வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
கல்யாண்ஜி.
 
 
 
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள் TS ஈன்றுப் புறந்தருதல் கவிதைகள் வாயில்

தூங்கும் முகத்தின் மேல்..


கல்யாண்ஜி.  

இலக்கியா இன்னும் நேற்றிரவில் இருக்கிறாள்.
தூக்கத்திற்கு முந்திய அம்மாவின் முத்தத்துடன்.
இன்றைக்குப் பூத்திருக்கும் வேப்பம் பூக்களை,
கூவிய அக்காக் குருவியை,
உலா வந்த உறக்கச் சடைவிலும்
கடைக் கண்ணால் சொக்கனை வீழ்த்தும்
மீனாட்சியின் தோள்க் கிளியை,
மறுவாக்குப் பதிவுக்கான
தொகுதிகளின் நாளிதழ் உச்சரிப்பை
அறிய மாட்டாள்.
கண்டுகொண்டிருந்த கனவின்
பாதியைப் படுக்கையிலும்
மறுபாதியைக் கருப்புக் காப்பி அருந்தும்
அம்மாவின் மடியிலும் விட்டிருக்கிறாள்.
கட்டில் விரிப்பின் வரையமுடியாத
கசங்கல்களுக்குள்
பறக்கும் குதிரையின் லாயங்களுண்டாக்கி
அம்மாவின் முகத்திலிருக்கும்
தண்ணீர்த் தொட்டிகளை நிரப்ப வரும்
அவளுடைய உறக்கம் நீளும் விழிகளில்
கோடை விடுமுறையின் இசை நிரம்பியிருக்கிறது.
அம்மாவின் மடியைப் போதுமான அளவுக்கு
நுகர்ந்துவிட்ட கிறக்கத்தில் மறுபடியும்
மூன்று முத்துக் கொலுசொலிக்க
இலக்கியா படுக்கைக்குத் திரும்புகையில்
அவளுடைய கலைந்தசையும் கூந்தலில்
இந்த தினத்தின் வெயில் அப்புகிறது.
வாசித்து முடித்த முன்பக்கத்தின்
கடைசி வரியென மீண்டும் அவள்
படுத்துக் கொள்கிறாள் கட்டிலில்.
பறக்கும் குதிரையின் கனைப்புச் சத்தத்தில்
சிரித்த முகத்தவளாகி இலக்கியாஅம்மா
தன்னிடமிருந்த பாதிக்கனவை
வீசுகிறார் கட்டிலின் திசையில்.
படுக்கை விரிப்பில் இப்போது
எந்தச் சுருக்கமும் இல்லை
தூங்கும் முகத்தின் மேல் உதிர்ந்திருக்கும்
ஒரு சிரிப்பைத் தவிர.

---------------------------------------------------------------------------------------------------------------

மழை வருவது போலிருந்த,
மழை வராது போலிருக்கிற
அதே வானத்தில்
அதே பறவை
பறந்துகொண்டிருக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------

செம்மண் தூவிய முதுகுடன்
தேயிலைத் தோட்டத்தில் நடக்கிறது
யானைக் குடும்பம்.
தாளைத் தேர்ந்தெடுத்துத்
தின்கிறது தாய்ப் பசு
வாழை மட்டையை விட்டுவிட்டு.
கணினி மையத்தில்
வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு
கரமைதுனம் செய்கிறான் பதினாறான்.
காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள்
காக்கி வன்புணர்வில் சிதைந்த
கருப்புப் பெண்.
ஒரு குத்து மணல் இல்லை
ஓடுகிற ஆற்றில்.
எந்தப் பழத்துக்கும் விதைகிடையாது
இப்போதெல்லாம்.
பிட்ஸா போடுங்க என்கிறான்
பிச்சைக்காரன்.
பார் வசதி உண்டு
பார்முழுதும் டாஸ் மாக்கில்.
எப்படியும் போகிறது
ஏறு பை பாஸ் ரைடரில்.
மரமற்ற நாற்கரச் சாலையில்
மதுரை போக
இரண்டே மணி நேரம்தான் .

