வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 

 

 

     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 16

பானுபாரதி - ஆண்மை கொல்

குட்டி ரேவதி  


இன்றும் எனக்குக் கடிதம் வருகின்றது, ஏன் படைப்பாளியைத் தெருவிறங்கிப் போராடச் சொல்கிறீர்கள் என்று. ஏன் எம் கைகளில் போராட்டத்தை, அதற்கான ஆயுதங்களை, கிளர்ச்சியை ஒப்படைக்கிறீர்கள் என்று. அது தேவைப்படாதவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒரு வகையில் அதிகாரத்தின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதிகாரத்தின் சமரசங்களுக்கு ஆளாகிறார்கள் என்று தான் அர்த்தம். ‘போராட்டம்’ என்பது கலகம் மட்டுமே அன்று! மூர்க்கமான இயக்கமும் கூட!

‘ஆண்மை’ என்பது, பல வித தத்துவவியலாளர்களால் வியக்கும்படியான, ஒரு கருத்தாக்கமாகவும், மானுடத் திண்மமாகவும் பார்க்கப்பட்டது. பின், சமத்துவ உரிமைகள் நோக்கிப் போராடிய பெண்கள், ‘அதே விதமான ஆண்மையை’யே தமக்கு வரித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆணைப்போல உடையணிதல், ஆணைப் போன்ற பாவனைகளை உடலுகுக் கொடுத்தல், ஆணின் சிந்தனைகளையே தன் மூளைக்குப் பணித்தல் எனத் தொடர்ந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில், போராட்டத்தின் முன்னேற்றத்தில் பக்குவத்தில், அது பெண் சமூகத்திற்கு ஒரு மாதிரியாக மாறாமல், சமூகத்திலிருந்தும், சமத்துவத்திலிருந்தும் விலகி இருந்ததை உணர்ந்தனர். ஆக, ‘ஆண்மை’யின் விறைத்த நிலைகளும் தளர்ந்த நிலைகளும், ‘ஆண்மை’யின் எதிர்க்குணங்களாக விவாதிக்கப்பட்டன!

பானுபாரதியின் கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள் தாம்! அவற்றின் பிரகடனம் குறித்த கருத்துகள் பற்றிய விவாதத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின் பொருள் உதவாது என்பதால், அக்கவிதைகளை விடுத்து அவர் எழுதிய, ‘பெண்ணியக் கவிதைகளை’ இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்!

பானுபாரதியின், ‘ஆண்மை கொல்’ என்ற கவிதை:
எருமையின் முதுகுத் தோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள்
புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைத்து
இரவுகளை
புகை வளையங்களால்
நிரப்பிக் கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது

எறிகணையின் வலிமையோடு
எறியப்படும்
உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப் போய் விழுகின்றன
நேர்மை வயபப்டாததினால்

வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை
அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து
இறங்கி வர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும்
கலவியின் உச்சநிலையில்
சோர்ந்து சூம்பிக் கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக் குவளையில்
எலுமிச்சை சீவல்களாய்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு
உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்து போன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக் கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச் சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு.

இக்கவிதையில், நவீனப் பெண்ணின் மனநிலை ஆணாதிக்கத்தை நோக்கி அதை எதிர்த்துக் குரல் எழுப்பி விட்டு, மாற்றத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறது. மறைமுகமாக ’ஆணின் குறியையே’ ஆண்மையின் இடமாக்கியிருக்கும் கவிதை. ’ஆண்மை / அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்’ என்ற வரி தான் இக்கவிதையின் மையப்பொருள். நவீன வாழ்வில் மது அருந்துமொரு வேளையில், அதன் அத்தனை அம்சங்களோடும், கவிதை பதிவாகியிருக்கிறது. ஆனால், வார்த்தைகள் தாம் கவிதையின் எதிர்ப்புக்குரலுக்குள் சுழன்று வருகின்றன.

வார்த்தைகளாக்கப்பட்ட பெண்ணியம் தான் சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாம் கண்ட வெற்றியாக இருக்கும் என்று இருக்கிறேன். உலகெங்கும் ஆண்கள் அனுபவித்து அந்த மிகையான அதிகாரங்களை எதிர்க்கும் வகையில், அல்லது தமக்கேயான அடிப்படை உரிமைகளையேனும் கோரும் வகையில் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு உரிமைகளுக்காகப் போராடி வெற்றி கண்டிருக்கின்றனர். ‘எழுத்து’ என்பதன் வழியாகப் பதிவான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் புனைவுகளுக்கும் அப்பாற்பட்டு, ‘பெண்ணியக் குரல்’ ஓங்கி ஓர் ஆவணமாகவோ, சாட்சியாகவோ இல்லாமல், அக்குரலாகவே பதிவானது கவிதைகளில் தாம் நிகழ்ந்தது.

