வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள்   சிறுகதைகள் வாயில்

அம்மா X அப்பா = நான்

உஷாதீபன் ஞாயிறு , 28-02-2010; 8:04 AM

அம்மா அப்பாவுக்குள்ள எப்பவும் சண்டை தான். எதுக்குத்தான் சண்டை வருதுன்னு சொல்லவே முடியாது. எப்பப் பார்த்தாலும் சண்டை தான்.

ஏதாச்சும் ஒன்றை அம்மா சொல்ல, அதை அப்பா மறுத்துப் பேச அல்லது அப்பா ஏதாவது சொல்ல அதை அம்மா முடியாதுங்க, சண்டை வந்துடும். அப்டியே பேச்சுக்குப் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தைன்னு வளர்ந்திட்டேயிருக்கும்.

எதுக்காக இவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தோணும். ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடணும்னு எங்கேயாவது, யாராவது சேருவாங்களா? அல்லது சேர்த்துதான் வைப்பாங்களா? சந்தோஷமா, ஒத்துமையா வாழணும்னுதானே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க? ஆனா இப்படி சண்டை போடுவாங்கன்னு அவுங்க என்ன நினைச்சா இருப்பாங்க? அப்படி நினைச்சிருந்தாத் தான் இப்படி வந்து வந்து சமாதானம் பண்ணுவாங்களா? அதுதாங்க இதிலே அதிசயம்! ஆச்சரியம்!!

யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டா...அம்மாவும் அப்பாவும் இருக்கிற இருப்பைப் பார்த்தா என்னாலெயே நம்பவே முடியாதுங்க... விருந்தாளி நுழையறதுக்கு முந்தின அஞ்சு நிமிஷம் வரைக்கும், ஏன் வாசப்படி மிதிக்கிறவரைக்கும்னு கூட வச்சிக்குவமே...காய்ரா பாய்ரான்னு கத்திக்கிட்டுக் கிடந்தவங்க, வாசல் கேட் திறக்கிற சத்தம் கேட்டவுடனே...அடடே! வாங்க, வாங்க, வாங்கன்னு கூப்பிடுற அழகைப் பார்க்கணுமே?அடேயப்பா!! அம்மா சந்தோஷமாச் சிரிச்சா பார்க்க எவ்வளவு அழகா இருக்கு? “யேய் ஸ்ருதி! உங்க அம்மாட்ட ஒரு பேமிலி லுக் இருக்குடி. அது பார்க்க ரொம்ப அழகு.” என் பிரண்ட் ரமா எத்தனை வாட்டி சொல்லியிருக்கா தெரியுமா? அது போல “டீ...உங்கப்பா படு ஸ்டைலா இருக்காரேடி...”. அன்றைக்கொருநாள் என் தோழி சாந்தினி சொன்னதைத்தான் அப்பா விருந்தாளிகளை வரவேற்றப்போ
நினைச்சிக்கிட்டேன் நான்.

“ஹல்ல்ல்ல்லோ....” ன்னு சொல்லிக்கிட்டே அப்பா போய் கைகொடுத்துக் கூப்பிட்ட அழகிருக்கே! அது உண்மையிலேயே ஸ்டைலிஷ்தான்...” அப்பா வலிய அப்படிச் செய்யறதில்லை. அது இயற்கையாவே அவருக்கு அமைஞ்சு போயிருக்கு. அவ்வளவுதான். இவுங்க ரெண்டுபேரும் மூஞ்சியப் பார்த்துக்கிறதும், சிரிக்கிறதும்,சுமுகமாப் பேசிக்கிறதும் எல்லாமும் போலிதானே? இல்லன்னா யாரும் இல்லாதப்போ ஏன் அப்படி வள் வள்னு விழுந்துக்கணும்? வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள்ட்ட இம்மி கூடக் காட்டிக்காதவங்க, என் முன்னாடி மட்டும் ஏன் அப்படி இருக்கணும்? நான் டி.வி. கூடப் பார்க்கிறதில்லைங்க. அதத் திறந்தா இதவிடக் கொடுமை. குடும்பம்னாலே சண்டைதான்னு இலக்கணம் வகுத்தாப்லேல்ல அதுல அடிச்சிக்கிறாங்க?

அதனால என் மனசு எப்படி பாதிக்கப்படுது? என் படிப்பு எவ்வளவு பாதிக்கப்படுது? புத்தகத்தைத் திறந்து வச்சா அம்மா அப்பா சண்டைதானே ஞாபகத்துக்கு வருது? ரூம் கதவைச் சாத்திக்கிட்டுக்கூடப் படிச்சுப் பார்த்தேன். ஓடமாட்டேங்குது. அம்மா அப்பாவப் பார்த்துக்கிட்டே, அவுங்க முன்னாடி இருந்துக்கிட்டே, எதிர்க்க தாத்தா பாட்டி படத்து முன்னால உட்கார்ந்து படிக்கணும்னு ஆசை எனக்கு. ஜன்னல் வழியா, வேப்ப மரத்து இடுக்கு வழியாத் தெரியற நிலா வெளிச்சத்தைப் பார்த்துக்கிட்டே அது நகர்றபோது புள்ளிப் புள்ளியா இலைகளுக்கு நடுவிலே வெளிச்சம் தெரியுமே......அந்த அழகைப் பார்த்துக்கிட்டே படிப்பேன் நான். இது இவங்களுக்குத் தெரியுதா? எப்படிப் படிச்சா, எந்த இடத்துல உட்கார்ந்து படிச்சா என் மூளைல ஏறும்ங்கிற புத்தி இவுங்களுக்கு வேண்டாம்? இதெல்லாம் சொல்லப் போனா சண்டைதான். ஏற்கனவே இருக்கிற சண்டை போதாதா? “ஸ்ருதி, போ உன் ரூமுக்குள்ளே!” அங்கே போய்ப் படி...” -இது மட்டும் சொல்லத் தெரியும். ஆனா சண்டை போடாம இருப்போம்ங்கிறது தெரியாது. ரெண்டுபேருக்கும்தான் சொல்றேன். அப்பாவும் கொஞ்சங்கூட இந்த விஷயத்துல விட்டுக் கொடுக்கிறாப்ல இல்லை! சண்டை போடுறதுன்னா, அதான் ஏதோ சொல்வாங்களே, ஹாங்...அதான், ரெண்டு பேருக்கும் அல்வா சாப்பிடுறாப்ல...போதுங்களா, உங்க பாஷைலயே எளிமையாச் சொல்லிட்டேன்.

“ரொம்ப மனசு வெறுத்துப் போச்சுங்க எனக்கு. ஒரு நாள் சொல்லிப்புடணும்னுதான் நினைச்சேன். யார்ட்டச் சொல்றதுன்னு யோசிச்சப்போ அப்பாவே பெட்டர்னு தோணிச்சு. ஏன்னா அப்பாதான் ராத்திரி தூங்கறச்சே மேல கால் போட்டாலோ, மூஞ்சில மிதிச்சாலோ ஒண்ணும் சொல்ல மாட்டாங்க...அம்மான்னா “சீ...கழுத...தள்ளிப்படுன்னு சொல்லி, உருட்டி விட்டிடுவாங்க...அது என்னவோ தெரியலை..அப்பான்னா எனக்கு பிரியம் ஜாஸ்தி...அதுக்காக அம்மாவை எனக்குப் பிடிக்காதுன்னு சொல்ல மாட்டேன். என்னதான் சண்டை போட்டாலும் வச்சாலும், ஏனோ தெரியலை...அப்பாவைப் பார்க்க எனக்குப் பாவமா இருக்கும். ..” பல சமயங்களில அப்பா தனியா உட்கார்ந்திருக்கச்சே..எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்கிறாமாதிரி தெரியும் எனக்கு. மனசு சரியில்லன்னா, இல்ல இல்ல, அப்பா மாடில இருக்கார்னா அவருக்கு மனசு சரியில்லைன்னு அர்த்தம். அப்படிப்பட்ட சமயத்துலகூட அப்பா எங்கிட்ட,”நீயும் வர்றியாடான்னு” என்னைக் கூப்பிடுவாரு.

