வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -7

பி.ஜி.எஸ். மணியன்  

இந்திய இசை உலகிலேயே ஈடு இணை சொல்லமுடியாத பேரரசியாகத் திகழ்பவர் "பாரத ரத்னா" திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள். எம்.எஸ். என்ற இரட்டை எழுத்துக்களாலேயே அடையாளம் காட்டப்படுபவர். அது என்னமோ அன்று முதல் இன்று வரை... ஏன்.. என்றுமே அனைவருக்குமே அவர் "நம்ம" எம்.எஸ். அம்மாதான்.

உலகையே மெய் மறக்க வைக்கும் உன்னத இசையால் இசை உலகின் முடிசூடா அரசியாக என்றும் திகழும் எம்.எஸ். அம்மா அவர்கள் நடித்த படங்களில் ஒன்றைச் சொல்லும்படி யாரைக்கேட்டாலும் அடுத்த கணமே வந்து விழும் பெயர் "மீரா" என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் மனத்தில் அவரை ஒன்ற வைத்த உன்னதமான இசைக்காவியம் அது. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகத் திகழும் படம் அது.

எம்.எஸ். அம்மாவின் கணவர் திரு. சதாசிவம் "சகுந்தலை" படத்துக்குப் பிறகு தனது மனைவியின் முழு இசைத் திறமையும் வெளிப்படும் வண்ணம் ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று பல கதைகளை அலசித் தேர்ந்தெடுத்த படம் தான் "மீரா".
சதாசிவத்தின் "சந்த்ரப்ரபா சினிடோன்" நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் மீராவாக எம்.எஸ். சுப்புலக்ஷ்மியும் அவருக்கு இணையாக வி. நாகையா அவர்களும் நடித்தனர். மற்ற கதாபாத்திரங்களில் சாரங்கபாணி, டி.எஸ். பாலையா, எம்.ஜி. ஆர், டி.எஸ். துரைராஜ் ஆகியோர் நடித்தனர். வசனங்களை அமரர் "கல்கி" அவர்கள் எழுதினர். பாடல்களை பாபநாசம் சிவன் அவர்களும் அமரர் கல்கி அவர்களும் புனைந்தனர். ஒளிப்பதிவு : ஜித்தன் பானர்ஜி. கலை இயக்குனர் : கனு தேசாய். படத்தை தொகுத்து இயக்கியவர் : எல்லிஸ் ஆர். டங்கன்.

இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு கிடைத்தது. படத்தின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தற்போதைய பாஷையில் சொல்ல வேண்டுமானால் "பின்னி எடுத்திருக்கிறார்" வெங்கட்ராமன்.

"மீரா"வுக்காக திரு. எஸ்..வி. வெங்கட்ராமன் வார்த்தெடுத்த இசை எப்படி இருந்தது? அதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

"மீரா" படத்துக்கு இசை அமைத்த அனுபவங்களை பல சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களே பகிர்ந்து கொண்டிருக்கிறார்..

"மீரா" படத்தில் இடம் பெறும் முதல் பாடல் "நந்தபாலா என் மணாளா" - குழந்தை மீரா கண்ணனை மணவாளனாக வரித்து கிருஷ்ணன் விக்கிரகம் முன்னாள் ஆனந்தமாக ஆடிப்பாடும் பாடல் இது. முதல் சரணம் முடிந்ததும் நாற்பத்து ஐந்து வினாடிகளுக்கு இணைப்பிசை மிகவும் விறுவிறுப்பாக இயங்க அதன் முடிவில் "ஹே. முரளி மோஹனா" என்று கம்பீரமான கார்வையுடன் எம்.எஸ். அம்மாவின் குரல் விருத்தமாக ஒலிப்பதை கேட்கும்போது பால மீரா பருவ மங்கையாக மாறுவதை பாடலைக் கேட்டே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. கதையின் போக்கினையும் பாடலையும் இணைக்கும் பாலமாக இந்த 45 வினாடி இணைப்பிசையில் வாத்தியங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட காட்சிகளுக்கான இணைப்பிசை கொண்ட பாடல் முன்னதாகவே பதிவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு அந்த இசைக்கு ஏற்றபடி காட்சி படமாக்கப்படும். இதுவே பொதுவான நடைமுறை.

ஆனால் "மீரா" படத்தின் இயக்குனர் எல்லிஸ்.ஆர். டங்கன் இப்படிச் செய்யவில்லை. அதற்கு மாறாக அவர் முதலில் பல "ஷாட்"களாக பால மீரா பருவ மங்கையாக மாறும் காட்சிக்காக மிட்-ஷாட்டில் இருந்து க்ளோஸ்-அப் ஷாட்டாக கிருஷ்ணன் விக்கிரகம், பால மீராவின் தீப ஆராதனை, இறுதியாக எம்.எஸ். அவர்கள் உள்ளார்ந்த தாபத்துடனும், பாவத்துடனும் "ஹே. முரளி மோஹனா" என்று பாடும் க்ளோஸ் அப் ஷாட் ஒன்றையும் படமாக்கிவிட்டு - (1944 -45 காலகட்டத்தில் ஜூம் லென்ஸ் புழக்கத்தில் வராததால் வேகமாக இயங்கும் ட்ராலி அந்த க்ளோஸ்-அப் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டது.) - இப்படி துண்டு துண்டுகளாக படமாக்கப் பட்ட காட்சிகளை டங்கனே தொகுத்து ஒரு வேகமான காட்சி அமைப்பாக மாற்றி இசை அமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனை அழைத்துப் போட்டுக்காட்டி அந்தக் காட்சிக்கு பொருத்தமாக இசை அமைத்துக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

எஸ்.வி. வெங்கட்ராமனின் திறமைக்கு ஒரு சவால். இந்த நாளில் என்றால் இருக்கவே இருக்கிறது கணினி. எப்படிப் பட்ட இசையையும் நொடிப்பொழுதுக்குள் கைவசப் படுத்திக்கொள்ளும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஆனால் நாற்பத்தைந்தில் இப்படிப்பட்ட சவாலுக்கு தன்னுடைய திறமையைத்தான் ஒரு இசை அமைப்பாளர் நம்பியாகவேண்டும்.

அதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? இதனை அவரே பிரபல எழுத்தாளர் திரு. ராண்டார் கை அவர்களிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

"அந்தக் காட்சிக்கு இசை அமைப்பதற்குள் நான் ஏறக்குறைய பைத்தியம் பிடித்தவன் போல ஆனேன்" - என்று ஆரம்பித்து அதனை விவரிக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"அந்தக் காலத்துலே மோனோ-சேனல் ரெக்கார்டிங் முறை தான் இருந்தது. ஒலிவாங்கிகளும் (மைக்) இப்போது போல இல்லை. ரொம்ப குறைவு. ஆனால் அந்தக் காட்சிக்காக நிறைய வாத்தியங்களை பயன் படுத்தியாக வேண்டும். வாத்திய கோஷ்டியினர் எல்லாரும் தரையில் தான் அமர்ந்து இருந்தார்கள். பியானோ வாசிப்பவருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டிருந்தது. படத்தில் வெறும் நாற்பத்தைந்து வினாடிகளே இடம்பெறும் அந்தக் காட்சிக்கான இணைப்பிசையை நாங்கள் ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு செய்து முடித்தோம். ஆனால் ரிசல்ட் ரொம்ப அருமையாக வந்து இருந்தது. எல்லிஸ். ஆர். டங்கன் அவர்கள் மிகவும் நுட்பமான மேதா விலாசம் படைத்தவர்தான் என்பதில் சந்தேகமே இல்லை." - இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் திரு.. எஸ்.வி. வெங்கட்ராமன். தனது திறமையைக் குறித்துப் பெருமைப்பட வேண்டிய நேரத்தில் அந்த திறமை வெளிப்படக் காரணமான காட்சியை அமைத்திருந்த படத்தின் இயக்குனருக்கே அதனால் கிடைக்கும் பாராட்டுக்கள் சேரவேண்டும் என்று நினைக்கும் எஸ்.வி. வெங்கட்ராமன் ஒரு அபூர்வமான மனிதர்தான்.

பட்ட கஷ்டம் எல்லாம் வீண் போகவில்லை. அந்தக் காட்சி படம் பார்ப்பவரிடம் மட்டும் அல்லாமல் பாடலைக் கேட்பவர் மனத்திலும் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இப்படிப் பட்ட தொழில் நுட்பத் திறன் பயன் படுத்தப் பட்டது அதுவே முதல் முறை. இன்றும் கூட "நந்த பாலா" பாடல் காட்சி புருவங்களை வியக்க வைக்கும் ஒரு காட்சி தான். http://www.youtube.com/watch?v=L9CWNxXJ7ms

எஸ்.வி. வெங்கட்ராமனின் தன்னிகரில்லாத் திறமைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒரு காட்சி "மீரா" படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

விஜயதசமி நன்னாள். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் தனக்கு காணிக்கை செலுத்தும் அந்த தினத்தில் பட்டத்து அரசியான மீரா தன் அருகில் சபா மண்டபத்தில் அமர்ந்திருக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை மனைவி மீராவிடம் தெரிவிக்கிறான் மேவார் ராணா. கணவனின் வேண்டுகோளுக்கு சம்மதிக்கிறாள் மீரா.

சபா மண்டபத்தில் மனைவியின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறான் மகா ராணா. தன்னை பூரணமாக அலங்கரித்துக்கொண்டு தர்பார் மண்டபத்துக்கு மீரா வரும் வேளையில் எங்கிருந்தோ கண்ணனின் குழலோசை அவள் செவிகளில் கேட்கிறது. மறுகணம். தன்னிலை மறந்து விறுவிறுவென திரும்பி வேகமாக கிரிதர கோபாலனின் ஆலயத்துக்கு ஓடி வந்து "ஹே. ஹரே. தயாளா. என்னுயிர்க்கினிய மணவாளா" என்று ஆரம்பித்து "ஹே. முரளி மோகன நாதனே" என்று பக்தர் கூட்டத்துடன் சேர்ந்து பாடுகிறாள் மீரா.

இங்கோ தர்பார் மண்டபத்தில் அரசனின் முன்பாக நடன மாந்தர் பரபரப்பாக ஆடுகின்றனர். ராணாவின் மனமோ மனைவியின் உதாசீனத்தால் கொதித்துக் கொண்டிருக்கிறது. பாடலில் இந்த இடத்தில் வரும் இணைப்பிசை நம்மை அப்படியே காட்சியோட ஒன்றிப்போக வைக்கிறது.

"பின்னணி சங்கீதம் என்பது எதற்காக ஏற்பட்டது. அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்." - என்று அமரர் கல்கி அவர்கள் தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</