வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


தமிழவன் கூடு இணையதளத்திற்காக எழுதும் இக்கட்டுரையின் நோக்கம் தமிழின் புதிய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துரைத்தலும் பொய்மையாக இலக்கியமென வியாபாரிகளால் கட்டமைக்கப்பட போலி பிரதிகளின் கட்டமைப்பை உடைத்தலும். அமைப்பியலிலும் பின் நவீன போக்கின் வழியிலும் திறனாய்வை நவீன வாசகர்களும், மொட்டுவிரிக்கும் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தலே இதன் அடிப்படை. விவாதங்களும் தத்துவ மோதல்களும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடாட்டமாக இருக்கும். இதன் வழி தமிழில் திறனாய்வை கற்றுக் கொடுத்தல், சரியான இலக்கியப் புரிதலை ஏற்படுத்துதல், உலக இலக்கியங்களைக் காட்டிலும் தமிழில் ஒரு சிறந்த படைப்புமுறைமையை உருவாக்குதலே இதன் எண்ணம்.

 
     
     
     
   
யாயும் ஞாயும் யாரா கியரோ
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


தமிழவன்

இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.

இயங்கிய களங்கள்

ஆய்வாளர்.

சிற்றிதழ் இயக்கத்தில் பங்காற்றிய இலக்கியப் படைப்பாளி.

கட்டுரையாளர்.

நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்.
இலக்கியக் கோட்பாட்டாளர்.

தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.

நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர்.
இலக்கு என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர்.

எண்பதுகளில் கலைஇலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.

ஆய்வு நூல்கள்

புதுக்கவிதை நான்கு கட்டுரைகள் - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.

ஸ்ட்ரக்சுரலிசம் - 80களில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது.

அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் அமைப்பியலும் அதன் பிறகும் என மறுவெளியீடாக வந்திருக்கிறது.

படைப்பும் படைப்பாளியும் - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
தமிழும் குறியியலும் - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.

தமிழில் மொழிதல் கோட்பாடு - ருஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.

மேற்கண்ட கட்டுரைகள், இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் கவிதை என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.

தமிழுணர்வின் வரைபடம் என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

படைப்பிலக்கியங்கள்

சிறுகதைத்தொகுப்பு

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - [ஸ்பானிஷ்] இலக்கிய உத்தியான மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.

சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள் - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.

ஜி.கே. எழுதிய மர்மநாவல் - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.

வார்ஸாவில் ஒரு கடவுள் - போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக்கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.

இதழியல் பங்களிப்புகள்

படிகள் - எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.

இங்கே இன்று - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.

மேலும்

பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
வித்யாசம் - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.

தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இணைப்புகள்

1. வார்சாவில் ஒரு கடவுள் நாவல் பகுதிகள் மற்றும் நாகார்ஜுனன் எழுதிய விமர்சனம்


2. தமிழவனின் நேர்காணல்

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாயும் ஞாயும் யாரா கியரோ தொடர்கள் வாயில்


யாயும் ஞாயும் யாரா கியரோ- 2

அமைப்பியல், எந்திரன், வாசகர்கேள்விகள்

தமிழவன்  

அமைப்பியல் என்றால் என்ன என்ற கேள்வியைப் பலவாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். முக்கியமாக நரேஷ், சுதா, முருகேசன், நரேன் கார்த்திக், மற்றும் மு.செல்வமணி ஆகியோர் கேட்டிருக்கிறார்கள். பின் நவீனத்துவம் பற்றி ரமேஷ் பாபு, கண்ணன் ஆகியோரும் விமரிசனம் பற்றி மருது பாண்டியும் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் எந்திரன் படத்தோடு இணைத்தே சிந்திக்கிறார்கள். ஒரு படத்தை உதாரணமாக வைத்துத்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது.

நான் எழுதியது வேறு சிலரை - அதாவது இந்தத் துறைகளில் உழன்றுகொண்டிருப்பவர்களை மனதில் வைத்து. முதன்முதலாக இபோதுதான் எனக்குத் தெரியவில்லை என்றுசொல்லி விளக்கம் கேட்கிறவர்களைப் பார்க்கிறேன்.

என்போன்ற சிலர் கடந்த பல ஆண்டுகளாக - சுமார் முப்பது ஆண்டுகள் - அமைப்பியல் பற்றி எழுதிக் கொண்டு வருகிறோம். சமீபத்தில் நான் சில கல்லூரிகளுக்குப் போய்ப் பேசினேன். அங்கும் இதைத்தான் பேசினேன். அதையே இங்கும் சொல்கிறேன்.

அமைப்பு என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு நாற்காலிக்கு ஒரு அமைப்பு இருக்கிறது. அமைப்பு இல்லாவிட்டால் அது விழுந்துவிடும், நிற்காது. அந்த நார்க்காலியில் என்னமாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் அனால் அதில் நாம் உட்காரவேண்டும்; உட்காரும் போது நாம் விழக் கூடாது.