அதுதான் அப்பாட்ட எனக்குப் பிடிச்சது. ’டா’ போட்டுத்தான் அப்பா என்னைக் கூப்பிடுவாரு. அவ்வளவு பிரியம் என் மேல. அப்பா மாடில இருந்தா பெரும்பாலும் நானும் அங்கதான் இருப்பேன். மொட்டை மாடிதான்........ நான் படிக்கிறதுக்காக அப்பா அங்கே லைட் போட்டுக் கொடுத்திருக்காரு. நிறையப் பாடம் எழுத இருக்கிற அன்னைக்கு மட்டும் மாடிக்குப் போக மாட்டேன். ஆனா அப்பாகூடச் சேர்ந்து அம்மா ஒரு நா கூட மாடில இருந்ததில்லே..நீயும் வேணும்னா மாடிக்குப் போயேம்மா”...ன்னு கூடச் சில சமயம் சொல்லிப்பார்த்துட்டேன். சும்மா இருடி உன் சோலியப் பார்த்திட்டு..ன்னு பட்டுன்னு கட் பண்ணிடுவாங்க அம்மா.

அப்படியாவது தனிமைல ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசிக்கட்டுமேங்கிறது என் எண்ணம். ஆனா நாம நினைக்கிறது எங்கேங்க நடக்குது? எதுக்கு சொல்றேன்னா... ரெண்டு பேரும் பேசிக்கறச்சே...எதையோ ஒண்ணை மறைச்சு மறைச்சு அல்லது தயங்கித் தயங்கியே பேசற மாதிரி இருக்கும். நான் நல்லாக் கவனிச்சிருக்கேன்....ஏதோ சினிமால கூட வருமே...அதாங்க...என்னவோ....ராகம்னு கூட அதும் பேர் வரும்...அந்தப் படத்துல அப்படித்தான் புருஷன் பெண்டாட்டி பேசிக்கவே மாட்டாங்க...அளந்து அளந்து...ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை...வாய் விட்டு, மனசு விட்டுப் பேசாம, மௌனமாப் பார்த்துக்குவாங்க...மௌனமா...மௌனமா...ஆ! இப்போ பேரு ஞாபகம் வந்திருக்குமே?
“ஏங்க இப்படி இருக்கணும்? எங்க அப்பா அம்மாவத்தான் சொல்றேன்.

ரெண்டு பேருமே வேலைல இருக்காங்க. நிறையச் சம்பளம் வாங்குறாங்க...கை நிறையச் காசு வருது. வீட்டுல எல்லா வசதியும் இருக்கு...எல்லாமும் இருக்கு. ஆனா சந்தோஷம் மட்டும் இல்ல? ஏன்? நல்லா இருந்துட்டுப் போக வேண்டியது தானே? எதுக்கு அநாவசியமா இப்படிக் கெடுத்துக்கணும்?” கல்யாணம் பண்ணிக்கத் தெரியுமாம். ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்கத் தெரியுமாம்.

வீட்டு விசேஷம், வெளி .ஃபங்ஷன்னு சேர்ந்து சேர்ந்து ஜோடியாப் போகத் தெரியுமாம். ஊருக்கு உறவுக்குன்னு எதுவுமே காட்டிக்க மாட்டாங்களாம். ஆனா வீட்டுல மட்டும் கர் புர்ன்னு ஒருத்தரையொருத்தர் கடிச்சிக்குவாங்களாம்? என்னங்க வேஷம் இது? நான் ஒருத்தி இருக்கேனே ...அத ரெண்டு பேரும் கொஞ்சமாவது நினைக்கிறாங்களா? அட, யாராவது ஒருத்தர் நினைச்சா கூடப் போதுமே? விட்டுக் கொடுத்துப் போகலாம்தானே? அதுலதாங்க இருக்கு பிரச்னையே...ஏன் விட்டுக் கொடுக்கணும்? எதுக்கு விட்டுக் கொடுக்கிறதுன்னு ரெண்டு பேருக்குள்ளேயும் பிரச்னை இருக்குன்னு தோணுது எனக்கு... நான் பெரிசா, நீ பெரிசாங்கிற கதைதான்...அதாங்க ஈகோ...அன்னைக்குக் கூட எங்க க்ளாஸ் டீச்சர்
அதத்தான் சொன்னாங்க.....ஹெட் மிஸ்ட்ரஸ் பத்திப் பேசறப்போ இந்த வார்த்தை வந்திச்சு...எல்லா இடத்துலயும் இந்தப் பிரச்னை இருக்கும் போலிருக்கு... கடவுள் எல்லாரையும் ஒரே மாதிரியாவா படைச்சிருக்கான்...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமையிருக்குல்ல? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல அழகா இருக்கிற மாதிரி...எல்லாரும் ஒரே மாதிரி அழகா இருந்தா அதை ரசிக்கவா முடியும்? அதே மாதிரிதானே இதுவும்? நான் மாத்ஸ் சூப்பராப் போடுவேன்.

