வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -4

பி.ஜி.எஸ். மணியன்  

பெங்களுர் கப்பன் பூங்காவில் இருந்த பென்ச் ஒன்றின் மீது அமர்ந்த படி தனது வாழ்க்கையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தார் எஸ்.வி.வெங்கட்ராமன். யோசிக்க யோசிக்க கவலையும் குழப்பமும் அவர் மனதை வியாபித்தது.

பெங்களூர் என்னவோ வெங்கட்ராமனை வரவேற்கத்தான் செய்தது. எம். ஆர். ராதாவின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் அவர். வாழ்க்கைக்கு வழி கிடைத்துவிட்டது தான். ஆனால் அவரது மன நிலை?

வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்கிற ஆசை நம் எல்லோருக்குமே ஏற்படும் ஒன்றுதான்.. அதற்காக அனைவருமே முயற்சி செய்வதும் உழைப்பதும் கூட இயல்பான ஒன்றுதான். ஆனால்.... அப்படி கஷ்டப்பட்டு போராடி ஒரு படி முன்னேற்றம் கண்டபிறகு மனித மனம் அடுத்த படியில் கால் வைக்கத்தான் எண்ணும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கீழே இறங்கி மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே வருவதற்கு மனம் துணியாது. விதிவசத்தால் அப்படி கீழிறங்க நேரிட்டால் அந்த மனம் அதனை அவ்வளவு சுலபமாக ஜீரணித்துக் கொள்ளாது.
மேல்வகுப்புக்கு போன மாணவன் மறுபடியும் சென்ற ஆண்டு படித்த வகுப்புக்கே போக நேரிடுமா என்ன? அப்படி ஒரு நிலை வந்தால் அவன் அதை ஏற்றுக்கொள்வானா என்ன?

ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் அடுத்து பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை எதிர்பார்க்கிறான். அவன் எதிர்பார்த்தபடியே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறவும் செய்கிறான். அப்படி பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வேளையில் அதிலிருந்து இன்னும் முன்னேறி அடுத்த படிக்கு போவதற்கு பதிலாக கொஞ்சம் கூட எதிர்பார்க்காதபடி அவன் மறுபடி ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டால்..?

பரமபத விளையாட்டில் பெரிய ஏணிக்கு பகடையை உருட்டும்போது விழுந்த எண் ஏணிக்கு ஏற்றிவிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பெரியபாம்புக்கட்டத்துக்கு இட்டுச் சென்று ஒரேயடியாக கீழே இறக்கி முதல் கட்டத்துக்கே
சென்று விளையாட்டை மறுபடி ஆரம்பம் முதல் தொடங்கி ஆட வேண்டி வந்தால்...?

அலுப்பும் சலிப்பும் தானே ஏற்படும்? அந்த மன நிலையில் தான் இருந்தார் வெங்கட்ராமன்.

நாடக உலகில் இருந்து "நள தமயந்தி" படத்தின் மூலம் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். படமும் வெற்றி பெற்று அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

அறிமுகப் படமே வெற்றிப்படமாக அமைந்தால் அதை அடுத்து திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுதானே ஒரு நடிகர் நினைப்பார்? ஆசைப்படுவார். அது நியாயமான ஆசைதானே?. வெங்கட்ராமனின் ஆசையும் அதுவாகத்தானே இருந்திருக்க வேண்டும்?

ஆனால்.. ஒரு விபத்து அந்த ஆசையை நிராசையாக்கியதோடு நிற்காமல் மறுபடியும் ஆரம்பித்த இடமான நாடக மேடைக்கே அவரை திரும்ப வைத்துவிட்டதே? பரமபத விளையாட்டில் வருவது போல "சரேல்"என்று ஒரேயடியாக கீழே இறக்கி வைத்து விட்டதே?

இனி அவ்வளவுதானா? இப்படி ஒரு நாடக நடிகனாகவே தன் காலத்தை கழித்துவிட வேண்டியதுதானா?

"நடிப்பையும் பாட்டையும் தவிர எனக்கு வேறு என்ன தெரியும்.? எதிர்காலத்தில் சினிமாவின் ஆதிக்கமே மேலோங்கிவிடுமே. அப்போது என் நிலை என்ன? நடித்தாலும் சின்ன சின்ன வேஷங்கள் தானே கிடைக்கும்."