நம்மைவிழாமல் வைத்திருக்கிற அமைப்பு தான் சரியான அமைப்பு. இந்த விளக்கம் எல்லோருக்கும் தெரிந்ததைத்தான் சொல்கிறது. சாலையில் இடதுபுறம், வலதுபுறம் என்று இருக்கிற அமைப்பால் தான் வாகனங்கள் செல்லமுடிகிறது; வீட்டின் மீது இருக்கிற கூரை ஏன் விழவில்லை என்றால் அதில் ஒரு அமைப்பு இருகிறது. இதெல்லாம் ஒருவகை சமன் பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இது ஒருவிளக்கம்.

இன்னும் சற்று மேலேபோய் வேறொரு கோணத்திலிருந்தும் விளக்கவேண்டும். லெவி ஸ்ட்றாஸ் என்ற பெயர் கேட்டிருப்பீர்கள். ஜீன்ஸ்பாண்ட் கம்பனி பெயர். அதே பெயர் கொண்ட ஒரு அறிஞர் இருந்தார். அவர்தான் அமைப்பியலின் தந்தை.

"அமைப்பியலின் தந்தை" லெவி ஸ்ட்றாஸ்

(லெவி ஸ்ட்றாஸ் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://en.wikipedia.org/wiki/Claude_L%C3%A9vi-Strauss )

அவர் ஏதாவது ஒரு எதிரிணை (binary-opposition) இருப்பதுதான் அமைப்பு என்கிறார். மேல்-கீழ்; இங்-அங் (இங்-கே-அங்-கே); நல்ல-கெட்ட; அவித்த-அவிக்காத....இப்படிப் பட்ட எதிர் முரண்கள் கொண்ட ஒரு அமைப்பு உலகத்தில் இருக்கிறது, அதுதான் நம்மை இயக்குகிறது என்றார். மேலும் உள்ளுறைத்தன்மையும் (langue) வெளிப்படும்தன்மையும் (parole) என்று கூறப்படுகின்ற ஒரு மொழியியல் கருத்தாக்கம் கூட அமைப்பியலின் அடிப்படைப் பண்பாக பேசப் படுவதுண்டு.

இவ்வாறு சில சிந்தனைகளை மட்டும் நான் குறிப்பிட்டுவிட்டு வேறு விசயங்களுக்குப் போகிறேன். (இவை தொடர்பாக என்னுடைய-அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட "அமைப்பியலும் அதன் பிறகும்" என்ற நூலும் வேறு சில நூல்களும் வந்துள்ளன. அவை வாசகர்களுக்குப் பயன்படும்)

மொழியியல் என்பது தான் இருபதாம் நூற்றாண்டில் உலகில் முக்கியமான சிந்தனை. ஏனென்றால் அதில் தான் புதிய விஞ்ஞான அறிவு இருந்தது. உலக உண்மைகளில் விளக்க முடிந்ததும விளக்க முடியாததும் உண்டு. மொழியியல் தான் இந்த இரண்டு விசயங்களையும் கருத்தில் எடுத்துச் சிந்தித்தது. அமைப்பியல் தன் கருத்துக்களை மொழியியலில் இருந்து எடுத்தது.

உலகிலும் சரி, தமிழிலும் சரி அமைப்பியல் வருவதுவரை இலக்கிய விமரிசனம் அபிப்பிராயங்களைப் பொது உண்மைபோல் வெளியிட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு வேண்டி, நண்பர்களுக்கு வேண்டி பேசிய வக்காலத்து தான் அது. ஒருபக்கம் சாயாத இலக்கிய விமரிசனம் அல்ல அது. வலைபூக்களில் நடக்கிற காரியமும் அதுதான். தங்களை மேதாவிகளாகக் காட்டும் பிரயத்தனம்.இலக்கிய விமரிசனத்தில் objectivity -க்கு அதிக இடம் வேண்டும் என்பது என் வாதம். க.நா.சு.வை நான் மதிக்கிறேன்.


என்றாலும் அவர் இந்த அம்சத்துக்கு முக்கியம் கொடுக்கததால் தான் தமிழுக்கு இன்று இந்த நிலை. சுந்தர ராமசாமி போன்றவர்கள் க.நாசு வின் நிழலில் நின்று விமரிசனங்கள் எழுதினார்கள். விமரிசனத்தில் அவருக்கு ஒரு சொந்த நிலைபாடு இருக்கவில்லை. அதனால் தான் அந்த விமரிசனப் பள்ளி இன்று பலவீனமானதென்கிறேன். அந்த மரபைத் தொடர்பவர்களும் அப்படித்தான். தங்கள் கோபதாபங்களுக்குத் தக வளைத்துக் கொளைத்து எழுதுவது எல்லாம் இலக்கிய விமரிசனமல்ல. அகில உலக இலக்கிய மரபைப் புரிந்து அவற்றை உள்வாங்கி எழுதுபவர்கள் வேண்டும் நமக்கு. அப்புறம் தமிழின் நீண்ட இலக்கிய மரபு தெரிந்துதான் இலக்கிய விமரிசனம் செய்யமுடியும். தமிழில் நடந்த விசயங்களை மறைத்துத் தங்களுக்கு தெரிந்த விசயங்களைமட்டும், அல்லது தங்களைப் போன்ற அரைகுறை சமாச்சாரங்களில் அக்கரை காட்டுபவர்களை அறிமுகப்படுத்துவதற்காக மட்டும் எழுதுவது இலக்கிய விமரிசனமாகாது.

வலைப்பூக்களில் தங்களைப் பெரிய மேதாவிகள் என்று பிரச்சாரம் செய்வதில் பயன் இல்லை. தமிழில் இலக்கியக் களத்தை விரிவாக்க வேண்டும்.

அமைப்பியல் இலக்கியத்தைப் பொதுக்களத்துக்குக் கொண்டுவந்தது. இதை அங்கீகரிக்கத்தான் வேண்டும். மேற்கில் எந்தச் சிந்தனையானாலும் பலதுறைகளுக்குப் பரவலாக்கப் படும். வேறுதுறைகளுக்குப் பரப்பப்படும். அதனால் தத்துவம், மார்க்சியம், உளவியல், இலக்கியம், மானுடவியல், சினிமா, வரலாறு, போன்ற பிற துறைகளுக்கு அமைப்பியல் போனது.

நமக்கு இலக்கியம் பற்றியும் சினிமா பற்றியும் இப்போது அக்கறையிருப்பதால் அவைபற்றிப் பேசுகிறோம்.
எனவே அமைப்பியல் ஏன் முக்கியம் என்றால் அதன் மூலம் தான் முதன் முதலாகத் தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் அதுவரையில்லாத அறிவியல் தன்மை வந்து சேர்ந்தது. நாற்பது சதமானம் படிப்பு உள்ள சமூகத்தில் அறிவியல் சார்ந்த விசயங்கலுக்கு அதிகம் பேர் வரமாட்டார்கள். இப்போதெல்லாம் உலகத்தில் அறிவியல் தன்மையை எல்லா விசயங்களிலும் காண்கிறார்கள். நாம் பேசும் பழமொழியில் அறிவியல் தன்மை உண்டு. அந்தப் பழமொழியில் மூடநம்பிக்கையும் உண்டு. ஒரு சமூகம் அறிவியல் சமூகமாக வளரவேண்டும் என்பதுதான் இன்றைய சூழலில் தேவை. அதாவது உலகப் போக்கின் இயக்கத்தை எங்குப் புரிந்துகொள்ளமுடியுமோ அங்கு அதைப் புரிந்தும் எங்குப் புரிந்துகொள்ள முடியாதோ அங்குப் புரிந்துகொள்ளாமையை அங்கீகரித்தும் செயல்படும் விஞ்ஞான அறிவோடு நம் இலக்கிய உலகமும் செயல்படவேண்டும்.

தமிழில் உள்ள பலர் அறுபதுகளில் சில ஆங்கில வார இதழ்க் கட்டுரைகளைப் படித்து விட்டுத் தான் தமிழ் இலக்கிய விமர்சகர் ஆனார்கள். அது தப்பில்லை. இனியும் அது போதும் என்று வாதிக்கக் கூடாது என்கிறேன். அவ்வளவுதான்.

இன்றைய இலக்கியப் பார்வைக்கு முக்கிய காரணமான "எழுத்து" இதழ் அந்தக் காலத்தில் முக்கியமான மேற்கத்திய விமர்சகர்களை அறிமுகப்படுத்தியது. அப்போது பலர் அந்த விமரிசனத்திலிருந்து கற்று இலக்கிய விமரிசனம் செய்தனர். பின்பு இலக்கிய விமரிசனம் அபிப்பிராய வகைப்பட்டதாக மாறியது. பின்பு அமைப்பியல் வந்த பின் எல்லாம் அடியோடு மாறின.

மொத்தத்தில் அமைப்பியல் என்பது என்ன என்ற கேள்விக்குப் பொதுமைப் படுத்தி இப்படிப் பதில் கூறலாம்.

அ) இலக்கியமோ, சினிமாவோ, அணுகப் படும்போது அறிவியலுக்கு ஏற்ற முறையில் அமையவேண்டும். "எனக்கு மட்டும் இப்படிப் படுகிறது, உனக்கு எப்படிப் படுகிறதோ எனக்குத் தெரியாது" என்பது போன்று எழுதுவது விமரிசனமல்ல. அதாவது "நல்லாயிருக்கு...நல்லாயில்லே" என்ற இரண்டு வர்த்தைகளைத் தூரவீசிவிட்டுப் படத்தையோ நாவலையோ, கவிதையோ அதன் மையத்தர்க்கத்தின் மூலம் அறிய முயலவேண்டும். அப்போது மக்கள் ஏன் இப்படிப் பட்ட சினிமாவைப் பார்க்க ஓடுகிறார்கள் என்பது புரியும் ; அதில் நடிக்கும் நடிகரை ஏன் அடுத்த முதலமைச்சராக்க முயல்கிறார்கள் என்பது புரியும்.

ஆ) அறிவியல் என்று கூறும் போது பயிரியல், வேதியியல் போன்றதல்ல; அவற்றின் தத்துவம் கொஞ்சம் வேறு; இங்கு அறிவியல் என்பது மொழியியல் ஆகும். லேசான மொழியியல் பரிச்சயத்துடன் சினிமாவையும், கவிதையையும் நாவலையும் அணுகலாம். அவைகளில் உள்ளுறைந்திருக்கும் அமைப்புக்களைக் கண்டுபிடிக்கலாம்.

இ) மேலோட்டமாகத் தெரியும் கருத்துக்கள் போலவே வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுறைந்திருக்கும் கருத்துக்களும் சினிமாவைப் பொறுத்தவரையிலும் இலக்கியத்தை பொறுத்தவரையிலும் முக்கியம். உதாரணமாக எந்திரன் படத்தில் விஞ்ஞானம் - மனிதம் என்ற முரண்மீது நடக்கும் கருத்தாடல் வருகிறது. இறுதியில் மனிதம் வெற்றி பெறுகிறது. இங்குப் புதுமை என்னவென்றால் வழக்கமான படங்களில் வருவதுபோல் இரு நபர்களின் முரண் இங்கு மாற்றமுற்று இரு concepts களின் முரண் தோன்றுகின்றது.

ஈ) எதிரிணைகள்-ஒரு படைப்பில் எப்படி அமைந்திருக்கின்றன என்று கண்பது அமைப்பியல் அணுகலின் ஆரம்பச் செயல் முறை. (பார்க்க: "திருப்பாவை ஒரு அமைப்பியல் ஆய்வு" என்ற கட்டுரை) எந்திரன் திரைப்படத்தில் உள்ள எதிர் இணைகள் என்று ரஜினியையும் அவர்மீது பொறாமை கொண்டு குறைகண்டுபிடிக்கும் இன்னொரு விஞ்ஞானியையும் கூறலாம். ஒரு எதிரிணை (இரு ரஜினிகள் ஒருவராகிறார்கள்) மங்குகிறது. அப்போது வழக்கமான தமிழ் சினிமாவின் இரட்டை (நாயகன் / வில்லன் (எம்ஜி.ஆர் / நம்பியார்) அமைப்பு வெளித்தெரிகிறது. அதுபோல் அ-மனிதம் / மனிதம் (anti-human/human) என்ற எதிரிணை இன்னொரு கட்டமைப்பாகப் (construct) பார்வையாளர்களின் உள்மனதில் பதிகிறது.
இங்கு மேலோட்டமாகத்தான் அமைப்பியல் முறை அணுகல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோல் வாசகர்களும் இப்படத்தை அணுகலாம். இம்முறை நமக்கு நம் சமூகம் பற்றியும் நம் மக்களின் உளவியல் பற்றியும் அறிவைத் தரும். நல்லபடமா அல்லது நல்ல படமில்லையா என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் அவரவர் விருப்பு வெறுப்புப் படி பதிலைத் தருவார்கள். அரங்குகளில் டிக்கட் க்யூவில் நின்றுகொண்டு சினிமா பார்த்துவிட்டு வருபவர்களைப் பார்த்துப் படம் எப்படி என்று கேட்பவனின் மனநிலைதான் இந்தப் போலி விமரிசகர்களின் மனநிலை. இந்தமாதிரி பொய்யர்களை வாசித்து ஏமாறாதீர்கள். தமிழ் சினிமா எவ்வளவோ மைல்கல்களைத் தாண்டி நடையிடுகிறது. தீயூழ் என்னவெனில் படித்த ஓரிரு விமர்சகர்கள் கூட சினிமா பற்றி எழுதத் தமிழில் இல்லை என்பதுதான்.

(அடுத்த வாரம் நவீனத்துவம் / பின்நவீனத்துவம் பற்றிய வாசகர்களின் கேள்விக்கான எதிர் வினைக் கட்டுரையைக் காணலாம்.)

-----------------------------------------------------------------------------------
(பார்க்க: "திருப்பாவை ஒரு அமைப்பியல் ஆய்வு" என்ற கட்டுரை)
-------------------------------------------------------------------------------------

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</