’ஆண்மை கொல்’ என்பதன் உள்ளார்த்தம், நிறுவனமயமாகிப் போன ஆண்மையை அடையாளப்படுத்துகிறது. குடும்பம், சமூகம், மதம், சாதி போன்று கட்டமைப்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிறுவனமயமாகி, இறுகிப் போன ஆண்மையைக் காலங்காலமாகக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘ஆண்மை அரியாசனத்திலிருந்து / இறங்கி வர / நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும் / கலவியின் உச்சநிலையில் / சோர்ந்து சூம்பிக் கிடக்கும் / ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது’ என்ற இந்தக் குறியீடு ஆண்மையின் சரணடைதலை, தளர்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. இது பெரும்பாலும், ‘பெண்ணியத்தின்’ மைய விவாதமாகவும், ஆணின் பாலியல் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் இருந்திருக்கிறது. ஏனெனில், இந்தப் பிம்பத்தை அடையாளமாக்கித் தான் பெண்ணின் உடல்கள் யோனிகளாய்ப் பார்க்கப்பட்டு கிழிக்கப்பட்டிருக்கின்றன.

அஞ்சறைப்பெட்டியில் அடங்கிய நீரும் நிலமும்

அவிழ்த்துவிட்ட கூந்தலோடு
ஆவேசத்தை
முகம் முழுவதும் அப்பிக்கொண்டு
குன்றினுச்சியினின்று
குய்யோ முறையோவென
குளறியடித்து
படையெடுத்தது அருவி
பூமியை விழுங்கி விடுவது போல்

நமட்டுச் சிரிப்போடு
பேசாமல்
மல்லாந்து
படுத்துக் கிடந்தது
வானத்தைப் பார்த்தபடி நிலம்

போருமின்றி
பேச்சுவார்த்தையுமற்று
வரப்புகளுக்குள் மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டது
அருவியின் ஆவேசம்

கோரைப் புற்களின்
கலந்துரையாடல்களில் கூட
நிலத்தின் பொறுமைதான்
வெற்றிக்கு வித்திட்டதாக
ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

நியூட்டன் விதியிலிருந்து
தப்பியோடி வந்த ஆப்பிளொன்று
பூமிக்கு
பெண்குறியைப் பொருத்தி
பெருமை பேசியது

இடுப்பு வளைந்து
அன்னநடை போடும்
அருவியின் பெருமை கண்டு
முலைகள் பொருத்திப் பேசியது
பிள்ளையான் தின்று போட்ட
ஞானப்பழத்தின் கொட்டை

மூன்றாந் தரப்பிலிருந்து
கருவாடு தின்று சுவையறிந்த
ஆதிபராசக்தியின் தூமைத்துணி
புதுக்கதை பேசியது
ஆறுகள் சங்கமிக்கும்
கடற்தாய் என்றது அது.
நீலநிறத்தில்
சேலையும் கட்டி விட்டது.

வாளெடுத்த பெண்தெய்வங்களெல்லாம்
நிலத்தடியிலும், அருவியிலும்,
கடலிலும் சங்கமமாகி
சாதிக்கொரு
பிள்ளை பெற்றுக் கொண்டன

அதற்காக
அஞ்சறைப் பெட்டியிலிட்டு
ஆளுக்கொரு கற்பும்
பரிசாக தரப்பட்டன.

ஒரே கவிதையில், நிலத்தையும் நீரையும் ஆண் – பெண் அடையாளமாக்கி மதம் இன்ன பிற ஒட்டு பிம்பங்களையெல்லாம் கேள்விக்குள்ளாக்குகிறார், கவிஞர். எப்படிப் பேரருவியாக இருந்த. ‘பெண்’ அஞ்சறைப்பெட்டியில் அடைக்கப்பட்டாள் என்பதை, கவிதையின் வேகம் குன்றாமல் சொல்லியிருக்கிறார். ‘பெருவெள்ளமாக இருந்தவளை’ அடைக்க இயன்ற போது, அதன் பரிசாக, ‘கற்பு’ பரிசளிக்கப்பட்டது.
‘பெண்ணியத்தின் கோட்பாட்டு விஷயங்களைத் தொடர்ந்து அணுகும் பெண்ணியவாதிகளும், படைப்பாளிகளும் அதன் முரண்களையும், நாட்பட்ட அதன் விளைவுகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அதுவே, பெண்ணியத்திற்கான தத்துவப்பின்புலமாக இருந்திருக்கிறது. ஏனெனில், பிற எல்லா வகையிலும் பதிவாகும் ஆக்கங்கள் எல்லாம் ஆண் மையச்சிந்தனையுடன் தான், அவ்வித விழிப்புடனும், அவ்விழிப்பு இல்லாமாலும் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ‘நான் காணா மனிதனை’ என்ற பானுபாரதியின் கவிதை, பல தலைமுறைப் பெண்கள் தேடிய, கடவுள் போன்ற மனிதனைக் குறித்துப் பேசுகிறது.

நான் காணா மனிதனை

எனக்கென்றொரு
கண்கண்ட கடவுளை தேடித்தந்த
என் தந்தைக்கும்
தாயின் சமாதிக்கும்
நான் சொல்லிக் கொள்வது…

எனது மகளுக்கு
நிச்சயமாய்
நானோர்
கண்கண்ட கடவுளை
தேடித்தரப் போவதில்லை
அவள்
ஒரு மனிதனை
தானே தேடிக் கண்டடைவாள்

கனவு காண மட்டும்
வளர்ந்த, வளர்க்கப்பட்ட
பெண் நான்.

பல நூறாய்
பல ஆயிரமாய்
பல இலட்சமாய்
பூத்து நின்ற நட்சத்திரப் பட்டாளமாய்
எனது கனவுகள்

ஈரும் பேனுமாய்ப் பிடுங்கி
வாயில் போடும் குரங்கைப் போல்
எனது
கண்கண்ட கடவுளந்த
நட்சத்திரங்களைப் பிடுங்கி
வாயில் போட்டுக்கொண்டான்
எஞ்சியதை
கூட்டியள்ளி
கொட்டு குப்பையிலென
என்னிடமே கட்டளை பணித்தான்.

எனது மகள்
ஒரு
மனிதனைத் தேடிக்கொள்வாள்.

வாழ்க்கை
வடக்கயிறாய்
அவள் கழுத்தைச் சுற்றிக்கொள்ளாது.
வாழ்க்கை அவளையும்
அவள்
வாழ்க்கையையும் கூட்டிச் செல்வாள்.
என்னைப் போல்
ஒரு
கண் கண்ட கடவுளிடம்
கனவுகளைத் தொலைக்கமாட்டாளவள்.
கூட்டியள்ளி
குப்பையில் கொட்டவும் மாட்டாள்.

அவளை நேசிக்கும் ஒரு மனிதனுடன்
நேசமாய்
கை கோர்த்து நடப்பாள்.

எனது அம்மா
உன்னைப்போலல்லாமல்,
அவளது அம்மா
என்னைப் போலல்லாமல்
தலை
நிமிர்ந்து நடப்பாளவள்.

இப்போது
நான் முறையிடுதல்போல்
எனது சமாதியில் அவள் நின்று
முறையீடு செய்யாள்

அம்மா!
கண்கண்ட கடவுளை அன்றி
ஒரு மனிதனைக்காண
ஏனன்று இல்லாமற்போனது
எனக்கனுமதி?

கவிஞர், தனக்கும் தன் அம்மாவுக்கும் கிடைகாத வாய்ப்பு, தன் மகளுக்குக் கிடைக்கும் என்பதான நேர்மறையான ஊக்கப்பூர்வமான கருத்தை முன்வைக்கிறார். ’கணவனை’க் கண் கண்ட கடவுள் என்று சொல்லி வளர்க்கப்பட்ட சமூகத்தில், உண்மையிலேயே அந்தக் கடவுள் எப்படி பெண்களின் கனவுகளான நட்சத்திரங்களைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்வான் என்ற கேள்வியைக் கேட்டு அப்படியான, ‘கண் கண்ட கடவுளாயிராத’ ஒரு மனிதனைத் தன் மகளேனும் கண்டு கொள்வாள் என்பது தான், கவிஞரின் கனவு.

சில வருடங்களுக்கு முன் பானுபாரதியின், ’ஆண்மை கொல்’ கவிதையைப்படித்தேன். ‘புது விசை’ இதழில் என்று தான் நினைக்கிறேன்! உற்சாகமான புதிய பார்வையுடனும் துணிவுடனும் எழுதப்பட்ட கவிதைகளாக இருந்தன. தொடர்ந்து அவர் அம்மாதிரியான கவிதைகளில் ஏன் ஈடுபடவில்லை என்பது என் கேள்வியாக இருக்கிறது. ’பெண்ணியச் சித்தாந்தங்களை’ கவிதைகளுக்குள் கேள்வி கேட்கும் பார்வையில் பெரிய அளவில் சீரிய பெண் படைப்பாளிகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இந்நிலையில், பானுபாரதியின் தொடர் எழுத்துப்பயணம் நாம் விரும்பிக் கோரும் ஒன்றாகும். ‘கவிதை’யின் கட்டமைப்பில் சொற்கள் வீட்டின் கட்டுப்பாடற்று வந்து விழுகின்ற காரணத்தால், அவை கவிதை வடிவின் அதே தாக்கத்துடன் செயல்படாமல் போகலாம். அதை விடுத்தும், கவிதைகள் நம்மிடம் சொல்லவந்தவற்றைச் சொல்லாமல் செல்வதில்லை.

-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: பானுபாரதி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் கவிஞர். இவரது கவிதைத் தொகுப்பு, ‘பிறத்தியாள்’ (2009) கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து பெண்ணியக் கட்டுரைகளையும் சாதிமறுப்புக் கட்டுரைகளையும், ‘பிறத்தியாள்’ என்னும் தன் வலைப்பதிவில் எழுதி வருகிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</