ஆனா இங்கிலீஷ் சரியா வராது. என் தோழி புஷ்பா படுபோடு போடுவா...இங்கிலீஷ. அப்படிப் பேசுவா.சரளமா...பட்? எனக்கு வராது. அதுக்கென்ன பண்றது? முயற்சி செய்து வளர்த்துக்க வேண்டியது தான்...அதுபோல மனுஷங்க குணம் மாறியிருந்தாலும், எது சரிங்கிறதைப் புரிஞ்சிக்கிற அறிவு இருக்குல்ல? அதைப் பயன்படுத்தி அவங்களை மாத்திக்க வேண்டியது தானே? அப்பா வேலைல ரொம்ப சின்சியர். ஆனா அம்மா அப்படியில்லை. வீட்டு வேலைல கூட அம்மா அப்படி இப்படித்தான்...சாயங்காலம் அப்பா ஆபீஸ் விட்டு வர்றபோது, அம்மா கொஞ்சம் முன்னாடியே வந்திருப்பாங்க...அப்பாவுக்கு ஆபீஸ் ரொம்பத் தூரம். வீட்டுலேர்ந்து பத்துக் கி.மீ. தள்ளி இருக்குது. அம்மாவுக்குப் பக்கத்துலதான். இத்தனைக்கும் அப்பா காலைல ஆபீஸ் போறச்சே அம்மாவைக் கொண்டு விட்டிட்டுத்தான் போவாரு.

“நீ உன் ஆபீஸ் டயத்தை மதிக்கலே...லேட்டாப் போறே...ஆனா நான் அப்படி இருக்க முடியாது. மானேஜரே லேட்டா வர்றாருன்னு பேசுவாங்க...என்னைப் பார்த்து மத்தவங்களும் லேட்டா வர ஆரம்பிச்சிடுவாங்க...அதனால சீக்கிரம் கிளம்புன்னு அப்பா அவசரப்படுத்துவாங்க...
அம்மா அதையெல்லாம் காதுல வாங்கிக்கிட்டாத்தானே? இப்டித்தாங்க ஒவ்வொண்ணுக்கும் சண்டை. “நீ பஸ்ல போய்க்கோ.”..சொல்லிட்டு அப்பா விருட்டுன்னு வண்டிய எடுத்திட்டுப் போயிடுவாங்க...ஆனா அம்மா அலட்டிக்கவே மாட்டாங்க...வழக்கம்போல மெதுவா நடந்து போய் மினி பஸ் பிடிச்சு ஆபீஸ் போயிடுவாங்க...யாரும் எதுக்கும் சளைச்ச மாதிரித் தெரியலே...எப்படி அம்மா தன்னை மாத்திக்கத் தயாராயில்லையோ அதுபோல அப்பாவும்....இதெல்லாம் சின்னச் சின்ன விஷயம்தான்...ஆனாலும் தீராத பிரச்னையால்ல போச்சு...

ஆனா ஒண்ணுங்க...அடிக்கடி இவுங்க இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுறதப்பார்த்தா...ஏதோவொண்ணுல சுத்தமாப் பிடிக்காமப் போயி, அந்த வெறுப்புலதான் இப்படி அடிக்கடி சண்டை வருதோன்னு தோணுது எனக்கு. அதுதான் உண்மைன்னு நான் நினைக்கிறேன்...
எப்படி நான் இவ்வளவு யோசிக்கிறேன்னு பாக்கிறீங்களா? இந்த மாதிரி சண்டை போடுற வீட்டுல நீங்களும் இருந்து பாருங்க...எல்லா யோசனையும் தானா வந்துடும்! உலக அனுபவத்துல பாதி கிடைச்சிப் போயிடும்...என்ன பெரிய மனுஷி மாதிரிப் பேசறேனேன்னு பார்க்கிறீங்க, அதானே?

இப்போ நான் எய்ட்த் ஸ்டான்டர்டு படிக்கிறேன்...இன்னும் ரெண்டு வருஷத்துல டென்த் போயிடுவேன்..அப்போ என் படிப்பு மத்த எல்லாத்தையும் விட முக்கியமாப் போயிடும்தானே. அப்போ இவுங்க என்ன செய்வாங்களாம்? அப்போவும் எதையும் சட்டை பண்ணாம, இப்படிச் சண்டை போட்டுட்டேதான் இருப்பாங்களா? அப்படி இருந்தாங்கன்னா என்ன பேரன்ட்ஸ்ங்கிற வெறுப்பு எனக்கு வருமா இல்லையா? இதையெல்லாம் யார் சொல்றது? நான் சொன்னா உரைக்கலியே!” “நீ சும்மா இருடி கழுத...உன் வேலையென்ன? படிக்கிறது.!..அதை மட்டும் ஒழுங்காப் பாரு...”
இதெல்லாம் தாங்க எனக்கு அட்வைஸ்.. வெறும் காசு வந்து என்னங்க புண்ணியம்? எங்க வீட்டுல சந்தோஷமில்லியே? அதே காசை வச்சிட்டு அம்மா அப்பாவோட ஹோட்டலுக்குப் போயி, விதவிதமா வாங்கிச் சாப்பிட்டு, கடைக்குப் போயி புதுசு புதுசா டிரஸ் எடுத்துக்கிட்டு, என்
ப்ரென்ட்ஸ்கிட்டெல்லாம் காண்பிச்சு...எல்லாந்தான் ஆசை. ரெண்டு பேரும் வரணுமில்லே? வர மாட்டாங்களே....?

இதுவரைக்கும் நான் ரெண்டு பேர்கூடவும் ஒரு தடவை கூடச் சேர்ந்து போனதில்லைங்க..நீங்க நம்பினா நம்புங்க...நம்பாட்டிப் போங்க...அதான் உண்மை. எப்பவாவது அம்மா கூடப் போயிருக்கேன்...இல்லன்னா அப்பாகூடப் போயிருக்கேன்...தனித்தனியாத்தான்...வேறே வழி? இவ்வளவு ஏன்? அடிக்கடி எங்க ஊர் நேதாஜி மைதானத்துல எக்ஸிபிஷன் நடக்கும்..அதுக்கெல்லாம் நான் போனதேயில்லை. இத்தனைக்கும் அது வீட்டுக்குப் பக்கமாக்கும். சேர்ந்து கூட்டிட்டுப் போனாத்தானே? நானாவா போக முடியும்? எவ்வளவு பேர் ஜோடி ஜோடியா வர்றாங்க? குழந்தைகளோட வர்றாங்க..ஆனா நான் போனதேயில்லைங்க...சத்தியம்......நம்புங்க! எங்கம்மா சென்ட்ரல் கவர்ன்மென்ட்லதான் வேலை பார்க்கிறாங்க...அப்பாதான் ஸ்டேட் கவர்ன்மென்ட்...அம்மாவுக்கு இந்தியா பூராவும் டூர் போக ஆபீஸ்ல பணம் கொடுப்பாங்களாமே? அம்மா கூட அதை எல்.டி.சி.ன்னு சொல்வாங்க...கேட்டிருக்கேன்...அந்த சலுகைல நாங்க இதுவரைக்கும் எங்கேயும் டூர் போனதேயில்லைங்க...என்ன? இதையும் நம்ப முடியலையா? நம்பித்தாங்க ஆகணும்...ரெண்டு பேரும் சுமுகமா இருந்தாத்தானே இந்த யோசனையெல்லாம் வரும்? வயசுதான் ஆகியிருக்கு ரெண்டு பேருக்கும்...இவங்களப் பார்த்துப் பார்த்து எனக்குத்தான் பக்குவம் வந்திருக்குன்னு சொல்லணும். ஏன் கேட்குறீங்க வயித்தெரிச்சல?
பாருங்க, இன்னைக்கு சில நோட் புக்ஸ், டிராயிங் புக்ஸ், கொஞ்சம் ஸ்டேஷனரியெல்லாம் வாங்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். மணி ஆறரை...ரெண்டு பேரையும் இன்னும் காணலை...சமயத்துல அம்மா ஆபீஸ் கலீக்ஸோட சினிமாவுக்குக் கூடப் போயிட்டு வந்திடுவாங்க...சேர்ந்து போனாங்களா, அல்லது தனியாப் போனாங்களா, அதெல்லாம் தெரியாது...சொல்றது அப்படி...சரி தொலையுதுன்னு அப்பா விட்டிருவாரு...அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கும்...ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு வந்தாங்கன்னாப் பார்த்துக்குங்களேன்...அப்பா படு சத்தம் போட்டாங்க...
“எங்க தொலைஞ்சிடப் போறேன்? எங்க டிபார்ட்மென்ட் அசோசியேஷன் கூட்டம். அதுக்குத்தான் போயிட்டு வந்தேன்...அதுக்குப் போகாம என்னால இருக்க முடியாது...வேணும்னாப் போன் பண்ணிக் கேட்டுக்குங்க...”அப்படின்னாங்க.

“குடும்பப் பொண்ணு, டயத்துக்கு வீட்டுக்கு வர்றதில்லையா?” அப்படீன்னு அப்பா ஒரு முறை சத்தம் போட்டாங்க. “வீட்டுப் பொம்பளைன்னா, நானென்ன ஹவுஸ் ஒய்ஃப்பா?” அப்படின்னு பதில் கேள்வி கேட்டாங்க அம்மா. என்னவோ தெரியலை, அதிலிருந்து அப்பா ஒண்ணுமே கேட்குறதில்லை. சுத்தமா விட்டிட்டாரு...என்னவோ ஆகட்டும்னு நினைச்சிட்டாரோ என்னவோ?” இதோ அப்பா வந்திட்டாருங்க...நான் கடைக்குப் போகணும். கொஞ்சம் பர்சேஸ் இருக்கு. அப்புறம் பேசட்டுமா? “போலாமாடா கண்ணு? உங்க அம்மா வரலை?” “இன்னும் வரலப்பா...”
“பாருங்க ...அப்பா முகம் சுண்டிப் போறதை? இதுதாங்க எனக்குத் தீராத வேதனையாயிருக்கு. இவுங்க ரெண்டு பேருக்குள்ளும் வேறே என்ன இருக்கும்? அதத்தாங்க என்னால கண்டு பிடிக்க முடியல...மண்டையப் போட்டுப் பிச்சிக்கிறேன்...பிடிபட மாட்டேங்குது... பாருங்க...மணி ஏழாகிப் போச்சு...நல்லா இருட்டிப் போச்சு...ஆனா என்ன? நாந்தான் அப்பாகூட இருக்கனே? எனக்கென்ன பயம்? பஸ்ல போயிட்டிருக்கேன் ஸார்...உங்ககிட்டத்தான் சொல்றேன்.... அப்பா கூடப் பஸ்ல போறதுன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பா என்னை மடில தூக்கி வச்சிக்கிடுவாரே...ஆபீசுக்கே அப்பா பலநாள் பஸ்லதான் போவாரு...குறிப்பா அம்மா கிளம்பாம லேட் பண்றாங்கல்ல..அதைத் தவிர்க்கிறதுக்காகன்னே சொல்லலாம்...ஏன்னா சீக்கிரம் கிளம்பிடலாமே...? தினம் வண்டில போனா பெட்ரோல் காசு கொடுத்து முடியாதுடா கண்ணு...அந்தக் காசுக்கு உன்னைக் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போகலாமுல்ல? ஆசைப்படுறத் வாங்கித் தரலாமுல்ல? சரிதானா? அப்பா கூட இருக்கைல மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாயும், திருப்தியாவும் இருக்கு? ஏன் அம்மாட்ட மட்டும் அப்படியில்ல?

அதுதான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் புரியல...அதுனாலதான் என்னால வீட்டு வேலைகள்ல கூட அம்மாவுக்கு உதவ முடியல...அம்மா கூடச் சேர்ந்து செய்து பழகுடா கண்ணு...ன்னு அப்பா சில சமயம் சொல்வாரு...அவரைப் பார்த்தா பாவமா இருக்கும் எனக்கு... அவர் வார்த்தைக்காகச் எப்பவாவது செய்வேன்... அப்போ கூட அம்மா ’உங்கப்பா சொல்லி நீ ஒண்ணும் செய்ய வேண் டாம். உனக்கா கத்துக்கிட்டு உருப்படணும்னா செய்...இல்லன்னா எக்கேடும் கெட்டுப் போ...”ம்பாங்க...எல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்..வழ வழா கொழ கொழா வியாபாரமே கிடையாது அம்மாட்ட...! “அடடே! அங்க யாரு?...அப்பா...அப்பா...அங்கே பாருங்க...!! -எதையோ கண்டுவிட்டதுபோல அப்பாவின் முகத்தைத் திருப்பி, அந்த திசையை நோக்கிக் காண்பித்தேன் நான். அப்பாவின் பார்வை ஒரு நிமிடம் கலங்கி, பிறகு தெளிந்து, கூர்மைப்பட்டது. அங்கே....

“யாருப்பா அது? யாருப்பா...?அம்மாதானே? நம்ம அம்மாதானே??” கண்கள் நிலைகுத்தி அங்கேயே வெறித்துக் கொண்டிருந்த அப்பாவின் முகம் அந்த நிமிடத்தில் ஏன் அப்படி விகாரமாகிறது? அய்யோ, என் அப்பாவின் முகமா இது? இதுவரை இப்படிச் சிவந்து, இருண்டு, பார்த்ததேயில்லையே? அது சரி...அந்த ஜவுளிக்கடையின் வாசலில், மஞ்சள் வெளிச்சத்தில், கையில் ஒரு பார்சலோடு அம்மாவிடம் நீட்டியபடி நிற்பது யார்? அதோ, அதை அம்மாகூட வாங்கிக் கொள்கிறார்களே? அந்த இன்னொரு ஆள் யார்? என்னவோ தோன்ற நான் அப்பாவின் முகத்தைப் பார்க்கிறேன். அடடே! ஞாபகம் வந்திடுச்சு..ஹாங்...அந்த அங்கிளா இது? அவுங்கதானே? எங்க, இன்னும் கொஞ்சம் நல்லாப் பார்ப்போம்...ஆமாம், அவரேதான்...அன்னைக்குக்கூட ஒரு நாள் வீட்டுக்கு வந்திருக்காரே? “என்ன தப்பு? இல்ல என்ன தப்புன்னு கேட்குறேன்? என்னை லவ் பண்ணின பாவத்துக்கு...கல்யாணமே வேண்டாம்னு, நாற்பது வயசு தாண்டியும், இன்னைக்கு வரைக்கும், பிரம்மச்சாரியா அலைஞ்சிண்டிருக்காரே.!..ஒத்த மரமா?...என் மாமா பையன்தான்...உறவுதானேன்னு, அவருக்கு சமாதானமா இருக்கட்டுமேன்னு அவர் கூட கோயில் வரைக்கும் போயிட்டு வந்தேன்..அது ஒரு தப்பா?”

ஓடும் பஸ்ஸில் கலங்கியிருந்த அப்பாவின் கண்களைக் கண்டு என் மனசும் கலங்கிப் போக, அப்படியே அப்பாவின் நெஞ்சில் முகம் புதைத்து அவரின் இறுகிய அணைப்பில், என்னவோ மனதைப் பாதித்த உணர்வில், விசித்து அழ ஆரம்பிக்கிறேன் நான்..........


முற்றும்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.