---------------------------------------------------------------------------------------------------------------

இது அறையென்றே
எனக்குச் சொல்லப் பட்டது
சுவர்களற்று அது திறந்தே கிடப்பினும்.
வேறொரு திசையிலுதித்த நிலா
ஐஸ் கட்டி உறைவுடன்
இருளின் குவளைக்குள் மிதந்தது.
இச்சை மிகுந்தலையும் ஒரு
வனமிருகத்தின் பதுங்கு புதரில்
தப்பித்துச் செல்லும் காற்றின் ஆவி
தாறுமாறாக அலைந்தது.
மலைச் சருகுகளின் தீ ஓடை
பாயும் ஈசானிய மூலை.
இடவலமாக விரித்தசைத்துப் பார்த்த
என் தற்காலிகச் சிறகுகள் மேலொரு
உள்ளாடை விழுந்தது கண்டு
திடுக்கிட்டு வெளியேறியது
ஒன்றிரண்டு மினுக்கட்டாம் பூச்சிகள்.
நிர்வாணத்தின் பாடலில் விம்மி
நூற்றுச் சுக்கலில் மினுங்கியது
குளியலறைக் கண்ணாடி.
மூன்று பக்கங்களும் சிவப்புச் சாயமேற்ற
விவிலியப் புத்தகமாகத்
தன்னைத் தானே
புரட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
ஒரு மா பெரும் துரோகத்தின் இழையில்
தொங்கி இறங்கும் எட்டுக்கால் பூச்சியின்
வலுத்த உதைகளில் என்
சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கசிந்தது.
இது அறையென்று சொல்லப் பட்டவாறே
இது அறையென்றே நான்
நம்பத் துவங்கினேன்.
---------------------------------------------------------------------------------------------------------------

மேற்குறிப்புகள்:

கவிதைகளோடு அந்தந்த எழுத்தாளர்களின் கவிதைகள் பற்றிய ஒரு திறனாய்வை, அல்லது கவிஞர்கள் பற்றிய ஒரு கவி அறிமுகத்தை இந்தப் பகுதியுடன் கொடுத்தால் புதிதாக படிக்க வரும் வாசகருக்கு அந்தக் கவி ஆளுமை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டுரை எழுதியவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்தப் பகுதி நீக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------

என் சக பயணிகள் - 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் - ச.தமிழ்ச்செல்வன்

http://www.keetru.com/
index.php?option=com_content&view=
article&id=11653&Itemid=153


இதோ எனக்குச் சற்று முன்னாலும் காலத்தால் மட்டுமே எனக்குச் சற்றுப் பின்னாலும் என்னோடு இன்று நடந்து வரும் சக பயணிகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுபோல மனதுக்குப் பிடித்த காரியம் வேறென்ன உண்டு?

கல்யாண்ஜி ஒரு கவிஞராகவும் அவரே வண்ணதாசனாக சிறுகதையாளராகவும் எனக்கு அறிமுகமானது 1970 ஆம் ஆண்டு. நான் கோவில்பட்டியில் கல்லூரிப்படிப்பைத் துவங்கிய ஆண்டில். சிற்றிதழ்களின் பொற்காலம் அது.எங்கள் ஊரிலிருந்தும் நீலக்குயில் என்கிற சிற்றிதழை திரு. அண்ணாமலை நடத்திக்கொண்டிருந்தார். என்னுடைய கவிதைகள் (!) அதில் வந்து கொண்டிருந்தன. நான் இலக்கியவாதிகளின் உலகத்துக்குள் பிரவேசித்த திகைப்பான காலம். நீலக்குயிலில் ரசிகமணி, கி.ரா., கு.அழகிரிசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற பல படைப்பாளிகளின் கடிதங்கள் தொடர்ந்து கடித இலக்கியம் என வந்துகொண்டிருந்தன.

அப்போது என்னை முதலில் வசீகரித்து இழுத்துக் கொண்டவை வண்ணதாசனின் சிறுகதைகளும் வண்ண நிலவனின் கடல்புறத்தில் நாவலும் தான். இலக்கிய உலகில் எனக்கு அப்பா கு. அழகிரிசாமி என்றால் என் உடனடி மூத்த சகோதரர்களாக எழுத்தின் வழி என்னை வழிநடத்தியவர்கள் வண்ணதாசனும் வண்ணநிலவனும் தான். அப்போது அவர்களை நான் நேரில் சந்தித்திருக்க வில்லை. அவர்களின் புகைப்படம் கூடப் பார்த்ததில்லை. கிருஷியின் வார்த்தைகளால் என் மனதில் உருவாகியிருந்த சித்திரங்களாகவே அவர்கள் எனக்குள் இருந்தார்கள். அன்றைக்கு அவர்கள் இருவரையும் விட உலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் வேறு யாருமே இல்லை என்று எண்ணிக்கிடப்பேன். இவ்வரியை எழுதும் இந்த நிமிடத்திலும் அந்த அதே நெருக்கத்தின் மூச்சுக்காற்றில் மனம் கரைகிறது. எழுத்தின் வழி மட்டுமே இத்தனை நெருக்கமாக ஒருவரை அடைய முடியும் என எனக்கு உணர்த்தியவர்கள் அவர்கள் இருவரும்தான். கு.அழகிரிசாமியை நான் வாசித்தது பிற்பாடுதான். கு.அழகிரிசாமியின் கையில் என்னைப் பிடித்துக் கொடுத்தவர் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துட்டேன் என்று மறைந்தும் விட்டார். அவர் எழுத்தாளர் ஜோதிவிநாயகம். வண்ணதாசனின் அப்பா, எங்கள் முன்னோடித் தோழர் தி.க.சி. யை எனக்கு அப்போது யாரென்றே தெரியாது. வண்ணதாசனின் பெயர்க்காரணம் பற்றிப் பின்னாட்களில் விசாரித்தபோதுதான் தி.க.சி. பற்றி அறிய நேர்ந்தது.

சேலம் பரந்தாமனின் கைவண்ணத்தில் அன்றைய தேதியில் பிரமிப்பூட்டும் அச்சாக்கத்தில் (சான்ஸே இல்லை) வண்ணதாசனின் முதல் கதைத்தொகுப்பு ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ வந்து எங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. என்ன ஒரு புத்தகமய்யா! அதற்கு புத்தகத் தயாரிப்புக்கான ஒரு விருதுகூடக் கிடைத்தது. கதை ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கை. தோழர் பால்வண்ணத்தின் மூலம் ஒரு பிரதி என் கைக்குவந்து சேர்ந்திருந்தது.

பிற்காலத்தில் அவருடைய கதைகள் பற்றி என் அளவற்ற அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு.சுந்தரராமசாமி அவர்கள் சொன்ன ஒரு வாக்கியத்தை அன்றைக்கு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இப்போதும் அப்படியே. மெல்லிய உணர்வுகளே வண்ணதாசனின் படைப்புகளாகின்றன. மனசைக்கீறும் பிரச்சனை இல்லை. வலி இல்லை. பறவையின் சிறகுகளால் கோதி விடுவதுபோன்ற வருடுவது போன்ற வாழ்க்கைத்தான் அவருடைய உலகம் என்பது போல அவர் எழுதியிருந்தார். அவருடைய பார்வை அது. எனக்கு வண்ணதாசனின் படைப்புகள் பற்றி- குறிப்பாகச் சிறுகதைகள் பற்றி நூறு சதம் இதற்கு எதிரான கருத்துதான் எப்போதும் இருக்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை,சின்னு முதல் சின்னு வரை என்று (இப்போது மொத்தப்படைப்புகளின் புதிய தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது.) அடுத்தடுத்து வந்த அவருடைய சிறுகதைத்தொகுப்பு களைப் பின் தொடரும் என் மனம் பொதுவாழ்வில் மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்க என்னை உந்தித்தள்ளும் சக்தியை இக்கதைகள் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.இது ஒரு விதத்தில் வியப்பான ஒன்றாகத் தெரியலாம். திரு.தி.க.சி. அளவுக்குக் கூட எந்த முற்போக்கு இயக்கத்தோடும் அதன் போக்குகளோடும் தன்னை இணைத்துக்கொள்ளாமல்,

போகும் வரும் வழியில் உள்ள

புற்களை மட்டும் பார்ப்பதற்காவது

முழுதாகப்

பொழுது இருக்க வேண்டும்

கல்யாணி வாழ்க்கையில்.

என்று தன்னடக்கமாக ஒருபோதும் தன்னை முன்னிறுத்தாத வேறு ஒரு லயத்தில் வேறு ஒரு ஸ்ருதியில் இசைந்து வாழும் ஒரு மனிதரான வண்ணதாசனின் கதைகளே என்னைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் உந்தித்தள்ளியது. தள்ளுகிறது. மேலும் மேலும் உறுதியுடன் போராட என்னைத் தூண்டுகிறது என்றால் அதுதான் எழுத்தின் மந்திரசக்தி என்று உரக்க இந்த உலகுக்குக் கூறுவேன்.

பெயர் தெரியாமல் ஒரு பறவை என்கிற ஒரு கதை போதும் ஒருவனைப் போராளியாக்குவதற்கு என்பேன். கொட்டும் மழையில் தான் நனைந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் நனைந்துபோன ரொட்டிகளைத் திண்ணையில் அடுக்கி வைத்துக் கவலையுடன் பார்த்திருக்கும் அந்த ரொட்டி விற்கும் தொழிலாளியின் மனம்-அவருக்கு வீட்டுக்காரர் தலை துவட்டத் தரும் துண்டை வாங்கத் தயங்கி, இவ்வளவு சுத்தமான துண்டு என் தலையைத் துவட்டவா.. .. என்று கேட்டு நிற்கும் அந்த ஒரு புள்ளியில் வெடித்துக் கதறும் என் மனம் ஒவ்வொரு வாசிப்பின் போதும். என்ன வாழ்க்கையடா இது; இதை உடைத்து நொறுக்கு என்று மனம் ஆவேசம் கொள்ளும்.

ஒரு படைப்பு இதை விட என்ன சாதிக்க வேண்டும்?

எச்சம் கதையில் வரும் காலி சோடா,கலர் பாட்டில்களை இறக்கும் கூலிக் குழந்தைத் தொழிலாளிகள் எச்சமாக அந்தப் பாட்டில்களில் மிஞ்சி இருக்கும் சோடாவைக் குடித்துச் சந்தோசப்படும் அந்த ஒரு புள்ளியில் இன்றைக்கும் உறைந்து நிற்கிறது என் வாசக மனம். குழந்தைத் தொழிலாளர் பற்றிக் கதையில் பெரிய பிலாக்கணம் வைத்தால்தான் ஆச்சா என்ன? எச்சம் கதையைவிட முற்போக்கான சிறுகதை ஒன்று உண்டா நம் காலத்தில்?

மனித உறவுகள் வண்ணதாசனின் கதைகளில் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறெங்கும் நான் கண்டதில்லை. பஸ்ஸில் பழைய சினிமாப்பாடல்களைப் பாடியபடி அவர்கள் செல்லும்போது பிரிவின் வலியை நாம் எத்தனை அழுத்தமாக உணர்ந்தழுதோம்? ‘‘எனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல ஆபீசே கதி எனக் கிடக்கும் இவருக்கு வீடு ஞாபகம் வரவேண்டும்’’ என்று ‘ஞாபகம்’ கதையில் ஒரே ஒரு வரிதான் வருகிறது. அது நம் மத்தியதர வர்க்கத்து வாழ்க்கையின் சலிப்பையும் நாற்காலியோடு நாற்காலியாகவே ஆகிப்போன அடையாள மறதியையும் அடையாள மறுப்பையும் ஒருசேர நம் முகத்தில் அடித்துச் சொல்லிச் செல்கிறது.

இதுபோன்ற வாழ்வின் இக்கட்டான புள்ளிகளில் கொண்டுவந்து நம்மை நிறுத்துவதே வண்ணதாசனின் கலையின் அரசியல். கதையின் மையப்புள்ளிக்குத் தேவையற்ற ஏராளமான நுட்பமான விவரணைகள் அவர் கதையில் இருக்கும் என்று சில சமயங்களில் சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ‘தேவையற்ற’ என்ற சொல்லை ஒரு படைப்பைப் பற்றி எழுதும்போது குறிப்பிடும் அதிகாரம் எந்த விமர்சகருக்கும் இல்லை என்று கருதுகிறேன். தவிர வண்ணதாசனின் கதைகளில் விரிவாக இடம்பெறும் நுட்பமான வண்ணக்கோலங்களெல்லாம் மையப்புள்ளியில் நம்மை நிறுத்துவதற்காகப் பரப்பப்பட்ட பின் திரைதான் என்பதை தொடர்ந்து அவரை வாசிக்கும் வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

அவரே அவரது கவிதை நூல் ஒன்றுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “எந்த நிரூபணங்களையும் நோக்கி என் வரிகளை நகர்த்தவேயில்லை நான். தண்ணீரற்றுத் தவித்துக் கிடக்கையில் உனக்கென்ன இத்தனை சொரிவு என்று குல்மோஹர் மரங்களை யாரும் கேட்டதுண்டா?அதன் தாவரகுணம் அதற்கு.”

குல்மோஹர் மரத்துக்கே கூடத் தெரியாமல் அது எத்தனையோ பேரை எத்தனையோ விதங்களில் கிளர்ச்சியூட்டிக் கொண்டிருப்பதும் வாழ்வின் நிஜம்தான். பூக்கள் எப்போதும் புன்னகையையும் மயக்கும் மனநிலையையும்தான் தரும் என்று இறுதித் தீர்ப்பாக யாரும் ஒரு வரியை எழுதிவிட முடியுமா என்ன? இக்கோணத்தில் வண்ணதாசனின் படைப்புகள் பற்றி விரிவாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரொம்ப நாளாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

எழுதப்பட்ட வரிகளில் இல்லை முற்போக்கும் பிற்போக்கும். அவ்வரிகள் வாசக மனதில் உண்டாக்கும் அலைகளில்தான் அடங்கியிருக்கிறது எல்லாமே. எழுத்தில் மட்டுமே எல்லாம் அடங்கியிருப்பதும் இல்லை. அது வாசிக்கப்படும் அந்த நொடியில் எழுத்தும் வாசக மனமும் சேரும் அந்தக் கணத்தில் என்ன மாயமும் நிகழலாம். நிகழும்.

எனக்குள் பல மாயங்களை நிகழ்த்திய நிகழ்த்தும் வண்ணதாசனின் படைப்புகளுக்கு ’ரெட் சல்யூட்’ என்று சொல்லி இவ்வரிகளை இப்போதைக்கு நிறைவு செய்வோம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </