வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

நரிகாரன் குருவிகாரன்

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

குறவர் இனத்தை சேர்ந்தவர்களின் மரபு ரீதியான கலை இது. எதிர்காலத்தை பற்றிய எந்த திட்டமிடலும் இல்லாத குறவர் இனத்தினர் தங்களின் அன்றாட உணவுத்தேவை தீர்ந்து விட்டால் மற்ற நேரங்களை களிப்பிலேயே கழிக்க நினைக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். நாளையைப் பற்றி யோசிக்காத இந்த சமூகம் மராட்டிய மன்னன் சிவாஜியின் படையில் இருந்து, பின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிப்போனவர்கள் என்றொரு வலுவான கருத்து நிலவுகிறது. உலகின் பல்வேறு ஆதி இனக்குழுக்கள் நாகரீக நீரோட்டத்தில் கலந்து விட்டாலும் இன்று வரை தங்கள் மரபுவழி வாழ்க்கை நழுவி விடாமல் அதே அழுக்கு வாழ்க்கையை கைகொண்டு வாழும் இந்த மக்கள் அசைவ விரும்பிகள்.

"வாக்ரி போலி" என்ற எழுத்து வடிவம் அற்ற மொழி பேசுபவர்கள். பார்க்க கட்டுப்பாடு இல்லாதவர்களாக தோன்றும் இவர்களின் வாழ்க்கைமுறை, நவீன சமூகத்துக்கு சவால்விடும் கட்டுப்பாடு மிக்கது. இவர்களின் வாழ்நிலைச்சூழல் இயற்கையோடு இரண்டறக் கலந்தது. மிக நுணுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட இம்மக்கள் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் மது அருந்தி விட்டு

ஆடுவதுண்டு. பிற்காலத்தில் இந்த கலையாடலில் சில கலப்புகள் நிகழ்ந்து வணிக வடிவெடுத்தது சோகம். இப்போது பெரும்பாலும் கரகாட்டத்தின் துணையாட்டமாக இக்கலை அறங்கேற்றப்படுகிறது. மதுவை தவிர்த்து விட்டு இக்கலையை நிகழ்த்த முடியாது என்பது நிதர்சனம்.

உடும்பு தோளால் ஆன கிஞ்சிரா அல்லது டால்டா டப்பாவை தட்டிக்கொண்டே ஆடுவது தான் நரிகாரன் குருவிகாரன் ஆட்டம். இதுவன்றி மாறுவேடம் புனைந்து பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தபடியும் ஆடுவதுண்டு. திருமணம், மறைவு, பூப்புனித சடங்குகள், பலர் கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களில் இக்கலை நடைபெறுவதுண்டு. இடைக்காலத்தில் நரிகாரன் குருவியாட்டம் ஆடுவதற்கென்று பல தொழில்முறை கலைஞர்கள் உருவாகினார்கள். தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கலைகளில் இதுவும் ஒன்று. பிற்காலத்தில் வடிவத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த கலையின் பெயரில் இன்றும் பெரும்பாலான குடும்பங்கள் உயிர் வளர்க்கின்றன. இக்கலைக்கென்று கொலைச்சிந்துகள் தவிர தனிப்பாடல்கள் எதுவும் இல்லை.

தென்னாற்காடு பகுதிகளில் இக்கலை இறப்பு சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறது. தற்போது தொழில்முறை நரிகாரன் குருவியாட்டத்தில் தலித் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

இந்த கலை நிகழ்வதற்கென்று கால வரையறைகள் கிடையாது. கோவிலின் முன்பகுதி அல்லது வலதுபுறத்தில் நிகழ்த்துவது வழக்கம். இடைக்காலத்தில் இந்த கலை விடலைகளுக்கு பாலியல் பயிற்றுவிப்பதற்கான கலையாக அரிதாரித்தது சுவாரஸ்யம். மீடியாக்கள், ஷகிலாக்களின் தாக்கம் இல்லாதிருந்த காலக்கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழியாக இக்கலையை மக்கள் பயன்படுத்தினர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் பாலியல் ரீதியான ஆட்ட நோக்கத்துடனே முதியவர்கள் முன்னிலையில் இக்கலைகள் நடைபெறும். விடலைப்பருவத்தில் இருக்கும் ஆண்களை பெரியவர்கள் இக்கலையாடலைப் பார்க்க அழைத்து வருவார்கள். பெண்களுக்கு அனுமதியில்லை. குறவனும், குருவிகாரன்யும் பாலியல் வார்த்தைகளை பரஸ்பரம் பேசியும், உறுப்புகளை தொட்டுக்காட்டியும் ஆடுவார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில் கரகாட்டத்தின் பின்னிரவு ஆட்டமாக இது குறுகிப் போய்விட்டது. நரிகாரன், குருவியாட்டத்தை ரசிப்பதற்கென்றே பெரும் திரளாக ஆண்கள் கூடி நிற்பதுண்டு. இந்த கலையாடலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் கரகாட்டம் தன் சுயரூபத்தை மாற்றிக்கொண்டு ஆபாசக்கூத்தாக மாற நேர்ந்தது. இந்த கலை கரகாட்டத்தின் துணையாட்டமாக மாற நேர்த்த தருணங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடினார்கள். பின்னாளில் தவிர்க்க இயலாமல் பெண்களும் பங்கேற்க நேர்ந்தது. இப்போது இக்கலையாடும் கலைஞர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பெருமளவு இருக்கிறார்கள். பெரும்பாலும் கூலி விவசாயிகளாக வாழும் இவர்கள் இரவுகளில் ஆட்டக்காரர்களாக அரிதாரம் பூசுகிறார்கள்.

இக்கலைஞர்கள் சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் ஒப்பனை செய்து கொள்வார்கள். நரிகாரன் கழுத்தில் பலவகை நிறங்களிலான பாசிகளை அணிந்திருப்பான். கோவணம் கட்டி இடுப்பில் துண்டை பட்டையாக கட்டியிருப்பான். காலில் சலங்கை, கையில் கிஞ்சிரா அல்லது டால்டா டப்பாவை வைத்திருப்பான். குருவிகாரன் தொடைக்கு மேல் கட்டம் போட்ட அடர்ந்த நிறமுள்ள பாவாடை, அதே நிறத்தில் ஜம்பர் அணிந்திருப்பாள். பாதி மார்பு வெளியில் தெரியும் வண்ணம் தைக்கப்பட்ட கவர்ச்சியான ஜாக்கெட் போட்டிருப்பாள். காலில் சலங்கை, கழுத்தில் பல வண்ண பாசிகள் அணிந்து, கரகாட்ட கலைஞரை ஒத்த அரிதாரம் பூசியிருப்பாள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விருப்பத்தின் பேரில் இந்த ஒப்பனை அவ்வப்போது மாறக்கூடும்.

கரகாட்டத்தைப் போலவே நையாண்டி இசைக்கருவிகள் தான் இக்கலைக்கும் பிரதான இசைக்கருவிகள். பாலியல் உணர்வே மிகுந்திருப்பதால் உக்கிரமான உச்ச ஆட்டத்திற்கு இதில் இடமில்லை.

இக்கலையாடலில், கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவுநிலை குறித்த வெளிப்படையான உரையாடல்கள், பாலியல் ரீதியான சமூக பிரச்னைகள் குறித்த விரசமான பாடல்கள் ஆகியவற்றை பாடி ஆடுவார்கள். இப்போது பல இடங்களில் இரட்டை அர்த்தமுள்ள திரைப்பட பாடல்களை ஆடி விரசம் பொங்க ஆடுவதுண்டு. மரபு ரீதியான ஆட்டக்காரர்கள் சித்தையன் கொலைச்சிந்து,

மம்பட்டியான கொலைசிந்து, மணிக்நரிகாரன் பாட்டு, மதுரைப் பள்ளி இடிந்த பாட்டு, அரியலூர் ரயில் விபத்துப்பாட்டு, ராமேஸ்வர புயல் விபத்துப்பாட்டு என நிகழ்ச்சிகளை தழுவி தாங்களே வார்த்தைகளை போட்டு நாட்டுப்புற வடிவில் பாடி ஆடுவதுண்டு.

இது தவிர பாடலுக்கு நடுவில் நரிகாரன், குருவிகாரன் இடையே நடக்கும் உரையாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு வார்த்தையுமே இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும்.

"உம் பேரு என்ன..?" என்று குருவிகாரன் கேட்க, நரிகாரன் 'நக்கீரன்' என்பான். என்ன "நக்குறியா.." என்று குருவிகாரன் பாவாடையை உயர்த்தி பகடி செய்வாள். "உம் ஊரு பேரு என்ன" என்று குருவிகாரன் கேட்க, "அதுவா, மொத எழுத்து 'பு', கடைசி எழுத்து 'டை' என்பான் நரிகாரன். 'என்னாது' என்று குருவிகாரன் தனது பாவாடையை உயர்த்திக்காட்ட, "அடச்சீ புதுக்கோட்டையின்னு சொல்ல வந்தேன் புள்ள.." என்பான் நரிகாரன். இப்படியாக நீளும் வார்த்தைகள் கடைசியில் உச்சம் பெற்று விரசமான ஆடல், பாடலில் முடியும்.

இக்கலையாடும் பெண்கள் பெரும்பாலும் தங்களை வெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. சமூகத்தில் மிகவும் கீழானவர்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். வெறும் சதைப்பிண்டமாக இவர்களை அணுகும் நிலை தான் உள்ளது. கலைக்காகவும், வயிற்றுக்காகவும் சொந்த வாழ்க்கையில் புறம் தள்ளப்பட்டவர்களாக இவர்களை அணுகுகிறது பெரும்பான்மை சமூகம். பலர் இதை தொழிலாகவே விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலர் பெரும் மனச்சுமையோடு வேறு வழியில்லாமல் இக்கலையில் ஒட்டியிருக்கிறார்கள். பாரம்பரியமாக நிகழும் நரிகாரன் குருவியாட்டத்துக்கு இப்போது வரவேற்பு இல்லை.

விரசம் விரும்பியே இவர்களை நிகழ்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் இந்நிகழ்ச்சியைப் பார்க்க வருவதில்லை. குழந்தைகளையும் வருவதற்கு பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. இக்கலை தொடர்பாக குறிப்பிடத்தகுந்த கலைஞர்கள் என்று எவரையும் முன்னிறுத்தவும் வாய்ப்பில்லை. காரணம் இது ஒரு இனக்கலை. அதை கையாளும் வெகுஜன சமூகம், ஆபாச அடையாளம் வழங்கி விட்டதால் சினிமாவை விட இக்கலைக்கு கிராமப்புறங்களில் வரவேற்பு இருக்கிறது. வயிறு வளர்க்கும் வழி என்ற மட்டிலும் பலர் இக்கலையில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி நடைபெறும் போது ஊரில் பிரச்னைகள் நடப்பதும், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதும் வாடிக்கை. பல சமயங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பெண்களை கிராமத்து இளைஞர்கள் தூக்கிச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் நடப்பதுண்டு. வறுமை காரணமாக பலர் இக்கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குருவிகாரன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்காக திட்டமிட்டு குறவனுக்கு மதுவை அளவுக்கு அதிகமாக ஊற்றி விடுவதும் கிராமங்களில் சர்வசாதாரணம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</