ஜெயலக்ஷ்மி இணைந்து பாடிய ஒரு இனிமையான மெலடி. (http://www.videa.vsetkyvidea.sk/video/vKZKbtdFS-Q/-Singara-paingiliye-song-from-Manohara.html) குறிப்பிடத் தகுந்த பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அவற்றுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதே சமயம் படத்தின் கதைப்போக்குக்கு ஏற்ப பின்னணி இசையை அருமையாக அமைத்திருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். ஆனாலும் பெரிதும் பேசப்பட்டது வசனங்களும், நடிப்பும் தான்.

இதுவே எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு ஒரு தேக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. அவர் வெற்றிப் படங்களில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அந்த வெற்றிக்கான அங்கீகாரம் மற்ற அம்சங்களுக்கே கிடைத்தன. மீரா முதல் மனோகரா வரை இதே கதைதான்.

மனோகரா படம் - பராசக்திக்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அவரை "நட்சத்திர" அந்தஸ்து பெற்ற நடிகராக உயர்த்தியது.

சற்றேறக்குறைய இதே கால கட்டத்தில் தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு "மலைக்கள்ளன்" படத்தின் மூலம் கிடைத்த வெற்றி அவரை உச்சத்துக்கு கொண்டு போனது.

இந்த இரண்டு படங்களின் வெற்றி அதுவரை நிலவி வந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து கதாநாயக நடிகர்களின் ஆதிக்கம் படவுலகில் வேரூன்றக் காரணமாக அமைந்தது.

ஒவ்வொருவரும் அவர் அவர் பாணி என்று ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக கதை, பாடல், இசை அமைப்பாளர் தேர்வு - சமயங்களின் பின்னணிப் பாடகர் தேர்வில் கூட தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். (அப்படி தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொண்ட பிறகு அதன் வெற்றியை தங்கள் வெற்றியாகக் கருதி கடுமையாக உழைக்கவும் செய்தனர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்).
உதாரணமாக இரண்டு சம்பவங்களை சொல்லலாம்.

தனது "ஜெனோவா" படத்துக்கு முதல் முதலாக இசை அமைக்கும் வாய்ப்பை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தயாரிப்பாளர் அளித்தபோது "ஜூபிடரில் ஆபீஸ் பையனாக இருந்தவனை எல்லாம் இசை அமைப்பாளரா போட்டு என் படத்தை ஏன் கெடுக்கறீங்க?" என்று குறைப்பட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர் என்றால் –

தனது "தூக்கு தூக்கி" படத்தில் தனக்கு பின்னணி பாட டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு வாய்ப்பளித்த பொழுது, "ஜெயராம பிள்ளைய (சி. எஸ்.ஜெயராமன்) எனக்காகப் பாடவைக்காம வேற யார் யாரையோ பாட வைக்கிறீங்களே" என்று சிவாஜி கணேசன் தனது அதிருப்தியை முதலில் வெளிப்படுத்தினார். (பின்னாளில் இதே இருவரும் அவர்களால் தவிர்க்கமுடியாதவர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடப் படவேண்டிய செய்தி.)

அதே சமயம் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து தங்களை நிலை நிறுத்திக்கொண்ட தயாரிப்பு நிறுவனங்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏ.வி.எம் ஆகிய பட நிறுவனங்கள் தங்கள் போக்குக்கும், ரசனைக்கும் ஏற்றபடி "நிரந்தர இசை அமைப்பாளர்கள்" என்று சிலருக்கே தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வந்தார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸுக்கு - ஜி. ராமநாதன், ஏ.வி.எம் நிறுவனத்துக்கு ஆர். சுதர்சனம், ஜெமினி நிறுவனத்துக்கு எஸ். ராஜேஸ்வரராவ் என்று தொடர்ச்சியாக இசை அமைக்கும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

"மலைக்கள்ளன்" படத்துக்குப் பிறகு எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் கொடியும் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தது. சி.ஆர். சுப்பராமனின் அகால மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் வந்தனர். டி.ஆர். பாப்பா, ஆர்.வேதா ஆகியோரும் களத்தில் இறங்கினர்.

ஆக மொத்தம் ஒரு புதிய அலை திரை இசை உலகில் எழும்ப ஆரம்பித்தது. இந்த அலையின் வேகத்துக்கு எதிர் நீச்சல் போடமுடியாமல் எஸ்.வி. வெங்கட்ராமன் சற்று திணறித் தான் போனார்.

விளைவு - படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. கிடைத்த படங்களும் பெயர் சொல்லும்படி அமையவில்லை.

"கோடீஸ்வரன்", "கண்ணின் மணிகள்" - இவை எல்லாம் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசை அமைப்பில் வெளிவந்த படங்கள். படத்தின் பிரதிகள் கூட இன்று கிடைக்கப் பெறாத அளவுக்கு அமைந்த படங்கள்.

அடுத்து வெளிவந்த "மாமன் மகள்" படம் அவரை ஓரளவுக்கு நிமிரவைத்த படமாக அமைந்தது. ஜிக்கியின் குரலில் ஒரு அருமையான சோகப் பாடலை அற்புதமாக அவர் கொடுத்திருந்தாலும் மிகவும் பிரபலமானது ஜெ. பி. சந்திரபாபுவும், டி.எஸ். துரைராஜும் இணைந்து கலக்கிய "கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே" பாடல் தான். ஜனரஞ்சகமான பாடல்களையும் தன்னால் கொடுக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார் அவர்.

அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியானது நகைச்சுவை நடிகர் டி.எஸ். துரைராஜ் அவர்கள் சொந்தமாக தயாரித்த "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

"புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே. தங்கச்சி கண்ணே" என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடல் திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு அருமையான ஒரு அறிவுரைப் பாடலாக அமைந்தது. இன்றளவும் மங்கல விழாக்களில் பாடப்பட்டு வரும் பாடலாக இருக்கிறது.

இதே படத்தில் ஒரு டூயட் பாடலை அமைத்து திருச்சி லோகநாதனைப் பாடச் சொல்லிக் கேட்டபோது "கதைப்படி அண்ணனுக்கு பாடிய நானே தங்கையின் கணவனுக்கும் பின்னணி பாடினால் அது நன்றாக இருக்காது" என்று பாட மறுத்துவிட்டார் அவர். அதன் பிறகு பி. சுசீலாவுடன் இணைந்து அந்தப் பாடலைப் பாடினார் சீர்காழி கோவிந்தராஜன். "சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது" என்று தொடங்கும் இந்தப் பாடலும் மகத்தான வரவேற்பைப் பெற்ற பாடலானது. இன்னும் சொல்லப் போனால் "பானை பிடித்தவள் பாக்கியசாலி" படப் பாடல்களிலேயே இன்றளவும் புழக்கத்தில் இருப்பவை இந்த இரு பாடல்கள் மட்டும்தான்.

இப்படிக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

அந்தச் சமயத்தில்தான் தயாரிப்பாளர் திரு. எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தனது ஜெமினி நிறுவனம் சார்பாக தயாரிக்க முற்பட்ட புதிய படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை
எஸ். வி. வெங்கட்ராமனுக்கு அளித்தார். சிவாஜி கணேசன் - வைஜயந்திமாலா இணைந்து நடித்த அந்தப் படத்தின் பெயர் "இரும்புத்திரை".


சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</