வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

கோலாட்டம்

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com


தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கோலாட்டக் கலை நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளை கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப தட்டிக்கொண்டே ஆடுவது கோலாட்டம். கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்பு பெறுகிறது. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையின் பழமையை விளக்க புராணச் செய்தியன்று.

தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் லட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்த போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் கலையவில்லை.

பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்ததாக சொல்லும் ஒரு புராணக்கதை கோலாட்டத்தின் மேன்மையை விளக்குகிறது.

காணிக்காரர்கள் என்னும் ஆதியினம் கோலாட்டத்தை தங்கள் இனக்கலையாக கொண்டது. திருநெல்வேலியை ஒட்டிய பாபநாசம் மலைப்பகுதி, கன்னியாகுமரியை ஒட்டிய அருமனை உட்பகுதிகளில் வசிக்கும் காணிக்காரர்கள், வனத்துறை தரும் தொல்லையால் தங்கள் அடையாளங்களை இழந்து இப்போது நாகரீக சமூகத்தோடு பட்டும் படாமலும் கலந்து வாழ்கிறார்கள். பாபநாசம் மலையின் கரடுமுடரான பாதையை தாண்டிய உச்சிப்பகுதியில் கொஞ்சம் பேர் இன்னும் பழைய கலாச்சாரத்தை கைவிடாமல் வசிக்கிறார்கள். குச்சிக்கிழங்கு எனப்படுகிற மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்து, முற்றிலும் அது சார்ந்த உணவுப்பழக்கத்தையே கொண்டு வாழ்கிறார்கள்.

கேரளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிப்பதால், கேரள வாழ்வியில் கூறுகளே இவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கிறது. ஓணம் பண்டிகை, குலதெய்வங்களின் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளில் கோலாட்டம் நிகழ்த்துவார்கள்.

காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணி. ஓணம் பண்டிகை அன்று இவரது தலைமையில் ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். தொடக்கத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள்.

ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகை கலையாடல்கள் உண்டு. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன. காணிக்காரர்கள் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கழியாக பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது வனத்துறை நிர்ப்பந்தத்தால் காட்டுப்பகுதியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்த குச்சியையும் பயன்படுத்துகிறார்கள் காணிக்காரர்கள்.

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும்.  கோலாட்டத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.

காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், தங்கள் குல தெய்வங்களை பாடுபொருளாக வைத்து இசையுடன் ஆடுவர். பிற சமூகத்தினர் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்களை பாடுபொருளாக கொள்வார்கள். தொடக்கத்தில் உடுக்கக்கட்டை என்ற இசைக்கருவியை மட்டுமே கோலாட்டத்துக்கு பயன்படுத்தினர். பானை அல்லது மண்சட்டியில் உடுப்பின் தோலைக் கட்டி இந்த இசைக்கருவி செய்யப்படுகிறது. உடுக்கும் பயன்படுத்துவதுண்டு. தற்காலத்தில் செண்டை மேளம் பெருவாரியாக பயன்படுகிறது. நாஞ்சில் நாடு உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய தமிழ்ப்பகுதிகளில் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், திருமணமானவர்கள் வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சமயச்சடங்காக கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.

தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.



கோலாட்டம் - ஒளியும் ஒலியும்

Loading...

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</