வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


சாருவுடன் படிமை மாணவர்கள் சந்திப்பு - 2

செந்தூரன்  


மெதுவாய் படகில் ஏறி அமர்ந்துகொண்டோம். மீண்டும் படகு அசைய ஆரம்பித்திருந்தது. சாரு அமைதியாய் நீரையே பார்த்துக்கொண்டிருந்தார். நீரின் வாசம் மண் மணம் போன்று வந்துகொண்டிருந்தது. மெதுவாய் அனைவரும் சாருவின் அருகில் ஒன்றினாற்போல் அமர்ந்துகொண்டோம். மீண்டும் பேச ஆரம்பித்தோம்.

ஆங்கில இலக்கியத்தின் அறிமுகமாய் எதை எடுத்துகொள்ளலாம்?

Non-fiction புத்தகங்களை எடுத்துக்கொண்டோமானால் நான் என் கட்டுரைகளில் அடிக்கடி குறித்துக் காட்டிக்கொண்டிருப்பேன். எழுத்தாளர்களின் பெயரை எடுத்துக்கொள்ளலாம்.புதிதாக படிக்க வருபவர்கள் மார்கியோ வர்கஸ் லோசா படிக்கலாம். இவர் பெரு நாட்டைச் சேர்ந்தவர். இந்த எழுத்தாளர் மிகவும் சுவாரஷ்யமாக கதைகளை எழுதக்கூடியவர். போன வருடமோ அதற்கு முந்தைய வருடமோ நோபல் விருது கொடுக்கபட்டது. லோசாவின் புத்தகங்கள் இங்கேயே கிடைக்ககூடியது. தாகுர் ஞ்சலோன் பற்றி அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன்.அவர் ஒரு மொராக்கன் எழுத்தாளர். அவர் புத்தகங்களும் கிடைக்கும். அதேபோன்று ப்ரிட்டிஷ் எழுத்தாளர் ரோவால்ட் டார்க். இவர் சிறுவர்களுக்காகவும் எழுதுவார், வயது வந்தவர்களுக்காகவும் எழுதுவார். சிறுவர்களுக்கான கதைகள் அருமையான கதைகள். மேற்குலக பாடத்திட்டத்தின்படி இந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். நம் பாடத்திட்டத்தினுள் இது இல்லை. அங்கே, இங்கே எனத்தேடி கலந்து கேட்டுதான் படிக்க வேண்டியிருக்கிறது.

ஜெயமோகன் அவர் இந்துத்துவம் சார்ந்து இருப்பதாலா, இல்லை இலக்கியம் சார்ந்து இருப்பதாலா உங்கள எதிர் முனையில் அமர்ந்திருக்கிறார்? அவர் மீதான உங்கள் கோபத்திற்கு என்ன காரணம்?

பதில்: அவர் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. நான் கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். அது தற்காலிகமான கோபம் மட்டுமே. அவர் என் சார்ந்த விடயங்களில் ஏதாவது ஒன்றை கொழுத்தி போட்டால் அதற்கான பதிலாய் மட்டுமே இருக்கும். அதை கோபப்படும் பொருட்டாய் நான் பார்ப்பதில்லை. அவர் ஒரு வேறுபாட்டில் சாரு புத்தகங்கள் படிப்பதில்லை என்று கூறினாறேயானால் அதற்கு காட்டமாய் ஒரு பதில் அவ்வளவுதான். அவருக்கு எப்படி தெரியும் நான் படிக்கிறேனா? இல்லையா? என. மற்றபடி ஒருவர் ஹிந்துதுவாவில் இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் கிடையாது. அசோக மித்ரன் ஹிந்துத்துவம் சார்ந்தவர்தான். அதற்கு நமக்கு எதுவும் இல்லை. இங்கே எல்லோரும் ஏதோ ஒன்றில் சார்ந்துதான் இருக்கிறார்கள். நானும் கொஞ்ச நாள் நாஸ்திகனாக இருந்தேன். என் வீட்டில் சாமி கும்பிடுவதற்கு எந்த எதிர்ப்பும் காண்பித்ததில்லை. அது அவர்களின் விருப்பம், மணம் சார்ந்தது. ஆனால் அவரின் எழுத்து எனக்கு மிகவும் சலிப்புத்தன்மையை ஏற்படுத்த கூடியது. அதனாலேயே நான் அவர் எழுத்தை படிப்பதில்லை. அவரின் "விஷ்ணுபுரம்" மட்டும்தான் படித்திருக்கிறேன். அதன் பிறகு அவர் எழுத்தை வாழ் நாளில் படிக்க கூடாது என முடிவு செய்திருக்கிறேன். என் வாழ்நாளில் அவ்வளவு சலிப்பையும், அலுப்புதன்மையையும் தரக்கூடிய எழுத்தை நான் படித்ததில்லை.

அதை பற்றி எனக்கு எந்த புகாரும் கிடையாது. எல்லோரும் சுவாரஷ்யமாக எழுத வேண்டும் என்று அவசியம் இருக்கிறதா என்ன? ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னம் கூறினேனே லோசா அவரே ஒரு வலதுசாரிதான். ஹிந்துத்துவத்தை விட வலதுசாரியாய் இருப்பதுதான் பயங்கரமானதுதான். எனக்கு அதெல்லாம் பிரச்னை கிடையாது. அவரது எழுத்துதான் பிரச்சனை. ஏனென்றால் நிறைய எழுத்தாளர்கள் ஹிட்லரையே பாராட்டியிருக்கிறார்கள். அது அவரவரின் அரசியல் சிந்தனைகளின் அடிப்படையே. இப்போது அப்படி கிடையாது. எல்லோருக்கும் சரியான அரசியல் சிந்தனை இருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் கிடையாது. என்னிடமும் சரியில்லாத அரசியல் சிந்தனைகள் இருக்கலாம். நான் அவரின் பிழைப்புவாதத்தைதான் அதிகமாய் தாக்குகிறேன். அவர் ஒன்றும் வணிகரீதியான எழுத்தாளன் கிடையாது. பொதுவாக ஒரு சினிமா விழா மேடைகளில் "நான் அவர் காலில் விழுவேன், இவர் காலில் விழுவேன்" என்று கூறுகிறார். அவர்களெல்லாம் உன் காலில் விழவேண்டியவர்கள். நீ ஏன் அவர்கள் காலில் விழவேண்டும். நான் இப்படி பேசுகிறேன் என்றால் நான் ஜெயமோகனை மதிக்கிறேன் என்றுதான் அர்த்தம். ஆதாயத்திற்காக அடுத்தவனை ஆதரித்து பேசுவது என்பதுதான் பிழைப்பு வாதம்.

இதைத்தான் நான் எதிர்க்கிறேன். எழுத்தாளர்கள் கண்ட கண்ட முட்டாள்களிடம் குமாஸ்தா வேலை பார்கவேண்டியிருக்கிறது. சினிமாக்காரன் ஒரே படத்தில் ஐந்து கோடி சம்பளம் வாங்குகிறான். எழுத்தாளன் கோடியை பார்க்க முடியாது என்று வையுங்கள். ஆனால் பத்தாயிரம் வருமானத்திற்காக அவலமான வேலைகள் பார்க்கவேண்டியுள்ளது. அவன் இந்த ஹாலிவுட்ல இருந்து சீன் திருடுரானுங்க, இசையை திருடுகிறார்கள், திருடிவிட்டு பத்தொன்பது வயது பையன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறான் இவர்களின் காலில் இந்த எழுத்தாளன் விழ வேண்டுமா?. நம்ம ஜெயமோகன் தரத்தில் உள்ளவர்கள், மூத்த எழுத்தாளன் இதை செய்ய வேண்டியதில்லை. அப்படியென்ன நம் தன்மானத்தை இழந்து பிழைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இது ஜெயமோகன் மேல் உள்ள கோபம் இல்லை அன்பு. பிறகு நான் ஜெயமோகனின் புத்தகத்தை கிழித்துப்போட்டேன் என்கிற பிரச்னை ஒருவனை நொண்டி, நொண்டி என்று தன் விமர்சனத்தில் நூறு தடவை எழுதுகிறார். இதை படிக்கும்போது நமக்கு எரிச்சல் வருகிறது. நீ என்னத்த படிச்சு கிழிச்ச? உலக இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என்று. ஒருத்தரின் உடல் ஊனத்தை கிண்டல் செய்வதானால் ஏன் இலக்கியவாதியாய் இருக்கிறாய்? ரௌடியாய் இருந்திருக்க வேண்டியதுதானே. ஒன்றுமே தெரியாத பேட்டை ரௌடிதான் அப்படி பேசுவான். இப்படி இருந்தால் எரிச்சல் வருமா? இல்லையா? மற்றபடி அவர் எழுத்து எனக்கு பிடிக்கவில்லை. என் எழுத்து அவருக்கு பிடிக்கவில்லை என்பதில் எந்த பிரச்னையும் கிடையாது.

ஜெயமோகன் பெரியாரையும், பொதுவுடைமை கொள்கைகளையும் சிதைத்து ஜாதி பிரிவினையை தூக்கிபிடித்து எழுதிக்கொண்டிருக்கிறார் இந்த ரீதியில் அவரின் கருத்தில் எதிர்ப்பு உங்களுக்கு இல்லையா?

பொதுவாக துஷ்டர்களை பற்றி அதிகம் பேசக்கூடாது. இருந்தும் அவரின் எழுத்துகளை படித்து கொண்டாடக்கூடியவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இது இலக்கிய சூழலை நஞ்சூட்டக்கூடியதாய் இருக்கும். ஏற்கனவே நஞ்சூட்டி ஆகிவிட்டது. எவ்வளவோ நஞ்சுகள் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்றாய் இருந்துவிட்டு போகட்டும். சினிமா ஒரு நஞ்சு, அரசியல், இலக்கியத்தில் இது. அவ்வளவுதான். இதைப்பற்றி நான் அதிகமாய் யோசிப்பதில்லை. அதேபோல் ஜெயமோகனுக்குத்தான் ஆதரவு அதிகம். அவராக தனிப்பட்ட முறையில தாக்கமாட்டார். பாதுகாப்பாய் இருக்கலாம். என்னிடம் அந்த பாதுகாப்பு கிடையாது. நீங்கள் கேவலமான கவிதை எழுதினால் கன்னா பின்னாவென்று கிழிப்பேன். மோசமான படம் எடுத்தாலும் அப்படிதான். அதனால் என்னிடம் நீங்கள் இருந்தால் ஆதாயமும் இல்லை,பாதுகாப்பும் இல்லை. அவர் திட்டமாட்டார், உலகப்படம் என்பார். அவன் இவன் போன்ற குப்பை எடுத்தாலும் பாலாவை திட்டமாட்டார். அவருக்கு பிடிக்கவில்லை என்று அதிகபட்சம் கூறுவார் என்று நினைக்கிறேன். ஆதாயங்களுக்காக செயல்பட்டுக் கொண்டே இருப்பார்.

நான் படித்த ஜீரோ டிகிரி, ஃபான்சி பனியன் இது இரண்டுமே ஒரே மாதிரியான கட்டமைப்பிலேயே இருக்கிறது. இதை சரியாய் உள்வாங்குவது எப்படி?

முதலில் ஏன் அனைத்து விடயங்களும் உள்வாங்க படவேண்டும் என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒருவரிடம் பழகுகிறோம் அவர்களையே நாம் முற்றுமுழுதாய் உள்வாங்குகிறோமா தெரியாது. அப்படி இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் புத்தகம் என்பது வெறும் ஒருவழி மட்டும்தான் அது கொடுப்பதை மட்டும்தான் வாங்கிக்கொள்ள முடியும். அதை வைத்து நாம்தான் வாங்கிக் கொள்ளவேண்டும். அதை உள்வாங்கியே ஆக வேண்டுமென்ற தேவை இருப்பதாக தோன்றவில்லை. அது இப்போது புரியாவிட்டாலும் காலம் செல்ல செல்ல பிடிபடலாம். எனக்கு இரண்டு மனைவியும், மூன்று அந்தரங்க தோழிகளையும் கொண்ட ஒருவனை தெரியும். அவனை பார்க்கும்போதெல்லாம் இவன் எவ்வளவு கொடுத்துவைத்தவன் என்று தோன்றும். இன்னொருவன் ஸ்ரீராமன் போன்றவன். எனக்கு புரியவில்லை இவன் இப்படி... அவன் அப்படி... இவனிடம் கேட்டேன் அதற்கு இவன், நான் அவனைவிட பெரிய பொறுக்கியாய் இருந்தேன். ஆனால் இந்த பெண் என் கோப்பையை நிறைத்துவிட்டாள். நான் நிறைந்துவிட்டேன். இவள் என் காதலி அல்ல. என் குரு, அவளை விட வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்க்காத சக்தியை அளித்துவிட்டாள். எனக்கு ஒரு எல்லையை கொடுத்துவிட்டாள் என்றான். இப்போது இந்த ஸ்ரீராமன் அவனை பார்த்து பரிதாபபடுகிறான். நீ இன்னும் முழுமையடையவில்லையா? என. ஒரு எல்லை நமக்கு எப்பொழுது கிடைக்கும் என யாரும் நிர்ணயிக்க முடியாது.

தேகம் நாவல் முழுதாய் உடல் சிதைவைப் பற்றியே இருப்பது ஏன்?

நாம் இப்பொழுது நடுத்தர வர்க்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உலகிலேயே உடல் சித்திரவதைக்கு ஆளானவர்கள் அதிகம் பேர். ஒரு போர் நடக்கும்போது அங்கே பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் பேர் மிக இலகுவாய் இறந்து விடுகின்றனர். குஜராத், திபெத் இங்கெல்லாம் தொடர்ந்து கொத்து கொத்தாய் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதைதவிர தனிமனித வன்முறை அதிகமாய் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு மனித உடலை இன்னொரு மனிதன் சிதைப்பதென்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே உள்ளது. ஜீரோ டிகிரியிலும் ஓர் இடத்தில் ருவாண்டா பற்றி வரும். ஆயுதங்களுக்கு செலவு செய்யும் பணம்தான் உலகிலேயே அதிகம். இங்கே தயாரிக்ககூடிய வெடிகுண்டுகள் இந்த உலகத்தை போன்ற இருநூறு, முன்னூறு உலகங்களை அழிக்கவல்லது. இது தெரிந்தும் நாம் இதை தயாரித்து வைத்திருக்கிறோம். இதெல்லாம் எதற்காக. ஓர் நாட்டில் ராணுவம் என்பது எதற்காக இருக்கவேண்டும்? ராணுவ வீரன் என்ன செய்கிறான்? தேசத்தை பாதுகாக்கிறான் எனில் என்ன அர்த்தம்? எதிர் வீரனை சுடுகிறான் என்றுதானே அர்த்தம். அவனிடமிருந்து இந்த வீரன் தம்முடைய நிலத்தை அபகரிப்பதை தடுக்கிறான். ஏன் அவன் அடுத்தவன் நிலத்தை அபகரிக்கிறான்? அந்த மனம் ஏன் வருகிறது? அந்த நிலம் இல்லையென்றால் அவனை கொன்று அந்த நிலத்தை பிடுங்கிக்கொள்கிறான். ஒரு குழந்தையின் காதில் இருக்ககூடிய தோடு தேவைப்படுமானால் அவள் காதை அறுத்து அதை எடுத்துகொள்கிறான். மனித மனதின் அடிப்படையிலேயே ஒரு குரூரம் பதிவடைந்து விட்டது. நம் கல்வி முறைகளிலேயே அந்த குரூரம் கற்பிதம் செய்யபடுகிறது. ஏன் விட்டுகொடுப்புகள் இல்லாமல் போகிறது? நாம் தேசப்பற்று என்கிறோமே அது என்ன?

அதில் எவ்வளவு வன்மம் இருக்கிறது. நம் வன்மத்தை தீர்கதானே ராணுவத்தை வைத்திருக்கிறோம். துப்பாக்கி என்பது என்ன? அதான் வேலை என்ன? உயிரை எடுப்பது மட்டுமே. ஒரு உயிர் உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவா என்ன? அது எவ்வளவுகாலம் போற்றி பாதுகாக்கவேண்டும். அதற்கும் உணர்வுகள் உண்டு. அழுகை, கண்ணீர், சந்தோசம், அற்புதம், பார்வை இந்த உனார்வைக்கொண்ட ஒரு உயிரை எப்படி உன்னால் கொள்ளமுடிகிறது. இப்படி உயிரை எடுக்ககூடிய ஒரு கருவியை தேசபக்தி எனும் பெயரில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். அந்த மாதிரியான விடயங்களையே என் நாவல்கள் தீர்த்துவைக்கிறது என்று நினைக்கிறேன். பிறகு நீங்கள் மாற்று சினிமா பற்றி பார்க்க போகிறீர்கள்.

கலையை யாராலும் உங்களுக்கு கற்று தரமுடியாது. நீங்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை யாராலும் கற்று தர முடியும்.