எதிர்காலத்தை பற்றி பலவிதமான சிந்தனைகள் கேள்விகளாக மாற "நாளை நடக்கப் போவது நல்லதா கேட்டதா?" என்று தெரியாத நிலையில் விடை தெரியாத அந்தக் கேள்விகள் முழுக்க முழுக்க தைரியத்தையோ அல்லது
பயத்தையோ தராமல் குழுப்பங்களை மனசுக்குள் தோற்றுவிக்க ..

நாடகம் எதுவும் இல்லாத ஒரு நாளில் பெங்களூர் கப்பன் பூங்காவில் உள்ள பென்ச் ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு கவலையும் குழப்பமுமாக யோசனையில் ஆழ்ந்து கொண்டிருந்தார் அவர்.

அந்த நேரத்தில் அவரை அடையாளம் கண்டுகொண்டவராக அருகில் வந்து "நீங்க நளதமயந்தி படத்தின் நாயகன் வெங்கட்ராமன் தானே. இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” - என்று கேட்ட நபரைப் பார்த்த மாத்திரத்தில் தூக்கிவாரிப் போட்டவராக அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றார் வெங்கட்ராமன்.

அந்த நபர் - ஏ.வி. மெய்யப்ப செட்டியார்.

காரைக்குடியில் இருந்து 1934 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திரு. ஏ.வி.எம் அவர்களுக்கு அதுவரை சரியான வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் "முயற்சி திருவினை ஆக்கும்" என்ற பொன்மொழியில் அபார நம்பிக்கை கொண்டிருந்த அவர் "என்ன ஆனாலும் சரி. திரை உலகில் ஜெயிக்காமல் ஓயமாட்டேன்" என்று தீர்மானத்துடன் அடுத்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அது சம்பந்தமான வேலைகளுக்காக பெங்களூர் வந்திருந்த ஏ.வி. மெய்யப்பன் கப்பன் பூங்காவுக்கு வந்தபோது எஸ்.வி. வெங்கட்ராமனை சந்திக்க நேர்ந்தது.

திரு.ஏ.வி.எம் அவர்களைச் சந்திக்க நேர்ந்ததும் தனது சூழ்நிலையை - உள்ளக் குமுறலை அவரிடம் பட்டவர்த்தனமாக கொட்டித் தீர்த்து விட்டார் வெங்கட்ராமன்.

அனைத்தையும் கேட்ட ஏ.வி.எம் அவர்கள்,"நான் இப்போ எடுக்கப் போகிற புதுப் படத்துக்கு தயாரிப்பு நிர்வாகத்தை (Production in -charge) பார்த்துக்கொள்ள ஒரு ஆள் தேவைப்படுது. என்னோடு வந்துவிடுகிறாயா?" என்று கேட்டார்.

சந்தோஷமாக சம்மதம் சொன்னார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

பூனா (இன்றைய புனே) நகரில் படப்பிடிப்பு. தமிழ், ஹிந்தி, மராத்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கப் பட்ட படம் அது. படத்தின் பெயர் "நந்தகுமார்".

தயாரிப்பு நிர்வாகத்தை முழுமூச்சாக கவனித்துக் கொண்டிருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

படம் ஆரம்பமான போது ஒரு சிக்கல் எழுந்தது. ஹிந்தி, மராத்தி மொழிகளுக்கு முறையான இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் தமிழ்ப் படத்துக்கு..?

ஏ..வி.எம் அவர்களின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோனார் எஸ்.வி. வெங்கட்ராமன்..

கொஞ்சம் கூட யோசிக்காமல் "உனக்குத் தான் சங்கீதம் நன்றாகத் தெரியுமே. நீயே இசை அமைத்துவிடேன்." - பளிச்சென்று சொன்னார் ஏ.வி.எம்.

தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இசை அமைப்பாளராக நினைத்த நினைப்பில்லாமல் எஸ்.வி. வெங்கட்ராமன் உருவானது இப்படித்தான்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

\

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </