வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
ஆசிரியர் பற்றி
 
   
 


தமிழ்மகன்


தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007), வெட்டுப்புலி (2010) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006), மீன்மலர் (2008), ஆகிய சிறுகதை தொகுப்புகளும், செல்லுலாய்ட் சித்திரங்கள் - சினிமா பிரபலங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் (2010) ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

 

 
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு TS  தந்தையரும் தனயரும்


குற்றமே தண்டனையாக...

தமிழ்மகன் tamilmagan2000@gmail.com

உலக இலக்கியங்களில் 150 ஆண்டுகளுக்குப் பின்னும் மனதின் தீர்க்க முடியாத வலிகளைச் சொல்லும் காவியங்களாக இருப்பவை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள். குற்றமும் தண்டனையும், சூதாடி, இடியட், வெண்ணிற இரவுகள், மரணவீட்டின் குறிப்புகள்.. என தனிமையும் ஏக்கமும் மனச்சிக்கலும் உள்ளடக்கிய கதைகள் அவருடைய சிறம்பம்சங்களாக இருக்கின்றன. மனப் போராட்டங்கள் தனியே ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தானாகத் தோன்றுபவை இல்லை. அவற்றுக்குப் புறக்காரணிகள் எப்படியெல்லாம் தூண்டல்களாக இருக்கின்றன என்பதும் அவருடைய எழுத்தின் சிறப்பம்சத்தின் உச்சமாக இருக்கின்றன.


அவருடைய காலம், 150 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவருடைய எழுத்தோ மொழி, இனம், நாடு, பண்பாடு என பல வகையிலும் அது நம் தமிழுக்கு 10 ஆயிரம் மைல்தூரம் விலகியிருக்கிறது. நம்மைப் போலவே உலகின் பல நாடுகளுக்கும் ருஷ்யாவுக்குமான ஆரக்கால்கள் ஆயிரமாயிரம் மைல்தூரம்தான். ஆனாலும் அவை மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அவருடைய வெண்ணிற இரவுகள் குறுநாவலையும் இன்னும் சில சிறுகதைகளையும் சோவியத் யூனியன் ஒன்றுபட்டிருந்த நேரத்தில் ருஷ்யாவில் செயல்பட்ட ராதுகா பதிப்பகம் தமிழில் வெளியிட்டது. ஆனால் அவருடைய பல இலக்கியப் பொக்கிஷங்களை சோவியத் நமக்கு வழங்கும் வரை அங்கு சோஷலிஷம் தாக்குப் பிடிக்கமுடியாமல் போனது தமிழ் வாசகர்களுக்குப் பேரிழப்புதான்.

ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட அவர் எழுதிய நாவல் தமிழில் "குற்றமும் தண்டனையும்' என்ற பெயரில் மிகுந்த தாகத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த பெரும் சாதனைகளுக்குப் பின்னால் துரைப்பாண்டியன் என்ற பதிப்பாளரும் எம்.ஏ. சுசீலா என்ற பேராசிரியரும் மட்டுமே இருக்கிறார்கள். நூறாண்டு பழமை கொண்ட இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. சுமார் 560 பக்கங்களில் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.

பியோதர் தஸ்தயேவ்ஸ்கியை நாம் ஏன் பாராட்டுகிறோம்? அவருடைய உயிர்ப்புள்ள நடைக்காக. சிக்கலான அக சிந்தனை ஓட்டத்தை எழுத்துகளாக வடிப்பது சவால்மிக்க வேலை. எழுத்தை ஆளுகிறவர்கள் மட்டுமே அதில் வெற்றி பெறுகிறார்கள். மொழி பெயர்ப்பிலும் அது சாத்தியமாகும்போதுதான் முதல்நூலின் ஆசிரியனும் மொழி பெயர்ப்பாளனும் வெற்றியை பகிர்ந்து கொள்ள முடியும். எம்.ஏ.சுசீலாவுக்கு மொழிபெயர்ப்பு நூலின் வெற்றியில் நிச்சயம் பெரும் பங்கு உண்டு.

ரஸ்கோல்னிகோவ் நல்லவன். இரக்க குணம் நிறைந்தவன். அவன் இரண்டு கொலைகளை அடுத்தடுத்து செய்ய நேர்கிறது. அதிலும் இரண்டாவது கொலை அவசியமற்றது; ஒரு நியாயமும் இல்லாத கொலை. அதன் பிறகு அவன் மனநிலை எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பது நாவல் முழுக்க விவரிக்கப்படுகிறது. கொலை செய்வதற்கு முன்பே அவன் காய்ச்சல் கண்டவனாக இருக்கிறான். ஏறத்தாழ நாவல் முடியும் வரை அந்தக் காய்ச்சல் குறையவே இல்லை. அவன் குளித்தானா, சாப்பிட்டானா, உறங்கினானா? போன்ற பரிதவிப்புகளோடு நாவலில் வரும் அவனுடைய சகோதரி துனியா, தாய் பல்கேரியா, நண்பன் ரஸýமிகின், காதலி சோனியா போலவே நாமும் தவிக்கிறோம்.

ரஸ்கோல்னிகோவின் சகோதரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் சகோதரி வேலை பார்த்த இடத்தில் அவளுடைய எஜமானன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அன்னை பல்கேரியா தெரிவிக்கிறாள். தங்கைக்குப் பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் அல்ல. செல்வத்தின் திமிர் இருக்கிறது அவனிடம். போதாததற்கு ரஸ்கோல்னிகோவின் காதலி சோனியாவை விருந்து நடக்கும் இடத்தில் திருட்டுப்பட்டம் கட்டி அசிங்கப்படுத்துகிறான். இதுபோன்ற காரணங்களால் தன் நண்பன் ரஸýமிகினுக்குத் தங்கையை மணமுடிப்பது சரியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறான்... அல்லது ஏற்கெனவே எடுத்த முடிவில் தீர்மானமாகிறான்.

இதற்கிடையில் இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யாரென்று காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. ரஸ்கோல்னிகோவும் அப்படி விசாரிக்கப்படுபவர்களில் ஒருவனாகிறான். அவன் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை குற்றம் என்றால் என்ன என்பது பற்றி தீவிரமாக அலசுகிறது. அதையே ஆதாரமாக்கி விசாரணை முடுக்கி விடப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால் கொலையும்கூட குற்றமே இல்லை என்றெல்லாம் அந்த விசாரணையின்போது ரஸ்கோல்னிகோவ் வாதிடுகிறான். இதே சமயத்தில் இன்னொருவனையும் விசாரிக்கிறார்கள். விசாரணை முடிவுகளின்படி அவனே குற்றவாளி என்று முடிவு செய்யப்படும் நிலையில் ரஸ்கோல்னிகோவ் தான்தான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொள்ள விழைகிறான். காதலி சோனியாவிடமும் தன் முடிவைப் பற்றி சொல்கிறான்.

சோனியா பரிதாபத்துக்குரியவள். குடிகார தந்தையினால் நெருக்கடியில் தவிக்கும் குடும்பத்தைத் தாங்குவதற்காக மஞ்சள் அட்டை வாங்கியவள். மஞ்சள் அட்டை என்பது விபசாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை. தந்தையின் இரண்டாம் தாரத்தின் குழந்தைகளை கரையேற்றுவதற்காக அவள் அந்த முடிவை எடுக்கிறாள்.

ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் இணைவது நிராதரவான இரண்டு ஆத்மாக்களின் சங்கமமாக இருக்கிறது. சோனியாவின் தியாகத்தை உணர்ந்து கையறு நிலையில் போராடும் காதரீனா நாவலின் முக்கிய பாத்திரம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, கணவனையும் விபத்தில் பறிகொடுத்துவிட்டு அடுத்த வேலை உணவுக்கேபோராடும் அபலை பாத்திரம்.

துனியாவிடம் தவறாக நடக்க முற்படும் எஜமானன், தன் மனைவியின் சாவுக்கும் காரணமாக இருந்து, திருந்தாத மனநிலையில் சுற்றியலைந்து தனிமைத் தீவில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறக்கிறான்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு சைபீரியா சிறைக்குச் செல்லும் ரஸ்கோல்னிகோவுடன் சோனியாவும் செல்கிறாள். ஏழாண்டு சிறை தண்டனை. அதன் பிறகு அவர்கள் புதிய வாழ்வைத் தொடங்குகிறார்கள் என்பதாக கதை முடிகிறது.

நல்லவன் ஒருவன் கொலை செய்யும் மன நிலைக்குத் தள்ளப்படுவதும் தான் செய்த குற்றத்தை அவன் நியாயப்படுத்துவதும் குற்றத்தை மறைப்பதும் இறுதியில் ஒப்புதல் வாக்கு மூலம் தருவதும் கதையின் அடிநாதம்.

அநியாய வட்டி வாங்கும் சீமாட்டியை அவன் கொலை செய்கிறான். அந்த நேரத்தில் அதைப் பார்த்துவிடும் அவளுடைய சகோதரியும் ரஸ்கோல்னிகோவின் ஆயுதத்துக்குப் பலியாகிறாள். இந்த இரண்டு கொலைகளும் அவனுக்கு அவனே கொடுத்துக் கொண்ட தண்டனைகளாக தெரிகின்றன. தன் ஆன்மாவை தானே பலியிடுவதாக நினைக்கிறான். சமூகத்தின் அவலம், வறுமை எல்லாவற்றுக்கும் இந்தச் சமூகத்தில் இருப்பதன் காரணமாக தானும் உடந்தையாக இருப்பதாக கலங்குகிறான்.

இவ்வளவு சிக்கல்கள் கொண்ட 560 பக்க நாவலைத்தான் எம்.ஏ. சுசீலா நமக்குத் தமிழில் தந்திருக்கிறார்.
நாவலில் மிகவும் கடினமான விவாதங்கள் உள்ள இடத்தில் எல்லாம் சுசீலாவின் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

சோனியாவின் குடிகார தந்தையும் ரஸ்கோல்னிகோவும் உரையாடும் பகுதி முழுவதுமே என்னை மிகவும் கவர்ந்த பகுதி. குடும்பத்தைக் காப்பாற்ற வக்கில்லாத தந்தையின் பேச்சு. ஆனால் அவனுடைய கையறுநிலையை மிகப் பிரமாதமாக விவரிக்கும் பகுதி அது. காப்பாற்ற முடியாத தம் குடும்பத்தைப் பற்றிய அவனுடைய கவலைகள், அவர்கள் மீது அவன் வைத்திருக்கும் பாசம், இரண்டாவது மனைவி மீது அவன் காட்டும் மரியாதை, தன் முதல் தாரத்தின் குழந்தை விபசாரத்தில் ஈடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்கு கலங்குவது என்று அவன் மீது கோபம் ஏற்படுவதற்கு பதில் பரிதாபம் ஏற்படும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஒரு கேடுகெட்ட சமூக அமைப்பில் கேடுகெட்ட மனிதர்கள் மட்டுமே சுகமாக வாழ முடிகிறது என்கிற நிலை விளங்குகிறது.

காவல்துறையில் ரஸ்கோல்னிகோவை விசாரிக்கும் இடமும் தத்துவார்த்தமானது.

சமூகத்தின் கண்ணோட்டமும் சட்டத்தின் கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் அற்புதமான விவாத மேடை அது.

சகோதரியை மணக்க இருந்தவன் பணத் திமிரில் சொல்கிறான்:

சாக்கடையை அள்ளுவதும்கூட ஒரு கெüரவமான வேலைதான் அதில் என்ன இருக்கிறது என்கிறான்.
ரஸ்கோல்னிகோவ் சொல்கிறான்..""கெüரவமானது என்ற வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன? மனிதர்களின் செயல்பாடுகளை இப்படிப்பட்ட சொற்களால் வரையறுப்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் "கெüரவமான', "சிறப்பான' இப்படியெல்லாம் சொல்வது எல்லாமே அபத்தமானவைதான். அவை எல்லாமே அபத்தமானவைதான். எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட தப்பான எண்ணங்கள். இவற்றை நான் நிராகரிக்கவே விரும்புகிறேன். எதுவெல்லாம் மனித குலத்துக்குப் பயன்படுகிறதோ அது எல்லாமே கெüரவமானது. எனக்குத் தெரிந்திருக்கிற ஒரே வார்த்தை "பயன்பாடு' என்பது மட்டும்தான். ''சுசீலாவின் மொழி பெயர்ப்புக்கு ஏதாவது திருத்தம் சொல்ல வேண்டுமானால் இந்த ஒன்றைச் சொல்லலாம். "ஜுரவேகத்தில்' என்ற வார்த்தையை அவர் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவை "ஜுரத்தில்' என்ற அர்த்தப் பிரயோகத்திலேயே வருகின்றன. பொதுவாக ஜுரவேகம் என்பது வேகத்தைக் குறிப்பதற்கான வார்த்தைதான். அவனால் ஜுரவேகத்தினால் கண்ணைக்கூட திறக்க முடியவில்லை என்றோ, ஜுரவேகத்தில் தடுமாறினான் என்றோ வருகின்றன.

ருஷ்ய இலக்கியம் பெரும்பாலும் மொழி பெயர்ப்புகள் மூலமாகவே இந்தியாவை அடைந்தது; தமிழரும் அவற்றை மொழி பெயர்ப்பின் வாயிலாகத்தான் படித்தனர். ரா.கிருஷ்ணையா, நா.தர்மராசன், பூ. சோமசுந்தரம், ரகுநாதன், அ.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல சிறந்த மொழி பெயர்ப்பாளர்களால் ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள். அந்த வரிசையில் எம்.ஏ. சுசீலாவுக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு. அடுத்ததாக அவர் அவர் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை மொழி பெயர்த்து வருகிறார். அசடன் என்ற பெயரில் வெளிவர இருக்கும் அந்த நாவலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். சுமார் ஆயிரத்துச் சொச்சம் பக்கம் வரும் என்று அவர் சொன்னார். மொழி பெயர்க்கும் அந்தக் கரங்களுக்கு என் கோடி நன்றிகளை இப்போதே தெரிவிக்கிறேன்.

பாரதி புக் ஹவுஸ்,
டி- 28 மாநகராட்சி பேருந்து நிலையம்,
மதுரை- 625001.
போன்: 97893 36277


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</