கேள்வி: கேரளாவில் முற்போக்கான இலக்கியங்கள் தெரிந்திருக்கிறது. இந்த கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால். ஆனால் அங்கும் எல்லாமே ஜாதி என்பதன் பின் ஒளிந்துதான் வேலை பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் ஜெயமோகன் பெரியாரை எதிர்கிறார். ஆனால் பெரியாரின் வீரியம் தமிழ்நாட்டில் அதிகமாய் வீசப்பட்ட ஒன்று இவர்களின் பார்வையில் விலகி உங்களின் பார்வையில் அவரை எப்படி பார்ப்பது?

பதில்: கேரளாவில் அதிகமான சமூக மன்றங்களின் ஆதிக்கம் இருந்தாலும் ஜாதி இன்னும் மாற்றம் பெறவில்லை. ஆனால் கிராமங்களில் இங்கு நடக்ககூடியதான தீண்டாமை போன்ற கொடுமைகள் அங்கு நடக்கின்றனவா என்றால் இந்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். தாழ்த்தபட்டவர் கோவிலுக்குள் போக முடியாது. இரட்டை குவளை முறை ஆகியன் இங்கு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தீண்டாமை எனும் பெயரில் இதைவிட அதிகமான விடயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இது பெருநகரங்களில் அது கண்முன் தெரிவதில்லை. ஏதாவது கலவரம் என்றால் மட்டுமே அது தெரிய வருகிறது. ஆனாலும் இங்கதான் இந்த ஜாதி என்பது அதிகம் போற்றப்படும் ஒன்றாக இருக்கிறது. இருந்தும் பெரியாரின் நகர்வு என்பது சிறு நகரங்களில் மாற்றம் ஏற்படுத்தியது. ஜாதியை சொல்வதே அசிங்கம் என்ற நிலையை பெரியார் உருவாக்கியிருந்தார். அது ஒரு பெரிய பணி. இதை நீங்கள் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு பார்த்தால் புரியாது. வடமாநிலத்தில் இருந்துகொண்டு பாருங்கள் அப்போதுதான் புரியும். ஆனாலும் நம் எழுத்தாளர்கள் பலர் அசோக மித்திரன் உள்பட பலர் வேற்று மதத்தையும் ஜாதியையும் கிண்டல் செய்யும் போக்கினை வைத்திருந்தார்கள். இவர்களே இப்படி இருந்தால் மற்றவர் என்ன செய்வார்?

ஒவொன்றாய் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்களில் விடியல் மட்டுமேயும், இருமை மட்டுமேயும் வந்து கொண்டிருந்தால் அது சரியான இயற்கையாய் இருந்துவிடாது. விடியலை புரிந்து கொண்டவர்களுக்கு விடியல் இனிது. இருளை உணர்ந்தவனுக்கு அவன் ஒரு தோழன். இதில் யாருமே தவறானவர்களல்ல. மெதுவாய் ஐந்து மணியை தாண்டியிருக்கவேண்டும். படகு விரைவாய் கரை திரும்புகிறது. எமக்கு மட்டுதான் நேரம் தெரியுமா என்ன? படகு ஓட்டியவர் சிரித்துக்கொண்டே கரையை ஒட்டி படகின் மோட்டாரை நிறுத்தியிருந்தார். மெதுவாய் ஒரு சிலர்மட்டும் கரை ஏறியிருந்தோம் சிலர் குழப்பமாகவே கரையை பார்த்துக்கொண்டிருந்தனர். சாரு கரை கண்டவர் என்பதை நிருபிப்பது போல் மெதுவாய் நகர ஆரம்பித்தார். சாருவுடன் ஒரு புகைப்படம், அன்றைய நாளிலிருந்து விடைபெற்றுக்கொண்டது. எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் சம்பந்தமில்லை. அவன் என்ன மனநிலையில் எழுதுகிறான் என்பதை புரிதுகொண்டாலே அவன் எழுத்தை தெரிந்து கொண்டுவிடலாம். இதுதான் சாரு. இப்படிதான் எம் கண்களுக்கு தெரிந்தார். சாரு என்றால் இனிமை என்றுகூட பொருள் பதித்துவிடலாம் என்றே தோன்றிற்று.


நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/kGlViK


தொகுப்பு: செந்தூரன்
படங்கள்: சோமசுந்தரம்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </