வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்

'ஓ'

அ.முத்துலிங்கம்

நான் காரை நிறுத்திய இடத்துக்குப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் நிறுத்தினார். நான் கதவை திறந்து இறங்கிய அதே சமயம் அவரும் இறங்கினார். நான் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கியதும் அவரும் நடந்தார். இருவரும் சமமான வேகத்தில் சமமான தூரத்தில் சமமான இடைவெளியில் நடந்தோம். வங்கியின் வாசலை அடைந்ததும் ரேஸ் குதிரை கடைசி மூச்சில் தலையை நீட்டுவதுபோல ஓர் அடி சட்டென்று முன்னே வைத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. பின்னால் நுழைந்தேன். வங்கியின் தானியங்கி மெசின் முன் நின்ற வரிசையில் அவர் நின்றார். அவருக்கு பின்னால் நான் நின்றேன். நின்ற இடத்திலேயே குதிரை குளம்பை தூக்கி தூக்கி அடிப்பதுபோல பூட்ஸ் காலை தூக்கி தூக்கி உதைத்து பனிச்சேற்றை அகற்றினார். சற்று நேரத்தில் அது கரைந்து தண்ணீராக உருகி என்னை நோக்கி வந்தது.

வங்கி மெசினை ஏற்கனவே ஓர் அகலமான கறுப்பு பெண்மணி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் அவர் இழுத்துவந்த சில்லு வைத்த உயரமான உடுப்பு பை ஒன்று நின்றது. தோளிலே மாட்டியிருந்த சிறிய கைப்பையிலிருந்து வங்கி அட்டையை எடுத்து மெசினில் செருகிவிட்டு ஏதோ ஏதோ பட்டன்களையெல்லாம் அமத்தினார். ஒன்றுமே அவர் விரும்பியமாதிரி நடக்கவில்லை. கைப்பையை திறந்து எதையோ சரிபார்த்தார். பின்னர் பட்டன்களை மீண்டும் அமுக்கினார். தலையை திருப்பாமல் பக்கத்தில் நிறுத்திய உயரமான உடுப்பு பையின் கைப்பிடியை தொட்டுப் பார்த்து அது அருகிலேயே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். மறுபடியும் எண்களைப் பதிந்து பட்டன்களை அமுக்கினார். கைப்பையை திறந்து ஒரு காசோலையை எடுத்து கடித உறையில் இட்டு துளையின் உள்ளே செலுத்தினார். மறுபடியும் தானங்களை அமத்தத் தொடங்கினார். இடைக்கிடை பக்கத்தில் நின்ற உடுப்பு பெட்டியை தொட்டுப்பார்த்தார். இவர் என்ன செய்கிறார் என்றே ஒருவருக்கும் புரியவில்லை. அந்த மெசினில் காணப்பட்ட அத்தனை பட்டன்களையும் ஒன்றுக்கு இரண்டுமுறை அமத்தியிருந்தார். பட்டன்களோடு விளையாடுவதற்கா இந்தப் பனிக்குளிரில் நீண்ட அங்கி அணிந்து வந்திருக்கிறார். காசு போடுகிறாரா அல்லது எடுக்கிறாரா?

இன்னும் யார் யாரோ பின்னுக்கு வந்து வரிசையில் நின்றார்கள். ஒவ்வொரு முறையும் கதவு திறக்கும்போது புதியவருடன் வரும் குளிர் காற்று வெப்பக் காற்றுடன் கலந்து அந்தக் கணமே இல்லாமல் ஆகியது. கடைசியாக வந்தவர் அலுவலக உடையணிந்து அதற்குமேல் தடிப்பான கம்பளி கோட் தரித்திருந்தார். பனித்துகள்கள் பூக்கள் தூவியதுபோல அவர் ஆடையை அலங்கரித்தன. அவருடைய பூட்சுக்குள் கால்கள் இருந்தன; பனியும் இருந்தது. முன்னுக்கு தள்ளி நிற்கும் அவருடைய தாடை மெல்லிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. கால்களைத் தூக்கி தூக்கி வைத்து நிலைகொள்ளாமல் ஒரு கையுறையை கழற்றி மற்றக் கையுறைமேல் அடித்துக்கொண்டு நின்றார்.

அன்று காலை தினசரிப் பேப்பரில் படித்தது நினைவுக்கு வந்தது. கனடாவின் வடதுருவ வட்டத்துக்குள் வாழும் மூதாட்டி ஒருவரிடம் நிருபர் ’இந்தப் பனிக்குளிரில் தினம் தினம் காலம் தள்ளும் உங்களுக்கு ஆகக்கூடிய கவலை என்ன?’ என்று கேட்கிறார். அந்த முதிய பெண் ஒரு செக்கண்ட் கூட எடுக்காமல் ’தினமும் என்னைப் பிடித்து ஆட்டும் பிரச்சினை இன்றைக்கு ரொட்டிக்கு பிசைந்த மா பொங்குமா என்பதுதான்’ என்று பதில் கூறுகிறார். அவர் அவருக்கு அவரது கவலை.

என்னுடைய கவலை எல்லாம் வங்கியின் ரகஸ்ய எண்ணை மறந்துவிடுவேனா என்பதுதான். ரகஸ்ய எண்ணை மறுபடியும் நினைவூட்டி வாய்க்குள் சொல்லி பார்த்துக்கொண்டேன். பல சமயம் மெசினுக்கு முன் நிற்கும்போது ரகஸ்ய எண் மறந்துவிடும். பழைய பாடல் மெட்டை மறந்ததுபோல எப்படி ஞாபமூட்டினாலும் திரும்பவும் வராது. ஆகவே திருப்பி திருப்பி எண்ணை மனதுக்குள் சொல்லிப் பழகிக்கொண்டேன்.

எனக்குப் பின்னர் இன்னும் நாலு புது ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள். இந்தப் பாரிய பெண்ணுக்கு இன்னும் காரியம் கைகூடவில்லை. முழு மெசினையும் மறைத்துக்கொண்டு நம்பிக்கை இழக்காமல் போராடினார். ஏதோ அன்றைய நாள் முழுவதும் மெசினை குத்தகைக்கு எடுத்துக்கொண்டதுபோல காரியங்கள் நடந்தேறின. எதிர்பாராத சமயத்தில் கடகடவென்று காசுத்தாள்கள் வெளியேவரும் இனிமையான ஒலி கேட்டது. பத்து பெருமூச்சுகள் ஒரே நேரத்தில் வெளிவந்தன. பின்னர் அட்டை எட்டிப் பார்க்கும் சத்தம். அதை எடுத்து கைப்பையை திறந்து உள்ளேவைத்து மூடினார். காசுத் தாள்களை ஒவ்வொன்றாகச் சிரித்தபடி எண்ணினார். முகத்தை சரி பாதியாகப் பிளக்கும் சிரிப்பு. எதையோ வெற்றிகொண்டுவிட்ட களிப்பு. மறுபடியும் காசை எண்ணி சரிபார்த்தார். மெசினில் நீட்டிக்கொண்டு நின்ற ரசீதை பிடுங்கினார். கைப்பையை திறந்து காசை உள்ளே வைத்துவிட்டு அதைத் தோளிலே கொழுவியபடி பக்கத்திலே நின்ற உடுப்பு பெட்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டார். சற்று நின்று தன் தொப்பியை தூக்கி உள்ளே பார்த்துவிட்டு மீண்டும் அணிந்தார். தொப்பியை ஏன் தூக்கினார், அதற்குள் என்ன பார்த்தார் என்பது மர்மமாகவே காப்பாற்றப்பட்டது. ஒரு போர்க்கப்பல் அகன்றதுபோல இடம் மிஞ்சியது.

ஒரு புது நிமிடம் ஆரம்பமாகியது. எனக்கு முன்னால் ஓடிவந்த பெண்ணின் முறை. பளபளவென்ற கறுப்பு ஜாக்கெட் அணிந்திருந்த உயரமான பெண் அவர். நீண்டமுடி சுருண்டு சுருண்டு விழுந்து முகத்தில் பாதியை மறைத்தது. வட்டமான உதடுகள். மாணிக்கவாசகர் ’கிஞ்சுக வாயவள்’ என்று வர்ணிப்பார். அது இப்படித்தானிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கையுறையைக் கழற்றிவிட்டு கைப்பையை திறந்து வங்கி அட்டையை வெளியே எடுத்தார். பச்சை நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள். அளந்து வைத்ததுபோல வேகமான கை அசைவுகளைப் பார்த்தபோது அவர் இதை 1000 தடவை செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. பட்டன்களை அமத்தும்போது எனக்கும் அவருக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்தி மெசினுக்கு அண்மையாகப் போய் ஒட்டிக்கொண்டு நின்றார். ரகஸ்ய எண்ணை பதியமுன்னர் என்னைக் கடைக்கண்ணால் திரும்பி பார்த்துவிட்டு கைகளால் மறைத்துக்கொண்டு பதிந்தார். அடுத்த நிமிடமே காசுத் தாள்கள் வந்து விழுந்தன. அவற்றை பொறுக்கி எண்ணாமலே கைப்பையினுள் வைத்து பூட்டினார். அதே சமையம் கையுறையை வெளியே எடுத்து அணிந்துகொண்டு புறப்பட்டார். தலைகளைத் திருப்பி பார்க்க வைக்கும் அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் அவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது.

இப்பொழுது என்னுடைய முறை. ரகஸ்ய எண்ணை மீண்டும் வாய்க்குள் முணுமுணுத்தேன். மெசினை அணுகி பெண் நின்ற அதே இடத்தில் நின்றதும் அவர் விட்டுப்போன சுகந்தம் இன்னும் மிச்சமிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. கையுறையை கழற்றிவிட்டு என்னுடைய வங்கி அட்டையை நீள் சதுர துளைக்குள் நுழைக்க முயன்றேன். முடியவில்லை. ஏற்கனவே அதனுள் ஓர் அட்டை இருந்தது. நீண்டமுடிப் பெண் மறந்துவிட்டார். நான் அவருடைய சிவப்பு நிற ஏ.டி.எம் அட்டையை இழுத்தெடுத்துக்கொண்டு அவர் போன திசையில் வேகமாக ஓடினேன். அந்தப் பெண் காருக்குள் ஏறி அமர்ந்து அதை இயக்கிவிட்டார். கார் மெல்லிய உறுமலுடன் பாய ஆயத்தமாக நின்றது. கார் எஞ்சினில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஒரு விரலை மடித்து கண்ணாடியை தட்டியதும் அவர் அதை இறக்கினார். மறந்துபோய் விட்டு வந்த வங்கி அட்டையை அவரிடம் நீட்டினேன். அவர் கிஞ்சுக வாயை திறந்து ‘ஓ’ என்றார். ’நன்றி’ என்ற வார்த்தை வரும் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. கார் கண்ணாடி தண்ணீர் மட்டம் உயர்வதுபோல உயர்ந்து மூடியது.

நான் திரும்பியபோது இன்னும் இரண்டு பேர் வரிசையில் சேர்ந்து விட்டார்கள். நான் கடைசியில் போய் நின்றேன். ரகஸ்ய எண்ணை மீண்டும் ஒருமுறை மனதுக்குள் சொல்லி சரிபார்த்துக்கொண்டேன்.

அ.முத்துலிங்கம்

http://www.amuttu.net/


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</